கடிதங்கள்
தொழில்நுட்பமும் நவீன இயந்திரங்களும் தோன்றுவதற்கு முன்னரே நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். கரிகாலன் எழுப்பிய கல்லணை ஒன்றே இதற்குச் சான்று. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அதிகமான மழை பெய்தாலும் அதனைச் சேமித்துவைக்கத் திராணியற்ற ஆட்சிகளே மாறிமாறித் தொடர்ந்து தமிழகத்தை ஆள்வது துரதிர்ஷ்டம். காவேரி குறித்த பல்வேறு தகவல்களையும் தீர்ப்பின் நிலையையும் மிகத்தெளிவாகச் சொல்வதாகத் தலையங்கம் அமைந்துள்ளது.
‘கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது’ கட்டுரையில் கவிஞர் சுகுமாரன் சிலி நாட்டுக் கவிஞர்களில் முக்கியமான மூவரைக் குறித்து அருமையாக எழுதியுள்ளார். குறிப்பாக நெரூதா, பார்ரா பற்றித் தெளிந்த அறிவைப் பெற்றே எழுதியிருப்பதின் அதிர்வுகளை அறிகிறோம். கவிஞர்கள் வெளியிட்ட நூல்கள், எதிர்மறைப் போக்கு, வாசிப்புத்திறன் போன்றவற்றை இதனூடாகத் தெளிந்துகொள்கிறோம்.
‘வதனமோ சந்திர பிம்பமோ’ கட்டுரையில் ஜான் சுந்தர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், வாசகர்கள் எனப் பலரை வேறொரு சாயலில் பொருத்திப் பார்த்ததாக எழுதியுள்ளார். வித்தியாசமான கட்டுரை.
தமிழ்க் கல்வியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் தர வேண்டும் என்று விரும்புவது முரண் என்று யதார்த்தமாகப் பொதுவெளியில் சொல்வதாக இ. அண்ணாமலை எழுதிய ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை மொழியும் பயனும்’ கட்டுரை, தமிழ் இருக்கை குறித்தான பிரக்ஞையைத் தருவதாக விளங்குகிறது . ஜார்ஜ் ஹார்ட் கூறியுள்ள கருத்தை முன்மொழிந்து கட்டுரையாளர் கவனம் பெறுகிறார். அங்கு அமையும் இருக்கையால் கற்பித்தலும் ஆய்வும் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. இவ்விருக்கையால் ஏற்படும் எதிர்பார்ப்பு, கனவாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சில தமிழாய்வு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிக்கல் இருக்கையில் இதன்மீதும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைச் சொல்வதாக இக்கட்டுரை இருக்கிறது.
அ.கா. பெருமாளின் ‘கோபுரமேறிச் சாடி உயிர்விடுதல்’ கட்டுரை பல்வேறு கோயில்களில் காலவரிசையில் உயிர்விட்டவர்களின் பட்டியலைத் தருகிறது. அவர்கள் எதற்காக உயிர்விட்டார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சசிபெருமாளைக் குறிப்பிட்டு இது பண்பாட்டின் கூறு என்றும் சொல்வது குறிப்பிடத்தக்கது. பழம் இலக்கியங்களில் இடம்பெற்ற செய்திகளைக் குறிப்பிட்டுக் கல்வெட்டுச் செய்திகளின் தொன்மையையும் தந்தது உணரத்தக்கது.
ம.வ. சீனிவாசன் எழுதிய ‘பள்ளிப் பாடநூல்கள் உருவாக்கமும் மொழி அரசியலும்’ கட்டுரை பல்வேறு தரவுகளை முன்வைத்து ஒப்பீடு செய்ததுடன் மொழி வளர்ச்சி, இருட்டடிப்பு, நவீன கருத்தாக்கம் எனப் பலவற்றை நம்முள் சிந்திக்க வைப்பதாகவும் அமைந்திருக்கிறது. பாடநூல்களை வடிவமைப்பதில் இருக்கின்ற கனவு நிறைவேறி இருக்கிறதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைக்கிறது.
