மழிக்கப்பட்ட மீசை’ சிந்தனையாளர்களின்மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் மற்று மொரு அத்தியாயம் மட்டு மல்ல சகிப்பின்மையின் அட்டூழியமும் கூட. கேரளத்திலும் இதுபோன்று நிகழ்வதை நம்ப முடிய வில்லை. கண்ணனின் அறச்சீற்றம் நியாயமானது.எத்தனையோ போராட்டங்களுக்கு இடை யிலும் தொய்வின்றி இயங்கி வரும் இலக்கிய இதழ்கள் சிறுமைப்படுத்தப்படுவதை ஏற்க இயலாது. ‘கடல்’ நல்ல முறையில் எழுதப்பட்டுள்ள கதை. இருப்பினும் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க இயலவில்லை.
‘பதிப்பும் பூசலும்’ கட்டுரை இந்த இதழின் பொக்கிஷம். சி.வை.தா,உ.வே.சா இருவரின் பதிப்புப் பணியையும் தமிழ்ப்பற்றையும் உணர முடிந்தது.காலத்தால் அழியாத பங்களிப்பு இருவருடையதும். தமிழ் உள்ளவரை இந்த இரட்டையரும் வாழ்வர்.
சுப்ரமணிய சரவணன்
மின்னஞ்சல் வழி
அ.கா.பெருமாளின் கட்டுரையை வாசிக்கும்பொழுது - ஆகஸ்ட், 2018 இதழ் - இதுதான் தோன்றுகிறது; எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றியும் நடைமுறையில் அந்தரங்கமாக எத்தகைய உணர்வுகளையும் நாம் வெளிப் படுத்தலாம். ஆனால் பொதுவெளியில் அதையெல்லாம் உண்மையைப் போல முன்வைத்து வாதிட முடியாது. படிப்பறிவு இல்லாத பாமரன்கூட தன் தந்திரங்களாலும் சாதுர்யங்களாலும் எத்தகைய அறிவுஜீவியையும் நடைமுறையில் ஏமாற்றி வழியைத் திருப்பிவிடுவது சாத்தியமே. ஒரு பாமரனின் நம்பிக்கைகளைப் பற்றி ஒருவேளை அவனிடம் நாம் பேசத்தொடங்கினால் அவன் உண்மையில் அதைப்பற்றி என்ன நினைக்கிறான் என்பதையோ, உண்மையில் அதையெல்லாம் அவன் நம்பித்தான் கடைப்பிடிக்கிறானா என்பதைப் பற்றியோ தெரிந்துகொள்ள முடியாது. வறுமை ஒரு இழிவு ஆகும். எந்தக் காரணமும் இல்லாமல் அந்த இழிவு ஒருவனை நடைமுறையில் பீடிக்க முடியாது. அவன் படைப்பாளியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி.
முரளிகண்ணன்
மின்னஞ்சல் வழி
‘பதிப்பும் - பூசலும்’ என்ற மிக நீண்ட ஆய்வுக்கட்டுரை, இதழுக்கு மகத்தான பெருமையைச் சேர்த்திருக்கிறது. ஜனரஞ்சகமான படைப்புகளும் வாசிப்புகளுமே பெரிதும் விரும்பப்படும் இக்கால இதழியல் சூழலில் இரு பழம்பெரும் தமிழ் சான்றோர்களது நூல் பதிப்புப்பணி பற்றிய 17 பக்க நீண்ட ஆய்வுக் கட்டுரை, எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்கு மிகப்பயன் மிக்க ஒளிபாய்ச்சுவதாகும் என்பதை உணர்த்திய ஆய்வறிஞர் வேங்கடாசலபதிக்கும் காலச்சுவடு இதழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடப்பாடுடையதாகும்.
இரு ஆளுமைகளும் தத்தமது தமிழ்ப்பணிமிக்க வாழ்வுச் சரித்திரங்களைத் தனித்தனியே எழுதி முன்பே வெளிக்கொணர்ந்திருந்தாலும், அவற்றைப் படித்த - படிக்க வாய்ப்பில்லா அனைவருக்கும் இக்கட்டுரை புதிய வெளிச்சங்களையும் அப்பழுக்கற்ற மொழிப்பணிக்கான மேலூக்கத்தையும் திறம்பட பதிவு செய்துள்ளது. எவ்விதமான வெளிப்படை ஊறும் விளைவித்திடாது இவர்களது உட்பூசல்களில் நடந்த மனப்போராட்டங்களை வென்றெடுத்து அவரவர் பதிப்புப் பணிகளை இயைந்தும் தனித்தும் அன்றே செம்மையுறச் செய்து முடித்திடவில்லையெனில், இன்றைய தலையாய தமிழ் இலக்கியச் செம்பதிப்புகள் நமக்குக் கிடைத்திருக்குமா?
