அசோகமித்திரனின் மானுடப்பக்கம்
தமிழனுக்கு நீண்ட வரலாறு உண்டென்றாலும் அவனது தேசீய குணம் என்பது வரையறுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. உலகமயமாதலுக்குப் பிறகு இது இன்னும் சிக்கலாகியிருக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னுமான தமிழனின் பிம்பம் என்று பார்த்தோமானால் அதன் உருவாக்கத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகளும் சித்தாந்தங்களும் வாழ்க்கை முறைகளும் ரசனை வகைகளும் கலந்திருக்கின்றன. விடுதலை வேட்கையோடு இந்திய தேசீயத்தில் நம்பிக்கை கொண்ட தமிழன், அதில் நாட்டமில்லாமல் பழைய சமஸ்தான வாழ்க்கையோடு திருப்தி கொண்ட தமிழன், காலனீய வாழ்க்கை தந்த சவுகரியங்களை அனுபவித்துக் கொண்டு விடுதலையைப் பற்றிக் கவலைப் படாதிருந்த தமிழன், வாழ்க்கையை ஆரியமாகவும் திராவிடமாகவும் பார்த்த தமிழன், ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது ஒரு குறிப்பிட்ட சாதி தான் காரணம் என்று சொல்லப்பட்டதை நம்பிய தமிழன், மதமும் சாதியும்