துயரத்தின் சின்னம்
பெருவலி
(நாவல்)
சுகுமாரன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை
நாகர்கோவில் 629 001
பக். 192
ரூ. 225
இந்திய வரலாற்றில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் சுவாரசியமானது. பாட்டி தன் பேத்திக்குச் சாதம் ஊட்டிக்கொண்டே கதை சொல்வதற்கு ஏற்றது அவர்களின் காலம். புனைவு எழுத்துக்கு உவப்பானது. அந்த வகையில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆக்ராவில் தான் பார்த்த ஜஹனாராவின் திறந்த பேழை போல காணப்பட்ட வித்தியாசமான சமாதிதான் தன்னை இந்த நாவலை எழுதத் தூண்டியதாக சுகுமாரன் குறிப்பிடுகிறார். மேலும் ஜஹனாராவின் கல்லறை வாசகம், “பசுமையைத் தவிர வேறு எதுவும் என் கல்லறையை மூடாது இருக்கட்டும்;
பசும் புற்களே இந்த ஏழையின் சமாதியை மூடப் போது
மானவை.”
பெருவலியை எழுத இரண்டு புத்தகங்கள் தனக்கு உதவியதாக குறிப்பிட்டுள்ளார். காத்தரீன் லாஸ்கியின் ‘பிரின்சஸ் ஆஃப் பிரின்சஸ்’ என்ற நூலும் ஆண்ட்ரியா புடென் ஷானின் ‘தி லைஃப் ஆஃப் எ மொகல் பிரின்சஸ் - ஜஹனாரா பேகம் - டாட்டர் ஆஃப் ஷாஜஹான்’ என்ற நூலும்! இதில் ஆண்ட்ரியாவின் நூல் முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஜஹனாராவின் உண்மையான டைரி குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஆண்ட்ரியாவுக்கு எவ்வாறு ஜஹனாராவின் டைரிக் குறிப்புகள் கிடைத்தன என்ற சம்பவம் மயிர்க் கூச்செறியச் செய்வதாகும். ஜெர்மனியிலிருந்து ஸ்வீடன் நாட்டுக்குக் குடிபெயர்ந்த ஆண்ட்ரியா இந்தியாவில் ஆக்ரா கோட்டைக்குப் பயணம் வந்திருந்தபோது அங்கு ஜஹனாரா பேகம் வாழ்ந்த மல்லிகை மாளிகையின் கைவிடப்பட்ட அறையொன்றைப் பார்த்திருக்கிறார். அங்கிருந்த சுவரில் கை ஊன்றியபோது கல் பெயர்ந்து கீழே விழுந்திருக்கின்றன. கல் இருந்த இடத்திலிருந்து தோலால் கட்டுமானம் செய்த காகிதத் திரட்டுகள் ஒன்றின் பின் ஒன்றாகத் தரையில் விழுந்திருக்கிறது. தாள்களில் பாரசீக மொழியில் எழுதப்பட்டிருந்திருக்கின்றன. அது 1931 இல் நூலாக ஆண்ட்ரியாவால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்குறிப்பு டைரியில் ஜஹனாரா பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். ‘இந்தக் காகிதங்களை மல்லிகை மாளிகையின் கற்களுக்கு அடியில் ஒளித்துவைப்பேன். எதிர்காலத்தில் என்றாவது மல்லிகை மாளிகை சிதையும். அப்போது அந்தச் சிதிலங்களுக்கு அடியிலிருந்து என் சுயசரிதை மனிதர்களின் கண்ணில் தென்படும்’.
