ஓய்வற்ற இயக்கம்
‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப் பில் கொண்டபல்லி கோடேஸ் வரம்மா வின் தன்வரலாற்று நூலை (காலச்சுவடு வெளியீடு 2015) தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தபோது மிக அரிதான வாய்ப்பு கிட்டியது போல் உணர்ந்தேன்.அவருடைய நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்கு விசாகப்பட்டினம் செல்லும்போது ரயில் பயணத்தில் அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. கட்சிக் கொள்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதோடு, எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் துயரங்களை அனுபவித்து, அசையாத தனித்தன்மையோடு விளங்கிய அந்த மூதாட்டியை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற உவகை என்னைத் தூங்க விடவில்லை.
மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லாமே தெரிந்த கஷ்டங்கள்தான் என்றாலும், கரையில் நின்று அலைகளைப் பார்ப்பதற்கும், ஆளுயரத்திற்கு எழும்பும் அலைகளுக்கு நடுவில் பயணம் செய்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ, “ஆளற்றபாலம்” வழியாக நான் அறிந்த கோடேஸ்வரம்மாவிற்கும் நூறாவது பிறந்தநாள் விழாவில் உரை நிகழ்த்திய கோடேஸ்வரம்மாவிற்கும் இடையே அவ்வளவு வேறுபாடு இருந்தது. இளைய தலைமுறையினர்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை
நம்மை அசத்துகிறது. சமமான சமுதாயம் உருவாக வேண்டும். பெண்கள் அச்சமின்றி நடமாடக்கூடிய சூழ்நிலை நிலவ வேண்டும். அதற்கு இளைய தலைமுறைதான் வீறுகொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களையும் மீறி, கொள்கைப் பற்றிலிருந்து கொஞ்சம் கூட விலகாமல் இன்று வரை ஒரு போராளியாகவே வாழ்ந்துவருகிறார் கோடேஸ்வரம்மா.
எல்லா வயதினரும், கம்யூனிஸ்ட் அரசியலுடன் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலையில் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஹவாமஹால் முன்வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கில் திரண்டு வந்திருந்தார்களென்றால் அவளுடைய வாழ்க்கை எந்த அளவிற்கு மக்களை ஈர்த்துவிட்டதென்று புரிந்துகொள்ள முடியும். பாலைவனத்தில் நடுவில் பிரவகிக்கும் ஜீவநதிகொண்ட பல்லிகோடேஸ்வரம்மா! இந்த வயதிலும் இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் உடனுக்குடன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதால் புதிய தலைமுறையுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார்.
புது சமுதாயத்தைத் தோற்றுவிக்க காட்டில் மறைந்து போராடிய புரட்சித் தலைவர்கள், தம் தனிப்பட்ட வாழ்க்கையில் புரட்சி எண்ணங்களை ஏற்றுக்கொள்ளாமல் போனது விந்தைதான். எந்த சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், ஒரு சமுதாய அரசியல் கண்ணோட்டத்துடன், சாதகமான வாழ்க்கைக்குக் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா ஓர் எடுத்துக்காட்டு. அவர் அனுபவித்த கஷ்டங்கள் அவருக்கு அந்த முதிர்ச்சியைத் தந்திருக்கக் கூடும்.
சின்ன ஏமாற்றம் சந்திக்க நேர்ந்தாலும் மனமுடைந்து போகும் இந்தக் காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் கோடேஸ்வரம்மாவின் உரையைக் கேட்டால் நிச்சயம் மனோதிடம் பெறுவார்கள். விழாவிற்கு வந்திருந்த எல்லோரும் கோடேஸ்வரம்மாவை “அம்மம்மா” (அம்மா வழி பாட்டி) என்றுதான் விளித்தார்கள். இத்தனை பேரன், பேத்திகளின் அன்பிற்குப் பாத்திரமான கோடேஸ்வரம்மாவின் முகத்தில் அலாதியான அமைதியை, நிறைவைக் காணமுடிந்தது. இனிமேல் கோடேஸ்வரம்மா ஆளற்றபாலம் இல்லை. ஆட்கள் நிறைந்த பாலம்.