நம்பிக்கையூட்டும் பாடம்
என் தந்தை பாலய்யா
(சுயசரிதை)
ஒய்.பி. சத்தியநாராயணா
தமிழில்: ஜெனி டாலி அந்தோணி
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. ரோடு,
நாகர்கோவில் & 629 001
பக். 287
ரூ. 325
போராட்டம், மேலும் அதிகப் போராட்டம், தியாகம் மேலும் அதிக
தியாகம் என்பதே எனது செய்தி. அதுவே அவர்களுக்கு விடுதலை யைக் கொண்டுவரும். வேறெதுவும் விடுதலையைக் கொண்டுவராது.
பாபாசாகேப் அம்பேத்கர், 1947 ஏப்ரல்
எவ்வளவு கடினமான சூழலிலும் விடாமுயற்சியுடன் இருப்பது, பொறுமையுடன் இருப்பது, பரந்துபட்ட அளவில் செயல்படுவது ஆகியவை கல்வியைப் பெறுவதற்கான, சாதிப்பதற்கான போராட்டத்தின் முக்கிய அம்சங்கள். தனிமனிதன், குடும்பம், சமூகம் ஆகியவற்றின் சமூக - கலாச்சார வளர்ச்சிக்கும் அவை நலமாக இருப்பதற்கும் இந்த அம்சங்கள் அவசியம். வளர்ச்சி, நலமாக இருப்பது ஆகிய விஷயங்கள் வெறும் பொருளாதார, தொழில், தொழில்நுட்பத் துறை ஆகியவற்றைப் பொறுத்தவை மட்டுமல்ல. அது சமூக நீதி, நியாயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ‘என் தந்தை பாலய்யா’ என்ற இந்த வாழ்க்கை வரலாற்று நூலானது மக்களின் பொருளாதார, வாழ்க்கைச் சூழலை அழகாக, துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தத் தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் இந்த நூல் பல வரலாற்றுப் பாடங்களை வழங்குவதுடன் வாழ்க்கையில் பிரச்னைகளை, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் விவரிக்கிறது.
சில சமயங்களில் ஒரு சிறிய தீப்பொறி, குடும்பம் - சமூகம் - அரசமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பையே மாற்றிவிடக் கூடும். தொடர்ச்சியான, சமரசமற்றப் போராட்டமின்றிப் பொருளாதார நலன்களிலும், மனிதர்களின் மனப்போக்குகளிலும் மாற்றங்கள் சாத்தியமில்லை. அத்தகைய ஒரு சிறு பொறி பாலைய்யாவின் பாட்டனார் நரசய்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்டது. அவர் தக்காணத்தின் நிஜாமுக்கென்றே தனிப்பட்ட முறையில், மிகுந்த அன்புடன் சப்பாத்து ஒன்றைச் செய்துதந்த அச்சிறு தருணமே அந்தப் பொறி ஏற்பட்ட தருணமாகும். அதற்குப் பரிசாக நவாப் அவருக்கு 50 ஏக்கர் நிலத்தை அளித்தார். வாழ்க்கையில் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அடைய வேண்டும் என்ற உறுதி அப்போது அவருக்கு ஏற்பட்டது. இந்தக் கதையின் ஓர் அம்சமான இந்த நிகழ்வு சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகத்தில் எதிர்நீச்சலடிப்பது எப்படி என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
நிலப்பிரபுத்துவச் சாதிய சமூக அமைப்பில் இந்த நூலாசிரியரின் கல்வியறிவற்ற பாட்டனார், ஓரளவு கல்விகற்ற தந்தை ஆகியோரின் கடும் உழைப்பு என்ன சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அதே போன்றதொரு சூழலில் இருக்கும் ஒரு வாசகருக்கு அது நம்பிக்கையை அளிக்கிறது. நூலாசிரியரே கூறுவதுபோல இந்தக் கதையைச் சொல்வதன் நோக்கமே அதுதான்.
தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகளுக்காகக்கூடத் தற்கொலை செய்துகொள்ளும் இக்காலத் தலைமுறையினருக்கு இந்தப் புத்தகம் மேலும் முக்கியமானது. நூலாசிரியரின் பாட்டனார் பட்ட கஷ்டங்கள், குறிப்பாக தீண்டப்படாத மக்கள் மீதான சாதிய ஜமீன்தாரிய ஆதிக்கக் கொடுமைகள் உறைய வைக்கக்கூடியவை. நவாப் அளித்த 50 ஏக்கர் நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு வெறும் 5 ஏக்கர் நிலத்தை மட்டும் அவருக்குத் தந்தனர் ஜமீன்தார்கள். 18 - 19ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய சாதியக் கொடுங்கோன்மையின் சிறு துளி மட்டுமே இது.
