ஏகாதிபத்திய ஊகங்கள்
இந்தியாவில் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து பிரிட்டனில் நடக்கும் விவாதம் போலித்தனமானது.
நரேந்திர மோடியின் இந்தியாவில் ‘‘மத நம்பிக்கை சுதந்திரம்’’ ஆபத்தில் இருப்பதாக 2018, மார்ச் 1ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றம் மிகுந்த கவலை தெரிவித்தது. 2018 ஏப்ரல் மத்தியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு மோடி பிரிட்டனுக்கு வருகிறபோது இந்தப் பிரச்சனையை எழுப்ப வேண்டுமென ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான மார்ட்டின் டோச்செர்ட்டி ஹக்ஸ், பிரிட்டன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்து இறுதியில் பிரிட்டன் விழித்துக்கொண்டது நல்ல செய்தி என்றே முதல் பார்வைக்குத் தோன்றும். தனது இந்துப் பெரும்பான்மைவாத செயல்திட்டங்கள் மூலம் அரசு எந்திரத்தையும் சமூகத்தையும் பலவீனப்படுத்துவதில் தீவிரமாயிருக்கும் ஓர் அரசாங்கத்தின் மீது ராஜீய ரீதியான நெருக்கடி தருவது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் பிரிட்டன் மக்களவை உரைகளின் அச்சு வடிவத்தைப் படிக்கிறபோது விநோதமாக இருக்கிறது. உலகெங்கும் (மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து) மதச் சுதந்திரம் குறைந்துவருவது குறித்த பிரிட்டனின் கவலை ஏகாதிபத்திய ஊகங்களின் வழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன ஐரோப்பிய வகைப்பட்ட ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் வெற்றியை, ஏகாதிபத்தியம் குறித்து வெளிப்படையாக வைக்கப்படும் நியாயங்களுக்கு பொதுவெளி தளத்தில் கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் அளவிட முடியாது. ஏகாதிபத்திய சித்தாந்தத்தின் சில குறிப்பிட்ட அடிப்படையான கூற்றுகள் நிரூபணம் தேவையற்ற வெளிப்படையான கூற்றுகள் என்று ஆக்கப்பட்டிருப்பதிலிருந்து இது தெளிவாகிறது. எந்தவொரு துறையிலும் ஐரோப்பா சாதித்திருப்பதே பிற அனைத்துச் சமூகங்களின் வெற்றி தோல்விகளை அளவிடுவதற்கான அளவுகோல் என்றாக்கப்பட்டிருப்பது அத்தகைய ஓர் ஊகமே. பிரிட்டன் நாடாளுமன்ற விவாதத்தில் மதச் சுதந்திரம் குறைந்துவருவது குறித்து வெளிப்படுத்தப்பட்ட கவலையானது ஏறக்குறைய ‘ஐரோப்பாவை மையமாக’க் கொண்டது. உலகின் ஆகப் பெரும் மக்களாட்சி நாடாக இந்தியா இருந்தபோதிலும் ‘‘ஐரோப்பாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மத ரீதியிலான ஒடுக்குமுறை இருக்கிறது,’’ என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேஃபியன் ஹாமில்டன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் சாதனை மோசமாக இருப்பதாகச் சொல்லப்படுவதற்கான காரணமே அது (‘‘மேற்கு’’) ஐரோப்பாவுடன் ஒப்பிடப்படுவதால்தான்.
மதச் சுதந்திரம் பற்றிய இந்த ஏகாதிபத்தியச் சொல்லாடலின் பின்விளைவு மிகத் தெளிவானது. இந்தியாவில் கிறித்துவர்களும் சீக்கியர்களும் மட்டுமே ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்ற எண்ணத்தை பிரிட்டன் மக்களவை விவாதங்கள் தோற்றுவிக்கின்றன. இந்தியாவில் இந்துத்துவா வன்முறையின் முதன்மையான இலக்காக இருக்கும் முஸ்லிம்களின் நிலைமையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லப்படவில்லை. இவ்வளவு மோசமான விடுபடலுக்குக் காரணம் என்ன? முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை, சுதந்திரங்களை உறுதிப்படுத்துவதில் பிரிட்டன் (சொல்லப்போனால் மொத்த ‘மேற்கத்திய’ உலகத்தின்) இதுவரை சாதித்திருப்பது இந்தியாவின் முஸ்லிம்களின் நிலையோடு ஒப்பிட்டு அதை ஓர் அளவுகோலாகக் காட்டுகிற அளவிற்கு இல்லை என்பதே இதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும். Êசமீப ஆண்டுகளில் பிரிட்டனில் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வின் காரணமாக நடக்கும் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாகத் தங்களைப் பற்றியே குறிப்பிட்டுப் பேசிய ஒரு குறுகிய தருணத்தில் ஹாமில்டன் ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த சுய விமர்சனமானது, உலகிலேயே ஆக மோசமான துன்பங்களுக்கு ஆளாவது கிறித்துவர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும்தான், அதிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் (பாகிஸ்தானில் உள்ள அகமதியர்கள் போன்றவர்கள்) ஆதிக்க முஸ்லிம் குழுக்களினாலேயே துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் லே போன்றவர்கள் அடித்துக் கூறியதில் மூழ்கிப்போய்விட்டது. இந்தியா, பிரிட்டன் போன்ற முஸ்லிம் அல்லாதவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் துன்புறுத்தப்படுவதில்லை என்பதுடன் அவர்களுக்கு ‘தொந்தரவு’ ஏற்படுவது என்பது உலகத்தைத் தீவிரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளிலிருந்தே என்பது இதன் பொருளா?
