சந்தையூர் சுவர் - உண்மை அறியும் குழுவின் அறிக்கை
குழுவில் அங்கம் வகித்தவர்கள்
உண்மை அறியும் குழுவானது, இரு பட்டியல் இனச் சமூகத்திலிருந்தும் சமமான பிரதிநிதித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புடன் அமைக்கப்பட்டது. மேலும், பட்டியல் இனமல்லாத இரு கல்வியாளர்களையும் கொண்டுள்ளது.
* திருமதி செம்மலர் செல்வி, உதவிப் பேராசிரியர், சமூகப்பணித் துறை, இலயோலா கல்லூரி, சென்னை.
* திருமதி பழனியம்மாள், வழக்கறிஞர்- தன்னிச்சையான மனித உரிமைச் செயற்பாட்டாளர், சென்னை.
* டாக்டர் பொன்னுசாமி, தன்னிச்சையான மனித உரிமைச் செயற்பாட்டாளர், மதுரை.
* டாக்டர் சி. இலட்சுமணன், இணை பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
* டாக்டர் ஷி. சாமுவேல் ஆசிர் ராஜ், பேராசிரியர் - இயக்குநர், சமூக விலக்கல் மற்றும் உள்ளடக்கல் திட்ட ஆய்வு மையம், சமூகவியல் துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
* திரு ஃப்ரான்சிஸ் அடைக்கலம், உதவிப் பேராசிரியர், சமூகப்பணித் துறை, இலயோலா கல்லூரி, சென்னை.
பார்வையிட்டதற்கான நோக்கங்கள்
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், இந்திரா நகர், சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள், முதியோர், பெண்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கில் தங்கள் வீடுகளை விட்டு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலும் காட்டின் எல்லையிலும் தற்காலிக முகாம் அமைத்து ‘தீண்டாமைச் சுவ’ருக்கு எதிராகப் போராடி வருகின்றனர் என்பதை அறிந்து, மேற்சொன்ன குழு உறுப்பினர் அனைவரும் சந்தையூர் பயணிக்கத் தீர்மானித்தோம். மேற்சொன்ன சுவர், பறையர் சமூக மக்களால் அங்குள்ள கிராமப் பொதுநிலத்தில் கட்டப்பட்டதாகும்.
அனைத்துக் குழு உறுப்பினர்களும் முன்பே சமூகநீதி தொடர்புடைய பல சிக்கல்களில் பங்கெடுத்துள்ளோம். சமூகத்தில் கீழ்நிலையிலுள்ள மக்களின் அவலங்கள் குறித்தும் சாதி ஒழிப்பிலும் அக்கறையும் உறுதிப்பாடும் கொண்டுள்ளோம். பார்வையிட்டதற்கான நோக்கம், களத்திலிருந்து நேரடித் தரவுகளைப் பெறுவதே ஆகும். பல்வேறு ஊடகங்களிலிருந்தும் பல்வேறு அறிக்கைகள் முன்பே வெளிவந்துள்ளமையால், சமூகநல நோக்கமுடைய கல்வியாளர்களும் அரசியல் சார்பற்றவர்களும் சிக்கலை நேரடியாக ஆய்ந்தறிந்து பாரபட்சமற்றுக் களநிலவரத்தைப் பொதுமக்களுக்கு முன்வைப்பதும் அரசின் உடனடித் தலையீட்டைக் கோருவதும் அவசியமாகிறது.
உண்மை அறிய கையாண்ட முறை
சந்தையூர் கிராமத்திற்குச் சென்று நேர்காணல்கள் நடத்துதல், குழு விவாதங்கள் நடத்துதல் ஆகிய வழிகளைக் கையாள உண்மை அறியும் குழு தீர்மானித்தது. 18/02/18 அன்று சந்தையூர் கிராமத்திற்குச் சென்ற உண்மை அறியும் குழு, கிராமத்தில் வசிக்கும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் மலையடிவாரத்தில் தங்கள் குடும்பத்தோடு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மக்களையும் சந்தித்தது. மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய பங்குதாரர் அனைவரையும் உண்மை அறியும் குழு சந்தித்தது.
உண்மை அறியும் குழு இந்தப் பிரச்சனைக்குத் தொடர்புடையோர்களிடம் சில முக்கிய கேள்விகளை எழுப்பியது.
இந்த மோதல் எப்போது முதன்முதலில் தோன்றியது? அதன் வரலாறு என்ன? ஏன் அந்தச் சுவர் கட்டப்பட்டது? சுவர் கட்டப்பட்டபோதே மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களும் ஏன் அதைத் தடுக்கவில்லை? மாவட்ட நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன? இக்கிராமத்தில் பல்வேறு சாதிகளுக்கிடையே நிலவும் பாகுபாடுகள் என்ன? இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்/சமரச முயற்சிகள் என்னென்ன? அவை ஏன் தோல்வியுற்றன? இந்தச் சுருக்க அறிக்கை, குழு உறுப்பினர்கள் தனித்தனியே பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
உண்மை அறியும் குழுவிற்குப் பதிலளித்தவர்கள்
* மலையடிவாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் அருந்ததியர் சமூக மக்கள்
* சந்தையூரில் வசிக்கும் பறையர் சமூக ஆண்கள், பெண்கள்
* மாவட்ட ஆட்சியர், மதுரை
* ஆய்வாளர், பேரையூர் காவல் நிலையம்
* வருவாய் ஆய்வாளர், சந்தையூர்
* தலையாரி, சந்தையூர்
* திரு. கதிர், எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர்
* திரு. ஜக்கையன், ஆதி தமிழர் கட்சி
இந்திரா நகர், சந்தையூர் குறித்த விவரங்கள்
இந்திரா நகர், சந்தையூரிலுள்ள ஓர் ஆதி திராவிடர் குடியிருப்பு. இங்கு பட்டியல் இன சாதிகளான பறையர், அருந்ததியர் ஆகியோர் வாழ்கின்றனர். தவிர, மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளான முத்தரையர், மணியக்காரர், நாயக்கர் போன்றோரும் சந்தையூரில் வாழ்கின்றனர். சுமார் எழுபது அருந்ததியர் குடும்பங்கள், இருபது பறையர் குடும்பங்கள் சந்தையூரில் வசிக்கின்றன. சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலத்தின் ஒரு பக்கம் பறையர்களும் இரு பக்கங்களில் அருந்ததியர்களும் வாழ்கின்றனர். அவர்கள் சுவரை ஒட்டி இருக்கும் நடைபாதையையும் (12 அடி அகலம்) பயன்படுத்துகின்றனர். பொதுத் தேவைகளுக்காகப் பயன்படுத்த இரு குடியிருப்புகளுக்கும் பொது இடம் இருக்கிறது. பறையர் குடியிருப்பை ஒட்டியுள்ள பொதுநிலத்தில் ராஜகாளி அம்மன் கோயில் உள்ளது. அருந்ததியர் குடியிருப்பை ஒட்டி சக்திகாளியம்மன் கோயிலும் தவிர அருள்மிகு விநாயகர் கோயிலும் உள்ளது. பொது நிலத்தில் பறையர், அருந்ததியர்களுக்கென தனித்தனியே, ஒரே மாதிரியான சமூக மேடை/அரங்குகள் உள்ளன. இன்னும் முழுமையாகக் கட்டப்படாத இந்தச் சுவர் ராஜகாளி அம்மன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது.
