கலைஞர் நினைவுகள் இனியவையும் இன்னாதவையும்
1992 ஜனவரி 18 முதல் 1998 ஜனவரி 18 முடிய ஆறு ஆண்டுக் காலம் 93 ஏ கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 24 என்பது என் இரண்டாவது முகவரியாக இருந்தது. அங்குள்ள முரசொலி வளாகத்தில் பணியாற்றினேன். வளாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தமிழன் நாளிதழிலும் பின்னர் குங்குமம் வார இதழிலும் பணிபுரிந்தேன்.
கலைஞர் கருணாநிதி அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எனவே அவர் அன்றாடம் வந்து செல்லும் இடங்களில் முரசொலி அலுவலகமும் ஒன்றாக இருந்தது. நாளில் ஒருமுறையாவது அவரை நேரில் பார்த்துவிடும் வாய்ப்புக் கிடைத்தது. சரியாகப் பதினோரு மணியளவில் அவரது கார் வருவதை அறிவிக்கும் ஒலிப்பான் முழக்கம் கேட்கும். அலுவலகம் எச்சரிக்கை அடையும். காரின் முன் இருக்கையிலிருந்து இறங்கி அவர் தன்னுடைய அறைக்குச் செல்வதைப் பல நாட்கள் எட்ட நின்று பார்த்திருக்கிறேன். சிலமுறை அவரைப் பார்ப்பதற்காகவே வேலையைப் பாதியில் நிறுத்திவைத்து வெளியில் வந்து