நரசைய்யாவின் இளம் மனைவியின் இறப்பு, இறுதிச் சடங்குகள் ஆகிய கொடூர நிகழ்வுகளை நூலாசிரியர் விவரிக்கிறார்: நரசய்யாவும் அவர்களின் மகனும் பார்த்துக்கொண்டிருக்க அப்பம்மாவின் இறுதி மூச்சு பிரிந்தது. பதினாறே வயதான அவரது வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது. அவரது சாவு இளைஞன் நரசய்யாவின் வாழ்வில் விழுந்த பேரிடியாக இருந்தது. ஒரு குழந்தையைப்போல நெஞ்சில் அறைந்துகொண்டு வாய்விட்டு அழுதார். அம்மாவின் இறந்த உடலுக்கு அருகில் படுத்துக்கொண்டு அவர்களின் மகன் அழுதுகொண்டிருந்தான். அப்பாவையும் மகனையும் தேற்றக்கூட ஆளில்லை. அப்பம்மாவுக்கு வந்திருந்த நோயால் உறவினர்கள் யாரும் அவர்களது வீட்டின் அருகில்கூட வரவில்லை. அழுதுகொண்டே தன் மனைவியின் உடலைத் துணியில் கட்டினார். மனைவியின் உடலைத் தன் முதுகோடு சேர்த்துக் கட்டி முடித்தபோது வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. அவர்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது. நரசய்யா ஓடையை அடைந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. தூறல் இன்னும் நின்றிருக்கவில்லை. தன் மனைவியின் உடலை மெதுவாக இறக்கி வைத்தார். அப்பம்மாவின் முகம் தெளிவாக இருந்தது. தங்கள் பிள்ளையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு அவர் தன்னைப் பார்த்துக் கெஞ்சுவது போல உணர்ந்தார் நரசய்யா. மீண்டும் வெடித்து அழுதவர் சுதாரித்துக்கொண்டு தன் மனைவியைப் புதைப்பதற்கான குழியைத் தோண்டத் தொடங்கினார். என்றென்றைக்குமாக மனைவியை அடக்கம் செய்து முடித்தார்.
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், சில மாதங்களுக்கு முன்னர் பிபிசி செய்தியில் ஒரு காட்சி காட்டப்பட்டது. ஒரிசா மாநிலத்தின் பவானிபட்னா நகரத்திலுள்ள மாவட்ட மருத்துவமனையில் காசநோய் காரணமாக டானா மஜ்கி என்பவரின் மனைவியான 42 வயது அமாங் இறந்துபோனார். கிராமம் 60கிமீ தூரத்தில் இருக்கிறது, வாடகைக்கு வாகனம் அமர்த்திக்கொள்ள தனக்கு வசதியில்லை என்றார் மஜ்கி. ஆனால் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி செய்துதரப்படவில்லை. மனைவியின் உடலைத் தோளில் சுமந்தபடி தனது 12 வயது மகளுடன் நடக்கத் தொடங்கினார். சில வித்தியாசங்கள் இருந்தாலும் பாலைய்யாவின் தந்தையின் நிலையும் மஜ்கியின் நிலையும் ஏறக்குறைய ஒன்றே.
கால மாறுதலை விவரித்துச் செல்லும் இந்தக் கதை தன்னூடே இந்திய ரயில்வே உருவாகி வளர்ந்த கதையையும் சொல்கிறது. ரயில்வே போக்குவரத்து சிக்னல், வண்டிப் பாதையை ஆட்கள் மாற்றுவது, ரயில்வேயின் தகவல்தொடர்புச் சாதனம், நிர்வாகப் படியமைப்பு, அந்தக்கால ரயில் பெட்டிகள் ஆகியவற்றைப் பற்றிய மிகவும் நுணுக்கமான தகவல்களை இந்தக் கதை தருகிறது. கனரகத் தொழிற்சாலைகளும் ரயில்வேயும் எப்படி ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தன என்பதையும் இந்தக் கதை விவரிக்கிறது. இந்த விஷயங்கள் பல்கலைக்கழக ஆய்வுக்குரியவை. நிஜாம் மன்னராட்சியின் நிர்வாகமும் ஆங்கிலக் காலனியாட்சி நிர்வாகமும் எப்படி ஒன்றுடனொன்று உறவாடின, அதிலும் குறிப்பாக ரயில்வேயிலும் வர்த்தகத்திலும் இரண்டு நிர்வாகங்களின் கரன்சிகள் புழக்கத்திலிருந்ததை நூலாசிரியர் விவரிக்கிறார். இந்த விஷயங்கள் பற்றி முறையாக ஆய்வுகள் ஏதும் இதுவரை நடக்கவில்லை.