அருந்ததியர்களின் கருத்து: ‘தீண்டாமை’ சுவர்
பறையர் குடியிருப்பின் பக்கமிருக்கும் பொதுப் புழங்கிடம் தம் பகுதியில் இருப்பதைக் காட்டிலும் பெரிதாக உள்ளது என்பது அருந்ததியர் மக்கள் முன்வைக்கும் வாதம். அது மட்டுமின்றி, பறையர் மக்கள் கோயிலைச் சுற்றி ஒரு சுவரைக் கட்டியுள்ளனர். இது ராஜகாளி அம்மன் கோயிலுக்கு மறுபுறம் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்புக்கான நுழைவிடத்தைத் தடுக்கவில்லை என்றாலும் நடைபாதையைக் குறுகச் செய்கிறது. 2012இல் பறையர் சமூகத்தினர் ராஜகாளி அம்மன் கோயிலைச் சுற்றிக் கம்பி வேலியை எழுப்பினர். பின்பு, இதை அருந்ததியர் சமூகத்தினர் எழுப்பிய ஆட்சேபணையால் மாவட்ட நிர்வாகம் நீக்கியது. இதனால், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்புமே வழக்குகள் பதியும் அளவுக்குச் சென்றது.
தாங்கள் மனித, கால்நடைப் பிரேதங்களைச் சுமக்கும் தூய்மையற்ற தொழில் செய்வதாலும் ராஜகாளி அம்மன் கோயிலை ஒட்டிய நடைபாதையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் பறையர்கள் இந்தச் சுவரைக் கட்டியுள்ளதாக அருந்ததியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2015இல், இந்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஜமீன்தார் முன்னிலையில், சுவர் கட்டுவது குறித்து இரு சமூகத்தினரிடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அது அச்சுறுத்தல்/மதுவால் தூண்டுதல்/ஒற்றுமையின்மை போன்றவற்றின் மூலம் கையெழுத்துப் பெறப்பட்டதாக அருந்ததியர்கள் கூறுகின்றனர்.
சுவர் எழுப்பப்பட்ட பிறகு ராஜகாளி அம்மன் கோயில் திருவிழாக்களுக்கு வரும் மக்கள், தங்கள் வாகனங்களை அருந்ததியர் குடியிருப்புக்கு அருகேயுள்ள பொது நிலத்தில் நிறுத்துவதாகவும் ஒருமுறை அங்கே இருக்கும் தண்ணீர் தொட்டி சேதப்படுத்தப்பட்டதாகவும் அருந்ததியர்கள் கூறுகின்றனர். சுவர் எழுப்பப்பட்ட பிறகு பறையர் சமூக ஆண்கள் தங்களுக்கு எதிராகத் தகாத மொழிகளைப் பயன்படுத்துவதாக அருந்ததியர் சமூகப் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவை பாலியல் தன்மை கொண்டது எனவும் கூறுகின்றனர். எனவே, பறையர்கள் கட்டிய அந்தச் சுவரை இடிக்கச் சொல்லிப் பல்வேறு போராட்டங்கள் நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்களும் அளிக்கப்பட்டன. பல அமைப்புகள் மூலம் இரு சாதிகளுக்குமிடையே பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன. எல்லா முன்னெடுப்புகளும் தோல்வியுற்றபின், அருந்ததியர் மக்கள் நீதிமன்றத்தை நாடிச் சுவரை இடிக்கக் கோரி நீதிப் பேராணை மனுவை அளித்தனர். உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை “இந்தக் கோரிக்கை குறித்து தக்க நடவடிக்கை” எடுக்கச் சொல்லி மாவட்ட நிர்வாகத்தைப் பணித்தது.
