காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
கட்டுரை
எத்திராஜ் அகிலன்
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
காலச்சுவடு அலுவலகத்தில் சுகுமாரன், அ.கா. பெருமாள், எத்திராஜ் அகிலன், தி.அ. ஸ்ரீனிவாஸன், எம்.எஸ்
ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 36 ஆண்டுக்கால ஆசிரியப்பணியை நிறைவுசெய்து 2012ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வுபெற்ற பிறகு, மேற்கொண்டு என்ன செய்வது, பொழுதை எப்படி பயனுறக் கழிப்பது என்ற சிந்தனை என்னிடம் மேலோங்கியிருந்தது. ஆசிரியப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள ஓரிரு சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. அந்த ஆண்டின் பிற்பகுதியில் நண்பர் ஆர். சிவகுமாரின் மகளுடைய திருமண வைபவத்தில் நீண்ட நாளைய நண்பர் கவிஞர் சுகுமாரனைச் சந்திக்க நேர்ந்தது. எவ்வளவோ ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நேர்ந்த சந்திப்பு அது. என்றாலும் சுகுமாரனிடம் நட்புணர்வு மாறியிருக்கவில்லை. அவர் அப்பொழுது காலச்சுவடு பதிப்பகத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தார். நண்பர் தேவிபாரதி காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார்.
நான் பணிநிறைவுசெய்து ஓய்வாக இருப்பதை அறிந்தவுடன், காலச்சுவடு இதழுக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தரலாமே என்று சுகுமாரன் யோசனை கூறினார். மொழிபெயர்ப்புப் பணியில் எனக்கு அப்படியொன்றும் பெரிதாய் அனுபவமில்லையே என்று தயங்கியபோது, கவிஞர் பிரம்மராஜனின் ‘மீட்சி புக்ஸ்’க்காக நான் எப்போதோ செய்திருந்த ஓரிரு சிறுமொழிபெயர்ப்புகளை நினைவுகூர்ந்து உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் சுகுமாரன். அதே சூட்டோடு தேவிபாரதியிடமும் பேசி நோம் சோம்ஸ்கியின் நேர்காணல் ஒன்றையும் மொழிபெயர்த்துத் தர அனுப்பிவைத்தார்.
காலச்சுவடின் நூறாவது இதழைக் கோவையில் ஏதோ ஒரு நூல் நிலையத்தில் பார்த்து வாங்கியிருந்தேன். அதுதான் வாசகனாக எனக்கும் காலச்சுவடுக்குமான முதல் உறவு. அந்த இதழ் தயாரிக்கப்பட்டிருந்த நேர்த்தியும் அதன் உள்ளடக்கமும் என்னை மிகவும் கவர்ந்தன. பிறகு 2007 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு அரங்கில் ஆண்டுச் சந்தா செலுத்தினேன். அப்போதிருந்து இதழின் அபிமான வாசகனாக ஆனேன். பிறகு ஓரிரு ஆண்டுகள் கழித்து அது அறிவித்த வைப்பு நிதித் திட்டத்தில் இணைந்து பத்திரிகை தொடர்ந்து இல்லத்திற்கு வருமாறு ஏற்பாடு செய்துகொண்டேன்.
