தூர தேசத்து மகாராஜா
மரண வீட்டின் அடையாளங்கள் முற்றிலும் அங்கு குடியேறியிருந்தன. பெரும் ஆட்டக்காரனின் மரணம் சுற்று வட்டாரம் முழுவதும் செய்தியாக மாறியிருந்தது. இரவின் வெளிச்சமும் யார் கண்ணுக்கும் தெரியாமல் இறங்கிக்கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்த தெருவின் காற்றில் சாராய வாசம் கலந்து வீசியது. போதையில் ஆடியவனுக்கெல்லாம் சாராயம் உள்ளுக்குள் நிதானமாக வேலையைச் செய்தது. இழவு வீட்டின் முன்னால் போடப்பட்டுள்ள தென்னங்கீற்றுப் பந்தலுக்குக் கீழே சனிமூலையில் ரோஜா, துலுக்க மல்லியின் மணம் காற்றுடன் ஒன்றுகூடிச் சல்லாபம் செய்தது. மாப்பிள்ளை கழுத்தோ மரணித்தவனின் கழுத்தோ வாசம் ஒன்றுதான். பூ மாலைகளின் கணக்கு கூடிக்கொண்டு போனது. காற்றுக்கும் பூக்களின் வாசத்துக்கும் இடம் பொருள் ஏவல் தெரிவதில்லை. புள்ளியா மூலையில் சாவுக்கு வழி விடுவதற்கான படையல் பொருட்களும் அதனதன் தன்மைக்கு உயிருடன் காத்திருந்தன. அழுகைச் சத்த