மதுரை உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகம் காட்டிய ‘காலம் நீட்டித்த தாமதம்’, பறையர் சமூகத்தினருக்கு அதே நீதிமன்றத்தில் தற்காலிகத் தடையாணை வாங்க ஏதுவாக அமைந்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர். இதன் நீட்சியாகவே, அருந்ததி இன மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி மலையடிவாரத்தில் தங்கிப் போராடுவதற்குத் தள்ளப்பட்டனர். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் ‘தீண்டாமைச்’ சுவர் இடிக்கப்படும் வரை அடிபணியவோ வீடு திரும்பவோ போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பறையர்களின் கருத்து: கோயில் ‘பாதுகாப்பு’ சுவர்
அருந்ததியர் மக்கள் ராஜகாளி அம்மன் கோயிலுக்குள் நுழைவதையோ கடவுளை வழிபடுவதையோ தடுப்பதற்காகச் சுவர் கட்டப்படவில்லை எனப் பறையர் சமூகத்தினர் கூறுகின்றனர். கட்டிமுடிக்கப்படாத அந்தச் சுவரின் பிரதான நுழைவாயிலே அருந்ததியர் குடியிருப்பை நோக்கித்தான் உள்ளது.
முன்பு பறையர், அருந்ததியர் சமூக மக்கள் பொதுக் களத்திலிருக்கும் பஞ்சாயத்து வாரிய தொலைக்காட்சி உட்பட அனைத்து வசதிகளையும் பொதுவாகவே பயன்படுத்தி வந்தனர். பின்னர், அங்கே விநாயகர் கோயில் (டி.டி.வி. தினகரன் பெரியகுளம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தபோது இந்து அறநிலையத் துறையின் மூலம் கட்டப்பட்டதாகப் பறையர் சமூகத்தினர் குறிப்பிட்டனர்) அருந்ததியர் குடியிருப்பை ஒட்டிய பொதுக் களத்தில் கட்டப்பட்ட பிறகு, அருந்ததியர்கள் அக்கோயிலுக்கு உரிமை கோரினர்.
ராஜகாளி அம்மன் கோயிலை ஒட்டியுள்ள நிலம் பொது நடைப்பாதையாக அருந்ததிய மக்களால் பயன்படுத்தப்படுகிறது. முதலில், இரு சமூகத்தினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரண்டடி நிலத்தைப் பொதுப் பாதையாகப் பயன்படுத்த பறையர் சமூகத்தினர் ஏற்றுக்கொண்டனர். 12 அடி அகலப் பாதையைச் சாலை அமைக்க பயன்படுத்த (நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஜமீன்தார் முன்னிலையில்) பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. (சாலையை அமைத்தது மாவட்ட நிர்வாகமாகும்.)
2015ஆம் ஆண்டிலே இரு சமூகத்துக்குமிடையே எழுத்தின் மூலம் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகே ராஜகாளி அம்மன் கோயிலைச் சுற்றிச் சுவர் எழுப்பப்பட்டதாகப் பறையர்கள் தெரிவிக்கின்றனர். தவறான காரணங்களுக்கு அந்த இடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அருந்ததியர்கள் மேலும் நிலத்தில் பங்கு கோருவதைத் தவிர்க்கவுமே அந்தச் சுவர் கட்டப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அருந்ததியர்களைத் தாங்கள் எந்த அடிப்படையிலும் பாகுபடுத்தவில்லையென்றும் அருந்ததியர் குடியிருப்பில் இருக்கும், அவ்வினத்தைச் சேர்ந்த ஆசிரியை பணிபுரியும் அங்கன்வாடிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புவதை நிறுத்தவில்லையென்றும் வாதிடுகின்றனர் பறையர்கள். அந்த ஆசிரியை தங்கள் வீட்டுக்கே வந்து முட்டையையும் இதர ஊட்டச்சத்து உணவுகளையும் இன்றளவும் தருவதாக நேர்மறையான கருத்தே கொண்டுள்ளனர். பறையர், அருந்ததியர் என இருதரப்பினருக்குமே எதிராக மறவர் சமூக மக்கள் தீவிரப் பாகுபாடுகள் காட்டித் தீண்டாமை கடைப்பிடிப்பதாகவும் பறையர் சமூக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போதும் இரட்டைக் குவளை முறை வழக்கத்தில் உள்ளது. பறையர்கள், தாங்கள் மறவர்களின் வயல்களில் வேலை செய்ய மறுப்பதாலும் அவர்களின் தீண்டாமை வழக்கங்களுக்கு எதிராக