தாய்மொழியில் படிக்காமல் இருப்பது இடைநிற்றலுக்குக் காரணமாக இருக்கிறது. பாடநூல்கள் வழியாக மொழியை, கலாச்சாரத்தைப் பள்ளிகளுக்குக் கொண்டுசெல்வது அவசியமாகிறது . தமிழகத்தில் ஜூன் மாதம் வரவுள்ள பாடநூல் குறித்தான எதிர்பார்ப்பைத் தருவதாகச் சொல்லியிருப்பது நல்ல தொடக்கம். ஆகச் சிறந்த கட்டுரையாக இது அமைந்துள்ளது.
‘ஆறுதல் அணங்கு’ குறித்த சச்சிதானந்தன் சுகிர்தராஜா, கட்டுரைத் தலைப்பை விளக்கிவிட்டுத் தான் படித்த நாவலை அழகாக எடுத்துரைத்துள்ளார். நூலின் தலைப்பு, கதாபாத்திரம், ஜப்பான் நாட்டின் பிடிவாதம், இரண்டு பெண்களின் வாழ்க்கை என பல்வேறு திருப்பங்களையும் பதிவு செய்தது உள்வாங்கத்தக்கது. ஹானா, ஏமி இருவரின் மனநிலை எண்ணங்கள் என்பனவற்றை இயல்பாக எடுத்துரைத்தமை அருமை. கலீலியோ கலிலியைக் குறிப்பிட்டு ஜப்பான் மறுக்கும் இவ்விடயத்தையும் ஒப்பிட்டது சிறப்பு.
மயிலம் இளமுருகு
திருவேற்காடு
வல்லபாய் எழுதிய ‘சில தோற்றப் பிழைகள்’ வாசித்தேன். முகத்துக்கெதிராகத் தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிவுமிக்க எழுத்தாளர்கள் இருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு மிகப் பெரும் பலம். சினிமாவில் கொடி நாட்டியவர்கள் அரசியலிலும் நாட்டிவிடுவார்கள் என்ற பாமரத்தனமான பார்வை பரிதாபத்திற்குரியது. எம்ஜிஆருக்கு அரசியல் பின்புலம் இருந்தது. சினிமாவை அதற்கான ஊடகமாக அவர் பயன்படுத்திக்கொண்டார். காட்சிகள், வசனங்கள், பாடல் வரிகள் என ஒவ்வொன்றும் அவரின் அரசியல், சமூகக் கொள்கைகளுக்கு உரமூட்டுபவையாகப் பார்த்துக்கொண்டார்.
தனிக்கட்சி ஆரம்பித்து உயிர் வாழும்வரை முதல்வராகவே அவர் நீடிக்க அவருடைய படங்கள் மட்டும் காரணமல்ல. அவரது அடிச்சுவட்டில் வந்த ஜெயலலிதாவும் சினிமாவில் மட்டுமன்றி, அரசியல் பள்ளியிலும் ஓரளவு பயின்றவர்தான். அதற்காக, இவர்களின் ஆட்சிகள் அப்பழுக் கற்றவை என்றோ முன்மாதிரியானவை என்றோ நம்புவது எதார்த்தத்தை மறுப்பதாகிவிடும்.
திரையில் ஜொலித்தவர்கள் தரையிலும் ஜொலிப்பார்கள் என்றால் சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் முதல்வர்கள் ஆகியிருக்க வேண்டும்.
கமலும் ரஜினியும், ஒப்பனைகள் இனிக் கைகொடுக்காது என்ற உண்மை சுட ஆரம்பித்தவுடன் அரசியலில் கால் பதிக்க மேடை ஏறுகிறார்கள். நாற்பதைத் தாண்டிய ரசிகர் கூட்டமும், நேரில் பார்க்க முடிந்ததே என் வறட்டுத் திருப்தியிலுள்ள பொதுஜனமும் அவர்களின் மேடையை மொய்க்கலாம்! பார்த்துச் சலித்தபின், உட்பொருளில்லாத இந்தக் கூட்டமும் காணாமல் போகும்.
