இனவாதத்தின் உளவியல்
முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இலங்கையும் ஒன்றாகிவிட்டது. 2018 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அம்பாறை, கண்டி மாவட்டங்களில் முஸ்லிம்கள்மீதும் அவர்களின் உடைமைகள் மீதும் பெரும்பான்மையினச் சிங்களப் பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், முஸ்லிம்களின் இருப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால். அம்பாறை நகரில் பெப்ரவரி 24 இரவு ஒன்பது மணிக்குப் பின்னர், முஸ்லிம்களால் நடத்தப்படும் சாப்பாட்டுக் கடை ஒன்றிற்கு வந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த சிலர், தமக்குத் தரப்பட்ட உணவில் ஏதோ வித்தியாசமான ஒரு பொருள் உள்ளதாகக் கூறி, அது கருத்தடை மாத்திரையே என்று கடை உரிமையாளருடன் வாதிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட அலைபேசி அழைப்பிற்கு அங்கே விரைந்து வந்த பலர், கடையின் காசாளரை மிரட்டிப் பயமுறுத்தினர். இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ தமது நோக்கத்துக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டதோடு அங்கிருந்த முஸ்லிம்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. முஸ்லிம்களால் சிங்களப்பகுதிகளில் நடத்தப்படும் உணவுக் கடைகளில் இனவிருத்தியைத் தடுக்கும் மருந்துப் பொருட்கள் உணவில் கலக்கப்படுவதாகவும் இதன் மூலம் சிங்களச் சமூகத்தின் இனப்பரம்பலைக் குறைத்து, தமது இனவிகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு முஸ்லிம்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர் எனவும் புனைவுகள் உருவாக்கப்பட்டன.சிங்களத் தரப்பால் பெரிய அளவில் பரப்புரை செய்யப்பட்டன. குறிப்பாகச் சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் மிகத் தீவிர நிலையில் பரப்பப்பட்டது. இவ்வளவுக்கும் அம்பாறை நகரத்தில் மொத்தமாக முஸ்லிம்களின் ஐந்து கடைகள் மட்டுமே இருக்கின்றன. சாப்பாட்டுக் கடைகள் மூன்று; ஏனைய கடைகள் இரண்டு. பொதுவாகவே அங்கு முஸ்லிம்கள் கடைகளை நடத்துவதற்கும் பிற தொழில்களில் ஈடுபடுவதற்கும் தடை என்பது எழுதப்படாத விதியாக இனவாத அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு புனைந்து உருவாக்கப்பட்ட வன்முறைச் சூழ்ச்சியை இனங்கண்டு அதற்கான எச்சரிக்கையையும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறியது. “முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் இலங்கையில் காணப்படுகிறது” என லண்டன் சர்வதேச மன்னிப்புச் சபை, 2018 பெப்ரவரி மாதம் 21இல் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எச்சரிக்கையையும் இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவில்லை.
இதனால் மார்ச் 4இல் கண்டி - திகணப் பகுதியில் தனிப்பட்டதொரு வாகன விபத்துச் சம்பவத்தைச் சாட்டாகக் கொண்டு மீண்டும் முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் தீவிரமாக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்களில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஒருவர் பலியானார். 26 பேர் காயமடைந்தனர். 445 வீடுகளும் கடைகளும் எரித்து அழிக்கப்பட்டன. 24 பள்ளிவாசல்கள் சேதத்துக்குள்ளாகின. சிங்களத்தரப்பில் இந்த வன்முறைக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்த வாகன விபத்தால் ஒருவர் பலியானார்.
தொடர்ந்த வன்முறைகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்து அயல் பிரதேசங்களிலும் பதற்ற நிலையை உருவாக்கின. வன்முறையில் ஈடுபட்ட சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் பின்வாங்கியதே இதற்குக் காரணம். அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் முஸ்லிம் கட்சிகள் பெருகும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கொடுத்த அழுத்தங்களும் நிலைமையின் பாதகச் சூழலும் சிறப்புப் படையணிகளை அனுப்பிவைக்க வேண்டிய கட்டாயத்தை அரசாங்கத்துக்கு உருவாக்கியது. கூடவே நாடு முழுவதற்கும் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து வன்முறை நடைபெற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவையும் நடைமுறைப்படுத்தியது அரசு. நடக்கும் சம்பவங்களைப் பற்றிய தகவல்கள் தவறான முறையில் பரப்பப்பட்டு எதிர்மறையான நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன என்ற காரணத்தைக் கூறிச் சமூக வலைத்தளங்களும் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டன. இலங்கை முழுவதும் ஏறக்குறைய நெருக்கடி நிலை உருவாகியது.