சி.வை.தாவின் பொதுநோக்கு மிக்கமைந்த விசாலப் பார்வையும் காலத்தே அமையவேண்டிய பழந்தமிழ் நூல் பதிப்பு முயற்சிகளின் அவசரமும் அதற்கான பாண்டித்தியம் கைவரப்பெற்ற உ.வே.சா.வின் அரிய பங்களிப்பு வேண்டலும் அப்பெருமகனிடம் மேலோங்கியே காணப்படுகிறது. ஆனால், உ.வே.சா. வின் சில வெளிப்படையான நிராகரிப்புகளுக்கும் பல்வேறு பொழுதுகளில் அவர் விரும்பியே கடைப்பிடித்து வந்த விசனம் கலந்த நிசப்தங்களுக்கும் மூலக்கருத்துருக்களுடைய நண்பர்களின், ஆதீனமடத்தின் சார்பும் தம்முடைய மனப்போக்கிலேயே அமைந்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும் உரிய காரணங்களாகச் சிலவற்றை நாம் யூகிக்கலாம்: தனக்கு முன்பே இத்துறையில் கால் பதித்துத் தன்னைவிட வயதிலும் பல்துறை அனுபவத்திலும் முற்பட்டு நிற்கக்கூடிய, தனக்கு வாய்க்க இயலாதுபோன கல்லூரிப் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு ஆங்கில மொழிப்புலமை ஆகிய அனைத்தும் ஒருங்கமையப்பெற்ற சி.வை.தா., குருகுலக்கல்வியில் ஆளாகிவந்த தம்மைப் பல்லாற்றானும் தொடர்ந்து இறைஞ்சி நிற்பது என்பது, தமது அரிய தேடல் உழைப்பையும் ஆய்வாற்றலையும் ஏதேனும் ஒருவகையில் மேலாதிக்கம் செய்துவிடுமோ என்ற அச்சத்தில் உ.வே.சா உழன்றிருக்கலாம்.
சொந்த வாழ்விலும் வெளியுலகிலும் தாம் சந்தித்த பல்வேறு
சோதனைகளுக்கிடையில், உ.வே.சாவின் கடுமையான ஆய்வு உழைப்பிற்கும் அதனுடன் அவருக்கமைந்த சமூகப்பின்புலக்கூர்மைக்கும் தன்னால் ஒருவாறு ஈடுகொடுக்க இயலவில்லையே என்ற ஆதங்கம், அங்கலாய்ப்புகள் சி.வை.தா.விற்கும் இருந்திருக்கலாம். இவரது கும்பகோண வறுமையையும் தனக்கான நூல்பதிப்பு முன்னெடுப்புகளையும் வரவேற்பதாகத் தமது உவகையை மேலோட்டமாக உ.வே.சா வெளிப் படுத்தினாலும், இவரது அமைதியான உள்மனஓட்டம் சி.வை.தா.வை உளப்பூர்வமாக உள்வாங்கியதா என்பதை
யாரறிவார்? இரு அறிவுப் பேராற்றல்களின் பக்குவமான உரசல்களினால்தான் தமிழ்மொழி இன்று வளமும் வாழ்வும் பெற்றுள்ளது. இவ்வகை எண்ணப் பிரதிபலிப்பு களே கட்டுரை முழுவதும் ஆய்வாளரால் பிரதிபலிக் கப்படுகிறது. இவ்வகைப் படைப்பாற்றல் தமிழ் இலக்கிய உலகில் மென்மேலும் பல்கிப்பெருகிட வேண்டும்.
