பள்ளம்
அவன் கடற்கரைக்குச் செல்லவேண்டுமென்று அன்று திட்டமிட்டிருக்கவில்லை. எதிர்பாராதவிதமாகவே அவன் அந்தக் கடற்கரைக்குச் சென்றான். இரவு அவனைத் தூங்கவிடாமல், காற்று அலைக்கழிக்கும் வறண்ட இலையைப்போலப் படுக்கையில் சுழற்றியடித்தது. அவனுடைய இதயம் எந்தக் காரணமும் இல்லாமல் வெகுவேகமாகத் துடித்தது. பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து இந்தியாவில் இருந்து வந்தது அமெரிக்காவில் தனியாகச் செத்துப்போகவா?
அடர்ந்த இருட்டுக் கிணற்றில் தாம்புக்கயிற்றில் இறங்கும் குடமாக அடிஆழம் தெரியாத தூக்கத்திற்குள் இறங்குபவனை ஒரு மிகப்பெரிய ஓசை - யாரோ கதவை ஓங்கித் தட்டுவது மாதிரியும் ஏறக்குறைய உடைத்துவிடுவது போலவும் கேட்ட சத்தம் அசுர வேகத்தில் இழுக்கப்படும் இராட்டினமாய் மேல்பரப்புக்கு விருட்டென்று இழுத்தது. விழித்தபிறகு அறையில் நிறைந்திருந்த நிசப்தத்தையும் நிச்சலனத்தையும் எதிர்கொண்டபோது ஆழ்ந்த பதைபதைப்புக்கு உள்ளானான். இருப்பது எந்த இடம் என்று புர