இரண்டு பாகங்கள்; முதல் பாகம் பானிபட் என்ற நபும்சகத்தின் வழியாகவும், இரண்டாம் பாகம் ஜஹனாரா வழியாகவும் விரிகிறது. இவர்கள் தவிர இரண்டு பாகத்திலும் கதை சொல்லியின் குரலும் ஒலிக்கிறது. பானிபட்டை ஒரு விழியாக முதல் பாகத்துக்கும், ஜஹனாராவை இன்னொரு விழியாக இரண்டாம் பாகத்துக்கும் பொருத்தலாம். முதல் பாகம் முழுவதும் பானிபட் கதை சொன்னாலும் ஜஹனாராவின் பார்வை வழியாகவே மொத்த நாவலும் எழுதப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஷாஜஹான், மும்தாஜ், நூர்ஜஹான், ஜஹாங்கீர், பானிபட், தாரா, ரோஷனாரா, முர்ரத், ஔரங்கசீப், துலேர், ராணா தில் என அத்தனை கதாபாத்திரங்களும் ஜஹனாராவின் விழி வழி பார்க்கப்படுகின்றன; பயணத்தில் பெரும் மலைத் தொடர்களை ஒற்றை சன்னல் வழி பார்ப்பது போல.
ஜஹனாரா ஓர் இளவரசி, தந்தை ஷாஜஹானை நேசிக்கிறார். தாய் மும்தாஜைப் போற்றுகிறார். சகோதரன் தாராமீது அன்பு செலுத்துகிறார். பானிபட்டின் நட்பை நாடுகிறாள். இசை கேட்கிறாள், கவிதை எழுதுகிறாள், புத்தகம் வாசிக்கிறாள். ஔரங்கசீப்பையும் ரோஷனாராவையும் நூர்ஜஹானையும் வெள்ளைப் பாம்புகள் என்கிறார். துலேர்மீது தீராக் காதல் கொள்கிறார். நிறைவேறா காதலில் துவள்கிறார். அக்பர் காலம் முதல் ஷாஜஹான் காலம் வரை பானிபட் சாட்சியாக இருக்கிறார். ஷாஜஹான் காலம் முதல் ஔரங்கசீப் காலம் வரை ஜஹனாரா சாட்சியாக இருக்கிறார். இவர்கள் இருவர் வழியே எழுதி எழுதி சுகுமாரன் காலத்தை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டுகிறார்.
ஜஹனாரா கதாபாத்திரத்தை சுகுமாரன் மிக நுட்பமாக கையாண்டிருக்கிறார். ஜஹனாராவுக்கு நவ்ஜத் கான், மருத்துவர் காப்ரியேல் பவுட்டன் என்ற இரு காதலர்கள் இருந்ததாகப் புனைவு எழுத்தாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் எழுதியுள்ளதை மறுக்கிறார். ஜஹனாராவின் முகத்தில் தீ பற்றும் காட்சி பெருவலியிலும் வருகிறது; எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலிலும் வருகிறது. யாமம் நாவலில் அதிக விவரணைகளுடன் எஸ்.ராமகிருஷ்ணன் அந்த அத்தியாயத்தை எழுதுகிறார். பெருவலியில் இது போன்ற எந்தப் பெரும் விவரணைகளும் இல்லை. ஏனெனில் ஜஹனாராவின் கதாபாத்திரத்தை அக உணர்வுடன் கையாள்வதற்கே சுகுமாரன் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார். எளிய சொற்களுடன் விவரணைகளைக் கடக்கிறார். டைரி குறிப்பில் ஜஹனாரா எங்கெல்லாம் மௌனம் சாதித்திருந்தாளோ அங்கெல்லாம் புனைவை இட்டு நிரப்பினேன் என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். மிக அழகாகக் கச்சிதமாகப் புனைவைக் கையாண்டுள்ளார்.
