ஓய்வறியா மொழிப்பறவை
அஞ்சலி: ஹெச். பாலசுப்பிரமணியன் (1932 - 2021)
பென்னேசன்
ஓய்வறியா மொழிப்பறவை
படஉதவி: குமரி நீலகாந்தன்
இடுங்கிச் சுருங்கிய சிறிய கண்கள். ரொம்ப அருகில் நின்று கேட்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மிகவும் மெல்லிய தொனி. சத்தம் வெளியில் கேட்காத வண்ணம் அமைந்த குரல். எப்போதும் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருப்பது போன்ற முகஅமைப்பு. சுமார் நான்கு அடி மட்டுமே உயரம். மிகவும் கெச்சலான தேகம். இந்த தேகத்திலா வாழ்நாள் முழுதும் இத்தனை கடுமையான உழைப்பு என்று யாரையும் மலைக்க வைக்கும் சுறுசுறுப்பு. இவர்தான் தமிழில் ஏறத்தாழ அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான மொழிபெயர்ப்பாளர் ஹெச். பாலசுப்பிரமணியம். டெல்லியில் என்னைப் போன்ற பல நண்பர்களுக்கு எப்போதும் பாலா சார்.
இந்தியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து இந்திக்கும் ஏராளமான நூல்களை மொழியாக்கம் செய்தவர்.
தன்னுடைய படைப்புக்கள் இந்தியில் வரவேண்டும் என்று நினைக்கும் எந்த தமிழ்ப் படைப்பாளியும் தேடும் முதல் மனிதராக அவர் இருந்தார். அதே அளவில் இந்தியின் பல முன்னணி படைப்பாளிகளையும் தன்னுடைய நேர்த்தியான மொழிபெயர்ப்பு வழியாக தமிழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அகில இந்திய வானொலியில் திருக்குறள், தொல்காப்பியம், பாரதி படைப்புகள் ஆகியவை குறித்து ஏராளமான அளவில் இந்தியிலும் தமிழிலும் உரையாற்றி இருக்கிறார். புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலியின் தேசிய அலைவரிசையிலும் வெளிநாட்டு ஒலிபரப்பிலும் பெருமளவில் உரையாற்றி இருக்கிறார். இந்திய அளவி்ல் பல்வேறு அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும் ஆலோசகராகவும் கூடுதல் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றியவர். வடக்கில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் இடையில் மிகவும் அறியப்பட்ட தமிழராகவும் திகழ்ந்தார்.
தமிழர்கள் பேசும் அல்லது எழுதும் இந்தியை வடக்கில் வெகுவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பின்னால் திரும்பிக் கள்ளத்தனமாக இளிப்பார்கள். ஆனால் ஹெச். பாலசுப்ரமணியத்தின் இந்தியை மட்டும் சிலாகித்துப் பாராட்டுவார்கள். டெல்லியிலும் வட இந்தியாவின் பலபகுதிகளிலும் மிகவும் முக்கியமான படைப்பாளிகளால் ஆராதிக்கப்பட்டவர் அவர்.
தில்லி தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஏற்பாட்டில் இலவசமாக தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை எவ்வித வேறுபாடும் இன்றிப் பலருக்கும் கற்பித்து இருக்கிறார். கொரோனா காலகட்டத்திலும் இணையம் வழியாக தமிழ், இந்தி, பாடங்களோடு திருக்குறள் பாடங்களை எடுத்து வந்தார். இதயமும் எழுத்தும் எப்போதும் இலக்கியத்திலேயே தோய்ந்து வாழ்ந்த மனிதர் என்றே கூறலாம்.
டெல்லியில் நான் சந்திக்க நேர்ந்த சில வட இந்திய அதிகாரிகள் இவரை ‘எங்கள் குருஜி’ என்பார்கள். அவர்களில் பலருக்கு இந்தி, சமஸ்கிருத பாடங்களை நடத்தியிருக்கிறார் பாலா சார்.
