வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்
சென்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி மறைந்த விதியாதர் சூரஜ்பிரசாத் நைபால் (வி.எஸ்.நைபால்) அளவிற்கு மதிக்கப்பட்ட, அதே சமயம் விமர்சிக் கப்பட்ட, நம் காலத்து எழுத்தாளர் வேறு யாரும் இருக்க முடியாது. பின்காலனிய உலகத்தைப் பற்றிய கூர்மையான தரிசனங்களுக்காகவும் ஆங்கில உரைநடைக்கு வளம்சேர்த்த எழுத்து நடைக்காகவும் போற்றப்பட்ட அவர் இஸ்லாமிய, இந்திய, ஆஃப்ரிக்க சமூகங்களைப் பற்றியும் பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் சொன்ன எதிர்மறையான கருத்து களுக்காக விமர்சிக்கவும் பட்டார்.
கரீபியத் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாடில் 1932ம் ஆண்டு பிறந்தவர் நைபால். அவரது
முன்னோர்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக ட்ரினிடாடின் கரும்புவயல்களில் வேலை செய்யச் சென்றவர்கள்.
பிறகு, அங்கேயே சொந்தநிலம் பெற்றுக் குடியமர்ந்தவர்கள். கரீபியன் சமூகம் பல இனக் குழுக் களாலானது. ஆனாலும் நைபால் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிக் கூறுகையில், ட்ரினிடாடில் இருந்த இந்தியர்களுக்கு - குறிப்பாகத் தன் குடும்பத்தாருக்கு - மற்ற இனத்தவரைப் பற்றிய ப்ரக்ஞையே இருந்ததில்லை என்கிறார்.
ட்ரினிடாட் வாழ்க்கை மிகவும் வரையறுக்கப் பட்டதாக இருந்ததெனக் கூறும் நைபால், அரசாங்கம் வழங்கிய உதவித்தொகையின் மூலம் 1950இல் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மேற்படிப்பு முடிந்தவுடன், நிலையான வருமானமின்றி, லண்டனில் பி.பி.சி ரேடியோவில் பகுதிநேர ஊழியராக இருந்தபோது, 1954ல் ‘போகார்ட்’ (Bogart) என்ற தனது முதல் சிறுகதையை எழுதினார். அக்கதை, ட்ரினிடாடின் தலைநகரான போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் அவரது வீட்டின் பின்புறம் தங்கியிருந்த போகார்ட் என்பவரைப் பற்றிய சிறுவயது நினைவு என்று குறிப்பிட்டார்.
அதேபோல போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் அவர் பார்த்த மனிதர்களைப் பற்றி எழுதிய சித்திரங்களின் தொகுப்பான ‘மிகெல் தெரு’ (Miguel Street) என்ற நூல் பிரசுரிக்கத் தகுந்ததாய் அவர் எழுதிய முதல் நூல். (அதற்குமுன் இரண்டுமுறை நாவல் எழுத முயற்சிசெய்து தோல்வியடைந்திருந்தார்.) ஆனால் அதன்பிறகு அவர் எழுதிய ‘தி மிஸ்டிக் மஸர்’ (The Mystic Masseur) என்ற நாவல்தான் அவரது முதல் பிரசுரமான நூல். 1957இல் வெளிவந்த இந்நூல் ட்ரினிடாடில் தோல்வியுற்ற எழுத்தாளனாக இருந்து, புகழ்மிக்க அரசியல்வாதியாக உருவெடுக்கும் ஒருவனது கதையைச் சொல்கிறது.
ஓர் எழுத்தாளனாக நைபாலின் பெயரை உலகம் முழுவதும் கொண்டு சென்றது 1961இல் பிரசுரமான அவரது நான்காவது நூலான ‘திருவாளர் பிஸ்வாஸூக்கு ஒரு வீடு’ (A House for Mr Biswas) என்ற நாவல். அதில், ட்ரினிடாடில் பிறந்த மோஹன் பிஸ்வாஸ் என்ற இந்திய வம்சாவளி மனிதர், தனக்கென ஒரு சொந்த வீட்டைக் கட்டிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளைச் சித்திரித்ததன்மூலம், ஒரு பின்காலனிய மனிதனின் சுய அடையாளத்திற்கான வேட்கையை எழுதினார். மோஹன் பிஸ்வாஸ் எனும் கதாபாத்திரம், நைபாலின் தந்தையான சீபெர்ஸாத் நைபாலை அடிப்படையாகக் கொண்டு சித்திரிக்கப்பட்டது. கரீபியத் தீவுகளிலிருந்து வந்த எழுத்துக்களுக்கு இந்நூல் ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது.
