குல்தீப் நய்யார் (1924-&2018)
நான் பத்திரிகையாளராக வேண்டும் என ஆசைப்பட்டதில்லை. லாகூரில் என் எல்.எல்.பி. படிப்பை முடித்தபின், சொந்த ஊரான சியால்கோட்டில் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என்னுடைய இறுதித் தேர்வு முடிந்த சில நாட்களிலேயே இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
சியால்கோட்டிலிருந்து எல்லையைக் கடந்து அமிர்தசரஸிற்கு வந்தேன். எல்லாம் சரியான பிறகு சியால்கோட்டிற்குத் திரும்பலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவேயில்லை. பிறகு வேலை தேடி தில்லிக்கு வந்தேன். நான் ஒரு எழுத்தர் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். அது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழிலதிபருக்குச் சொந்தமான உருது நாளிதழுக்கு ஒரு இந்திப் பத்திரிகையாளர் தேவைப்பட்டார். அந்தத் தொழிலதிபரின் தேவைக்கு நான் சரியாகப் பொருந்தினேன். அவரது நாளிதழில் வேலைக்குச் சேர்பவர்கள், அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கணக்கும் ஆங்கிலமும் சொல்லித்தர வேண்டும் என விரும்பினார் அவர். அந்த நாளிதழின் பெயர் அஞ்சம் (முடிவு). ஒரு வகையில் என் பத்திரிகையுலகப் பணி அந்த முடிவிலிருந்துதான் ஆரம்பித்தது.
‘ஸ்கூப்’ நூலின் முன்னுரையிலிருந்து