1970களில் நான் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த காலத்தில், சிற்றிலக்கிய இதழ்களை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் என்னுடன் பயின்ற நண்பர்கள் பிரம்மராஜனும் ஆர். சிவகுமாரும். அவர்கள் மூலமாகவே எனக்கு மாணிக்கம் ராஜாராமும் ‘அஃக்’ பரந்தாமனும் அறிமுகம் ஆனார்கள். இவர்களோடு சேர்ந்து சேலம் வுட்லண்ட்ஸ் ஹோட்டல் புல்விரிப்பில் நாள்தோறும் இலக்கியம் குறித்துப் பேசிக்கொண்டிருப்போம். இந்த இலக்கிய உரையாடல்கள் எண்பதுகளின் தொடக்கம்வரை நீடித்தன.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்திய நூல் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’. அதன்மூலமாகவே சுந்தர ராமசாமியின் பெயர் எனக்கு அறிமுகம் ஆனது. அந்த நாவலின் புதுமை எங்களுக்குள் மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பிறகுதான் அவருடைய ‘புளிய மரத்தின் கதை’ எனக்குப் படிக்கக் கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்துக் ‘க்ரியா’ பதிப்பகம் வெளியிட்ட அவருடைய சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படித்தேன். இவை போக, நண்பர்கள் பிரம்மராஜன், ஆர். சிவகுமார் ஆகியோர் மூலம் சுந்தர ராமசாமி எனும் இலக்கிய ஆளுமையை ஓரளவிற்கு அறிந்துகொண்டிருந்தேன். சுந்தர ராமசாமியை நிறுவனராகவும் அவருடைய மைந்தன் கண்ணன் சுந்தரத்தைப் பதிப்பாளர்-ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் சஞ்சிகை என்பதால் காலச்சுவடின்மீது எடுத்த எடுப்பில் எனக்கு அபிமானம் ஏற்பட்டிருந்தது. பிறகு அதன் தீவிர வாசகனாக மாறியபின் அந்த அபிமானம் மேலும் கூடியது.
காலச்சுவடில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் அதன் தலையங்கம். தீர்க்கமான சிந்தனையுடன் தீட்டப்பட்டிருக்கும் தலையங்கங்கள் நம் முன் இருக்கும் சமுதாயப் பிரச்சினைகளை வேறுவேறு கோணங்களில் பார்க்க எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஓரிரு சந்தர்ப்பங்களில் தலையங்கத்தின் மையவாதத்தோடு உடன்படாமல் போயிருந்தாலும், அதன் தரப்பு தர்க்க நியாயங்களை மதித்தே வந்திருக்கிறேன். அடுத்து நான் விரும்பிப் படிப்பது கவிதைப் பக்கங்களை. எவ்வளவோ நல்ல புதிய கவிஞர்களை அது அறிமுகம் செய்து ஊக்குவித்திருக்கிறது. அதில் வெளியாகும் சிறுகதைகளும் தரமானவையாகவே இருக்கும். போக, இதழில் அவ்வப்போது வெளியாகும் சிறப்புப் பகுதிகளும் எனக்கு உவப்பானவை. இவ்வளவு ஆண்டுகாலப் பயணத்தில் காலச்சுவடு தன்னை வெறும் பத்திரிகையாக அல்லாமல் ஒரு மகத்துவமான இயக்கமாகவே நிறுவிக்கொண்டுள்ளது. அதன் ஆணிவேராகக் கண்ணனும் நிறுவனர் அமரர் சுந்தர ராமசாமியும் இருக்க, சல்லிவேர்களாக எண்ணற்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட என் அபிமான இதழில் பங்களிக்க முடியும் என்று நான் கனவிலும் எண்ணியதில்லை. நோம் சோம்ஸ்கியின் நேர்காணல் மொழிபெயர்ப்புப் பிரதியை நான் அனுப்பிவைத்தவுடன், கண்ணன் அதை மேற்பார்வைக்காக எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துக்கு மின்னஞ்சல் செய்திருந்தார். முத்துலிங்கம்தான் அந்த நேர்காணலின் ஆங்கிலப் பிரதியையும் அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான உரிமையையும் பெற்றுத் தந்திருந்தார் என்று யூகிக்கிறேன். என்னுடைய மொழிபெயர்ப்புப் பிரதியில் முத்துலிங்கம் ஒருசில மாற்றங்களைப் பரிந்துரைத்திருந்தார். அவற்றை