மூன்று தலைமுறைகளைப் பற்றிய இந்தக் கதை படிப்பவருக்கு ஊக்கமூட்டுவது, நம்பிக்கையூட்டுவது. இந்தக் குடும்பத்தால் சாதிக்கப்பட்ட பல விஷயங்கள் சமூகத்தில் முதல்முறையாக நடந்தவை. தலித் அல்லாத ஒருவருடன் நட்பு ஏற்பட்ட அனுபவம் அதிலொன்று. ‘‘சாதியும் தீண்டாமையும் எங்கள் நட்பில் ஒரு பொருட்டாக இல்லை. சிறுவர்களாகிய எங்களுக்கு அந்தக் கொடுமையான நடைமுறைகள் தெரிந்திருக்கவில்லை’’.
ஆசிரியராக முதன்முறையாக வேலைக்குச் சேர்ந்தது சாதி இந்துக்களின் ஆதிக்கம் மிகுந்த ஒரு கிராமத்தில். ‘‘குறுகிய காலமே அங்கு வேலை செய்தேன். அந்தக் கிராமம் எனக்கு ஆசிரியராக இருந்தது. சுயமாக வாழ்வது எப்படி என்பது உட்பட பிற்காலத்தில் எனக்கு உதவிய பல பாடங்களை அது எனக்குக் கற்றுத் தந்தது. எனது சாதியைப் பற்றி மட்டும் பொய் சொல்லிவிட்டேன். நான் எந்தச் சாதி என்பது ரகசியமாக இருக்க வேண்டும், இல்லையெனில் தங்குவதற்கு வீடு கிடைக்காது என்று எனது சகோதரர் எனக்குச் சொல்லியிருந்தார்...’’ தான் எந்தச் சாதி என்பதை எனது சகோதரர் மறைத்துவைத்திருந்த காரணத்தால் யாராவது ஒருவர் எப்போதாவது அதைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அவர் வாழ வேண்டியிருந்தது.
இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன. தனது தந்தை, குடும்பத்தினர், அவர்களது குடிப்பழக்கம், சடங்குகளில் அவர்களுக்கிருந்த நம்பிக்கை, அவர்களது மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் இந்த நூல் வெளிப்படையாகப் பேசுகிறது. நூலாசிரியரின், அவரது சகோதரர்களின் வெற்றி தோல்விகளை விவரிக்கிறது. குடும்பத்தில் நிலவிய ஆணாதிக்கத்தின் காரணமாகத் தனது சகோதரி படிக்க முடியாது போனதையும் சொல்கிறது. தானியங்களால் செய்யப்பட்ட ரொட்டியிலிருந்து கோதுமை ரொட்டிக்கும் பின்னர் அரிசிச் சோற்றுக்கும், மண் பானையிலிருந்து அலுமினியத்திற்கும் பின்னர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களுக்கும் முன்னேறியதைச் சொல்கிறது. நரசைய்யா (எழுதப்படிக்கத் தெரியாதவர்) தனது மகன் பாலய்யா புத்தகம் படித்ததைப் பார்த்த நிலையிலிருந்து பாலய்யா தனது மகன் சத்யநாராயணா (நூலாசிரியர்) ஆங்கிலப் புத்தகம் படிப்பதைப் பெருமையுடன் பார்க்கும் நிலைக்கு முன்னேறியதையும் சொல்கிறது. தனது மகன்களில் ஒருவரின் காதலியான வரலட்சுமி என்ற பிராமணப் பெண் தனது வீட்டிற்கு வருகிறபோது பாலய்யாவின் அன்பு கனிந்த உள்ளம் வெளிப்படுகிறது. தான் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது பிராமணப் பேராசிரியர்களிடம் எந்தப் பிரச்சனையையும் தான் எதிர்கொள்ளவில்லை என்பதையும் தன்னிடம் சாதியத்துடன் நடந்துகொண்டவர்கள் இடைநிலைச் சாதியினரே என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சக தலித்துகள் தன்மீது பொறாமை கொண்டுதான் தனது முனைவர் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க உதவாததையும் குறிப்பிடுகிறார்.
உயர் கல்வி மாணவர்களிடையே இன்று தற்கொலைகள் அதிகரித்திருப்பது நமது கல்வி முறையைப் பற்றி, நமது சகிப்புத்தன்மை பற்றி, குடிமைச் சமூகத்தின் புரிந்துணர்வு பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றன. பல்வேறு தகவல்தொடர்புக் கருவிகள் இருந்தபோதும் அவற்றால் மக்களை ஒன்றுபடுத்தவோ ஆறுதல் அளிக்கவோ முடியவில்லை. மாறாக இவை மோதல்களை அதிகப்படுத்துவதுடன் சமூகக் கட்டமைப்பிலுள்ள ஆழமான வெறுப்புணர்வுகளைப் பயன்படுத்திச் சமூப் பிளவுகளை அதிகரிக்கின்றன. இந்த நூலை இளைய தலைமுறையினர் வாசித்தால் அவர்களிடம் தற்கொலை உணர்வு குறையும். நானும் நீங்களும் நூலாசிரியருக்கும் அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசென்றிருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.