இருப்பதாலும் அவர்கள் பட்டியலின மக்களுக்கிடையில் பகையைத் தூண்டிவிடுவதாகக் கூறுகின்றனர். சுவர் கட்டப்பட்ட பின்பே இந்தச் சிக்கல் தீவிரமடைந்ததாகவும் அதனால் ஏற்பட்ட வாதங்களால் தகாத மொழிகளை இரு சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையில் சென்றதாகவும் பறையர்கள் கருதுகின்றனர். கோயிலைச் சுற்றியிருப்பது தீண்டாமைச் சுவரல்ல என்று பறையர்கள் அழுத்தமாகச் சொல்கின்றனர். அருந்ததியர்களுக்குக் கோயிலுக்குள்ளும் அதனைச் சுற்றியும் அணுக எந்தத் தடையோ கட்டுப்பாடோ இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் கருத்து: ‘சர்ச்சைக்குரிய’ சுவர்
சர்ச்சைக்குள்ளான இடம் பொதுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நத்தம் புறம்போக்கு நிலமாகும். அந்த மரபடிப்படையில், சமூகத்தின் பொதுத் தேவைக்காகக் கட்டுமானங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அனைவருடைய நலனையும் கருத்தில் கொள்வது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். சந்தையூரில் உள்ள அந்தச் சுவர், இரு சமூகங்களுக்குமிடையே போடப்பட்ட பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதால், அந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எந்தத் தலையீடும் இல்லை. எனினும் சுவரை அனுமதித்தது அப்போதைய மாவட்ட நிர்வாகத்தின் தோல்வி என்றும் கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் இரு சமூகத்திற்குமிடையே பல ‘நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிக’ளை மேற்கொண்டுள்ளார். அவர் அந்தக் கிராமத்திற்கும் அருந்ததியர்கள் போராட்ட முகாமிட்டிருக்கும் மலையடிவாரத்திற்கும் சென்று பார்வையிட்டு அமைதி உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். போராட்டம் மேற்கொள்ளும் இரு சமூகத்திடமுமே மாவட்ட நிர்வாகம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது. வருவாய் நிர்வாகமும் மக்களைக் கூர்ந்து கவனித்து வருகிறது. தற்போதுள்ள அங்கன்வாடி தனியார் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருவதால் (சர்ச்சைக்குரிய சுவர் இருக்கும்) ராஜகாளி அம்மன் கோயிலுக்கு அருகில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கும் நிர்வாகத்திற்கும் எந்த விதமான முடிவை எடுக்கவும் அதிகாரம் இருப்பினும், இரு சமூகங்களும் ஒன்றுபட்டு வாழவேண்டி, அவர்கள் நீண்ட காலத் தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சுவரை இடிப்பது மட்டும் சிக்கலுக்கு உண்மையான தீர்வைக் கொடுக்காது என்றும் மக்களிடம் பேசிச் சமாதானம் ஏற்படுத்துவதில் எந்தக் கடினமும் இல்லையெனினும் சில ‘வெளி நபர்கள்’ தங்களின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக இரு சமூகங்களையுமே பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இச்சூழ்நிலையில், கவனமான மேற்பார்வை செலுத்த வேண்டி, மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு அருகிலும் கிராம மக்கள் போராடும் மலையடிவாரத்திலும் காவலர்களை நியமித்துள்ளது. பிரச்சனையைக் கட்டுக்குள் வைப்பதற்காக முறையாகத் தகவல்களையும் அறிக்கைகளையும் சேகரித்து வருகிறது.
உண்மை அறியும் குழுவின் அவதானிப்புகள்
பறையர், அருந்ததியர் சமூகத்தினரிடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் பிரச்சனை, அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் படித்து மேலும் பிரச்சனைக்குத் தொடர்புடைய பல நபர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு கீழ்க்காணும் அவதானிப்புகளை முன்வைக்கிறோம்.