ஏற்றுப் பிரதியைச் செம்மைப்படுத்தினேன். காலச்சுவடின் 2013 ஆம் ஆண்டு மார்ச் இதழில் அந்த மொழிபெயர்ப்பை அச்சில் கண்ட நாளில் கனவொன்று மெய்ப்பட்ட நிலையில்தான் இருந்தேன் என்றால் அதில் சற்றும் மிகையில்லை. சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பத் தன்னாதிக்கச் சக்திகளும் அரசியல் தன்னாதிக்கச் சக்திகளும் எனும் தலைப்பில் அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜெகன் கண்டிருந்த அந்த நேர்காணல் மொழிபெயர்ப்புக்குச் சன்மானமாக ஆயிரம் ரூபாய்க்கான காசோலை எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவும் எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஐந்தாறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் காலச்சுவடில் வெளியாயின. அவற்றுள் ‘மருத்துவ ஊர்தி ஓட்டுநர்’, ‘புரட்சியாளன் மனைவி’ ஆகிய இரு கட்டுரைகளும் காலச்சுவடு வெளியீடான ஃபிரான்ஸிஸ் ஹாரிஸனின் ‘ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ எனும் நூலில் இடம்பெற்றன. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக உரிய சன்மானம் கிடைத்து வந்தது.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிப்பாளர் கண்ணன் தொலைபேசியில் என்னை அழைத்து நாவல் ஒன்றை மொழிபெயர்த்துத் தர இயலுமா என்று கேட்டார். நான் இதழுக்குப் பங்களித்திருந்த ஒரு சில கட்டுரைகளின் அடிப்படையில் இப்படியொரு பெரிய வாய்ப்பு என்னைத் தேடிவருவதும் நம்ப முடியாத விஷயமாகவே இருந்தது. உடனடியாக என்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தேன். இரண்டொரு நாளில் ஃபின்லாந்து நாவலாசிரியர் ஃப்ரான்ஸ் எமில் சிலன்பாவின் Meek Heritage எனும் நாவலைக் கண்ணன் எனக்கு அனுப்பிவைத்தார். அதைப் படித்துப் பார்த்துவிட்டு மொழிபெயர்ப்பைத் தொடங்கும் நேரத்தில் அதற்குப் பதிலாக வேறொரு நாவலை மொழிபெயர்த்துத் தர இயலுமா என்று கண்ணன் கோரிக்கை வைத்தார். சற்றுத் தயக்கத்துடன் நானும் சம்மதித்தேன். தொடர்ந்து அவர் எனக்கு அனுப்பிவைத்த நாவல் அஹ்மத் ஹம்தி தன்பினாரின் ‘The Time Regulation Institute.’ முந்தைய நாவலைக் காட்டிலும் இது வாசிக்கச் சற்றுக் கடினமானதாக இருந்தது; என்றாலும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதை மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.
சிறுசிறு கட்டுரைகளை மட்டுமே மொழிபெயர்த்துப் பார்த்திருந்த எனக்கு ஒரு பெரிய நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியவுடன்தான் அதிலுள்ள சிக்கல்கள் புலப்படத் தொடங்கின. ஆரம்பத்தில் என்னால் வேகமாக மொழிபெயர்க்க முடியவில்லை. முதல் அத்தியாயத்தை மொழிபெயர்க்கக் கிட்டத்தட்ட ஒருமாத காலம் எடுத்துக்கொண்டேன். அதற்குள் நண்பர் ஆர். சிவகுமாரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பல சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டேன். அடுத்த மாதத்தில் மேலும் இரண்டு அத்தியாயங்களையும், அதற்கடுத்த மாதத்தில் மேலும் மூன்று அத்தியாயங்களையும் மொழிபெயர்த்திருந்தேன். ஆகஸ்ட் மாத இறுதியில் தொடர்புகொண்ட கண்ணன் பணியின் வேகத்தைக் கூட்ட முடியுமா என்று கேட்டார். அந்த ஆண்டின் இறுதிக்குள் நாவலை முடித்து வெளியிட வேண்டிய காலக்கெடு இருப்பதாகக் கூறினார். நானும் செப்டம்பர் மாதத்தில் இயன்ற அளவு பணியின் வேகத்தைக் கூட்டினேன். ஆனால் அந்த மாத இறுதியில் பத்து அத்தியாயங்களையே முடிக்க முடிந்திருந்தது.
