யாருமே பொறுப்பில்லையா?
சேலம், பெரியார் பல்கலைக்கழகம் தற்போது நடத்திய பருவத்தேர்வில் வரலாற்றுத் துறை முதுகலை முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்தில் சாதி குறித்துக் கேட்டிருந்த வினா விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்பது கேள்வி. இது கொள்குறி வினா. நான்கு விடைகளாக ‘மகர், நாடார், ஈழவர், ஹரிஜன்’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ‘தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் (1880 முதல் 1947வரை)’ என்னும் பாடத்திற்கான வினாத்தாள் அது. அப்பாடத்திட்ட அலகுகள் மேலோட்டமான தலைப்புகளைக் கொண்டிருக்கின்றன. முதுகலைப் படிப்புக்குக் குறிப்பிட்ட பாடநூல் என்று எதுவும் இல்லை. கருவி நூல்களாகப் பல பட்டியலிடப் பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்புக்குப் பல நூல்களைப் படித்துக் குறிப்பெடுக்க வேண்டும் என்பது நோக்கம். அப்படியிருக்க இந்த வினா எந்தத் தலைப்புக்கானது, எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
விவாதத்திற்கு உள்ளான வினாவைக் கேட்ட பேராசிரியர் எப்படிப்பட்டவராக இருப்பார்? சாதியம் ஆழப் பதிந்த மனம் கொண்ட ஒருவரால்தான் இத்தகைய வினாவைக் கேட்க முடியும். இருபதாம் நூற்றாண்டு முழுக்கவும் விடுதலைப் போராட்டத்தினூடாகச் சாதி ஒழிப்புப் போராட்டமும் இணையாக நடந்து வந்திருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் நடந்திருப்பது சாதி ஒழிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பேரெழுச்சி. இவற்றைப் பற்றியெல்லாம் எந்த உணர்வுமற்ற பேராசிரியர், ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேள்வி கேட்கிறார். அவருக்கும் வரலாற்று உணர்வுக்கும் தொடர்பிருக்க வாய்ப்பே இல்லை. அவரது கல்வித் தகுதிகள் எவை? உண்மையில் வரலாற்றுப் பேராசிரியர்தானா அவர்?
வினாத்தாள் தயாரிப்புக்குப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யப் பல்கலைக்கழகம் எத்தகைய விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது? ஒரே கல்வித்தகுதி கொண்ட பல பேராசிரியர்களின் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது யார்? ஒரு வினாத்தாள் தயாரிப்புக்கு இவ்வளவு என்று பணம் தரப்படுகிறது. ஆகவே இப்பணியில் ஈடுபடப் பலர் முன்வருவர். இவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் எனப் பரிந்துரை அழுத்தங்கள் வரவும் வாய்ப்புண்டு. ஒரே வினாத்தாள்தான் தயாரிக்கப்படுமா? பல வினாக்கள் பெறப்பட்டு அவற்றிலிருந்து ஒரு வினாத்தாள் உருவாக்கப்படுமா? அதற்கெனக் குழுக்கள் இருக்கின்றனவா? வினாத்தாள் அச்சுக்குச் செல்லும் முன் அதன் தரத்தைப் பரிசீலிக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா? பல்கலைக்கழகத்தில் வினாத்தாளுக்கெனத் தெளிவான விதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பின் அவற்றைப் பல்கலைக்கழகம் தம் இணையதளத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
தற்போது விளக்கம் அளித்திருக்கும் பதிவாளர், ‘இந்தக் கேள்வி பாடத்திட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் இதே கேள்வி வினாத்தாளில் இடமும் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது’ என்று கூறியுள்ளார். ஒரு வினா பாடத்திட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை. எந்தத் தலைப்புக்கான வினாவாக இதைத் தேர்ந்துள்ளார் என அவ்வாசிரியரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டுகளில் இதே வினா இடம்பெற்றிருக்கிறது என்ற பதில் எப்படி சமாதானமாகும்? அப்படியானால் முந்திய ஆண்டுகளின் வினாத்தாள்களையும் கண்டு அவற்றைத் தயாரித்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் வேறொரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பதிவாளர் சொல்கிறார். தொடர்புடைய ஆசிரியரைக் காப்பாற்றுவதற்கு ஏன் இத்தனை முயற்சி? வினாத்தாள் தயாரித்தவர் அதற்குப் பொறுப்பேற்க இயலாதா? அப்படியானால் யார் பொறுப்பு? ‘வினாத்தாளை நாங்கள் படிக்க மாட்டோம். அது ரகசியம்’ என்றும் ‘தேர்வு நடத்துவதுதான் எங்கள் பொறுப்பு. வினாத்தாள் தயாரிப்பது எங்கள் வேலையல்ல’ என்றும் பல்கலைக்கழகம் சொல்கிறது.
