கொரோனா இரண்டாம் அலையின் முன்னே...
தலையங்கம்
கொரோனா இரண்டாம் அலையின் முன்னே..
மனிதர்களின் உயிர் தரிப்பு இயற்கையானது அல்ல; அவர்களுடைய தேர்வின் அடிப்படையில் அமைந்தது. கொரோனா தொற்று நோய் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்களுக்குக் கற்பிக்கும் பாடம் இது. தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு நாம் இறந்து போகலாம்; அது இயற்கையானது. அதை மீறி வாழ வேண்டுமானால் நோயை முறியடிப்பதற்கான எல்லா வகையான எச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவை நமது தேர்வுக்கு விடப்பட்டிருக்கின்றன. இயற்கையின் பெரும் சதிக்கு எதிராக மக்கள் தனித்துப் போராட முடியாது. எனவே அவர்கள் அரசுகளை நாடுகிறார்கள். ஏனெனில் குடிமக்கள் அனைவரின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் ஓர் அரசு அமைகிறது. மக்கள் பாதுகாப்பான வாழ்க்கையை நடத்த உதவுவதற்காகவே அரசுகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தங்களது வாழ்க்கைத் தேர்வுக்கான பொறுப்பை அரசிடமிருந்து எதிர்பார்ப்பது இயல்பானது. நோயிலிருந்து தங்களைக் காப்பாற்ற அரசின் தீவிர நடவடிக்கைகளை வேண்டுவது குடிமக்களின் ஜனநாயக உரிமை சார்ந்தது.
ஆனால் நோய்த் தொற்று மிகப் பரவலாக உள்ள நாடுகளில் அரசுகள் இந்த உரிமையை எந்த அளவு மதித்தன, செயல்பட்டன என்பதையொட்டியே மரண எண்ணிக்கை அமைந்திருப்பதை இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. குடிமக்களின் உரிமை வாழ்வைப் பொருட்டாகக் கருதிய அரசுகள், விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாகவும் அறிவியல் அடிப்படையிலான நடைமுறைகள் வழியாகவும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தியதன் வாயிலாகவும் நோயின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. சில நாடுகள் தொற்று பரவாத முற்றிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கியிருக்கின்றன. அவற்றை முன்வைத்துப் பார்க்கும்போது இந்திய அரசு தேவையான அளவில் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை, தடுப்புமுறைகளில் சீரிய கவனம் மேற்கொள்ளவில்லை என்பதை அறியலாம். கோவிட் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நாடுகளின் முதல் வரிசையில் இந்தியா இருப்பதே இதற்குச் சான்று.
கொரானோ நோயின் முதற்கட்டத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மனித குலம் இதுவரை கண்டிராத விந்தை நோயாக கோவிட் வைரஸ் மூலம் பரவிய இந்த உயிர்க்கொல்லி எல்லா அரசுகளையும் பதைப்புடன் கைப்பிசைய வைத்தது. நோயின் தன்மையை ஆராயவும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவும் இயலாமல் அறிவியல் உலகம் திகைத்து நின்றது. மக்களைத் தனித்திருக்கச் செய்வதும் சமூகப் புழக்கத்தைத் தடுப்பதுவுமே உடனடி நிவாரணமாகக் கண்டறியப்பட்டது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதே தீர்வாகக் கருதப்பட்டது. அதையொட்டியே பிணிப் பாதிப்புக்குள்ளான நாடுகள் அனைத்தும் முடக்கத்தை அறிவித்து நடைமுறைப் படுத்தின. நமது நாடும் அதைப் பின்பற்றியது. ஆனால் பிற நாடுகளிலிருந்து வேறுபட்ட விளைவுகள் இங்கு ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான எளிய மக்கள் நடுத்தெருவில் தள்ளப்பட்டனர். இரவலர்களாகக் கையேந்தும் நிலைக்கு ஆளாயினர். உணவுக்கும் மருந்துக்கும் வழியில்லாமல் உயிரிழப்புகளும் நேர்ந்தன. விளைவுகள் பற்றிய அறிவியல்சார்ந்த புரிந்துகொள்ளலோ நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான தீவிர முனைப்போ அரசிடம் இல்லாமல் போனதை இந்த உயிரிழப்புகள் எடுத்துக் காட்டின.