தேசிய இந்தி இயக்ககத்தில் மிகவும் உயர் பதவி வகித்து ஓய்வுபெற்ற பிறகு முன்பைவிட மிகவும் ராட்சசத்தனமாக மொழிபெயர்ப்பில் இறங்கியிருக்கிறார். தன்னுடைய 89 வயதிலும் தளர்வின்றி தில்லி நகரம் முழுவதும் பேருந்திலேயே பயணித்து நண்பர்களைச் சந்தித்து வந்தார்.
மொழிபெயர்ப்பில் ஏதேனும் சந்தேகங்கள் கேட்டால் “நீங்க நாளைக்கு எத்தனை மணிக்குக் கிடைப்பீங்க?” என்று கேட்பார். ஏதோ கேட்கிறார் என்று நினைத்து நாம் ஒரு நேரம் சொன்னால் அந்த நேரத்தில் சரியாக வீட்டில் மணியடிக்கும். தன் வேலை மற்றவர்கள் வேலை என்றெல்லாம் அவர் பார்த்தது கிடையாது. பரபரவென்று ஒரு பேருந்து அல்லது மெட்ரோ பிடித்தும் மீதித் தூரத்தை நடந்தே வந்தும் சந்தித்துவிட்டுச் செல்லும் எளிமை நிறைந்த மனிதராக இருந்தார்.
வடக்கு வாசல் அலுவலகம் கரோல் பாக் பகுதியில் மிக உயரமான படிகள் அமைந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்தது. தில்லியின் கிழக்குப் பகுதியில் அமைந்த மயூர்விஹார் வீட்டில் இருந்து கரோல்பாக்குக்கு பேருந்திலேயே பயணித்துச் சோர்வு எதுவும் இன்றிப் படிகள் ஏறி நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் செல்வார். திடீரென்று வந்து நிற்பார். “ஒரு புத்தக மதிப்புரை எழுதி ரொம்ப நாளாக வைத்திருந்தேன். உங்களை பார்த்துக் கொடுக்கணும்னு நினைச்சேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்வார். “இந்த வெய்யிலில் எதுக்கு இப்படி அலையணும் சார். வேறே யார்கிட்டேயாவது அனுப்பி இருக்கலாமே என்றால், “சுத்திக்கிட்டே இருக்கணும். வயசாச்சுன்னு படுத்துட்டா எல்லாம் முடிஞ்சது. ஒண்ணோ ரெண்டோ நாள் படுத்தா எல்லாம் அனுசரணையாக பார்ப்பாங்க. நண்பர்கள் எல்லாம் விசாரிப்பாங்க. அதுக்கப்புறம் படுத்துக்கிட்டே இருந்தா ஒரு துணியை மேலே போர்த்திவிட்டுப் போயிடுவாங்க. அப்படியே கிடக்க வேண்டியதுதான். சுத்திக்கிட்டே இருந்தாதான் உடலும் சுறுசுறுப்பா இயங்கிக்கிட்டு இருக்கும்” என்று அவருக்கே உரிய சிரிப்புடன் கூறுவார்.
