வெள்ளம் புகட்டும் படிப்பினைகள்
இந்த ஆண்டின் பருவமழை கேரள மாநிலத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. மே, ஜுன் பருவத்திலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் பொழிந்த மழை மீண்டும் ஆகஸ்டு மாதத்தில் அடைமழையாக மாறியது. பருவ மழையின் தொடர்ச்சி என்று நம்பப்பட்ட மழை பிரளயமாக மாறியது. நூற்றாண்டுக் கண்டிராத பேரிடர் என்று விரைவில் தெரிந்தது.
மாநிலத்தில் சராசரியாகப் பெய்யும் மழையைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு அதிகமாகப் பெய்த மழை, மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியது. கேரளத்திலுள்ள முப்பத்தொன்பது அணைகள், நீர்த்தேக்கங்கள் நிறைந்து வழிந்தன. மாநிலத்தில் ஓடும் நதிகளில் பெரிய நதியான பெரியாறு கரைமீறிப் புரண்டது. அதன் வெள்ளப்பெருக்கால் எர்ணாகுளம் நகரத்தின் பலபகுதிகள் மூழ்கின. பிற நதிகளும் பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டன. தொடர்ந்து பெய்த மழையும் நதியை மீறிப் பாய்ந்த வெள்ளம் வெளியேறமுடியாத நிலையும் நகரங்களையும் ஊர்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்தன. பதினான்கு மாவட்டங்களில் கொல்லம், திருவனந்தபுரம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களும் நீரின் மூர்க்கப்பிடியில் அகப்பட்டன. அணைகள் திறந்துவிடப்பட்டபோதும் தொடர்ந்து பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து நகரங்களை மூழ்கடித்தன. வீடுகளில் வெள்ளம் புகுந்தது. தரைமட்டத்தில் இருந்த வீடுகள் முற்றிலும் மூழ்கின. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முதல் தளத்தைத் தாண்டி இரண்டாம் தளம்வரையும், சில இடங்களில் மூன்றாம் தளம்வரையும் வெள்ளம் உயர்ந்தது. மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். சிலர் மொட்டை மாடிகளில் அடைக்கலம் புகுந்தனர். நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஆற்றங்கரைகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் உயிர் இழந்தனர். பல்லாயிரம் ஹெக்டேர் பரப்புள்ள விளைநிலங்கள் பாழாயின. பாலங்கள் நொறுங்கின. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டு ஊர்கள் தொடர்பறுந்தன. செங்ஙன்னூர், நெல்லியாம்பதி, எர்ணாகுளம் ஆகிய இடங்கள் மனிதர் எட்டமுடியாத தீவுகளாகத் தனித்துவிடப்பட்டன. ஒரு நூற்றாண்டில் பெய்ய வேண்டிய மழை நான்கு நாட்களில் கொட்டித் தீர்த்ததில் கேரளம் பெரும் பேரிடரைச் சந்தித்தது.
இந்த இயற்கைப் பேரிடர் விளைவித்திருக்கும் பொருட்சேதமும் உயிரிழப்பும் அதிகம். சுமார் எட்டு லட்சம் பேர் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரையான வீடுகள் பயன்படுத்த முடியாத அளவு சிதிலமாகியுள்ளன. வயநாடு, கண்ணூர், பாலக்காடு மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களும் பிற இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியவர்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். விவசாயம், உற்பத்தி, சேவை ஆகிய துறைகள் நிலைதடுமாறியதில் ஏற்பட்டிருக்கும் பொருளிழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. சுமார் 20ஆயிரம் கோடிக்கு அதிகம் என்பது தோராயமான கணக்கு. கேரளம் போன்ற சிறிய மாநிலம் தாங்கக் கூடிய சுமையல்ல இது.
பேரிடர்த் தருணத்தில் கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. மாநிலம் முழுவதும் ஒன்றிணைந்து இந்த அபாயத்தை எதிர்கொண்டது. அரசு நிறுவனங்களும் குடிமைச் சமூகமும் கைகோத்து மாநிலத்தைத் துயரக்கடலிலிருந்து கரையேற்றின. பேரிடருக்கான காரணங்கள் குறித்துப் பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என்ற படிப்பினையைச் சூழல் முன்வைத்திருக்கிறது.அரசியல்வாதிகளும் இரு மாநிலத்தையும் சேர்ந்த குறுகிய தேசிய மனப்பான்மையினரும் பரப்பும் கருத்துக்களைப் புறந்தள்ளி மக்கள் ஒன்றுபட்டதும் ஆதரவாகச் செயல்பட்டதும் இயற்கை கற்பித்த மானுடப்பாடம்.