அக்பர் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக வரவில்லை. ஆனால் நாவலில் பலர் அக்பரைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள். அக்பரின் துதி பாடுகிறார்கள். அந்த வகையில் அக்பர் இந்த நாவலின் வழியே நம் மனத்தில் எழுகிறார். அக்பர் தான் எழுதிய ‘அக்பர் நாமா’ புத்தகத்தில் ஒரு விதியை எழுதுகிறார். முகலாய குலத்தில் பிறக்கும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதே அந்த விதி. வாரிசுரிமைச் சண்டையைத் தவிர்க்கவே இப்படி ஒரு விதி. இந்த விதியால் பாதிக்கப்படும் பெண்களை ஜஹனாரா பாத்திரம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வெளிப்படுத்துகிறது. அவளது உடல், மன இச்சைகளை வெளிப்படுத்த சிறந்த கருவியாக சுகுமாரன் கனவுகளைப் பயன்படுத்துகிறார். ஒரு அரச குடும்பத்துப் பெண்ணாகப் பிறந்ததை எண்ணி ஜஹனாரா துயரப்படுகிறாள். தான் ஓர் எளிய குடும்பத்துப் பெண்ணாகவோ பக்கீராகவோ பிறந்திருக்கலாம் என்று வேதனைப்படுகிறாள்.
மும்தாஜின் பதினான்காவது பிரசவக் காட்சிகள் நாவலில் எழுதப்பட்டுள்ளன. அந்தப் பக்கங்களில் வாசகர்களைப் பிரசவ அறைக்குள் தள்ளிவிட்டது போன்ற உணர்வை எழுத்தின் வழியே சுகுமாரன் ஏற்படுத்துகிறார். ‘பெருவலி’யில் பெருவலி ஏற்படுத்தும் காட்சி அது. இதுபோன்ற பெருவலியைப் பல இடங்களில் நாவல் ஏற்படுத்துகிறது. இரவோடு இரவாக இருளுக்குள் ஷாஜஹான் அடக்கம் செய்யப்பட தூக்கிச் செல்லப்படும் காட்சியை ஜஹனாரா பால்கனியிலிருந்து பார்க்கும் இடம் சட்டகத்துக்குள் வரையப்பட்ட ஓர் அழகான ஓவியம் போல காட்சி தருகிறது. துயரமான காட்சியில் அழகு மேலிடுகிறது. அந்த ஜஹனாராவுக்காவது இந்துப் புராணங்களை வாசிப்பதற்குச் சுதந்திரம் இருந்தது. இன்றைய ஜஹனாராக்களுக்கு அந்த உரிமை கூட இல்லை என்பது அறையப்படும் உண்மை. ‘இன்றைய ஜஹனாரா’ இந்தச் சொல்லே பதற்றத்தையும் அச்சத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை மதம் அவனை ஆட்சி செய்யும், கட்டுப்படுத்தும் என்ற கார்ல் மார்க்ஸின் வரிகள் ஜஹனாரா பாத்திரத்துக்கு முழுவதுமாகப் பொருந்தும்.
நாவலில் வரும் சில வரிகள் சிறப்பாக உள்ளன.
“அளவற்ற அதிகாரம் எப்போதும் விரயங்களை நியாயப்படுத்துகிறது. ஆடம்பரங்களை இன்றியமையாத் தேவையாக்குகிறது. அது அதிகாரத்தின் நியதியோ என்னவோ?”
“துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை, ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்ததுதான் துணிச்சல். பயமில்லாமல் துணிச்சல் இல்லை”.
“ சரித்திரம் என்பதே ஒரு விநாடியில் நிகழ்ந்த மாற்றத்தின் நீண்ட விளைவுதானே?”
“என் வாழ்க்கை ஒரு நொறுங்கிய மகுடம். ஆனால் அதன் பாகங்கள் முழுமையாகவே இருக்கின்றன.”
ஜஹனாராவின் டைரிக் குறிப்பு இது. பின்னுரையிலும் சுகுமாரன் குறிப்பிட்டிருக்கிறார். கவிதைதான் இது. “எழுதும்போது நடுங்குகிறது. என்னுடைய ஆழ்ந்த எண்ணங்களை ரகசியமாகவே வைத்திருக்கிறேன். அப்படியில்லாமல் நான் எப்படி வாழ முடியும்? நான் ஒரு பெண் ஆயிற்றே? இங்கே இந்தத் தனிமை இரவில் என் துக்கங்களை மறதியிடம் பாட முடியும். மறதியிடம்தான் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல முடியும். என் கதையையும் என் துக்கத்தையும்.”