இவ்வாறு அரசு அதிரடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தைப்போலத் தோன்றினாலும் வன்முறை நடந்த இடங்களில் அரசபடைகள் உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, நீதியாக நடக்கவுமில்லை என்பதே உண்மை; ஒளிப்படப் பதிவுகளும் பிற சாட்சியங்களும் ஆதாரம் உண்டு. வன்முறையில் ஈடுபட்டவர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தினர் என்பதுடன், அவர்கள் ‘மஹா சொகன் பலகாய’ போன்ற சிங்கள தீவிரவாத அமைப்புகள், மதகுருக்கள் சிலருடைய ஆதரவைக் கொண்டவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த வன்முறையின் சூத்திரதாரிகளை இனங்கண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது அரசு. இதுவரையில் 280 பேர்வரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ‘மஹா சொகன் பலகாய’ என்ற அமைப்பின் தலைவர் அஜித் வீரசிங்கவும் ஒருவர். இருந்தாலும் இன்னும் பல முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்டவர்களின் அவதானம். வன்முறையாளர்களும் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய படையினரும் ஒரே சமூகத்தினராக இருந்ததால் விட்டுக்கொடுப்புகளும் பாராமுகமும் நடந்திருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களும் ஏனைய சிறுபான்மையினரும் கருதுகிறார்கள். இத்தகைய நீதியற்ற போக்கு இலங்கையில் நீண்டகாலமாகத் தொடர்வது. 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய இன வன்முறைகளின்போதும் இத்தகைய பாரபட்சமான - நீதியற்ற நடைமுறை அரச படைகளால் தொடரப்பட்டது. இப்போதும் இதுவே நடந்திருக்கிறது. எனவே போரின் முடிவுக்குப் பிறகும் சிறுபான்மைச் சமூகங்களின் தயவிலுள்ள தற்போதைய ‘நல்லாட்சி’யிலும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சிந்தனையே காணப்படுகிறது. இது போருக்குப் பிந்திய சூழலில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ‘பொறுப்புக்கூறல்’, ‘நீதி வழங்குதல்’, ‘மீள நிகழாமை’, ‘நல்லிணக்கம்‘, ‘தீர்வு’ ஆகிய பொறுப்பான தொடர்நடவடிக்கைகளை அரசு செய்யத் தவறியதன் விளைவு. ஆகவே இதில் பிரதான குற்றவாளியாக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
2012 -& 2014இல் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் அளுத்கமவிலும் அதற்கு முன்பு தம்புள்ளவிலும் வேறு சில இடங்களிலும் முஸ்லிம்கள் மீதும் அவர்களுடைய வழிபாட்டிடங்களின் மீதும் தீவிர சிங்கள பௌத்த அமைப்புகளினால் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைவிடத் தனித்தனியாக முஸ்லிம்களின் வணிக மையங்கள் பலவும் திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டன. இதனால்தான் 2015இல் மகிந்த ராஜபக்சவை நிராகரித்து, ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தையும் உறுதிப்படுத்தும் உத்தரவாதத்தை அளித்திருந்த ரணில் -& சிறிசேன அரசாங்கத்துக்கு அவர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனாலும் முஸ்லிம்களின் மீதான வன்முறைகளும் அபாய நெருக்கடிகளும் தொடர்கின்றன. இதில் மகிந்த ராஜபக்ஸ ஆட்சி, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க - மைத்திரிபால சிறிசேன (ஐ.தே.க -& ஸ்ரீ. சு.க) ‘நல்லாட்சி’ (கூட்டாட்சி) யும் விலக்கல்ல.
1915இல் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின்மேல் மேற்கொள்ளப்பட்ட ‘கண்டிக் கலவரம்’ என்ற சரித்திரத் துயரம் கடந்த 2018, பெப்ரவரியில் அதே கண்டிப் பகுதியில் நடந்த வன்முறை வரை முஸ்லிம்களுக்கு எதிராக நூற்றாண்டைக் கடந்தும் நீள்கிறது. இதற்கான முடிவுப் புள்ளி எப்போதென்பதற்குத் தற்போது வரையில் எந்தத் தெளிவும் இல்லை.
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் தனியே சிங்களவர்களால் மட்டும் நிகழ்த்தப்படுவதல்ல; தமிழர்களாலும் நடத்தப்பட்டதுண்டு. 1990 ஒக்ரோபர் 31இல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டதும் முஸ்லிம்கள்மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் இதில் முக்கியமானவை. இதற்குப் பதிலாக முஸ்லிம்களும் வன்முறைகளில் ஈடுபட்டதுண்டு. ஆனாலும் தமிழ், சிங்களப் பெரும்பான்மைகளினால் தாம் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுவதாகவே முஸ்லிம்கள் உணர்கிறார்கள். தமிழ்த்தரப்பினால் அச்சுறுத்தல் உண்டானபோது அவர்கள் பாதுகாப்பின் நிமித்தமாக அரசின் பக்கமாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இன்னொரு வகையில் தமிழர்களும் சிங்களவர்களும் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, பொருளாதாரம், கல்வி போன்றவற்றிலும் இனப்பரம்பலிலும் முஸ்லிம்கள் வளர்ச்சியடைந்தனர். முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பொருளாதார வளர்ச்சியும் இனவிகிதாசார அதிகரிப்பும் சிங்களச் சமூகத்துக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கான அடிப்படை இதுவே.