அரசியலில் ஒரு கொள்கை வேண்டும்; கோட்பாடு வேண்டும்; அதை நோக்கிய ஓர் இலக்கு வேண்டும்; அந்த இலக்கை அடையும் வைராக்கியம் வேண்டும்; அதற்காக உயிர், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்யும் துணிவு வேண்டும்!
இதில் எதுவும் இல்லாமல், ‘தெரிந்த முகம்’ என்ற ஒற்றை ஊன்றுகோலை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம் பயணிக்க முடியும் அரசியலில்? முகத்திற்காக ஒன்றுசேரும் கூட்டம், சிறிது காலத்தில் புதுமுகத்தைத் தேட ஆரம்பித்துவிடும் என்ற கசப்பான உண்மை தெரியவில்லையா இவர்களுக்கு? ‘கொள்கை’ என்றால், அதற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் உயிர் கொடுக்கத் தொண்டன் இருப்பான்.
இதற்கப்பால், இவ்விருவர்மீதும் பலருக்கு வேறொரு பார்வை உண்டு. பாஜகவின் கைப்பாவைகளே இவர்கள் என்பதுதான் அப்பார்வை. இது மட்டும் உண்மையாக இருப்பின் கமல் என்ன, ரஜினி என்ன தமிழ் மண்ணில் இவர்கள் ஒருபோதும் தலைதூக்க முடியாது.
அ. முஹம்மது கான் பாகவி
சென்னை&-14
கடந்த சில மாதங்களுக்கு முன் ஊடக நிருபர் ஒருவர் கமலஹாசனிடம் ‘நீங்களும் ரஜினிகாந்தும் சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?’ என்று கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்கு அவர் ‘ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதைதான்’ என்று பதில் கூறியிருந்தார். இது பத்திரிகைகளில் வந்த செய்தி. கமலின் இந்த மதிப்பீடு அவர்களது ‘சுய’த்தைச் சுத்தமாக வெளிப்படுத்தியுள்ளதே என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர்களது பொக்கையான பொதுவாழ்வு அந்தரங்க ஆலோசகர்கள் சிலர், மடைமாற்றம் என்ற பெயரில் தமது சித்து விளையாட்டுகளைக் காட்டி அன்னாரது செல்லுலாய்டு பயணத்திசைகளை மாற்றிமாற்றி நிர்ணயம் செய்து தடுமாற விடுகிறார்கள். ‘மகன் வாழ்வு போனாலும் போகட்டும், மருமகள் அலைக்கழிக்கப்பட வேண்டும்’ என்ற நல்ல சித்தாந்தத்தில் யார்யாரையோ குறிவைத்து இவர்கள் காய் நகர்த்திக் காட்டுகிறார்கள். இவர்களது காய் நகர்த்தல், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலன் குறித்ததா, இல்லை சில அரசியல் தலைகளை உருத்தேற விடாமல் உருட்டியே விட்டுவிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலா?
எம்ஜிஆர் என்ற மிகப்பெரிய பழைய பிம்பத்தை மனத்தில் நிறுத்தி தமது அரசியல் காகிதப் பட்டத்தை எவ்வளவு உயரத்தில் பறக்கவிட நினைத்தாலும் அது பருந்து என்ன, ஊர்க் குருவியாகக்கூட ஆக முடியாது என்பதைக் கட்டுரை ஆசிரியர் மிகத்தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். பொதுவாழ்விலும் இந்தத் தமிழ் மகாஜனங்கள் மீது தாம் என்றென்றும் அக்கறை உள்ளவன் என்பதைத் தமது ஒவ்வொரு நகர்விலும் ஆரம்பம் முதலே நிலைநாட்டி வளர்ந்த எம். ஜி. ஆரை ‘யுகபுருஷர்’ என்று வர்ணித்தால் மட்டும் இவர்களைப் போன்றவர்கள் அரசியலைப் புனரமைக்க அடித்தளமிட்ட பொதுவாழ்வுப் பிதாமகர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடுமா? பொதுவாழ்வுப் பயணம் என்பது திடீர் கனவில் தோன்றியமையும் மாயமந்திரமா? இவ்வாறு புறப்பட்டுக் கிளம்பிய பொதுவாழ்வுக் கேப்டனின் கப்பல் தன் மனையாள், மைத்துனர் சொல்லே மந்திரம் என்று ஆலோசனையில் தற்போது நடுக்கடலில் நங்கூரமிட்டுத் தத்தளிக்கும் தகவல் யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
‘யுகபுருஷர்’ என்ற சொல்லுக்கு முற்றிலும் இலக்கணமாய்த் தமது வாழ்வையே சத்திய சோதனையாக இன்றுவரை உலகமனைத்துக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மகாத்மாவின் பிரசித்தமான வார்த்தைகளைக் கட்டுரை ஆசிரியர் எடுத்துத் தந்துள்ளார். அடிக்கடி தியானத்திற்காக இமயமலைப் பயணம் மேற்கொள்ளும் சூப்பர் ஸ்டார் மகாத்மாவின் இந்த வார்த்தைகளை தனது தியானத்தில் நன்கு நிலை நிறுத்திப்
பார்க்கலாம்.
