ஜுன் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      அமையுமா தேசிய அரசு?
      கண்டிராசன் கதை
      பள்ளிக்குள் ஊடுருவும் வன்முறை
      பள்ளிகளில் வன்முறை தீர்வு என்ன?
      பெருமரங்களும் புதிய செடிகளும் தமிழ்.விக்கி சர்ச்சைகளை முன்வைத்து ஓர் அலசல்
      வானமாமது
      கைமணலின் ஈரம்
      சல்மாவின் கதைகள்: உள்ளிருந்து விலகும் திரை
    • கதை
      அவுரி
      குட்டி இளவரசனைச் சந்தித்த குழந்தைகள்
      ஆன்லைன்
    • நினைவு
      எஞ்சிய சொற்கள்
    • துணைத்தலையங்கம்
      தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதீதமான எதிர்வினை
    • அஞ்சலி: யூசோப் காஜா
      யானைகளின் கலைஞன்
    • கண்ணோட்டம்
      பின்னை இட்ட தீ
    • எதிர்வினை
      சாமிநாதனும் சிவகுருநாதனும் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம்
    • மதிப்புரை
      மக்களுக்கான அரசியலின் சினிமா
      காலம் அளந்த நாவல்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • தலையங்கம்
      எதிரிக்கு உதவும் கலை
    • அறிமுகம்
      ஆர்.பி. பாஸ்கரன் 80
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜுன் 2022 தலையங்கம் எதிரிக்கு உதவும் கலை

எதிரிக்கு உதவும் கலை

தலையங்கம்

வலிமையற்ற எதிரியை வளர்த்துவிடுவது எப்படியென்று ஒரு கையேட்டைத் தயாரித்தால் அதற்கான முதன்மை ஆசிரியராகப் பணிபுரிவதற்கான தகுதி வாய்ந்தவர்கள் பலர் திமுகவில் இருக்கிறார்கள். தமிழக பாஜக என்னும் சோனிக்கட்சி, மைய அரசின் அதிகாரம் தரும் தன்னம்பிக்கையுடனும் நாட்டிலேயே பெரிய கட்சியின் கிளை என்பதால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளுடனும் சுறுசுறுப்பாக அரசியல் செய்துகொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் தமிழிசை சவுந்தரராஜனின் அரசியலும் எச். ராஜா, எஸ்.வி. சேகர், ராதாரவி போன்றவர்களின் வண்ணமயமான உளறல்களும் அன்றாடம் பாஜகவைச் செய்தியில் அடிபட வைத்தாலும் பாஜக வளர அவை போதுமானவையாக இல்லை. தமிழகத்தின் பெரிய கட்சியான திமுக இதைக் கண்டு பரிதாபப்பட்டோ என்னமோ தமிழக பாஜக வளரத் தன்னால் இயன்றதையெல்லாம் செய்துவருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் அதன் ஆட்சியை மதிப்பிடும் அலசல்கள் ஊடகங்களில் இடம்பெற்றன. பெரும்பாலான அலசல்கள் ஆட்சியின்மீது பாராட்டுணர்வு கொண்டவையாகவே இருந்தன. மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களை நியமித்தது, மாநிலக் கொள்கை வழிகாட்டுக் குழுவிலும் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கான குழுவிலும் பல்துறை வல்லுநர்களை நியமித்தது, கொரோனா இரண்டாம் அலையையும் மழை வெள்ளப் பாதிப்புகளையும் திறம்படக் கையாண்டது, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மேற்கொண்டது, மாநில உரிமைகளுக்காகவும் மொழியுரிமைக்காகவும் உரக்கக் குரல் எழுப்பியமை, கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன் போன்ற நவீன தமிழிலக்கிய ஆளுமைகளைக் கௌரவித்தது, எழுத்தாளர்களுக்கான சலுகைகள் அறிவிப்பு எனப் பல முனைகளில் இந்த அரசு பாராட்டத்தக்க செயல்பாடுகளையும் முனைப்புகளையும் மேற்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு குறித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் இருப்பது, மகளிருக்கான மாதாந்தர உதவித் தொகை குறித்த வாக்குறுதியை நிறைவேற்றாமை, முதல்வரின் குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் பெற்றிருக்கும் அளப்பரிய செல்வாக்கு, தொடரும் காவல் நிலைய மரணங்கள், திரைத்துறையில் சன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்களின் வளர்ந்துவரும் ஆதிக்கம், நகர்ப்புறத்தின் குடிசைவாசிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துதல் என விமர்சனங்களும் இப்போது வரிசைகட்டி நிற்கின்றன. மாநிலத்தின் மாபெரும் கடன் சுமை, காவிரி நீர்ப் பங்கீடு, மேகேதாட்டு அணை, முல்லைப் பெரியாறு அணை போன்ற தீராப் பிரச்சினைகளின் நெருக்கடியும் அரசுக்குச் சவாலாக எழுந்துள்ளது.