அருள்மிகு விநாயகர் கோயில்
விநாயகர் கோயில் அருந்ததியர்களின் பொது இடத்தில் கட்டப்பட்டது. 21/07/2008 அன்று தாசில்தார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின் மூலம் அருள்மிகு விநாயகர் கோயிலில் வழிபடுவதில் சட்ட ஒழுங்குச் சிக்கல் இருந்திருப்பதாகத் தெரிகிறது. கோயிலைத் திறந்துவைத்திருக்க வேண்டிய நேரம் குறித்தும், இரு சமூகங்களும் அமைதியைக் காக்கும் வகையில் அங்கே வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது குறித்தும் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் இரு சமூகங்களின் பிரதிநிதிகளாலும் கையெழுத்திடப்பட்டுள்ளது. விநாயகர் கோயிலை யார் கட்டுப்படுத்துவது என்ற பூசல் இருந்து வந்துள்ளது இதன்மூலம் தெரிய வருகிறது. தற்போது, அந்த விநாயகர் ஆலயம் பூட்டப்பட்டு அதன் சாவி அருந்ததியர் சமூகம் வசமுள்ளது. அக்கோயில் பூசாரி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
முன்பு, இரு சமூகத்தினரும் எவ்விதத் தடைகளோ கட்டுப்பாடுகளோ இன்றிக் கோயிலில் வழிபட்டு வந்துள்ளதை எங்களால் ஊகிக்க முடிகிறது. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சரளமாகத் தெலுங்கு மொழி பேசுகின்றனர் (அருந்ததியர்கள் வீட்டில் தெலுங்கு பேசுவது வழக்கம்). இது இரு சமூகத்தினரிடையே இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.
இரு சமூகத்தினரின் குடியிருப்புப் பகுதியிலுள்ள பொது நிலம் யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது குறித்த சர்ச்சை
அனைத்துத் தரப்பினரிடமும் மேற்கொண்ட தொடர் நேர்காணல்களுக்குப் பிறகு தெரியவருவது: மூன்று தலைமுறைகளாகப் பொதுப் பயன்பாட்டில் இருந்த இடத்தை இப்போது யார் கட்டுப்படுத்துவது என்பதே பிரச்சனையாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மட்டுமே இது தீவிரச் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
* இந்தச் சுவர் எழுப்பப்பட்டது ‘தீண்டாமை’ அல்லது ‘கோயில் பாதுகாப்பு’ என்ற இரண்டுக்காகவும் இல்லை. மாறாக, குடியிருப்புப் பகுதியிலுள்ள பொது நிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இருக்கலாம்.
* சந்தையூரில் உள்ள இரு சமூகங்களிடமுமே பொது இடத்திற்கு யார் உரிமை கோருவது என்பது குறித்த சர்ச்சையும் அது தொடர்பாக பரஸ்பர குற்றச்சாட்டுகளும் உள்ளன.
* அந்த இடங்களைப் பயன்படுத்துவதை யாரும் தடுக்கவில்லை என இரு தரப்பினருமே ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், அந்தச் சுவர் தங்களுடைய உரிமையையும் அதிகாரத்தையும் பாதிக்கிறது என்ற வாதத்தை ஒரு தரப்பு முன்வைக்கிறது.
* சாதியமைப்பு ரீதியாக இவ்விரு சமூகங்களுமே விலக்கப்பட்ட சாதிகள் எனும் வகைப்பாட்டில் வந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பு, நிலவுடைமை, கலாச்சார வழக்கங்களிலுள்ள சிறு வேறுபாடுகள் என்ற அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. அதுவே ஒரு வகையில் இந்தச் சிக்கலுக்குக் காரணியாகும்.