இந்திய மாநிலங்களில் தமிழகத்தையும் கேரளத்தையும் தவிர பிற மாநிலங்கள் இந்தப் பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்தன. மத்திய அரசும் நோய்த் தடுப்புப் பணி அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு என்று ஒதுங்கிக்கொண்டது. எல்லா மாநிலங்களையும் ஒருங்கிணைத்து நாடு முழுமைக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக அது தன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பரந்த நிலப்பரப்பும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகையும் கொண்ட தேசத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் கடினமே. ஆனால் அதை நிறைவேற்றத்தான் பேரிடர் மேலாண்மைக்கான துறையை அரசு கொண்டிருக்கிறது. அதன் நடவடிக்கைகள் பெயரளவில் இருந்தனவே தவிர நிலைமையைச் சமாளிக்கும் வகையில் இல்லை. மாநிலங்கள் தமது பொறுப்பில் உருவாக்கிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், குடிமை நிர்வாகத் துறையினர் ஆகியோரைக் கொண்ட முன்னணிப் படையினர் இந்த இடரைச் சமாளிப்பதில் பெரும் பங்கு ஆற்றினர். இந்தக் கால அளவில் மத்திய அரசின் பங்கு ‘மக்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியதும் நோய் விலகப் ‘பிரார்த்தனை செய்க; மணி முழக்குக’ என்று கற்பனையான ஆலோசனைகளுமாகவே இருந்தன. மருத்துவ அறிவியல் அடிப்படையில் தடுப்புப் பணிகளில் முன்னே நின்ற தமிழகத்திலும் கேரளத்திலும் பெருந்தொற்று கட்டுக்குள் நின்றபோது மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்று மேலும் பரவலானது. இன்று கோவிட் 19 இரண்டாம் அலையில் அதிகப் பாதிப்புகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் உள்ளாகியிருப்பவை இந்த மாநிலங்களே.
நாடு முழுவதுமான முடக்கம் ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கும் அதிகமாக நீண்டது. நோய்த் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் நோயின் பாதிப்பு மட்டுப்படவில்லை; மேலும் தீவிரமாகத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்ற மருத்துவ உலக எச்சரிக்கை அதற்குரிய அக்கறையுடன் பின்பற்றப்படவில்லை. இதற்கு மக்களும் அரசுகளும் ஒருசேரப் பொறுப்பேற்க வேண்டியவர்களே. ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நிலவியபோது செலுத்திய கண்காணிப்பை அரசும் அப்போது கடைப்பிடித்த கட்டுப்பாட்டை மக்களும் கைவிட்டனர். இருதரப்பினருக்கும் அதற்கான காரணங்கள் இருந்தன. முற்றிலும் பொருளாதாரச் சமூகச் செயல்பாடுகள் இல்லாமல் அரசு இயங்க முடியாது. வாழ்வாதாரத்துக்கான பணிகளைச் செய்யாமல் மக்களால் பிழைத்திருக்க முடியாது. இதை ஏற்றுக்கொள்ளும்போதே இரு தரப்பினரின் மெத்தனமும் அசட்டை மனோபாவமும் கண்டனத்துக்கு உரியவையாக முன்நிற்கின்றன.
முகக்கவசம் அணிதல், மனிதர்களுக்கிடையில் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமி நாசினி மூலம் தூய்மையாக்கிக் கொள்ளுதல் ஆகியவற்றை கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான முதல்வழிமுறைகளாக மருத்துவ உலகம் பரிந்துரைத்தது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் அரசும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதில் மெத்தனமாக இருந்தது. கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் ஒரு மதத்தினரின் மாநாட்டில் பங்கேற்றவர்களைத் தொற்றுக்குக் காரணமானவர்கள் என்று சுட்டிக் காட்டிய அரசு, இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கும் காலத்தில் இன்னொரு மதத்தினர் புனித நதியில் கூட்டமாக நீராடக் கூடியதைக் கண்டுகொள்ளாமலிருந்ததை மெத்தனம் என்பதா, அரசியல் வீழ்ச்சி என்பதா? பிரதமரின் பரப்புரை வசதிக்காக ஒரு மாநிலத்தில் எட்டுக் கட்டங்களாகத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டதை மக்கள் விரோதச் செயல் என்று அழைப்பது தவறாகுமா? இதனால் தமிழகத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் புதிய ஆட்சி அமைத்து விரைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியாது போவதற்கான பொறுப்பு யாருடையது? தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்படும் நிலையில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லவும் அதன் விளைவுகள் பற்றிய சந்தேகங்களைப் போக்கச் செயல்படுவதும்தானே அரசின் முக்கியக் கடமைகளாக இருக்க முடியும். குடிமக்கள் நல வாழ்வு பெற தடுப்பு மருந்தின் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுதானே அரசின் முன்னுரிமைத் திட்டமாக இருக்க முடியும்? இவற்றில் மத்திய, மாநில அரசுகள் ஒரேபோலச் செயல்பட்டு வருவது அச்சத்தை விளைவிக்கிறது. மக்களைப் பேணிக் காப்பதல்ல, ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதே அரசுகளின் அக்கறை என்ற எண்ணத்தை இது காட்டுகிறது. அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமரின் வாசகமான ‘கட்டுப்பாட்டில் இருங்கள்’ என்ற வெற்று ஆலோசனை இதன் அப்பட்டமான எடுத்துக்காட்டு.