ஞானபீடத்திற்காக அகிலனின் படைப்பு, கி.ரா.வின் கரிசல் காட்டுக் கடுதாசி, ஜெயகாந்தனின் எங்கே போகிறோம், ஜெயகாந்தன் கதைகள், தோப்பில் முகமது மீரானின் துறைமுகம், சாய்வு நாற்காலி, அகிலனின் எங்கே போகிறோம், நீலபத்மநாபனின் தலைமுறைகள், புதுமைப்பித்தன் வரலாறு, வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கு. சின்னப்ப பாரதியின் ‘சர்க்கரை’. உதயணன், ஜீவ குமாரன், கலாநிதி ஜீவ குமாரன் ஆகிய இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், ஸத்குரு ஜக்கி வாசுதேவின் ஆன்மீகம், புதுமைப்பித்தன் படைப்பு, மலேசிய நாவலாசிரியர் பீர்முகம்மது படைப்புகள், வேதாத்திரி மகரிஷியின் ஆன்மீகம், குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15, டாக்டர் ஆர். சுப்ரமணியம் அவர்களின் மருத்துவ நூல் என்று பல்வேறு நூல்களைத் தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
மலையாளத்திலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்குமாகக் குறிப்பிடத்தக்க அளவு மொழி பெயர்ப்புக்களையும் அளித்திருக்கிறார். 2014 ல் இவரது வியத்தகு மண்டல மொழி பெயர்ப்புப் பணிக்காகக் குடியரசுத் தலைவர் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, பல்வேறு அரசுத்துறை விருதுகள், உத்தரபிரதேச அரசு உட்பட்ட மாநில அரசு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர உலகின் பல்வேறு நகரங்களிலுள்ள இலக்கிய அமைப்புகள் விருதுகள் வழங்கி அவரைச் சிறப்பித்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த அவருடைய சகோதரர்கள் பரமேஸ்வரன், பத்மநாபன் ஆகிய இருவரும் மலையாளத்திலிருந்து இந்தி, தமிழ் ஆகியவற்றில் பல்வேறு மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள். துணைவியார் மரணம் அடைந்த பிறகு மிகவும் மனம் சோர்ந்திருந்தார். சிறிதுகாலத்துக்குப் பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு அசுரத்தனமாக மொழிபெயர்ப்புப் பணிகளில் வெறிகொண்டு மீண்டும் இறங்கினார்.
இந்தியிலிருந்து பணீஷ்வர்நாத் ரேணு கதைகள், கோபிசந்த் நாரங்கின் ‘அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல்’ என்னும் நூல், சந்திரசேகர ரத்தின் ஒரிய நாவல் ‘யந்திரவாகனன்’, அம்ரித்லால் நாகர் ஆகியோரின் படைப்புக்களைத் தமிழிலும் பேராசிரியர் ஓம்சேரியின் ‘தேவருடெ ஆன’ என்னும் மலையாள நாடகத்தை ‘மந்திர் கா ஹாத்தி’ என்று இந்தியிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.
‘கால் பைரவ் ஜாக் உடா ஹை’ என்ற இவருடைய இந்தி கவிதை தொகுப்பு வடக்கில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.
தமிழ், இந்தி, மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பெரும் புலமை கொண்டவர், சாகித்ய அகாதமி மொழியாக்க விருது பெற்றவர். உத்தர பிரதேச அரசின் ஸெளஹார்த ஸம்மான், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு இலக்கியப் பரிசு, மொழிபெயர்ப்புக்கான குடியரசுத்தலைவர் விருது என்று பல்வேறு விருதுகளையும் பெற்றார்.
2006 ஜனவரி வடக்கு வாசல் இதழில் வெளிவந்த அவருடைய நேர்காணலில் பாலா சாரின் மொழிபெயர்ப்பு குறித்த மிகவும் கவிதைநயம் பொதிந்த வரிகளுடன் இந்த அஞ்சலியை முடித்துக் கொள்வது சரியாக இருக்கும்.
மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன், “நான் என் கவிதையைத் தாய்மொழியிலேயே மொழிபெயர்ப்பதாகக் கனவு கண்டேன்” என்று ஒரு கவிதையில் ஒரு கூறுகிறார். மனித சமூகங்களிடையே நட்புறவை வளர்ப்பதும் கலைச்செல்வங்களைத் திசைக்குத் திசை எட்டச் செய்வதும் மொழியாக்கம் என்னும் பறவைதான். இப்பறவை மட்டும் இல்லாது இருந்தால் குறளும் கீதையும் சாகுந்தலமும் கீதாஞ்சலியும் கண்டங்கள்தோறும் எட்டியிருக்குமா? மொழியாக்கமானது இருமொழிகளை இணைக்கும் பாலம் மட்டுமல்ல- இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதமும் கூட.”
நம் மொழியின் படைப்புக்களை இந்திக்கும் இந்திப் படைப்புக்களைத் தமிழுக்கும் கொண்டுவந்து சேர்த்த ஓய்வறியாப் பறவை தன் சிறகடிப்பை நிறுத்திக்கொண்டு தன்னுடைய கூடு அடைந்திருக்கிறது.
மின்னஞ்சல்: kpenneswaran@gmail.com