இவ்வளவிற்குப் பிறகும், மோடியுடனான தனது பேச்சுகளில் பிரிட்டன் அரசாங்கம் சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்துக் கேள்வியெழுப்பும் எனில் அது நல்ல செய்தியே. ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை. ‘‘நாடாளுமன்றத்தின் குரல் முறையாகக் கேட்கப்படுவதை உறுதிசெய்ய என்னால் முடிந்ததைச் செய்வேன்,’’ என்று ஆசியா, பசிபிக்கிற்கான பிரிட்டனின் அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார். ஆனால் ‘‘சில சமயங்கள் ராஜீய விவகாரங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் செய்ய வேண்டும், ஒலிபெருக்கிகளின் ஊடே அல்ல,’’ என்று தனது சகாக்களுக்கு நினைவுறுத்தினார். 2015இல் மோடிக்குத் தரப்பட்ட வரவேற்பைப் பார்க்கிறபோது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் ராஜீய விவகாரங்கள் பேசப்பட வேண்டுமென்ற ஃபீல்ட் கூறும் சாக்கு, அதிகம் எதிர்பார்க்காதீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக நயமான வார்த்தைகளில் சொல்வதைப் போலிருக்கிறது. ஐரோப்பிய பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்த பிறகு இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதில் மிகத் தீவிரமாயிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மோடிக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவிற்கும் இடையில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருப்பதைப் பற்றிச் செய்திகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்தியாவில் பிராந்திய வர்த்தக மையமொன்றை அமைக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவது குறித்துப் பேசி பிரிட்டனுக்கு வருகைதரும் இந்தியப் பிரதமரை பிரிட்டன் எரிச்சலூட்டுவது என்பது அநேகமாக நடக்கப்போவதில்லை.
கிறித்துவர்களும் சீக்கியர்களும் இந்தியாவில் ஒடுக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. 1984ஆம் ஆண்டு சீக்கிய படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்காததைப் போலவே 2008இல் காந்தமால் வன்முறையில் பாதிக்கப்பட்ட கிறித்துவர்களுக்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தைப் போல வெளிப்படையாகவே ஏகாதிபத்தியச் சட்டகத்தின் ஊடே சிறுபான்மையினர் கொடுமைக்குள்ளாவதை விமர்சிப்பதென்பது அதன் எல்லைகளை அம்பலப்படுத்துகிறது. சமகால இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகப் பயங்கரமான வன்முறைகளைப் பற்றி மௌனம் சாதித்ததன் மூலம் அதற்கு உடந்தையாக இருக்கிறது. மத வன்முறைகளைப் பற்றிய நுணுக்கமான புரிதலை, அதாவது அதன் சிக்கலான அம்சங்களைப் புரிந்துகொள்வதை இத்தகைய விவரிப்புகள் தடுத்துவிடுகின்றன. பைபிளைப் படிக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே கிறித்துவர்கள் இந்தியாவில் ஒடுக்கப்படுவதில்லை; அவர்கள் தலித்துகளாக, ஆதிவாசிகளாக, உலகின் பிற பாகங்களில் வாழும் சிறுபான்மையினரைப் போல் உலகளாவிய முதலாளித்துவம் ஆக்ரமிக்க விழையும், மூலாதாரங்களைச் சார்ந்து வாழ்வதன் காரணமாகவும் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஏழை நாடுகளிலுள்ள மெட்ரோபாலிடன் முதலாளித்துவத்தின் நவீன ஏகாதிபத்திய லட்சியங்களே உலகெங்குமுள்ள மதச் சிறுபான்மையினரையும் விளிம்புநிலை மக்களையும் ஒடுக்குவதில் தலையாயச் சக்திகளாக இருக்கின்றன. ஆகவே ஏகாதிபத்தியக் கருதுகோள்களைக் கொண்ட சட்டகத்திற்குள் சிறுபான்மையினர் கொடுமைகளுக்குள்ளாவதை விவாதிக்க முடியாது.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிக்ல் வீக்லி, மார்ச் 10, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com