இதுபோன்ற இயற்கைச் சிக்கலைக் கேரளம் எதிர்கொள்வது நூற்றாண்டில் முதல் முறை. பருவமழை சராசரியைவிட அதிகமாக இருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வழமையானவை. ஆனால் இயற்கை எதிர்பாராத முறையில் நடந்துகொண்டது என்பதே உண்மை. எனினும் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றித் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டே வந்திருக்கின்றன. கடந்த ஜுலை மாதத்தில் யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டில்லி நகரம் திணறியது. 2017இல் பங்களூரும் 2015இல் சென்னை மாநகரமும் வரலாறுகாணாத வெள்ளத்தால் கடும்பாதிப்புக்குள்ளாயின. இவை பொதுவாக எதிர்பாரா விளைவுகள். ஆனால் பன்னாட்டுக் காலநிலை ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும் அறிவியல் அமைப்புகளும் மாற்றமடைந்து வரும் காலநிலைபற்றி எச்சரிக்கை விடுத்துவந்திருக்கின்றனர். புவி வெப்பமயமாதல், நகரப்பெருக்கம், நீர்வழித்தடங்களின் அழிவு, வனச்சீரழிப்பு, மலைகள் சிதைக்கப்படுதல் போன்ற காரணங்கள் பருவநிலையில் முன்னெப்பொழுதும் இல்லாத அதீத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் மூலம் இதுபோன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இனிவரும் காலங்களில் இந்த எதிர்பாரா விளைவுகள் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் கடுமையானவை. ஒப்பீட்டு அளவில் அவை வலியுறுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. கேரளத்தில் இன்றும் நீர்வழிப்போக்குவரத்து நடைபெறுகிறது; காயல்கள் பாதுகாக்கப்படுகின்றன; மரக்கொள்ளையும் காடழிப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; ஆற்றிலிருந்து மணல் வாருவதும் மலைகளை வெட்டுவதும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. சூழியல் செயல்பாட்டாளர்களின் கருத்துகளுக்கு அரசு செவிசாய்க்கும் நிலையும் நிலவுகிறது. இவ்வளவு இருந்தும் இயற்கை பரிவுகாட்டாததற்குக் காரணம் மனிதத்தவறுகளே. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை அளிக்கும்படி சூழலியலாளர் மாதவ் காட்கிலை கேரள அரசு கேட்டுக்கொண்டது. அவர் ஆய்வுநடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிவியல்பூர்வமற்ற வகையில் நிலங்கள் திருத்தப்பட்டமை, மண்வளச்சுரண்டல், நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆகியவையே இந்த அவலநிலைக்குக் காரணம் என்கிறார். காட்கிலின் அறிக்கைக்கு எதிராக அரசியல்வாதிகளும் மாஃபியாக்களும் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவரை அவமதிக்கவும் செய்தனர். ஆனால் இயற்கை புகட்டும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவோ நடைமுறைப்படுத்தவோ முற்படவில்லை என்பதையே அண்மைப் பேரிடர் எடுத்துக்காட்டுகிறது.
வேறுவழியின்றிக் கேரளம் இதிலிருந்து பெற்ற படிப்பினைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகிவருகிறது. “நம்முடைய உடனடியான கவனம், மாநிலத்தை மறுசீரமைப்புச் செய்யவேண்டி வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றையும் தற்போதைக்கு ஒத்திவைக்கிறோம்,” என்று முதல்வர் பிணராயி விஜயன் குறிப்பிட்டிருப்பது இதைச் சுட்டிக்காட்டுகிறது.
2015ஆம் ஆண்டு சென்னை நகரம் ஊழிப் பெருவெள்ளத்தில் மூழ்கியது. அண்மைக்கால மழையில் காவிரியின் கரையோரப் பகுதிகள் சில பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கேரள வெள்ள அபாயத்துக்குச் சொல்லப்பட்ட அனைத்துக் காரணங்களும் தமிழகத்துக்கும் பொருந்தும். அந்நிய மாநில அனுபவத்திலிருந்து தமிழகம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதில் உள்ளன. பூவுலகின் நண்பர்கள் இதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.
இயற்கையின் போக்கை முழுக்கக் கணிக்க நம்மால் இயலாது. ஆனால் அதன் அவ்வப்போதைய விளைவுகள் மூலம் சில அறிகுறிகளைக் கண்டடைய முடியும். காலமாற்றத்தின் விளைவுகளைத் தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது. எனவே அதுபற்றித் தீவிர கவனம் மேற்கொள்ளப்படவேண்டும். இயற்கையின் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிகளையும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்களையும் உடனடியாகக் கண்டறியவேண்டும்.
கேரள வெள்ளக் கொடுமை சுட்டிக்காட்டும் முக்கிய அம்சம் கவனத்திற்குரியது. இந்த மழையில் பெரும் பாதிப்புக்குள்ளானவை நகரங்களே. திருச்சூர், எர்ணாகுளம், செங்ஙன்னூர் போன்ற நகரங்கள்தாம் மோசமான பாதிப்புக்கு உள்ளானவை. நகரங்கள் பெருமழைக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியவை அல்ல. பெரும்பாலான நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்வடிகால்கள் சராசரி மழை நீரை வெளியேற்றவே திட்டமிடப்பட்டவை. அளவுக்கு மிஞ்சி மழை பொழியுமானால் நகரங்கள் நீரில் மூழ்குவது தவிர்க்க இயலாதது. எனவே சரியான வடிகால் அமைப்புகள் திட்டமிடப்படவேண்டும். நகரங்களின் வெப்பமயமாக்கம் மழையின் இயல்பை மாற்றக்கூடியது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். விரைந்து நகர்மயமாகி வரும் மாநிலம் தமிழகம் என்பதால் இந்த நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படவேண்டும். இயற்கையின் போக்குகள் அதன் விளைவுகளை வைத்தே கண்டறியப்படுகின்றன. காலநிலையின் சுழற்சி மூலமே தட்பவெட்பநிலை மாற்றங்கள் இதுவரை முன்னறியப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகளை மிஞ்சிய புதிய அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டியது மிக அவசியமான ஒன்று.
கேரளப் பிரளயம் இழப்புகளுடன் சில படிப்பினைகளையும் விட்டுச் சென்றிருக்கிறது. அவற்றிலிருந்து கற்றுக்கொள்வது இன்றைய அவசரத்தேவை மட்டுமல்ல நாளைய மனித இருப்புக்கு மிக அவசியமானதும் தவிர்க்கக் கூடாததும் ஆகும்.