விடுதலை உணர்வின் போராட்டம்
மதிப்புரை
விடுதலை உணர்வின் போராட்டம்
ச. பால்ராஜ்
இந்திய விடுதலைப் போராட்டமும் கிறித்தவர்களும்
எம்.ஏ. சேவியர், சே.ச.
வெளியீடு
வைகறைப் பதிப்பகம்,
6, மெயின் ரோடு,
திண்டுக்கல் 624 001
பக். 288
ரூ. 1 50
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியவர்களில் ஐரோப்பியர்கள் முக்கிய இடத்தினைப் பெறுகிறார்கள். அவர்களின் வருகைக்கும் முன்பு முகலாயப் பேரரசு இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை ஆட்சி செய்திருந்ததாலும், இத்தேசம் மதப் பிரிவினையாலும் ஜாதிபேதத்தாலும் பல சிற்றரசுகளாகச் சிதறுண்டு கிடந்ததே உண்மை. அவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தியதில் ஐரோப்பியர்களின் பங்கு அளப்பரியது. சாதிகளின் முரண்பாட்டால் பல்வேறு கொடுமைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்த பலதரப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்ற அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்த சூழலில் கிறித்தவ மதம் அவர்களின் துன்பத்தையும் இழிவையும் ஓரளவிற்குப் போக்கி கல்வி, மருத்துவம் முதலிய சேவைகளைச் செய்து அவர்களுக்கான முன்னேற்றப்பாதையை உருவாக்கித் தந்துள்ளதை மறுக்க முடியாது.
மனித வாழ்வியலுக்கான வழிகாட்டுதலையும் விடுதலையையும் ஏற்படுத்திய கிறித்தவ சமயம், ஆங்கிலேயர் ஆட்சியின் செல்வாக்கைப் பெற்றுத் திகழ்ந்தது. இத்தகைய ஆட்சிக்கு எதிராகக் கிறித்தவர்கள் போராடியது வியத்தகு ஒன்று. அதற்கான காரணங்கள் என்னென்னவென்பதை மையப் பொருளாகக் கொண்டு ‘நாட்டின் வளர்ச்சிக்குக் கிறித்தவரின் பங்களிப்பு’, ‘அரசியல் வேர்களைத் தேடி’, ‘தொடக்கக் காலப் போராட்டங்களில்’, ‘தமிழகத் தலைவர்களில் சிலர்’, ‘பிற தளங்களில்; எழுந்த சிக்கல்களும் தேவைப்படும் தெளிவுகளும்’ என்ற பொருண்மைகளில் கருத்துகளை அமைத்துக்கொண்டு இந்நூல் ஆராய்கிறது.
குறிப்பாக, மதத்தால் கிறித்தவனாக இருப்பினும், பிறப்பால் இந்தியன் என்ற உணர்வு மேலோங்கவே கிறித்தவர்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதைத் தெளிவுபடுத்துகிறது. அடிமைத்தனத்தை எதிர்ப்பது கிறித்தவ நீதிகளில் ஒன்று. அத்தகைய சிந்தனையை நீதி, அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற வடிவில் உள்வாங்கியதாலேயே ஆங்கிலேயரின் அடிமைத்துவத்திற்கு எதிராகவும் அவர்கள் இந்திய நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கலகக் குரலையும் எழுப்ப நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி, இந்திய தேச விடுதலை உணர்வு கிறித்தவர்களுக்கு இந்துக்களாலோ மற்றவர்களாலோ உருவாகவில்லை, மாறாகக் கிறித்தவமே உருவாக்கியது என்ற கருத்தியலையும் இந்நூல் மறைமுகமாகப் புலப்படுத்துகிறது. கலகக் குரலுக்கும் உரிமைப் போராட்டத்திற்கும் எப்பொழுதும் முன்மாதிரியாய்த் திகழும் தென் இந்தியாவிலேயே இவர்களின் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் (பிண்டோ புரட்சி, 1787, கோவா) உருவானதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.
கிறித்தவர்களின் விடுதலை உணர்வு அவர்களுக்குள் போராட்டமாக வடிவம்பெற்ற பிறகு, ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், ஆகஸ்டுப் புரட்சி போன்ற போராட்டங்களிலும் அவர்களை அது ஈடுபடத் தூண்டியுள்ளது. மேலும், இந்திய தேசியப் படையில் பங்குபெறவும் வழி செய்துள்ளது. பெரும்பான்மையான கிறித்தவர்கள் அகிம்சை வழியிலான போராட்டத்தை விரும்பியுள்ளனர். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் மிதவாதக் கொள்கையைப் பின்பற்றியிருக்கிறார்கள். தியாகி பெஞ்சமின், ஆனந்தம் போன்ற ஒருசிலர் தீவிரவாதக் கொள்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அகிம்சை வழியின் போராட்டக் கொள்கையால் காந்தி தலைமையின் கீழ் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து போராடியிருக்கிறார்கள். கிறித்தவ நிறுவனங்கள் வழியாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நிறுவனங்கள் இந்தியாவின் அரசியல் சாசன அமைப்பிலும் அதன் வழியாக மக்களாட்சித் தத்துவங்களை நிலைநிறுத்துவதிலும் கணிசமாகப் பங்காற்றியிருக்கின்றன.
ஆங்கிலேயரிடமிருந்து பெறப்படும் விடுதலை மட்டுமே தேச விடுதலையன்று, மாறாக மக்கள், சமூகம் சார்ந்த ஒடுக்குமுறையிலிருந்தும் அது விடுதலை பெற வேண்டும். அதுவே, முழுமையான விடுதலை என்ற உணர்வினால் கிறித்தவர்கள் சுதந்திரப் போராட்டம் மட்டுமன்றிப் பிற தளங்களிலும் உரிமைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சாதியத் தீண்டாமைக்கு எதிராக நிகழ்ந்த வைக்கம் போராட்டம், தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டம், பிரன்மலைக் கள்ளர்களின் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து ஜார்ஜ் ஜோசப் நடத்திய போராட்டங்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். தலித் கிறித்தவர்களும் தேச விடுதலைக்கான பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதை இந்நூல் விவரிக்கிறது. மேலும், சுதந்திரப் போராட்டத்தில் கிறித்தவர்களின் வரலாறும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்ற கருத்துருவாக்கத்திற்கு வலுவான சான்றாதாரங்களாகத் திகழும் தியாகிகளின் படங்கள், கடிதங்கள், இதழில் வெளிவந்த செய்திகள், மாநாட்டுக் குறிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளது. இதன் மூலம் ஏராளமான அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.
இந்நூல், குறிப்பாகக் கிறித்துவத் தமிழர்களின் விடுதலைப் பங்களிப்பைப் பெரும்பான்மையாக எடுத்தியம்புகிறது. ஆண்/ பெண் என்ற பாரபட்சம் பாராமல் கிறித்தவ அருட்தந்தைகளும் அருட் சகோதரிகளும் மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்து விடுதலைக்கு வித்திட்டனர். இந்திய விடுதலையானது இந்துக்களால் மட்டும் விளைந்ததன்று, அதில் “இம் மண்ணின் மக்களாகிய கிறித்தவர்களின் பங்களிப்பு மற்ற சமூகத்தைப் போலக் கணிசமானது; மகத்தானது; விலை மதிப்பற்றது. மதம், சாதி, மொழி, இனம் முதலிய வேறுபாட்டைக் கடந்து கிறித்தவர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த இந்திய மக்களாலும் தேச விடுதலை கிடைக்கப்பெற்றதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.
மின்னஞ்சல்: balrajnu@gmail.com