* முற்காலத்தில், இரு சமூகத்தினரிடையே பரஸ்பரத் தொடர்புகள், இறைச்சியும் சாப்பாடும் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. திருமணம் போன்ற சமூக விழாக்களில் சாதிப் பேதமின்றி இரு சமூகங்களுமே கலந்துகொண்டுள்ளன. ஆக, அந்தக் குறிப்பிட்ட பொது நிலத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பிடமுமே எந்தக் கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ முற்காலத்தில் இருந்திருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
தமிழகத்தில் பொதுவாக இருக்கும் சாதிய அரசியலோடு இச்சிக்கலைத் தொடர்புபடுத்திப் பார்த்தல்
எப்படியாகிலும், மறவர் சாதியினரின் ஆதிக்கம் அவர்கள் பறையர், அருந்ததியர் ஆகியோருக்கு எதிராகக் காட்டும் பாகுபாடுகள் தீவிரமாக இருந்து வருகின்றன. பறையர்கள் சந்தையூர் கிராமத்தில் மறவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக வழக்குகள் (வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்) பதிந்துள்ளனர். மறவர் வசமுள்ள வயல்களில் பணிபுரிவதைப் பறையர்கள் புறக்கணித்துள்ளனர். இன்றும் மறவர்களே இக்கிராமத்தில் நிலவுடைமையாளர்களாக உள்ளனர். தீண்டாமையின் குறியீடாக இன்னும் இரட்டைக் குவளை முறை பரவலாக இருந்து வருவதை உணர முடிகிறது. ஆனாலும் பன்னெடுங்காலமாக தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் மறவர்களை எதிர்த்து ஒன்று திரண்ட முன்னெடுப்புகள் எதையும் பறையர், அருந்ததியர் சமூக மக்கள் மேற்கொள்ளவில்லை.
மேற்சொன்ன அவதானிப்புகள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சாதி இந்துக்களான வன்னியர், கள்ளர், கவுண்டர் போன்றோரின் சாதி அடிப்படையிலான அடையாள அரசியல், தலித் அரசியலுக்குள்ளும் ஊடுருவியிருப்பது தெற்றெனத் தெரிகிறது. திராவிடக் கட்சிகள் அதிகாரத்தில் நீடிக்க சாதி ஓட்டுகளையே மூலதனமாகக் கொண்டுள்ளன. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகியோர் வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே திராவிடக் கட்சிகளால் பார்க்கப்பட்டு வந்துள்ளனர். மேலும், சாதி ஒழிப்பிற்கு முக்கியமானதாக விளங்கும் தலித் அரசியல் முனைப்புகளை விழிப்புடன் ஒதுக்கியும் வந்துள்ளனர். சமூக நீதிக்கு உழைப்பதாக அறிவித்துக்கொள்ளும் முற்போக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு பட்டியலின சாதிகளை ஒன்றிணைக்கவோ குறைந்தபட்சம் அவர்களுக்குள் ஏற்படும் முரண்களைத் தவிர்க்கவோ எந்த நேர்மையான முன்னெடுப்புகளையும் செய்யவில்லை. தமிழகத்திலுள்ள ஆதிக்க சாதியினருக்கு எதிராகத் தங்கள் வலிமையை ஒன்றிணைக்க முயலும் தலித் இயக்கங்கள்/கட்சிகள்/குழுக்கள், அந்த வலிமையை ஒன்றுதிரட்டி மாபெரும் அரசியல் சக்தியாக உருவாவதை விடுத்து, இவர்களும் ஆதிக்க சாதிக்கட்சிகள் செய்யும் சாதி அடையாள (பள்ளர், பறையர், அருந்ததியர் எனும்) அரசியலைப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதிக் கட்சிகள் வளர்த்தெடுக்கும் சாதிய கௌரவம், பழைமை, வீரம், ஆணாதிக்கத்தைச் சில தலித் அரசியல் இயக்கங்களும் பின்பற்றி அவர்களுடைய சாதியப் பழம்பெருமைகளை (வீர பறையர், வீர அருந்ததியர்) மீட்டுருவாக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் வளங்களின் பற்றாக்குறை, நிலம் உள்ளிட்ட மற்ற வளங்களின் போதாமையால் அது தொடர்பாக நிகழும் போட்டிகள், நிலப்பிரபுத்துவச் சூழலிலுள்ள வாழ்க்கை முறை, குறைந்து வரும் வாய்ப்புகள் என இவையனைத்தும் அடையாள மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. பண மதிப்பு நீக்கம், பணவீக்கம், பருவநிலை மாற்றத்தால் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், வறட்சி என இவையும் கல்வியற்ற அல்லது குறைந்த கல்வியறிவுடைய இந்த மக்களை ஆட்டுவித்து அவர்களுடைய இழந்த பொருளாதார வாய்ப்புகளுக்கு ‘மற்றவர்களே’ காரணம் என விரல் நீட்ட வைக்கின்றன.