இப்படியெல்லாம் சொல்வது பொறுப்பற்றதனம். பல்கலைக்கழகத்தின் பணிகள் எவை? பாடத்திட்டம் உருவாக்குவது பல்கலைக்கழகம். வினாத்தாள் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வது பல்கலைக்கழகம். தேர்வு நடத்துவது பல்கலைக்கழகம். தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல்கலைக்கழகம். சான்றிதழ்கள் வழங்குவது பல்கலைக்கழகம். ஆனால் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக் கழிப்பது எப்படி சரியாகும்? தேர்வாணையர், பதிவாளர், துணைவேந்தர் என எவரும் பொறுப்பேற்க முடியாது என்றால் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது? யாருமே பொறுப்பில்லை என்றால் வினாத்தாள் உருவாக்கம் அந்தரத்தில் நடைபெறுகிறதா?
பாடத்திட்டத்தில் பிரச்சினை என்றாலும் வினாத்தாளில் சிக்கல் என்றாலும் பல்கலைக்கழகமே பொறுப்பு. இப்படிப் பிரச்சினை வரும்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவு பலவீனமாகவா பல்கலைக்கழக விதிகள் இருக்கின்றன? பாடத்திட்ட அலகுகள், தலைப்புகள், வினாத்தாள் அனைத்தும் தரமற்றுக் காணப்படுகின்றன. பாடத்திட்டத்தில் ‘கிறித்தவ மிஷனரிகளின் நடவடிக்கைகள் - கிறித்தவ மத மாற்றத்திற்கு எதிர்வினைகள்’ என்னும் தலைப்புகள் உள்ளன. இவை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை எனத் தெரியவில்லை. வினாத்தாளின் மொழி, தரம் ஆகியவையும் மிக மோசம். முதுகலை மாணவர்களுக்கான வினாத்தாள் இத்தனை பலவீனமாக இருப்பது நம் உயர்கல்வித் தரமின்மையின் வெளிப்பாடு; அனைத்தும் அக்கறையற்ற செயல்பாடுகள்.
வினாத்தாள் தயாரித்த பேராசிரியர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வினாவைக் கேட்டிருப்பது குற்றச்செயலாகக் கருதத்தக்கது. அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இருக்கிறது. வேறொரு பல்கலைக்கழகத்தையோ கல்லூரியையோ சேர்ந்தவர் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும். அப்பேராசிரியர் யார் என்று பொதுச்சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். பாடத்திட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தல், வினாத்தாள் தயாரிக்கும் நடைமுறைகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் ஆகியவற்றைப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டும்.
இத்தகைய சிக்கல்கள் நேரும்போது அவற்றுக்கு முதலில் பல்கலைக்கழகம் பொறுப்பேற்க வேண்டும். தேர்வாணையரும் பதிவாளரும் பொதுவெளியில் பேசுபவை தர்க்கத்திற்குப் பொருந்தாமலும் அலட்சிய மனோபாவத்துடனும் உள்ளன. துணைவேந்தர் வாயே திறக்கவில்லை. பொறுப்பேற்க மறுக்கும் இப்போக்கு ஆரோக்கியமானதல்ல. உயர்கல்வித் துறை இவ்விஷயத்தில் தொடர்நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்.
கல்வித்துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் அப்போதைக்குச் சமாளிக்கும் தற்காலிக நடவடிக்கைகள், அறிக்கைகள் ஆகியவற்றோடு முடித்துவிட்டுக் கடக்கும் போக்குச் சமீபத்தில் மிகுந்திருக்கிறது. எல்லாவற்றையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் காண்பது அரசதிகாரத்தின் இயல்பாக மாறிக் கொண்டிருக்கிறது. போராடும் கட்சிகள், மாணவர் அமைப்புகள் இம்மாதிரியானவற்றில் தொடர்ச்சி தருவதில்லை. தம் இருப்பை வெளிப்படுத்தினால் போதும் என்னும் மனநிலை மிகுந்திருக்கிறது. ஏற்கெனவே பல நிலைகளில் சீர்கெட்டிருக்கும் கல்வித்துறை மேலும் மேலும் மோசமாகவே இவையெல்லாம் உதவும். ஆகவே கல்வித்துறையின் ஒவ்வோர் அங்கத்திலும் தலையிட்டுச் சீர்கேடுகளைக்களையும் தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதே எதிர்காலத்திற்கு நலம் பயக்கும்.