அமெரிக்கக் கல்வி- ஆசிய மாணவர்கள் ஒதுக்கப்படுகிறார்களா?
வரலாறு முழுவதும் ஒரு நாட்டின் மக்கள் தொகுதியில் சில பிரிவினர் இனம், சாதி, பால், பணம் முதலியவற்றின் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது, வாழ்க்கை வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த மறுப்பு இன்று வேலை, கல்வி என்ற இரண்டு தளங்களில் வெளிப்படுவது. வரலாற்றுக் காலத்தில் வழக்கில் கொண்டுவரப்பட்ட சமூக ஒதுக்கலை மாற்ற வேண்டும் என்னும் நிலைப்பாடு, ஜனநாயகத் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட அரசியலில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று. இந்த நிலைப்பாடு இந்திய அரசியலிலும் அமெரிக்க அரசியலிலும் காணப்படுவது இயற்கை; இந்தியாவில் சாதியும் அமெரிக்காவில் இனமும் சமூக ஒதுக்கலின் அடிப்படைகள் என்பது வரலாற்று உண்மை. பால் வேறுபாடும் சமூக ஒதுக்கலின் அடிப்படையாகப் பின்னால் அமெரிக்காவில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமூக ஒதுக்கலுக்கு உடல் ஊனம் போன்ற வேறு அடிப்படைகளும் உண்டு என்பது இதற்கும் பிந்திய வளர்ச்சி; ஆனால் இந்த இரண்டு அடிப்படைகளும் இந்தியக் கல்வியில் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றன. பணத்தின் அடிப்படையில் எழும் சமூக ஒதுக்கல் பிரச்சனையை, அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி அதன் வே