நைபாலின் எழுத்துக்களை வாசிக்கையில், முதலில் நாம் உணர்வது அவரது மொழி நடையின் அழகும் நேர்த்தியும். மிகச்சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலும் மிகக் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்ட உரைநடையினாலும் அவர் பின் காலனிய உலகின் மிகச் சிக்கலான நிதர்சனங்களை எழுதினார். இதனால் நவீன ஆங்கில உரைநடையின் தலைசிறந்த கட்டமைப்பாளர் என்று பல எழுத்தாளர்களால் போற்றப்பட்டார்.
இந்திய வம்சாவளியில் பிறந்தவராக இருந்தபோதும் நைபால் இந்தியரென்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. அதேபோல ட்ரினிடாடையும் அவர் மறுதலித்தார். இந்தியாவுடனான தனது உறவு மிகச்சிக்கலானது என்றார். ‘இந்தியா எனக்குக் கடினமான தேசம். அது எனது வீடல்ல, எனது வீடாகவும் இருக்க முடியாது. இருப்பினும் அதனைப் புறந்தள்ளவோ கண்டுகொள்ளாமலோ என்னால் இருக்க முடியாது. அதன் காட்சிகளைக் காண மட்டும் என்னால் இந்தியாவில் பயணம் செய்ய முடியாது. ஒரே சமயத்தில் இந்தியாவிற்கு மிக அருகிலும் மிகத் தொலைவிலும் இருக்கிறேன்,’ என்றார்.
நைபால் சிறுவனாக இருந்தபோது ட்ரினிடாடில், அவரது வீட்டில், வீட்டிலிருந்த -இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட- பொருட்களில், பூஜைகளில், சடங்குகளில் மட்டும்தான் இந்தியா இருந்தது. அவற்றைக்கொண்டு, கடவுளர்களால் நிரம்பிய, தனது முன்னோர்களின் தாய்நாடான தொலைவிலிருக்கும் இந்தியாவைக் கற்பனை செய்துகொண்டதாகச் சொல்கிறார். ஆனால் 1962இல் இந்தியாவைப் பற்றிய தனது முதல் நூலை எழுதுவதற்காக இங்கு வந்தபோது, அவருக்குக் கிடைத்த அனுபவம் முற்றிலும் வேறானது. வறுமையும் தூசியும் ஜனத்திரள் நிரம்பிய பொதுவெளிகளுமென இந்தியாவின் உண்மை அவருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
அவர் அடைந்த அதிர்ச்சியை எந்த மறைவுமின்றித் தனது நூலில் பதிவு செய்தார். ‘இருண்ட பிரதேசம்’ (An Area of Darkness, 1964) என்ற அதன் தலைப்பே இந்தியாவில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைச் சொல்கிறது. முக்கியமாக ‘இந்தியர்கள் பார்க்கும் இடத்திலெல்லாம் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள்’ என்ற அவரது பதிவு பல விவாதங்களைக் கிளப்பியது.
இந்தியாவைப்பற்றி மேலும் இரு நூல்களை நைபால் எழுதினார். 1977இல் வெளிவந்த ‘இந்தியா: ஒரு புண்பட்ட சமூகம்’ (India: A Wounded Civilization) என்ற நூலில், பல நூற்றாண்டுகளாக அந்நியப் படையெடுப்புகளைச் சமாளிக்காமல் பின்வாங்கி, பாதுகாப்புக்காகத் தனது புராதனத்துக்குள் ஒடுங்கிவிட்டதனாலேயே இந்தியச் சமூகம், அறிவார்ந்த - படைப்பூக்கமிக்க சமூகமாக இல்லாமல் போய்விட்டது என்றார்.
1990இல் வெளிவந்த ‘இந்தியா: ஒரு மில்லியன் கலகங்கள்’ (India: A Million Mutinies Now) என்ற நூலில் இந்தியாவைப் பற்றிய அவரது பார்வை சற்று இளகியது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல்வேறு கலகங்களின் மத்தியிலும் இந்தியா ஒரு மையக் குறிக்கோளுடன் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக அந்நூலில் எழுதினார்.