ஜஹனாரா கனவு காணும் இடம் அழகானது. “பாடலை முணுமுணுத்துக்கொண்டே அவன் உதடுகள் ஜஹனாராவின் நெற்றியில் பதிகின்றன. ‘தேவி’ என்று இனிமையாக முனகுகின்றன. சுற்றிலும் இருந்தவை மறைகின்றன. எங்கும் நீல வெளிச்சம் பரவுகிறது. அவள் உடல் மட்டும் எழும்பி உயர்கிறது. எழும்பிய உடலிலிருந்து ஆடைகள் தாமாகவே அவிழ்ந்து மேகங்களாக அலைகின்றன...”
நாவலில் ஷாஜஹான் முடிசூட்டிக் கொள்ளும் ஓர் இடம் வரும். அதில் சுகுமாரன் குறிப்பால் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பார். அது “முன்பனிக்கால நாளின் முதல் ஒளிக்கதிர் பூமியைத் தொட்டவுடன் ஆர்ப்பரித்த முரசுகளால் ஆக்ரா நகரம் விழித்தெழுந்தது. மொகலாயப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்த எல்லா மசூதிகளிலும் பஜர் தொழுகையின் போது பிரத்தியேகப் பிரார்த்தனைகள் நடந்தன. அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையவனிடம் அபு உத் முஸாபர் சாஹிப் உத் தீன் முஹம்மது சாஹிப் உத் குர் ஆன் உத் தானி ஷாஜஹான் பாதுஷா காஜிக்காக து ஆ கேட்கப்பட்டது. இந்து ஆலயங்களிலும் விசேஷ உதய காலப் பூஜைகள் நடந்தன. ஒன்றிரண்டு தேவாலயங்களில் திருப்பலிப் பூசைக்கான மணிகள் தயக்கத்துடன் ஒலித்தன.” இதில் திருப்பலிப் பூசைக்கான மணிகள் தயக்கத்துடன் ஒலித்தன என்ற வரி வரவிருக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை மர்மத்துடன் குறிப்பிடுவதாக குறிப்பால் சுகுமாரன் எழுதியிருக்கிறார்.
வரலாற்றில் பெரும்பான்மையோர் ஔரங்கசீப்பை வில்லனாகவே எழுதியிருக்கிறார்கள். அதற்கு விதிவிலக்காகவும் சிலர் எழுதியிருக்கிறார்கள். சுகுமாரன் பெரும்பான்மையினரின் வழியினையே தேர்வு செய்திருக்கிறார். ஔரங்கசீப் கதாபாத்திரத்தை அதன் ஓட்டத்திலேயே விட்டுவிட்டார். ஜஹனாராதான் பெருவலியின் மையம். ஔரங்கசீப்பைப் பற்றி அறிந்தவர்கள் அவரை ஒரு வில்லனாகக் கற்பிதம் செய்துகொண்டு நாவலை எளிதாக உள்வாங்கிக் கொள்வார்கள். ஆனால் ஔரங்கசீப்பைப் பற்றி அறியாதவர்களுக்கும் அவர்மீது பயம் ஏற்படுத்தும்படி ஒரு சிறு வயது சம்பவத்தை சுகுமாரன் எழுதியிருக்கிறார். நூர்ஜஹானின் தூண்டுதலால் ஜஹாங்கீர் தன் மகன் ஷாஜஹானுக்கு ஓர் ஆணையைப் பிறப்பிக்கிறார். ஒன்று தக்காணப் பகுதியை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஷாஜஹானின் இரு மகன்களையும் கைதிகளாக அனுப்ப வேண்டும். ஷாஜஹானின் இரு மகன்கள் தாராவும் ஔரங்கசீப்பும். இருவரும் அப்போது சிறுவர்கள். தாத்தாதானே என்பதால் ஷாஜஹான் இரண்டாவது ஆணைக்கு ஒப்புக்கொள்கிறார். ஆனால் அங்கு ஓர் இருட்டறைக்குள் தாராவும் ஔரங்கசீப்பும் பன்னிரண்டு