சி. பாலையா
புதுக்கோட்டை
‘மழிக்கப்பட்ட மீசை’ தலையங்கம் படித்தேன். எஸ். ஹரீஷ் நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருபாத்திரங்கள் மேற்கொண்ட உரையாடல்கள், இந்துப் பண்பாட்டையும் கோவில் கலாச்சாரத்தையும் பெண்களின் மாண்புகளையும் குலைக்கும் வகையில் எழுதப்பெற்றிருக்கிறது என்று தடைசெய்யப்பட்டிருப்பதும், ஆசிரியரையும் அவரது குடும்பத்தையும் அச்சம்கொள்ள வைக்கும் விதத்தில் மிரட்டப்பட்டிருப்பதையும் படித்தபோது கோனாட்சியை ஒழித்துக் குடியாட்சியைப் பெற்றது இதற்குத்தானா என்று அனைவரையும் ஆவேசப்பட வைத்திருக்கிறது.
அமைப்பொழுங்கும் கட்டுப்பாடும் தனிமனித சுதந்திரமும் தாராளமாய் இருக்கும் மாநிலமாக எழுத்தாளர்களை ஏற்றிப் போற்றும் கேரளாவில் இது நடந்திருக்கிறது என்பதை மனம் நம்ப மறுக்கிறது. மதத்தைச் சாராமல் சிந்திப்பதே மதச்சார்பின்மையாகும். வரலாற்றில் மதமே எல்லாவற்றிலும் பின்னின்று ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாக இருந்துவந்தநிலை சற்றே மாறிவருகிறது என்ற நம்பிக்கையில் மண்விழுந்திருக்கிறது. மனிதத்தன்மையை வளர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் திசைமாறி, கருத்துச் சுதந்திரத்திற்குக் கடிவாளம் போட முயல்வதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.
அறிவு நூலும் கலையும் உலக முழுமைக்குமே உரியன. அவற்றின் முன் தேச எல்லைகள் மறைகின்றன என்ற ‘கெதே’யின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் இலக்கியத்துறை படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
‘நவீன இலக்கியமும் சுடலைமாடனும்’ - அ.கா. பெருமாள் எழுத்தோவியத்தை மிகவும் ஆழ்ந்து படித்தேன். ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘பதிப்பும் பூசலும்’ கட்டுரை என் உள்ளத்தை வெகுவாகக் கொள்ளை கொண்டது. தமிழறிஞர்கள் சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாதஐயர் ஆகியோரை விரிவாக அறிந்து கொள்ள, முழுமையாகத் தெரிந்துகொள்ள இக்கட்டுரை மிகவும் பயன்பட்டது. எம். அப்பாத்துரை எழுதிய “ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணி” எனும் எதிர்வினை அதிஅற்புதம். ‘காலச்சுவடு’ ஆற்றிவரும் தன்னலமற்ற இதழியல் பணிகளை உள்ளன்போடு வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
தங்க. சங்கரபாண்டியன்
சென்னை
இந்து தமிழ் திசையின் சிற்றிதழ் பார்வை குறித்து சில வரிகள். சிற்றிதழ்களின் விநியோகம் விற்பனை வழியிலானது அல்ல. சந்தாதாரர்களின் எண்ணிக்கைதான் அந்த எண்ணத்தை அவ்வப்போது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை. எனவே சிற்றிதழ்களின் வாசகப்பரப்பு குறைந்ததாகச் சொல்ல முகாந்திரம் இல்லை.
ஆனால் பேரிதழ்களின் முகவர்களும் கடைக்காரர்களும் இப்போது முன்னைப்போல் கல்லா கட்ட முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள். அந்த இழுபறியைத்தான் சந்தாத் தொகை தள்ளுபடி திட்ட அறிவிப்பு சொல்லாமல் சொல்கிறது.
தவிர சிறுகதை இலக்கியம் அன்றாட சமூக வாழ்க்கைப் பிரச்னைகளைப் பிரதிபலித்து ஐந்து அல்லது பத்து நிமிட வாசிப்பில் அதற்கான தீர்வுகளைச் சொல்லக்கூடியவை. அத்தகைய வாய்ப்பை வெகுஜன இதழ்களின் ஆரம்பகால ஆசிரியர்கள் வாசகர்களுக்கு வழங்கிவந்தார்கள். குமுதம், விகடன் தலா 5, கல்கி 3 - ராணி 2 இப்படி வாரம் தோறும் 30க்குமேற்பட்ட சிறுகதைகள் வாசகர்களுக்குக் கிடைத்தன. ஆனால் சிறுகதைகளுக்கான அந்த இடங்கள் இன்று காட்சி ஊடகங்களின் பியூட்டிபார்லராகவும், சமையல்கட்டுச் சம்பிரதாயங்களாகவும் தடம்மாறிவிட்டன.