சி. பாலையா
புதுக்கோட்டை
‘தமிழ்சினிமா: தோற்றப் பிழைகள்’ வல்லபாய் நன்றாகவே எழுதியிருக்கிறார். சினிமாவில் நடிப்பதென்ற உந்துதல் மூலம் அதிகாரப் பதவிக்கு வர நடிகர்கள் ஆசைப்படுவதை மிகச்சரியாகக் கணித்து எழுதியிருக்கிறார்.
அதில் அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிடும்போது மிகவும் எதிர்மறையான கருத்துக்களையே முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. ஜெயலலிதாவுக்கு முன்பும் பல பெண்கள் இந்திய அரசியலில் கோலோச்சி இருக்கிறார்கள்.
ஜெயலலிதா என்ற பெண் அடிமைகளையும் தற்குறிகளையும் உருவாக்கிப்போனார் எனில், பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் தோன்றிய இந்திரா என்ன செய்தார்? “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” என்று அன்றைக்கு பரூவா கோஷம் போடவில்லையா? சஞ்சய் காந்தியை அமைச்சர்கள் தொழுது நிற்கவில்லையா? அந்த அடிமைகள் நேர்மையான அடிமைகளா? இந்திராவோ அவர்களோ சினிமா திரை உருவாக்கிய புள்ளிகளா? இன்றைக்கும் அசுர நர்த்தனம் புரியும் மோடி எந்த சினிமாவில் கதாநாயகனாக நடித்தார்?
சில ஆளுமைகளின் கறாரான முகம்தான் இதற்குக் காரணமே தவிர, சினிமா அல்ல. ஜெயலலிதா சினிமா விலிருந்து வந்திருக்காவிட்டாலும் இப்படித்தான் இருந்திருப்பார்.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அவர்களுக்காகத்தான் சாதித்துக்கொண்டார்களா, மக்களுக்கு எதையுமே செய்யவில்லையா? வல்லபாய் எழுதுவது நியாயம்தானா? அவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். எந்தப் பாரம்பரிய
அரசியல்வாதியும் செய்யாததை அவர்கள் செய்துள்ளனர்.
ஹார்வார்ட் தமிழ் இருக்கை குறித்துப் பேராசிரியர் இ. அண்ணாமலையின் கட்டுரை நல்ல தெளிவைத் தந்தது. அது குறித்து தமிழ் மக்களிடையே சமீபகாலமாக ‘போற்றி மனப்பான்மை’ கவனமாக ஊடகங்களால் கட்டி எழுப்பப்பட்டது. அந்த இருக்கை மட்டும் அமைந்துவிட்டால், இனி தமிழுக்குச் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை என்பது போன்ற மனப்பான்மை தமிழ் மக்களிடையே வளர்க்கப்பட்டது. தமிழர்கள் எப்போதும் பெருமிதங்களில் மூழ்கித் திளைப்பவர்கள். அந்தப் பெரிய பலூனில் ஒரு சிறிய ஊசி மாதிரி இ. அண்ணாமலை நுழைந்து உண்மையை வெடித்துச் சொல்லிவிட்டார். அவருக்கு பாராட்டுக்கள்.