இந்தக் கட்டத்தில் என்னுடைய மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் நிகழ்வதாக முடிவாகியிருந்தது. திருமண வேலைகளுக்கு நடுவே மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் தோல்வியை ஏற்றுப் பணியை வேறு யாரிடமாவது ஒப்படைக்கக் கோரி கண்ணனிடம் சரண் அடைந்தேன். இது அவருக்கு நிச்சயம் பெரும் மன வருத்தத்தையும் மன உலைச்சலையும் ஏற்படுத்தியிருக்கும். என்றாலும் அவர் பெருந்தன்மையோடு என்னுடைய நிலையைப் புரிந்துகொண்டு என்னை அந்தப் பணியிலிருந்து விடுவிப்பதாகக் கூறினார். ஒரு பெரும் படைப்பை மொழிபெயர்க்கக் கிடைத்த முதல் வாய்ப்பே கை நழுவிப் போனதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்பு இனி கிடைப்பது அரிது என்றும் தோன்றியது.
ஆனால் என் மகளின் திருமணம் முடிந்த கையோடு 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கண்ணன் மீண்டும் என்னைத் தொடர்புகொண்டார். தன்பினாரின் நாவலுக்கு மேலும் கொஞ்சம் கால நீட்டிப்புப் பெற்றிருப்பதாகவும் ஜூன் மாதத்திற்குள் முடித்துத் தர முடியுமா என்றும் கேட்டார். மீண்டும் தேடிவரும் வாய்ப்பை நழுவவிடக் கூடாதென்று அவருடைய காலக்கெடுவுக்குச் சம்மதித்துப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிறகு வந்த நான்கு மாதங்களில் கடும் உழைப்பைக் கொடுத்து நாவலை முடித்தேன். அதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பிரதியை மெய்ப்புப் பார்க்க நாகர்கோவில் சென்று மூன்று நாட்கள் தங்கி அந்தப் பணியையும் முடித்துக் கொடுத்தேன். ஆகஸ்ட் மாத இறுதியில் மதுரை புத்தகக் காட்சியை ஒட்டி ‘நேர நெறிமுறை நிலையம்’ வெளியானபோது நான் அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது. அதிலும், நாவலின் வெளியீட்டு விழாவில் நண்பர் சுகுமாரனே நாவலை அறிமுகப்படுத்தி உரையாற்றியது எனக்கு மகுடம் சூட்டியதைப்போல் இருந்தது. இந்த நாவலுக்கான மொழிபெயர்ப்பாளர் ஊதியமாக முன்கூட்டிய வருமானவரிக் கழிவு போக சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் என் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. எழுத்தாளர்களுக்கான மதிப்பைக் காலச்சுவடு எந்த அளவிற்குப் பேணிக் காக்கிறது என்பதைச் சுட்டவே பணப்பயன் பற்றிய விவரங்கள்.
‘நேர நெறிமுறை நிலையம்’ நாவலைத் தொடர்ந்து ஐஸ்லாந்து நாட்டு நாவலாசிரியர் ஹால்டார் லேக்ஸ்நஸின் ‘மீனும் பண் பாடும்’ நாவலையும் துருக்கி நாட்டு நாவலாசிரியர் ஓரான் பாமுக்கின் ‘கருப்புப் புத்தக’த்தையும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். செக் நாட்டு நாவலாசிரியர் மைக்கேல் அய்வாஸின் ‘அந்த மற்றொரு நகரம்’ நாவல் விரைவில் வெளியாக இருக்கிறது. கருப்புப் புத்தகம் நாவலை விரைந்து மொழிபெயர்க்க ஏதுவாக பெங்களூருவில் இயங்கிவரும் சங்கம் ஹவுஸ் நிர்வகிக்கும் எழுத்தாளர் உறைவிடத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்கு நாட்கள் தங்கும் வாய்ப்பைக் கண்ணன் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தியாவின் வேறு வேறு பகுதிகளிலும், அயல் நாடுகளிலிருந்தும் பல்வேறு எழுத்தாளர்கள் வந்து தங்கிச்செல்லும் படைப்பாளிகள் முகாம் இது. அங்கே தங்கியிருந்த அனுபவம் படைப்பாற்றல் பற்றிய என் பார்வையை விசாலமாக்கியது.