என்றாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது அரசுக்கு ஆதரவான உணர்வே பொதுப்புத்தியில் மேலோங்கியிருப்பதை உணர முடிகிறது. இந்த ஆதரவு பல்வேறு நலத் திட்டங்களையும் முக்கியமான சீர்திருத்தங்களையும் தொலைநோக்கிலான திட்டங்களையும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு இசைவான சூழலை வழங்குகிறது. நிர்வாகத்தை மேம்படுத்தித் தமிழகத்தின் நிலையைப் பல முனைகளிலும் முன்னேற்றுவதற்கு இந்த நல்லுணர்வைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், தேவையற்ற சில நடவடிக்கைகள், கொள்கைக் குழப்பங்கள், வேண்டாத வாய்வீச்சு ஆகியவற்றால் திமுக தமிழகத்திற்குத் தொலைநோக்கில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விபரீத அரசியலையும் முன்னெடுத்துவருகிறது. அது தமிழக பாரதிய ஜனதா கட்சியைத் தனக்கு இணையான எதிரியாகக் கட்டமைத்துவருகிறது.

தருமபுரி ஆதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி, ஆம்பூர் பிரியாணித் திருவிழா ஆகிய பிரச்சினைகளில் பாஜக விரும்பக்கூடிய வகையிலேயே திமுகவின் நடவடிக்கைகள் இருக்கின்றன. பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை அவர் பக்தர்கள் பல்லக்கில் சுமந்து தூக்கிவரும் வழக்கத்திற்கு அரசு தடை விதித்தது. இத்தடையின் வழிதான் இத்தகைய மரபு தொடர்வதே மக்களின் கவனத்திற்கு வந்தது. அதற்கு பாஜக, ஆதீனங்கள், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பாஜக இதைப் பொன்னான வாய்ப்பாகக் கருதி பெரிய பிரச்சினையாக மாற்றியது. நானே பல்லக்குத் தூக்குவேன் என பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். பல்லக்குத் தூக்குவதற்குத் தடை விதித்தால் அமைச்சர்கள் யாரும் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் மிரட்டல் விடுத்தார். இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையே திமுக அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கியது. மடாதிபதிகளில் முற்போக்காளராகக் கருதப்படும் பொன்னம்பலம் அடிகளார் முன்னிலையில் ஆதீனங்கள் முதல்வரைச் சந்தித்துப் பேச, அரசு தடையை நீக்கியது. தருமபுரி ஆதீனம் அண்ணாமலைக்கு நன்றி அறிவித்தார். அரசு தடையை நீக்கியது. அதன் பிறகு நடந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரி ஆதீனத்தின் அழைப்பின் பேரில் அண்ணாமலை கலந்துகொண்டார்.