நாட்கள் அடைக்கப்படுகிறார்கள். கடும் குளிர்; இருட்டு. பத்து வயது ஔரங்கசீப் அழுதுகொண்டே இருக்கிறான். ஆடையில் சிறுநீர் கழிக்கிறான். நூர்ஜஹான் பாட்டி நட்ட நடு இரவில் அவனை வெளியே போய் நிற்கச் சொல்கிறாள். கடும் இருட்டு; குளிர், விலங்குகளின் ஓலம். தாரா அறைக்குள்ளிருந்து கேட்கிறான். அழுகைச் சத்தம் திடீரென நிற்கிறது. பொழுது புலர்கிறது. ஔரங்கசீப்பின் முகத்தில் அப்படி ஒரு தெளிவு; பயமின்மை. அதிகம் யாருடனும் அதன் பின் பேசவில்லை அவன். காரணம் கேட்டால் இரவில் ஒரு மலக்கு (வான் தூதர்) வந்து தன்னிடம் பேசியதாக ஔரங்கசீப் கூறுகிறான். ஔரங்கசீப் கூறியது உண்மைதான் என சுகுமாரன் இந்த இடத்தில் நம்பவைத்துவிடுகிறார். இதுதான் மாய எதார்த்தவாதம். காப்ரியேல் மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலில் இந்த மாய எதார்த்தவாதத் தன்மையை அடிக்கடி காணலாம். துணி காயப்போட்டிருக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் வானத்துக்குப் பறந்ததாக ஒரு இடத்தில் மார்க்கேஸ் எழுதியிருப்பார்.
செழிப்பைப் போலவே அரசர்கள் பயணம் செய்யும் இடங்களில் உள்ள வறுமையும் நாவலில் எழுதப்பட்டுள்ளன. பெரும்பாலும் போர் செய்யும் இடங்கள் வறுமையின் இடங்களாக உள்ளன. போர் என்பதே ஒரு வறுமைதானோ என்னவோ. சூஃபி ஞானி காஜா மொய்தீன் சிஷ்டியின் பெயர் நாவலில் அடிக்கடி வருகிறது, பேரரசர் அக்பரை மாதிரி. போர்க்காட்சிகளின் பிரம்மாண்டத்தை மிக விரிவாக நாவல் குறிப்பிடவில்லை. ஒரு குடும்பத்தின் அகவெளிப்பாட்டைத்தான் அழகாகச் சித்திரிக்கிறது. மாயகோவ்ஸ்கியின் லெனின் பற்றிய புகழ் பெற்ற கவிதை ஒன்றில் “கவிதை லெனினின் நெற்றியை மறைக்கிறது” என்று குறிப்பிட்டிருப்பார். அதுபோல வாழ்வியலை, அக மனதை நாவல் அழகாக வெளிப்படுத்துகிறது.
நாவலில் பானிபட் சொல்வதாக வரும் முதல் பாகம் கதை சொல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. சம்பவங்களை விவரிக்கிறது. ஜஹனாரா கதை சொல்வதாக வரும் இரண்டாம் பாகத்தில் அந்தப் பாணியிலிருந்து முழுவதுமாக விலகி சுகுமாரன் வேறொரு பாணியில் நாவலை நகர்த்துகிறார். கனவுத்தன்மை அதில் அதிகமாக வெளிப்படுகிறது. அகவெளிப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுதான் நாவலின் அடிநாதமும் கூட.
சூஃபி கதையையும் சுகுமாரன் புனைவின் வழி எழுதுகிறார்.ஷாஜஹானுக்கு ஒரு ஆப்பிள் பழத்தை சூஃபி ஞானி ஒருவர் வழங்குகிறார். வழங்கிவிட்டுச் சொல்கிறார், “உன் கையில் எப்போது இந்த ஆப்பிள் பழத்தின் வாசனை குறைந்து இல்லாமல் போகிறதோ அப்போது நீ உன் இறுதிக் காலத்தை நெருங்கிவிட்டாய் என்று அர்த்தம்,” ஒரு அழகான சூஃபி கதை இது.