சிறுகதைகளில் பட்சிஜாதகன் (பாலகுமார் விஜயராமன்) பெர்னாட்ஷா (கல்யாணராமன்) நன்றாக இருந்தன. ஆனால் மொழிதான் மிகவும் சிடுக்கு நிறைந்ததாய் இருக்கிறது. இது புதிய நூற்றாண்டின் மொழியோ என்னவோ?
கே.எஸ். முகம்மத் ஷுஐப்
காயல்பட்டினம்
பா. செயப்பிரகாசம் எழுதியுள்ள ‘மராட்டியம் காட்டும் வழி’ கட்டுரை 1965இன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சி முன்னிலும் வலுவோடு இன்று நிகழ்த்தப்பட வேண்டுமென்பதைத் தகுந்த சான்றுகளுடன் விளக்குகிறது.
கா. காளிமுத்து, நா. காமராசன் ஆகியோருடன் தோளோடு தோள் நின்று மதுரை மண்ணில் எழுச்சிமிகு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்ற மாபெரும் போராளியான பா. செயப்பிரகாசம் தெரிவித்துள்ள கருத்துகளைத் தமிழர்களும் தமிழக அரசும் நன்கு உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டிய தருணமிது.
ஆங்கிலம், நாகாலாந்தைத் தவிர பிற எந்த மாநிலத்திலும் ஆட்சிமொழியாக நீடிக்க வலுவான காரணமில்லை. அன்றைய தலைவலிக்கு உடனடி நிவாரணியாக நடுவண் அரசுடன் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டோம்; ஆனால் நிரந்தரத் தேர்வென்பது அஃதன்று.
“ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற வெறி முழக்கத்துடன் எழுந்த பாஜக, இந்தியா என்பது பல தேசிய இனங்களைக் கொண்ட தேசம் என்ற உண்மையைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சிக்கிறது.
மொழியாலும் இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்டுத் தனித்த தத்தம் அடையாளங்களுடன், வரலாற்றுப் பெருமைகளுடன் வாழ்ந்து வரும் தேசிய இனங்களை ஒரே குடையின் கீழ் ஆளும் வாய்ப்பால் அடிமைகளாக்க முனைகிறது பாஜக. இதனால் இந்தி பேசாத மாநிலங்களின் தன்மானம் முற்றாக ஒழிக்கப்படும்.
தமிழும் அட்டவணை மொழிகளுள் ஒன்று என்ற உண்மை நடுவண் அரசின் நெஞ்சிற் பதிய வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பொதுத்துறை, நடுவண் அரசின் துறை நிறுவனங்கள் அனைத்தும் தமிழைத் தங்கள் அலுவலக மொழியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
இந்தி பேசாத மாநில மக்களிடையே இந்தித் திணிப்பை எதிர்த்து ஒத்த கருத்தை உருவாக்குவது இன்றைய அவசரத் தேவை. அத்தகைய ஒற்றுமைதான் டில்லி ஏகாதிபத்தியத்துக்கு அச்சத்தைத் தரும்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு-
‘நீராதாரம் நம் வாழ்வாதாரம்’ என்று தவித்துப் போயிருந்த நமக்குச் சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்வு சற்றே ஆறுதலளிக்கிறது. “காவிரி விவகாரத்தில் இதுவரை கர்நாடகம் ஏகபோக உரிமையாளர்போல நடந்து வந்திருப்பதும் உச்சநீதிமன்ற உத்தரவுகளைக் கூட அது கடைப்பிடிக்க மறுத்ததும் இந்திய ஜனநாயக அமைப்பின் பலவீனத்தைக் காட்டியது” எனும் கருத்து மெத்தவும் சரியே! இந்தப் பலவீனத்தைப் புறந்தள்ளும் விதமாக காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கட்சிப் பேதமின்றி அனைவரும் இணைய வேண்டிய தருணமிது. சென்ற ஆண்டு கர்நாடகத்தில் சராசரி அளவுக்கும் அதிகமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியிருந்தும் தமிழகத்துக்குத் தரவேண்டிய நீரை வழங்கவில்லை. இதற்கு தமிழக அரசின் மெத்தனமே காரணம். தமிழக விவசாயிகள் உயிரைப்பணயம் வைத்துப் போராடியதோ தற்கொலைசெய்துகொண்டதோ ஆளும் அரசுகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பது பெருத்த அவலம்.