பரிந்துரைகள்
1. மாவட்ட நிர்வாகம், மதுரை உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் காலத் தாமதத்திற்கான காரணம் குறித்து ‘வெளி சக்திகள்’ அவர்களின் சொந்த அரசியல் லாபத்திற்காக, சாதி ரீதியிலான விஷத்தை அப்பாவி மக்களின் சிந்தனையில் விதைப்பதை ஏன் தடுக்க இயலவில்லை என்பது குறித்தும் தம் நிலைப்பாட்டைப் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
2. பள்ளி செல்லும் சிறுவர்கள், பெண்களின் அவல நிலை குறித்து உண்மை அறியும் குழு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஆகவே, மாநில அரசாங்கம் பாராமுகம் காட்டி, இந்த விரும்பத்தகாத சூழ்நிலை தாமாகக் கட்டுக்குள் வரட்டுமெனக் காத்திருக்கக் கூடாது. மாறாக அரசு இப்பிரச்சனையைச் சரி செய்ய உடனடியாகச் செயல்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
3. இரண்டு சமூகங்களுமே நீதிமன்றத்தின் தலையீட்டை நாடுவதால், நீதிமன்றம் இப்பிரச்சனைக்குரிய சுவர் தொடர்பாக எந்த விதமான முடிவை எடுத்தாலும் அதற்கு இரு தரப்புமே இணங்கி நடக்க வேண்டும். இரு சமூகத்தினரிடையே அமைதியை ஊக்குவிப்பதற்கான சாதகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
4. மேலும் ஒவ்வோர் அருந்ததியர் குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் விளைநிலம் வழங்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். நிலமற்றோருக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று 2005-06ஆம் ஆண்டிலேயே அப்போதைய தமிழக அரசு உறுதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது, அடித்தட்டு மக்களின் வறுமையை ஒழிக்கவும் அவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து மீளவும் நீண்ட காலத் தீர்வைக் கொடுக்கும்.
5. தற்காலப் பொருளாதார வளர்ச்சி என்பது பெருநிறுவனங்களை ஒட்டியே சுழல்கிறது. அவை, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு என்கிற பெயரில் அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளைப் பெறுகின்றன. எனவே இந்திரா நகர், சந்தையூரைச் சேர்ந்த அருந்ததியர்களைத் தத்தெடுத்து அவர்களுக்குத் தரமான கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய அவற்றைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
6. அருந்ததியர் சிறுவர்களுக்கு இலவச, தரமான கல்வியை வழங்கக் கோரி கிறிஸ்துவ அமைப்புகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இது 2001-02ஆம் ஆண்டின் தலித் கிறிஸ்துவ வளர்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
7. கிராமப்புற தலித் மக்களிடையே செயல்படும் அரசு சாரா மற்றும் ஏனைய அமைப்புகள், இதுபோன்ற உட்சாதி அடையாளச் சிக்கல்களை அணுகிப் பல்வேறு பட்டியல் இன மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திடச் செயல்பட வேண்டும்.