பாஜகவுக்குத் தோதான அரசியல் களத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை என இதைக் கூறலாம். தமிழகத்தின் ஆதீனங்கள் எப்படிச் செயல்படுகின்றன, அவற்றின் பின்னிருந்து இயக்கும் சக்திகள் யாவை, அவற்றின் சம்பிரதாயங்களில் தலையிட்டால் எத்தகைய எதிர்வினைகள் வரும் என்பவையெல்லாம் அறியாத அரசியல் கற்றுக்குட்டி அல்ல திமுக. பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியைச் சுயமரியாதை, மானுட சமத்துவம் ஆகியவை சார்ந்து எதிர்ப்பதற்கான நியாயமும் உரிமையும் திமுகவிற்கு முழுமையாக இருக்கின்றன. இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் போராட்டங்களாலும் முன்னெடுப்புகளாலும் ஆனதுதான் திமுகவின் வரலாறு. (ஜெயேந்திரரைக் கைது செய்த ஜெயலலிதா மிகப்பெரும் நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் கடைசிவரை பின்வாங்கவில்லை என்பதும் வரலாறு.)

இந்நிலையில் பல்லக்குத் தூக்கும் வழக்கத்திற்கு அரசு தடை விதித்தால் அந்த முடிவில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். இது முற்போக்கான அணுகுமுறை, சமத்துவ நோக்கிலான நடவடிக்கை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். இதனால் வரும் எதிர்வினைகளைச் சமாளிக்க இயலாது என்றோ, இப்போதுள்ள நிலையில் அது வீண் வேலை என்றோ திமுக கருதுமானால், பிரச்சினையில் தலையிட்டிருக்கவே கூடாது. தடை விதித்தல் சீர்திருத்த முகத்தைக் காட்டுகிறது என்றால் பின்வாங்குவது சமரச முகத்தைக் காட்டுவதோடு நிற்கவில்லை. சாதி, மதம் சார்ந்த சீர்திருத்தக் குரல்கள் ஏற்கெனவே பலவீனமடைந்திருக்கும் நிலையில் அவற்றை மேலும் வலுவிழக்கச் செய்கிறது; வழிவழியாக வரும் சம்பிரதாயங்களுக்குள் இருக்கும் சமத்துவமற்ற வழக்கங்களைக் கேள்விக்குட்படுத்துவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துவிடுகிறது. இதுபோன்ற வழக்கங்களுக்குப் பின் இருக்கும் சாதிய, மதவாதச் சக்திகளின் கரங்களை வலுப்படுத்துகிறது. இது எங்கள் எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக மார்தட்டிக்கொள்ளும் வாய்ப்பையும் கொடுக்கிறது.

மதம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் இன்றைய திமுகவுக்கு உள்ள குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் இது காட்டுகிறது. ஆம்பூர் பிரியாணித் திருவிழா விவகாரமும் கிட்டத்தட்ட இதேபோன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. “இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தக் கூடாது” என்பதற்காக ஆம்பூர்  பிரியாணித் திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்துக்களில் பெரும்பாலானோர் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்னும் யதார்த்தத்தின் பின்னணியில் மாட்டிறைச்சி உண்மையில் யாரைப் புண்படுத்துகிறது என்னும் கேள்வி எழுகிறது. மாட்டிறைச்சிப் பிரியாணியையும் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க் குரல்கள் எழுந்ததும் பிரியாணித் திருவிழாவே ரத்து செய்யப்பட்டது. சமூக அரசியல் களத்தில் இந்த அரசுக்கு நேர்ந்த இன்னொரு பின்னடைவாக இதைப் பார்க்க முடிகிறது.

1990களின் இறுதியில் வீரன் சுந்தரலிங்கனார் என்னும் தலித் ஆளுமையின் பெயரைப் போக்குவரத்துக் கழகத்துக்காகச் சூட்டியதையொட்டித் தென்மாவட்டங்களில் கலவரம் வெடித்தது. அதையொட்டி, போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த எல்லாத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. ஒரு தலித்தின் பெயரை ஏற்க முடியாமல் போனதற்காக  மூவேந்தர்கள், வள்ளுவர், கம்பன் முதலான தமிழர்களின் பெருமைக்குரிய அனைத்துப் பெயர்களையும் தியாகம் செய்ய அரசு முடிவுசெய்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இன்று மாட்டிறைச்சிக்கு அனுமதி வழங்க இயலாத நிலையில் பிரியாணித் திருவிழாவை ரத்துசெய்த நடவடிக்கையைப் பார்க்கும்போது யாரைத் திருப்திப்படுத்த அரசு இதைச் செய்கிறது என்னும் கேள்வி எழுகிறது. 