தாரா கைதுசெய்யப்பட்டு அழைத்து வரப்படுவது உருக்கமானது. அப்போது ஓர் அடிமை, “முன்னர் இளவரசராக நிறைய கொடுத்தீர்கள்; இப்போது இப்படி வருகிறீர்களே,” என்று புலம்புவான். யானை மீதிருந்தே தாரா தன் கம்பளியை எடுத்து அந்த அடிமைக்கு வீசுவான். ஔரங்கசீப்பின் காவலாளி தன் கால்களால் அதைப் பிடித்து, “அடிமைகளுக்கு எதையும் தானம் செய்ய அனுமதியில்லை,” என்பான். எலும்பும் தோலுமாக தாராவின் குழந்தை ஜஹனாராவிடம் வந்து சேரும் காட்சியும் அழுகையை வரவழைப்பது. இவையாவும் ஔரங்கசீப்பின் மீது வெறுப்பை உண்டுபண்ணுகின்றன. இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது மராட்டிய அரசர் சிவாஜி பற்றிய புத்தகத்தை வாசிக்க வேண்டும் என கைகள் நமநமக்கின்றன. ஏனெனில் இந்த நாவல் ஔரங்கசீப்பின் வெற்றியுடன் முடிவடைகிறது. சிவாஜி வரும் நாவலில் ஔரங்கசீப்பின் தோல்வி பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப் புத்தகத்தில் படித்த ஔரங்கசீப்பை சிவாஜி புத்தகத்தில் பழி தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
நாவல் முழுக்க ஜஹனாரா வருகிறாள். இரண்டே பக்கங்களில் வந்தாலும் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவள் ராணா தில். இவள் தாராவின் மனைவி. தாராவைக் கொன்றதும் ராணா தில்லைத் தன் அந்தப்புரத்துக்கு அழைத்து ஔரங்கசீப் ஆள் அனுப்புகிறான். அவளது கேசம் ஔரங்கசீப்பை வசீகரித்ததாக வந்தவன் கூறுகிறான். உடனே ராணா தில் தன் கூந்தலை வெட்டிக் கொடுத்து அனுப்புகிறாள். ஔரங்கசீப் விடாது திரும்பத் திரும்ப ஆள் அனுப்புகிறான். அதற்கு ராணா தில் “தாழ்ந்த குலத்தில் பிறந்தவள்தான். தெருவில் ஆடிப் பிழைத்தவள்தான். ஆனால் என் பெண்மையைக் காதலால் மகத்துவப்படுத்தியவர் தாரா ஷுக்கோ. என் மனத்தை மதித்தவர். அவர் இடத்தில் வேறு யாரையும் நினைக்க மாட்டேன்’ என்கிறாள். ராணா தில் மீது பெரும் மரியாதை ஏற்படுகிறது. ராணா தில்லைப் பற்றி ஜஹனாரா கூறுகிறாள். “ராணா தில்லும் கைதிதான். ஆனால் அவளால் ஔரங்கசீப்பைத் தோற்கடிக்க முடிந்தது. அவனுடைய அதிகாரத்தை அவமதிக்க முடிந்தது. இச்சையை ஏளனம் செய்ய முடிந்தது. அகந்தையை முறியடிக்க முடிந்தது.” ராணா தில் தவிர்த்து இரு பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். தாரா இறந்ததும் தாராவின் காதலுக்காக மோதிரத்தை விழுங்கி உயிர்விடும் தாராவின் மனைவி நாதிரா. தாரா இறந்ததும் ஔரங்கசீப்பின் அந்தப்புரத்திற்குச் செல்லும் உதய்பூரி பேகம். அவள் சொல்கிறாள் “இளவரசருக்குப் பிற பெண்களின் சரீரம் அலுக்கும்போது வந்து மேய்வதற்கான புல்வெளியாகத்தான் என் உடல் இருந்தது. அந்த மேய்ச்சல் நிலத்தை இப்போது ஆலம்கீர் ஔரங்கசீப் ஆர்ஜிதம் செய்திருக்கிறார். இதிலும் என்ன புதிய மதிப்பு வந்துவிடப் போகிறது? எல்லாம் பழையது போலத்தான்...”