எனவே வாசகர் வட்டம் தவிர, அவர்களின் ரசனையையும் தடம்புரளச் செய்யும் கைங்கரியத்தை வெகுஜன இதழ்கள்தான் செய்துவருகின்றன, சிற்றிதழ்கள் அல்ல.
தமிழினியன்
திருச்சிராப்பள்ளி
‘மழிக்கப்பட்ட மீசை’ கதை வெளிவந்து விட்டதாமே! ஆங்கில நாளிதழில் படித்து அகமகிழ்ந்தேன். எப்படியும் இந்நூலைப்படித்து விடுவேன். உலகிலேயே மிகவும் மோசமானது கருத்துப் போராளிகளைக் கொல்வது; அதுவும் முற்போக்குக் கருத்து, சாதிமத மறுப்புக் கருத்துகளை எழுதினால் தீர்த்துக் கட்டுவது என்று இந்திய நாடே சுடுகாடு ஆகிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்களின் பேச்சு - எழுத்து - உணவு சுதந்திரம் இந்நாட்டில் மறுக்கப்படுகிறது; ஒடுக்கப்படுகிறது. பலவீனனைக் கொல்கிறார்கள். இனியும் பொறுத்துக் கொண்டு பொறுமை காப்பது மகா சிறுமை.
பெருவழுதியின் கவிதைகள் அருமை. அதுவும் அந்த ‘ஆன்மா’ கவிதை அருமையிலும் அருமை!
“ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணி” எதிர் வினையைப் படித்தேன். ஒரு புறம் வியப்பு, மறுபுறம் ஏதோ பார்த்த முகம் மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன். கட்டுரையாளர் எம். அப்பாத்துரை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இது முக்கியமல்ல. 1997இல் ஒருவர் ரூ 25லட்சம் ரொக்கத்தையும் ஒரு சொகுசு வாகனத்தையும் வன்மை யாக நிராகரித்துள்ளார் என்று எண்ணும் போதே இன்னும் நேர்மையான அரசியல்வாதிகள் ஒண்ணு ரெண்டு பேர் இருக்கிறார்கள் என்று என் உள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்துபோகிறது.
ஞா. சிவகாமி
சென்னை- & 116
தலையங்கம், கேரளத்தில் ஹரீஷ் மீது தொடுக்கப்பட்ட மட்டரகமான தாக்குதல்களை விரிவாகக் கூறியுள்ளது. பைபிள் ஏந்திகள் கலீலியோவின் கருத்தை அறிவுபூர்வமாக மறுக்க இயலாமல் அவரைச் சிறைப்படுத்திய கொடுமை நிகழ்ந்தது. உலகம் முழுவதும் பல மொழிகளில் உருவான படைப்புகளுக்கு அரசே தடை விதித்துள்ளது; வலு நிறைந்த மாற்றுக் கருத்தாளர்கள் படைப்பாளிகளின் உயிரை மிகவும் கொடூரமான வழிகளில் போக்கியிருக்கிறார்கள். படைப்பாளி கொல்லப்பட்டாலும் படைப்பு காலங்காலமாக நிலைத்து நிற்பதொரு விசித்திரம்.
இராமாயணத்தின் பலவிதமான பதிப்புகளை ஆதாரமாகக் கையில் வைத்துக்கொண்டு எம்.ஆர். ராதா நடத்திய நாடகத்தை நாளிதழொன்று ‘கீமாயணம்’ என்றே எழுதி வந்தது. நாடகக் கொட்டகை தீவைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில் மறுநாள் அதே இடத்தில் கொட்டகை போட்டு நாடகம் நடத்திய துணிவு நிறைந்தவர் எம்.ஆர்.
எட்டாம் வகுப்புப் புவியியல் பாடத்தில் “மனிதன் சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலுடையவன்” என்ற வரி நீக்கப்பட்ட செய்தி வியப்பைத் தரும். அந்த வாக்கியத்தின் மீது அரசுக்கு அப்படியோர் அச்சம்!
