சிவராசுவின் இடைத்தேர்தல்
”தொரம்மா! தொரம்மா!” என்று தனபாக்கியத்தை வாசலில் நின்றுகொண்டு அழைக்கும் குரல் கன்னியம்மாவுடையது. இரவு அவன் இச்சைக்கு ஈடுகொடுத்ததில், விடிந்ததுகூடத் தெரியாமல் உறங்கிக் கிடந்தவள் திடீரென்று கண்விழித்தாள்; விழித்த வேகத்தில் அனிச்சையாகத் துடுப்புப் போடுவதுபோலக் கையால் பக்கத்தில் துழாவினாள். அவனில்லை; நம்பிக்கையின்றி இரண்டாவது முறையாகக் கையைச் சுதந்திரமாக ஓடவிட்டுத் தடவிப் பார்த்தாள், அவன் விட்டுச்சென்ற வெப்பம்மட்டுமே பாயில் மிச்சமிருந்தது. எழுந்து உட்கார்ந்து தன்னருகே முடங்கிக்கிடந்த வெறுமையைப் பைத்தியக்காரிபோல சில நொடிகள் பார்த்தாள். சுவரோரமிருந்த தகரப்பெட்டி திறந்திருந்தது. தலையை நிமிர்த்திச் சுவரைப் பார்த்தாள். அதிகம் புலராத காலை என்பதால், சீவராசுவும் இவளுமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சட்டமும் கண்ணாடியுமாகத் தொங்கிக்கொண்டிருந்தது. சட்டத்திற்குள் இவள் அருகில் நிற்கும் சீவராசு இவளைப்போ