சிங்களப் பெரும்பான்மை அரச ஆட்சியதிகாரத்தோடும் தமிழ்ப்பெரும்பான்மை இரண்டாம் நிலையில் (நில) அதிகாரத்தோடும் உள்ளன. ஆகவே இவற்றுக்கிடையிலான சமநிலையை ஏற்படுத்துவதற்கு இலங்கை பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்ற அடிப்படையில் பன்மைத் துவத்துக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதே வழியாகும். இதையே வெளியுலகமும் நாட்டின் முற்போக்குச் சக்திகளும் வலியுறுத்துகின்றன. ஆனால், இதை நடைமுறைப் படுத்துவதற்குப் பின்னடிக்கின்றன அரசியல்
கட்சிகள்.
இலங்கையை இன்று முழுதாகப் பீடித்திருப்பது இனரீதியான அச்ச உளவியலேயாகும். இதில் சிங்களப் பெரும்பான்மையும் விலக்கல்ல; முஸ்லிம் சிறுபான்மையும் விலக்கல்ல. தமிழ்த்தரப்பும் வேறானதல்ல; அனைத்தும் இனரீதியாக வலுப்பெறவும் தம்மைக் கட்டமைக்கவுமே முற்படுகின்றன. ஒன்றையொன்று குற்றம்சாட்டிப் பகைமையை வளர்க்கின்றன. இதற்காக அவை இனவாதத்தைத் தாராளமாகப் பிரயோகிக்கின்றன. இதற்காகப் போருக்குப் பிந்திய இலங்கைச் சூழலைப் போருக்கு முந்திய சூழலைப்போலத் தொடராமல் மாற்றியமைக்க வேண்டும் என்ற சர்வதேசப் பரிந்துரையையும் நிபந்தனைகளையும் ஒவ்வொரு தரப்பும் தந்திரமாகக் கடந்து விடுகின்றன. இனவாதத் தொடர்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அந்த மாற்றத்துக்கான அடிப்படையைக் கொண்ட புதிய அரசியலமைப்பையும்கூட இவை எதிர்மறையாக இனரீதியான கூறுகளை உள்ளடக்கியே உருவாக்கி வருகின்றன. இதையிட்ட எதிர்ப்புகள் பல திசைகளிலும் கிளம்பினாலும் பன்மைத்துவத்துக்கு எதிரான சிங்கள இனவாதத் தரப்பின் எதிர்ப்பையும் எழுச்சியையும் காரணம் காட்டி, சிங்கள பௌத்த முதன்மைக்கு இடமளிக்கும் அரசியல் யாப்பின் வரைபே உருவாக்கப்பட்டுள்ளது. இது பன்மைத்துவக்கும் பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற நாட்டுக்கும் எதிரானது. ஆகவே, இனரீதியான வன்முறைகள் முடிவடையாமல் தொடரவே போகின்றன. அபாயங்களின் மீதே நாடு பயணிக்க வேண்டியுள்ளது.
பல்லினச் சமூகங்கள் வாழும் நாட்டில், இனரீதியாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் அமைதிக்கு எதிரானவை. இது ஒடுக்கப்படுவோரை மட்டும் பாதிப்பதில்லை; ஒடுக்குவோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு. அத்துடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் இயற்கை வளத்துக்கும் பண்பாட்டுக்கும் அபாயத்தை உண்டாக்குவதாகும். அரச அதிகாரத்தைத் தன்னுடைய பிடியில் வைத்திருக்கும் இனம், அந்தப் பலத்தோடும் அதிகார வளத்தோடும் ஏனைய இனத்தவர்கள் மீது மேற்கொள்கின்ற ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் அந்த இனங்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளுகின்றன. இதற்கான எதிர்ப்பு ஒடுக்கும் தரப்பினருக்கும் பாதிப்பை உண்டாக்கும். இந்த வகையிலேயே இலங்கையின் கடந்த காலம் முஸ்லிம், தமிழ், சிங்களச் சமூகங்களைப் பெரிதாகப் பாதித்தது. இதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், நாடு மேலும் அபாயங்களை நோக்கியே வீழ்ச்சியடையும். இதெல்லாம் இலங்கைத்தீவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அயல் நாடான இந்தியாவையும் சர்வதேசச் சூழலையும் கூடப் பாதிக்கும்.
இன்றைய உலக ஒழுங்கு என்பது மாபெரும் வலையமைப்பில் உருவாக்கப்பட்ட தொடரியக்கம். இதில் எங்கேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் தாக்க விசைகள் அனைத்தையும் ஏதோ வகையில் பாதிக்கும். ஆகவே ஒடுக்கப்படும் மக்களுக்குத் தொடர்ச்சியாக இழைக்கப்படும் நெருக்கடியையும் அநீதியையும் நாம் எதிர்க்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டியவர்களாக உள்ளோம். இவ்வாறான அநீதிக்கு எதிராகத் தவறுகளுக்கு எதிரான எமது எதிர்ப்பைத் தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டியும் உள்ளது.