‘மாதொரு பாகன்’ தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ச. தமிழ்ச்செல்வன் மேற்கொண்ட முயற்சிக்கு அண்மையில் புதுச்சேரியில் நடந்த தமு எகச மாநாட்டில் பெருமாள் முருகன் நன்றி தெரிவித்தார். அதே மேடையில் கவிஞர் வைரமுத்துவும் தம் நெஞ்சார்ந்த நன்றியை வெளிப்படுத்தினார்.
பெருமாள் முருகன் விவகாரத்தில் நீதிபதி கூறிய சொற்களைத் தலையங்கம் உற்ற நேரத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் அத்தீர்ப்பிலுள்ள நியாயத்தை மாற்றுக் கருத்தாளர்கள் உணரும் நிலையிலில்லை.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது அடங்கிய அமர்வு தெளிவாகக் கூறிய பிறகும் மக்களின் கருத்துரிமையைத் தடை செய்ய அராஜகமான வழிகளைப் பின்பற்றும் எடப்பாடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பது புரியவில்லையா?
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு
இஹ்சான் அப்துல் குத்தூஸின் பின் நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி வெளி வந்துள்ள ‘கிறுக்கி’யில் அற்புதமான கொள்கை வரையறைகளை முற்றிலும் துறக்கிற அம்சம் விரவிக் கிடந்ததை உணர முடிந்தது. படைப்பாளியின் காதலி முற்றிலும் முற்போக்கு எண்ணங்களோடு வலம் வருபவள். சமூகப் பொருளாதார அரசியல் எத்தகைய ஆண் மைய மதவாதத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறதென்பதைத் தெளிவாக்க “இறைவன் ஆணா?” என்கிற கேள்விக் கணையே கதையாடலின் நோக்கம். ‘இறை மறுப்புக்காக’ ஆண்டவனிடம் பாவமன்னிப்பு கோரும் கதாநாயகி. ‘ஆண்’ இனத்தை நான் நம்பவில்லை. அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்கிற அம்சத்தில் தன்னைக் கரைத்துக் கொள்கிற optimist ஆக, “இறைவன் ஒருவன் இருந்தால் அவனே என் பாதுகாவலன், அவனை மட்டுமே நம்பியிருக்கிறேன்” என்கிற கூற்றை வெளிப்படுத்தி சூட்சும வெளியைப் புரிந்துகொள்ள வைத்துள்ளது. அன்பின் முணுமுணுப்புகளான பெண்வழிச் சிந்தனைகளை அரவணைப்போடு ஆலிங்கனம் செய்துகொள்ளாத ஆண் வர்க்கத்தை விடவும் பெண் வர்க்கமே இந்த தேசத்தின் ஆர்ஜிதம் இஹ்சான் அப்துல் குத்தூஸின் இக் கதைக்கான தலைப்பை ‘ஏன் கிறுக்கி’ என வைத்துள்ளார்? அது கதையின் அடிப்படைவாதத்திற்கு எதிராக உள்ளதே. கேள்வி மேல் கேள்விக் கணைகளால் தனது அறிவாற்றலைப் பதிவு செய்கிற உயர்ந்த கதாபாத்திரத்திற்கு ‘கிறுக்கி’ (பைத்தியக்காரி) என தலைப்பிட்டுள்ளது பெண்ணியவாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டாகப் பதிவுசெய்து கொள்கிறேன்.
பா. செல்வவிநாயகம்
சென்னை
சாகர்மாலா: வரமா சாபமா? ஜோடி குரூஸ் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியினால் கொண்டுவரப்பட்ட திட்டம் பல லட்சங்களை முதலீடு செய்து கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் உண்மையிலேயே நாட்டின் நலன் கருதி அக்கறையோடு அமைகிறதா அல்லது வழக்கம்போலே அடிப்படைத் தொலைநோக்கு இல்லாமல் அரசியல் நலம் சார்ந்து திணிக்கப்படுகிறதா?
சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் படைப்புச் சமூகங்கள் புறம் தள்ளப்பட்டுள்ளன. அவை 200 ஆண்டுகளுக்குமேல் மற்ற நாடுகளுடன் கடல் வழியில் உறவாடி முன்னேற்றம் பெற்றன. அந்த அடிப்படை தெளிவு இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்பது என் கவலை.
தங்கவேல் கௌசல்யா
மயிலாப்பூர்