நைபாலின் பயணங்கள் பிரசித்தமானவை. உலகின் அத்தனை பகுதிகளிலும் அவர் பயணம் செய்திருக்கிறார். பயண நூல்கள் எழுதுவதற்காக அப்பயணங்கள் அமைந்தாலும், அவை அவரது புனைவு நூல்களையும் செழுமைப்படுத்தின. பயணங்களில் அவர் கண்ட பின்காலனிய சமூகங்களின் தீர்க்கமான பதிவுகள் அவரது மத்திய காலத்து நாவல்கள். ‘சுதந்திர தேசத்தில்’ (In a Free State, 1971), ‘கெரில்லாக்கள்’ (Guerrillas, 1975), ‘நதியில் ஒரு வளைவு’ (A Bend in the River, 1979) ஆகிய நாவல்களில் பின்காலனியச் சமூகங்கள் தங்களை மறுகட்டமைப்பு செய்துகொள்ளும் முயற்சியில் நிகழ்த்தும் அரசியல் புரட்சிகளைப் பற்றியும் அவை விளைவிக்கும் குழப்பங்களைப் பற்றியும் எழுதினார். இவற்றுள், ‘சுதந்திர தேசத்தில்’ என்ற நூலுக்கு 1971ஆம் ஆண்டு புக்கர் பரிசு வழங்கப்பட்டது.
நைபால் தான் பயணம் செய்த தேசங்களில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, அவர்களது வாழ்க்கையை, அவர்களது அபிலாஷைகளைப் பதிவு செய்தார். 20ஆம் நூற்றாண்டின் உலகச் சமூகங்களைப் பற்றிய இன்றியமையாத ஆவணங்கள் இவை. அவர் எழுதிக் கொண்டிருந்த காலம் முழுவதும் பயணம் செய்துகொண்டே இருந்தார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததுமுதல் இறுதிவரை இங்கிலாந்திலேயே தங்கியிருந்தாலும், அவர் தேசமற்ற ஒரு மனிதராகவே இருந்தார் என்பதற்கு அவரது பயணங்களே சாட்சி. ஒருவகையில் இதுவே அவரை உலகத்தின் குடிமகனாக்கியது.
சர்ச்சைகளின் மனிதராகத் திகழ்ந்தார் நைபால். ஐரோப்பியச் சமூகங்கள் முழுமையானவை என்றும் மற்றவை குறைபாடுள்ளவை என்றும் சொன்னார். ஆஃப்ரிக்க தேசங்களுக்கு எதிர்காலமே இல்லை என்றார். 2004இல் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவர், பாபர் மசூதி இடிக்கப் பட்டது படைப்பூக்கமிக்க செயல் என்று குறிப்பிட்டார். பாபர் மசூதியை இடித்ததன்மூலம் இந்தியா இறுதியாக ஒரு வரலாற்று எழுச்சியை நிகழ்த்தியிருப்பதாகக் கூறினார். இவையெல்லாம் தீராத சர்ச்சைகளைக் கிளப்பின.
மேலும், அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் - குறிப்பாகப் புற்றுநோயினால் இறந்துகொண்டிருந்த அவரது முதல் மனைவி பேட்ரிசியா ஹேலை அவர் நடத்திய விதம், அவரது காதலியான மார்கரெட் கூடிங்கை நடத்திய விதம் - ஆகியவை அவரது பிம்பத்தை மேலும் களங்கப்படுத்தின. பேட்ரிக் ஃப்ரென்ச் எழுதிய நைபாலின் வாழ்க்கை வரலாற்று நூல் இந்தச் செய்திகளை உறுதிப்படுத்தியது. பயண எழுத்தாளர் பால் தெரூவுடனான அவரது ‘இலக்கியச் சண்டை’யும் உலகப்புகழ்பெற்றது. 2001இல் அவருக்கு இலக்கியத் திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. செப்டெம்பர் 11, 2001 அன்று நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலின் பின்னணியில், இஸ்லாத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை ‘ஆத்திகர்களுக்கு மத்தியில்’ (Among the Believers, 1981), ‘நம்பிக்கைக்கு அப்பால்’ (Beyond Belief, 1998) ஆகிய இரண்டு பயண நூல்களில் எழுதியதற்காகவே நைபாலுக்கு அப்பரிசு வழங்கப்பட்டதாக சர்ச்சைகளும் எழுந்தன.
நைபால், எப்போதும் சுளிப்பு மாறாத தன் முகபாவனை யோடு, அத்தனை சர்ச்சைகளையும் எளிதாகப் புறம்தள்ளினார்.
நேர்த்தியான உரைநடைக்காகப் போற்றப்பட்டதற்கும் மிக மோசமான அரசியல் கருத்துகளை முன்வைத்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதற்கும் இடையேதான் நைபாலின் ஆளுமை முழுமையடைகிறது. இதுவே ஆய்வாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் அவரைக் கடினமானவராக்குகிறது. அவரது வாசகர்களோ சிறிதளவேனும் வெறுக்காமல் அவரை நேசிக்க முடியாது.
மின்னஞ்சல்: vswaroopm@gmail.com