“நம் மாநிலத்திலுள்ள 29,000 குளங்களில் 20,000 குளங்களைத் தெரிவுசெய்து, தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இதனால் 260 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்வதைத் தடுத்துச் சேமிக்க முடியும். பெரிய சிறிய நதிகளின் குறுக்கே 500 முதல் 600 தடுப்பணைகள் கட்டி நீரைச் சேமிக்கலாம். அண்டை மாநிலங்கள் நூற்றுக்கணக்கான தடுப்பணைகள் கட்டியிருக்க, தமிழகம் ஒரு சில அணைகளையே கட்டியுள்ளது. 10கிலோ மீட்டருக்கு ஓர் அணை எனத் திட்டமிட்டால் அவ்வணை
களில் 50 டி.எம்.சி நீரைச் சேரிக்க முடியும். இது நிலத்தடி நீராதாரத்தையும் பெருக்கும். இப்பணிக்கெல்லாம் உலக வங்கியை அல்லது அனைத்துலக நிதி நிறுவனங்களை நாடாது, நமது பொது - தனியார் பங்களிப்பை நாட வேண்டும். வெளிநாட்டு உதவியை நாடினால் அவர்கள் வணிக ரீதியிலான நிபந்தனைகளை விதிப்பர். நமது நாட்டுடைமை வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம், நபார்டு வழியாக நிதி ஆதாரங்களைத் திரட்டலாம் என ஐந்தாண்டுகளுக்கு முன்பே 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டும் திட்டம் தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழகப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (ஓய்வு) ஏ. வீரப்பன் (The Hindu 28.01.18). அரசு இதைப் பற்றிக் கிஞ்சிற்றும் எண்ணவில்லை. இந்தியா ஒரு விவசாய நாடு என்று பீற்றிக்கொள்வதில் பெருமைப்படும் நம்மால் விவசாயி தினம்தினம் செத்துக்கொண்டிருப்பதைத் தடுக்காமல் இறையாண்மை பற்றிப் பேசித் திரிகிறோம்.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
‘கோபுரமேறிச் சாடி உயிர்விடுதல்’ அ. கா. பெருமாளின் கட்டுரை என் கண்களைத் திறந்தன; துக்கத்தை ஓட்டியது. காலையில் எழுந்ததும் தற்கொலைச் செய்திகள் பின் செய்திகள்... மாலை முழுவதும் தற்கொலைச் செய்திகள் என அவை என்னை அண்மையில் வெகுவாகப் பாதித்தன. இப்போதெல்லாம் மாற்றுக் கருத்துச் சொன்னால் கூட தற்கொலை செய்துகொள்ளும் நிலை! அத்தனை அசிங்க அவமானப் பேச்சுகள். ஆனால் இக்கட்டுரை அந்தக் காலத்திலேயே நடந்து இருப்பது, என்னைப் போன்றவர்களுக்குப் புதிய அருஞ்செய்தி.
‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை: மொழியும் பயனும்’ அருமையான விளக்கக் கட்டுரை. இங்கே தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்ற பாரதிதாசன் வரிகள் உயிர் பெற்று உலா வருகின்றன. இந்நிலையில் இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கையால் எந்தப் பயனும் இல்லை / இருக்கப் போவதும் இல்லைதான். அங்கே கால்டுவெல்லும் எல்லிசும் ஜி. யு. போப்பும் இருக்கிறார்களா என்ன தமிழ் வளர்க்க? இது ஒரு விளம்பரம்தான். தமிழ்நாட்டிலேயே தமிழ் இல்லை. ஆனால் அண்மையில் நம் தேசப் பிரதமர் தமிழ் தொன்மையான மொழி என்றதும், தமிழில் பேசத் தொடங்கியதும் உண்மையிலேயே அவர் உண்மை பேசினார் என்பதை என் மனம் ஒத்துக்கொண்டது. வரவர காலச்சுவடு ஓர் அரிய நூல் படித்த அறிவை ஞானத்தை தருகின்றது என்றால் மிகையில்லை. மாதா மாதம் சுவடு பதிக்கின்றது. வரலாறு, வரலாற்றுச் சுவடுகள் என பதிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.