என்னுடைய முதல் நாவலில் நான் கைக்கொண்டிருந்த தமிழ் மொழிநடை மெல்லமெல்லப் பண்பட்டுச் சீரடைந்து வருவதற்கு காலச்சுவடின் மெய்ப்புப் பார்க்கும் அணி மேற்கொள்ளும் அதீத சிரத்தையே காரணம். நேர நெறிமுறை நிலையம் நாவலின் மெய்ப்புப் பணியின்போது இந்த அணியானது அமரர் எம்.எஸ்.ஸின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்தது. அவரோடு உடன் இருந்து செயல்பட்டது ஓர் அலாதியான அனுபவம். அவருக்கிருந்த ஆழமான மொழியறிவும், நுட்பமான பிழை நீக்கும் சாதுர்யமும் என்னை மலைக்கவைத்தன. அதேபோல், மொழிபெயர்ப்புப் பிரதியை ஆங்கிலப் பிரதியுடன் வைத்து வரிக்குவரி, வார்த்தைக்குவார்த்தை ஒப்புநோக்கி அயராத ஈடுபாட்டுடன் சரிசெய்து கொடுத்த, இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர் தி.அ. ஸ்ரீனிவாஸனின் பங்களிப்பும் என்னை என்றும் நன்றியோடு வியந்து பார்க்கவைக்கும் ஒன்று. என்னுடைய மொழிநடையில் வாக்கிய அமைதி நாளுக்குநாள் கூடிவருவதற்கு ஸ்ரீனிவாஸனின் வழிகாட்டுதலே காரணம். அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களின் பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்லும்படியானது. மொழிபெயர்ப்புப் பிரதிகளை மிகுந்த கவனத்துடன் தட்டச்சு செய்து, செய்யும்போதே, தென்படும் ஓரிரு பிழைகளையும் மெய்ப்புப் பார்க்கும் அணியின் கவனத்திற்குக் கொண்டுவந்து அவற்றைச் சீர் செய்யும் நேர்த்தியும் புத்தக வெளியீட்டாளர்களுக்கு ஒரு கொடுப்பினையே. என்னுடைய பணியில் மிகவும் ஒத்தாசையாக இருப்பவர்கள் மணிகண்டனும் கலாவும். இவர்களுக்கு என் நன்றி என்றுமே உண்டு.
ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கிறார்கள் எனும் கருத்தோடு நான் உடன்படுவதில்லை. மொழிபெயர்ப்பைச் சற்றே எளிமையான நடையில் கொடுத்தால், அது பரவலான வாசக வட்டத்தைச் சென்றடையும் என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கை சார்ந்தே என்னுடைய மொழிபெயர்ப்புப் பாணி அமைந்திருக்கும். அதே சமயம், மூலப் படைப்பின் ஆன்மாவுக்குக் கூடியமட்டில் குந்தகம் நேராத வண்ணம் அக்கறையோடு செயல்படுவேன். எனக்கான இந்த நியதிக்குள் காலச்சுவடு ஒருபோதும் தலையிட்டதில்லை. கட்டுப்பாடுகள் எதையும் விதித்ததில்லை. இந்தச் சுதந்திரமே பதிப்பகத்துடன் நான் கொண்டிருக்கும் உறவை வலுவானதாக ஆக்கியிருக்கிறது.
மின்னஞ்சல்: akilraaj@gmail.com