பல்லக்கு, மாட்டிறைச்சி ஆகிய விவகாரங்கள் திமுகவின் தற்போதைய தடுமாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. இத்தகைய குளறுபடிகள் மத உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் பாஜகவின் செயல்திட்டத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் இலவசமாக வழங்குகின்றன.

இலவசக் கலாச்சாரத்தை வளர்ப்பதுதான் திராவிட மாடல் என விமர்சித்த துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்திக்குப் பொருளாதாரத் தளத்தில் பதிலளிப்பதை விட்டுவிட்டு “தட்சிணை வாங்கிப் பிழைக்கும்” வம்சத்தில் வந்தவர் என்று அவரை விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. தமிழில் உள்ள வடமொழி எழுத்துக்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த தடாலடியான கருத்தும் ஏவியவர்களையே திருப்பி அடிக்கும் ஆயுதமாக மாறியது.

திமுகவின் தடுமாற்றங்களுக்கு எடுத்துக்காட்டாக மேலும் பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. நீண்ட தூரப் பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டும் நிறுத்தப்படும் என்னும் அறிவிப்பு (எதிர்ப்புக்குப் பின் அது மாற்றப்பட்டது), அறநிலையத் துறையின் சார்பில் பசுமடம் அமைக்கும் திட்டம் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இதுபோன்ற சிக்கல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வித்தை அண்ணாமலைக்கு நன்றாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் அவர் திமுக அரசின் மீது மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார். தமிழகத்தின் கடன் சுமை, மின்சார நெருக்கடி ஆகியவற்றை முன்வைத்துக் குரலெழுப்புகிறார். அவர் கைவசம் இருக்கும் ஆயுதங்கள் போதாது என்று நினைத்தோ என்னமோ திமுக மேலும் பல புதிய ஆயுதங்களைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிவருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக, அதிமுக என இரு அணிகளிலும் சேராமல் தனித்து நின்ற கட்சிகள் திமுகவுக்கு ஆதரவான வாக்குகளைப் பிரிக்கும் நோக்கம் கொண்டவை என்னும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்தக் கட்சிகள் பாஜகவின் துணை அணிகள் (B டீம்) என முத்திரை குத்தப்பட்டன. தேசியவாதம், ஆன்மிக அரசியல் ஆகியவற்றை முன்வைத்து அரசியலில் இறங்கப்போவதாகச் சொன்ன நடிகர் ரஜினிகாந்தையும் இதே முத்திரையால் அலங்கரித்தார்கள். இன்று நீள்துயிலில் ஆழ்ந்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடத்தைப் பிடிக்க அதிரடியாக முயற்சி மேற்கொண்டுவரும் பாஜக, மைய அரசின் பின்புலம், பணபலம், மத அரசியல், ஊடகக் கவனம் எனப் பல்வேறு வலிமையான ஆயுதங்களுடன் களமாடிவருகிறது. சாதி, மத விவகாரங்களில் தடுமாற்றமான, பலவீனமான நிலைப்பாடுகள் சார்ந்த நடவடிக்கைகள், வாய்த்துடுக்கு, சாதிய ரீதியிலான அவதூறுகள் ஆகியவற்றின் மூலமாக பாஜகவின் பிரச்சாரத்திற்கு திமுக வலு சேர்த்துவருகிறது. இதே திசையில் அதன் நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாஜகவின் ‘B டீம்’கள்  யாரெல்லாம் எனும் குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.