ஞா. சிவகாமி
போரூர்
காலச்சுவடில் இளையநிலாவின் ‘சாயல்தேட்ட’ நோயின் வெளிப்பாடுகள் ‘ஏக்தம்மில்’ வாசித்திடக்கூடிய ஈர்ப்பு விசையுடையன. வாசிக்கவாசிக்க நம்மைப்பற்றியும் ‘நச்’சுன்னு வந்தால் நல்லாயிருக்குமே என நப்பாசை துளிர்த்துவிடுவதையும் எடுத்த எடுப்பிலேயே சுட்டித்தீர வேண்டும். ‘பெரியவர்’ என விலகி நிற்காமல் ‘நம்ம பொதி’ என நெருக்கமாக நின்று பார்த்திருக்கக் கூடுமானால் கிடைத்திருக்கக்கூடிய இன்னஞ்சில சாயல்கள் (1) வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் (2) புலமைப்பித்தன் (3) சுப. வீரபாண்டியன் இவை ஏதோ என் சுயஅனுமானங்கள் அல்ல; இவ்வாறாக இனங்காணப்பட்ட அனுபவங்களே. (4) பெரியாரின் தாடியில்லா இளமைத்தோற்றம்.
இன்னம் இவ்வாறு விடுபட்ட ஓரிரு சாயல்கள் (1) இளங்கோ கிருஷ்ணனுக்குப் பாடகர் உன்னிகிருஷ்ணன் (2) இசைக் கருக்கலுக்கு, ‘அழகர்சாமியின் குதிரை’ கதாநாயகன் (3) முன்பு ‘காலச்சுவடு’ வெளியிட்ட அட்டை முகப்பில் பெரியாரின் கேலிச்சித்திரத்தில் ‘சுரா’வின் சாயல்.
இளையநிலாவுக்கு ‘வரப்பிரசாதமாக’ வாய்த்திருக்கும் இந்நோயால் காலகதியில் பூர்ணிமை நிலவாகப் பரிணமிக்கவும் பரிமாணிக்கவும் ‘இந்தப் பெரியவரின்’ மனப்பூர்வமான ஆசிகள்.
தோழமையுடன்
பொதியவெற்பன்
கோவை
* காண்க: முருகு. ராஜாங்கத்தின் ‘முதல்குடி அரசு’ நூலில் பெரியாரின் இளமைப் பருவத் தோற்றம்.
* ‘பெரியவர்’ எனும் விளி என் கையில் தடியைத் தந்து விடுகிறதே, பெயர் சொல்லியே, அழைக்கலாமே இது ‘கோவை ஞானி’க்கு எம்.வி.வி. எழுதிய பதில் மடல்வரிகள்.
மார்ச் 2018 இதழில் வெளியான பள்ளிப் பாடநூல்கள்: ‘உருவாக்கமும் மொழி அரசியலும்’ கட்டுரை எழுதிய ம.வ. சீனிவாசன் பெயர் ம.அ. சீனிவாசன் என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கவனக்குறைவால் சபரிநாதனின் கவிதைகளுக்குக்கீழ் இசையின் மின்னஞ்சல் முகவரி அச்சாகியிருந்தது. புதிதினும் புதிது பகுதியில் ரீட்டா பரமலிங்கம் பற்றிய குறிப்பை எழுதியவர் சர்வேந்திரா தர்மலிங்கம். தவறுகளுக்கு வருந்துகிறோம்.
- பொறுப்பாசிரியர்