ராஜபுத்ர இளவரசன் துலேரும் ஜஹனாராவும் காதலிக்கும் காட்சிகள் இந்த நாவலில் கூறப்பட்டிருந்தாலும் மிக அழகான காதல் காட்சியாக இந்த நாவலில் தெரிவது ஷாஜஹான்- மும்தாஜ் காதலிக்கும் சேத்கானி காட்சிதான். சேத்கானி என்பது பெண்கள் நடத்தும் ஒரு சந்தை. அதற்கு வரும் ஷாஜஹான் மும்தாஜிடம் தன் மனத்தைப் பறிகொடுத்துத் திரைமறைவில் அவளிடம் பேசும் வசனங்களும் அதற்கு மும்தாஜின் மறுமொழிகளும் அப்படி ஒர் அழகு. ‘தாஜ்மஹால்’ என்ற வார்த்தை நாவலில் மொத்தமே மூன்று இடங்களில்தான் வருகிறது. தாஜ்மஹாலின் கட்டுமானம் பற்றியோ அழகு பற்றியோ நாவலில் ஓர் இடத்தில் கூட வரவில்லை. மோதி மஸ்ஜித் போலவோ மற்ற கட்டடங்கள் போலவோதான் முகலாயர்கள் தாஜ்மஹாலையும் பார்த்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பின்னாளில் அது உலக அதிசயமாகும் என்று அவர்களே எதிர்பார்க்கவில்லையோ என்னவோ. தாஜ்மஹாலை உலக அதிசயமாக்கியது அதன் அழகோ பிரம்மாண்டமோ அல்ல. தாஜ்மஹாலை உலக அதிசயமாக்கியது ஷாஜஹானின் துயரப் பார்வைதான். ஷாஜஹான் கடைசி வரை மும்தாஜை நினைத்து சன்னலின் வழி தாஜ்மஹாலைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஷாஜஹானின் பார்வையிலுள்ள காதலின் பெரும் துயரம் தாஜ்மஹாலின் கட்டடங்களுக்கு ஏறியிருக்கிறது. அதுதான் அழகு மிளிர மிளிர தாஜ்மஹாலைக் காட்டுகிறது. தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. காதலின் துயரம் அத்தனை அழகா? இந்த நாவலை வாசித்தவர்கள் தாஜ்மஹாலை ஷாஜஹானின் கண்கள் வழி பார்க்கலாம். காதல் சின்னம் ஒரு துயரச்சின்னமாகத் தெரியக் கூடும். தாஜ்மஹால் என்பதே ஒரு பெருவலிதான்.
நெல்லை வாசக சாலை நிகழ்வில் பெருவலி நாவல் குறித்து பேசப்போவதாக தோழி ஒருவரிடம் தெரிவித்தேன். ஏற்கெனவே இந்த நாவலைப் படித்தவர் அவர் என்பதால் கூடுதலாக விஷயங்கள் ஏதாவது கிடைக்கக் கூடும் என்ற அவாவில் தெரிவித்தேன். என்னதான் இருந்தாலும் ஒரு பெண் இந்த நாவலை வாசித்து உணர்வது போல் வராது என்றார் அவர். இந்த நாவலின் ஆசிரியர் சுகுமாரன் ஒரு ஆண் என்பதையே மறந்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ஜஹனாராவே இந்த நாவலை எழுதியதுபோல் பேசிக்கொண்டிருந்தார். இந்த இடத்தில்தான் சுகுமாரனின் வெற்றியை உணர்ந்தேன்.
மின்னஞ்சல்: matharmohideen24@gmail.com