நம்முடையதைப் போன்ற மக்கள் தொகை நிரம்பிய நாட்டில் நீண்ட கால முடக்கம் எளிதானது அல்ல. அன்றாட உழைப்பில் பசிதீர்க்கும் மக்களை அது உடனடியாகப் பட்டினியில் தள்ளும். சற்றே வசதி படைத்தவர்களை மெல்ல இல்லாமைக்கு ஆளாக்கும். சமூக உறவாடல்கள் இல்லாமல் மனிதர்கள் முன்னேற இயலாது. இவை எல்லாம் சரியே. ஆனால் நோய்க்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டாயம் மேற்கொள்ளச் செய்வதன் மூலம் பயன் விளையக் காணலாம். அதற்கு நமது குடிமைப் பழக்கங்கள் மாற வேண்டியது அவசியம். அதை அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் வாயிலாகச் செய்யமுடியும். தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயப்படுத்துவதன் வழி குடிமைப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அரசுத் துறைகளிலும் சார்புத்துறைகளிலும் இந்தக் கட்டாயத்தைச் செயல்படுத்த முடியுமானால் அது பொதுமக்களிடமும் பரவும். தெருவோர வாழைப்பழ வியாபாரியிடம் முகக் கவசம் அணிய வலியுறுத்தும் காவல்துறை, டாஸ்மாக் முன்னால் உதாசீனமாக நிற்கும் கூட்டத்தைக் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்த முடியாதா?
கோவிட் 19 வைரசின் இரண்டாம் அலை உயிர்மாற்றம் பெற்றுப் பரவலாகிவருவதாக மருத்துவ உலகம் அச்சம் தெரிவிக்கிறது. முதல்கட்டத்தை விட இரண்டாம் கட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதும் கண்கூடு. தடுப்பு மருந்தின் பற்றாக்குறையும் நிலைமையைச் சிக்கலாக்குகிறது. அச்சத்துக்கும் திகைப்புக்கும் இடையிலான இன்றைய சூழலில் இரண்டாம் கட்டப் பரவல் மரண எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல். ஆனால் ஆபத்து விலகிவிடவில்லை. அதை எதிர்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. அசட்டை மனநிலையைக் கைவிட்டு நம்முடைய பழக்கங்களை மாற்றிக்கொள்வதுதான் தீர்வு. பழக்கங்களை விட்டுவிட விரும்பாத மரபான மனப்பான்மை கொண்ட நாடுகளில் முடக்கமே தீர்வாகக் கருதப்படுகிறது. அதற்காக அவர்கள் செலுத்தும் விலை பெரிது. அமெரிக்காவையும் இந்தியாவையும் உதாரணங்களாகச் சொல்லலாம். மாறாக இந்தப் பிணிக் காலத்தில் நோயை எதிர்கொள்ளும் வகையில் தம்மை மாற்றிக்கொண்ட நாடுகள் நோயிலிருந்து விடுபட்டிருக்கின்றன. உதாரணம் இஸ்ரேல், நியுசிலாந்து, சீனா.
இன்னுமொரு முழுமுடக்கம் நாட்டைச் சவக்குழிக்குத்தான் கொண்டு செல்லும். அதிலிருந்து தப்ப நமது சமூகப் பழக்கம் மாற வேண்டும். அது சாத்தியமாவதைப் பொறுத்து இந்தப் பேரிடரிலிருந்து நாம் முற்றிலும் விடுபட இயலும். அதற்கு அரசின் அக்கறையும் மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதவை.