சாதி என்னும் அடைக்கும் தாழ்
தமிழ்ச் சமூகத்தில் இருமனிதர்களுக்கு இடையே உள்ள உறவுநிலையில் சாதி, மதம் ஆகியவற்றுக்கு முக்கியப் பங்குண்டு. உறவு எல்லைகளைத் தீர்மானிப்பவை சாதியும் மதமுமே. அவற்றைப் புறக்கணித்துவிட்டு உறவுநிலையின் பரிமாணத்தை ஆய்வு செய்வது முழுமையானதாக இராது. இத்தகைய ஆய்வு உறவுநிலை பற்றி மட்டுமல்ல, சமூகத்தில் சாதிப் படிநிலை, அதன் இருப்பு, அங்கீகாரம், எல்லை உள்ளிட்டவற்றைப் பற்றிய புரிதலுக்கு வழிவகுக்கும்; மதத்திற்கும் அப்படித்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சமூகத்தில், குறிப்பாகப் புலமை உலகில், சாதியும் மதமும் எத்தகைய பங்கு வகித்தன என்பதைப் புரிந்துகொள்ள உ.வே.சாமிநாதையரின் எழுத்துக்கள் பெரும்சான்றாக விளங்குகின்றன.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதையரும் சாதி மதங்களற்ற சமத்துவ உலகில் வாழ்ந்தவர்களல்லர். இன்றைய காலத்தை விடவும் சாதியம் இறுக்கமாக நிலவிய சமூகத்தில் வாழ்ந்தவர்கள். அதை இயல்பு என்று கருதி ஏற்றுக்கொண்டவர்கள். சாதியத்தின் வரையறைக்குள் நின்று தம் வாழ்வை நடத்தியவர்கள். ஆகவே உறவுநிலையில் சாதியம் முந்திக்கொண்டு முகம் காட்டுவதைத் தவிர்க்க இயலாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களது எதிர்வினை எப்படி இருந்தது என்பதை அறிவது சாதியச் சமூகத்தை விளங்கிக் கொள்வதற்கு உதவும். பேராளுமைகளாகத் திகழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களில் சாதியம் தொடர்பான பதிவுகளை ஆராய்வது அவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.
உவேசா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வாழ்ந்தவர். சமூகத்தின் அகத்திலும் புறத்திலும் நிகழ்ந்த பெருமாற்றங்களுக்குச் சாட்சியாக இருந்தவர். புற மாற்றங்களில் தம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டவர். புற மாற்றங்களின் வேகத்திற்கு ஏற்ப அக மாற்றங்கள் உவேசாவிடம் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் தம் வாழ்வியல் நெறியாக அவர் வரித்துக்கொண்ட விழுமியங்கள்தான். அவை பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சாதியச் சமூகம் அவருக்கு வழங்கியவை.
தாம் பிறந்த வருசத்தில் நிகழ்ந்த அதிசயங்கள் என ‘இந்த நாட்டிற்கு ரயிலும் தந்தியும் வந்தமையே’ (‘என் சரித்திரம்’, ப.51) எனக் குறிப்பிடுகிறார். உவேசாவுக்கு நாற்பத்தைந்து வயது ஆகும் வரை அவர் தந்தை வேங்கட சுப்பையர் உயிர் வாழ்ந்தார். அந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட வேங்கட சுப்பையர் ரயிலில் ஏறியதில்லை. எங்கும் நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ரயில், பேருந்து ஆகிய பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தாமைக்குக் காரணம் பிற சாதியினரின் தீண்டலுக்கு உட்பட வேண்டும், அது தீட்டு என்னும் உணர்வுதான். ஆனால் தம் தந்தையாரைப்போல உவேசாவால் வாழ இயலவில்லை. ரயில் பயணத்தை உவேசா பலமுறை மேற்கொண்டுள்ளார். பிற சாதியினரைத் தீண்ட நேரும் பயணத் தீட்டைக் கழிப்பதற்கு ஏதேனும் வழிமுறையை அவர் வைத்திருந்திருப்பார். அதைப் பற்றிய பதிவு ஏதுமில்லை. தீட்டுக் கழிக்காமல் வீட்டுக்குள் நுழைய வேங்கட சுப்பையர் அனுமதித்திருக்க மாட்டார் என்று அனுமானிப்பது தவறல்ல.
ரயில் பயணம், கல்லூரி ஆசிரியராக அரசுப்பணி, ஆங்கிலம் கற்ற உயர்சாதியினருடன் பழக்கம், ஆங்கிலேய அதிகாரிகளின் நட்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் உவேசா மனதளவில் தம் தந்தை உள்ளிட்ட முன்னோர்களின் வழியாகப் பெற்ற விழுமியங்களைப் பெருமளவு கடைப்பிடித்தவர். மகாவித்துவானிடம் கல்வி கற்ற காலத்தும் திருவாவடுதுறை மடத்தில் வசித்த காலத்திலும் அவ்விழுமியங்களில் ஊறு நேர்ந்ததில்லை. உ.வே. சாமிநாதையர் எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் தாம் பார்ப்பனர் என்பதை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்தார். மகாவித்துவான் உள்ளிட்ட பிறரும் அவர் பார்ப்பனர் என்பதை அங்கீகரித்து அதற்கேற்ற நடைமுறைகளைக் கையாள்வதற்கு உதவினர்.
திருவாவடுதுறை மடம் உள்ளிட அவர் சென்ற இடங்களிலெல்லாம் அந்த அடையாளம் தொடர்ந்தது. அதற்கு முக்கியமான காரணம் உணவு. பிற சாதியார் வீட்டில் அவர் உண்ண மாட்டார்; பிற சாதியாருடனும் உண்பதில்லை. பார்ப்பனர் வீடுகள், பார்ப்பனர் சமைத்தவை தவிர வேறெங்கும் அவர் உண்ண மாட்டார். எங்கே சென்றாலும் உணவு அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கும். அதனால் அவர் அடையாளம் எல்லா இடத்திலும் கவனிப்புக்கு உரியதாக அமைந்தது. மகாவித்துவானின் மாணவ உலகம், திருவாவடுதுறை மடம் முதலிய சைவ உலகத்திற்குள் நுழைந்திருந்த அவர் சாதியின் காரணமாக ஒரு ‘ஸ்பெஷல்’ எனக் கருதப்பட்டார். மகாவித்துவானிடம் மாணவராகச் சேர்ந்த முதல் நாளே உணவுப் பிரச்சினை பேசப்பட்டது.
உவேசாவை மாணவராக ஏற்றுக்கொண்டதும் அவர் தந்தையிடம் மகாவித்துவான் கேட்ட கேள்வி: ‘இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களா? இவருடைய ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?’ மகாவித்துவானிடம் பல மாணவர்கள் இருந்து படித்து வந்தனர். அவர்களைத் தம்முடனே தங்கவைத்துப் ‘போஷித்து’ வந்தார் அவர். அதை அறிந்திருந்ததால் ‘தாங்களே ஏதேனும் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று உவேசாவின் தந்தை கேட்டார். அதற்கு மகாவித்துவான் சொன்னார்: ‘சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என் வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்.’ (எ.ச., ப.175, 176)
மகாவித்துவானின் பதிலில் ‘சைவர்’ என்பது ‘சைவப் பிள்ளை’ என்னும் சாதியை அல்லது சைவ சமயத்தைப் பின்பற்றும் சூத்திரர்களைக் குறிக்கிறது. உவேசா சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்தான் என்றபோதும் சாதியால் பார்ப்பனர் என்பதே இந்த உணவுப் பிரச்சினைக்குக் காரணம். தொடக்கத்தில் ‘ஒன்றும் செய்ய இயலாத நிலையில்’ இருந்தவர்தான் மகாவித்துவான். உவேசாவின் மேல் அன்பு துளிர்த்த பின்னர் அவரது உணவு விஷயத்தில் பெரிதும் அக்கறை எடுத்துக்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் உவேசாவின் உணவு பற்றிய கவலை அவருக்கு இருந்தது.
மடத்திலே பிரச்சினை இல்லை. அங்கு வரும் பார்ப்பனர்களுக்குச் சமைத்துப் பரிமாறத் தனியாட்களும் இடமும் இருந்தன. மடத்தில் சாதிக்கு ஏற்ப உணவுண்ணும் இடங்கள் இருந்தன. சூத்திர சாதிகளில் சைவர்களுக்குத் தனியிடமும் பிற சாதியினருக்குத் தனியிடமும் இருந்திருக்கக் கூடும். கிறித்தவர் உள்ளிட்ட பிற மதத்தினருக்குத் தனியிடம் இருந்திருக்கும். தலித் மக்களைப் பற்றிப் பேச்சேயில்லை. அவர்களை மடத்திற்குள் அனுமதித்திருக்க வாய்ப்பில்லை. மடத்திற்கோ கோயிலுக்கோ செல்லும் தெருக்களிலேனும் நடக்க அனுமதி இருந்ததா என்பதும் தெரியவில்லை. மடம் அல்லாத பிற இடங்களில் தங்க நேரும் சந்தர்ப்பங்களில் உவேசா தம் உணவுக்காக அக்கிரகாரத்தில் யார் வீட்டையாவது தேடிச் செல்ல வேண்டியிருந்தது. இயலாதபோது கோயில்களில் தரும் பிரசாதங்கள் உணவாயின. அதற்கும் வாய்ப்பில்லை என்றால் பழங்கள் போன்ற சமைக்காத உணவு வகைகளைப் பெற்று உண்ண வேண்டும். பட்டீச்சுரம் சென்று ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் தங்கியபோது உவேசாவின் உணவுக்கு ‘அக்கிரகாரத்தில் அப்பாத்துரை ஐயர் என்பவர் வீட்டில்’ (எ.ச., ப.256) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகருடன் யாத்திரை சென்ற காலத்தில் உணவுக்குச் செய்யப்பட்ட ஏற்பாடு குறித்து ‘எனக்கும் உடன் வந்த வேறு பிராமணர்களுக்கும் இரண்டு வண்டிகள் ஏற்படுத்திச் சமையலுக்கு இரண்டு பிராமணப் பிள்ளைகளைத் திட்டம் செய்து எங்களிடம் ஒப்பித்தனர்’ (எ.ச., ப.463) என்று உவேசா எழுதுகிறார். இப்படிப் பல இடங்கள். உணவு பற்றிய விஷயத்தில் அக்காலத்தில் இதுதான் நிலை.
உணவு அளவுக்குத் தங்குமிடம் பிரச்சினையாக இல்லை. எனினும் சவேரிநாத பிள்ளை போன்ற சூத்திரர்கள் தம் ஆசிரியருடன் உடனுறைந்ததுபோல மகாவித்துவானின் வீட்டில் உவேசா நிரந்தரமாகத் தங்கவில்லை. தொடக்கத்தில் தனி ‘ஜாகை’ வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் உடன் தங்கியதாகத் தெரிகிறது. அப்போதெல்லாம் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. மகாவித்துவானுடன் சென்று தங்கும் ஊர்களிலும் அக்கிரகாரத்தில் இல்லை என்றாலும் தனி வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் என்று கருத முடியும். பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் உவேசா தங்கியுள்ளார். கும்பகோணத்தில் தியாகராச செட்டியார் வீட்டில் சில சமயம் தங்கும்படி நேர்ந்திருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவருக்கெனச் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து உவேசா எதுவும் எழுதவில்லை. ஆனால் அவையெல்லாம் இயல்பல்ல; வேறு வழியில்லாத காரணத்தால் நேர்ந்தவையே.
கல்லூரி வேலையில் சேரக் கும்பகோணம் சென்ற உவேசா அன்றிரவு தியாகராச செட்டியார் வீட்டில் தங்கினார். காரணம் அவர் சென்று சேர்ந்த நேரம் இரவு பத்துமணி. வேறு வழியில்லை, தங்க நேர்ந்தது. பார்ப்பனர் ஒருவரைத் தம் இல்லத்தில் தங்க வைக்கும்போது அதற்கென எத்தகைய இடத்தைத் தியாகராச செட்டியார் ஒதுக்கியிருப்பார், என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்பது தெரியவில்லை. உணவுப் பிரச்சினை பற்றி எழுதிக் கொண்டேயிருக்கும் உவேசா இந்தத் தங்கல் பிரச்சினையை அத்தனை பெரிதுபடுத்தவில்லை. எனினும் அது இயல்பல்ல என்பதை உணர முடிகிறது. கும்பகோணத்தில் உவேசா தனி வீடு பார்த்துக் குடியேறச் சில நாட்கள் ஆயின. அதுவரைக்கும் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக இருந்த சாது சேஷையர் வீட்டில் தங்கிக்கொண்டு அங்கேயே உண்டு வந்தார். பல்லாண்டு பழக்கமுள்ள தியாகராச செட்டியார் வீட்டில் தங்கவில்லை. புதிதாக அறிமுகமான சாது சேஷையர் வீட்டில்தான் தங்கினார்.
உவேசா தம் வாழ்நாள் முழுக்கவும் இயன்றவரை பார்ப்பனக் குல ஆசாரங்களைக் கடைப்பிடித்து ஒழுகி வந்தார். புறத்தில் சில மாற்றங்களை ஏற்றுக்கொண்ட போதும் அகத்தில் அவரிடம் மாற்றங்கள் நேரவேயில்லை. அதற்கு அவர் கொண்டிருந்த கொள்கைகளே காரணம். உவேசா தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் (1935) எழுதிய ‘எனது நோக்கம்’ என்னும் கட்டுரையில் தம் வாழ்வின் நோக்கமாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவற்றுள் ஒன்று: ‘முன்னோர் ஒழுகி வந்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றுதலே மன ஒருமைக்கு வழியாகும். புதுக் கொள்கைகள், புதிய மதங்கள், புதிய தெய்வ வழிபாடு முதலியவற்றை ஆராய்ச்சியின்றி மேற்கொண்டால் அவை நம் மன இயல்போடு பொருந்துவதற்குப் பலகாலம் செல்லும்; ஜனங்களிடையே ஒற்றுமையும் கடைப்பிடிப்பும் தவறிவிடும்’ (‘நிலவில் மலர்ந்த முல்லை’, ப.184).
‘முன்னோர் ஒழுகி வந்த முறை’ என்பதில் சாதியப் படிநிலை முதன்மையானது. ஒரு மாணவருக்கு அறிவுரை வழங்கும்போது ‘ஒவ்வொருவரும் தம் தம் குலாசாரங்களைக் கடைப்பிடித்து அனுஷ்டானம் செய்துவர வேண்டும்… உலகத்திலுள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு ஜாதியினருக்கும் உரிய பிரார்த்தனைகள் பெரியோர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் செய்து வந்தால் நமக்குக் கடவுள் அருளால் நன்மை உண்டாகும்’ (‘நி.ம.மு.’ ப.151) என்று கூறுகிறார்.
மகாவித்துவானும் உ.வே.சாமிநாதையரும் தனித்த பேராளுமைகள் என்பதில் ஐயமில்லை. அதற்காக அவர்களை மாசு மருவற்ற பிம்பங்களாக்கி வழிபடத் தேவையில்லை. தூசு படிய விடாமல் எந்நேரமும் துடைத்துச் சுத்தப்படுத்தியபடி இருக்கவும் வேண்டிய தில்லை. அவர்களின் பங்குப் பணிகளை மதித்துப் போற்றும் அதேசமயம் அவர்கள் வாழ்வில் சாதியும் மதமும் வகித்த இடத்தை ஆராய்வதும் அவசியம். அது அவர்களையும் அவர்கள் காலச் சமூகத்தையும் புரிந்துகொள்ளல். மகாவித்துவானும் உவேசாவும் ஒருவர் மீது ஒருவர் பேரன்பு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் உறவுநிலையில் சாதிய எல்லை எப்போதும் முன்னின்றது. அதைக் கடக்க அவர்கள் முயலவில்லை; கடக்கவும் இயலவில்லை.
‘சாமிநாதனும் சிவகுருநாதனும்’ என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை காலச்சுவடு ஏப்ரல் 2022 இதழில் வெளியானது. அதற்கு தி.அ. ஸ்ரீனிவாஸன் ‘சாமிநாதனும் சிவகுருநாதனும் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம்’ என்னும் தலைப்பில் (காலச்சுவடு, ஜூன் 2022) எதிர்வினை புரிந்திருந்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் ஆகியோரைச் சாதியவாதிகள் என்றோ மதவாதிகள் என்றோ முத்திரை குத்துவது என் ஆய்வு முறையல்ல. அவர்கள் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதும் என் நோக்கமல்ல. ஒருவர் மீது ஒருவர் பேரன்பு கொண்டவர்களாக இருந்த போதும் அவர்களுக்கு இடையே சாதியும் மதமும் என்னென்ன வகைகளில் செயல்படுகின்றன என்பதைக் காண்பதே என் ஆய்வு முறை. சாதியையும் மதத்தையும் கடந்தவர்கள் என்று இச்சமூகத்தில் எவருமில்லை. தனிமனிதர்களைப் பிம்பமாக்கிக் கொண்டால், ஏதோ ஒருவகையில் நம்மவராகக் கருதிக் கொண்டால் இத்தகைய ஆய்வுகளை ஏற்றுக்கொள்ள இயலாது; கொச்சைப்படுத்துதல், ஆபத்து, அபவாதம் என்றெல்லாம் கருத நேரும்.
உ.வே. சாமிநாதையரின் பணிகள், பதிப்பு நுட்பங்கள், மேன்மைச் செயல்கள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். பெரும்பாலானவை காலச்சுவடு இதழில்தான் வெளியாயின. அப்போதெல்லாம் எந்த எதிர்வினையும் புரியாத தி.அ. ஸ்ரீனிவாஸன் மனித உறவுகளில் சாதியத்தின் இடம் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை புரிந்திருக்கிறார். நல்லது; மகிழ்ச்சி. அது என் கட்டுரையின் மையத்திற்கு எந்த ஊறும் விளைவிக்கவில்லை. எனினும் இத்தகைய எதிர்வினைகள் என்னை மேலும் இத்துறையில் கட்டுரைகள் எழுதத் தூண்டுகின்றன. அவரது எதிர்வினையில் பயன்பட்டுள்ள கடுஞ்சொற்களைப் புறம் தள்ளிவிடலாம். ஆனால் அதிலிருந்து அடிக்கும் வைதிக நெடி மூக்கைத் துளைக்கிறது என்பதை மட்டும் கூறிக்கொண்டு தி.அ. ஸ்ரீனிவாஸனின் கருத்துக்கள் சிலவற்றைப் பற்றிய என் எண்ணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.
ஸ்மார்த்த பிராமணரில் ‘எண்ணாயிரம்’ என்னும் பிரிவைச் சேர்ந்த உ.வே.சா. பரம்பரையினருக்குக் குலதெய்வம் திருப்பதி வேங்கடாசலபதி. குடும்பப் பெயர்கள் எல்லாம் பெருமாள் தொடர்பானவை. ஆனால் சிவ வழிபாட்டையும் சைவப் பூசை முறைகளையுமே அவர்கள் பின்பற்றியுள்ளனர். பெருமாளை வழிபடவில்லை என்று நான் சொல்லவில்லை. குலதெய்வமான பெருமாள் வழிபாடுதானே முதன்மையானதாக இருந்திருக்கும்? தொடர்ந்து அதுதானே முதன்மையானதாக இருந்திருக்க வேண்டும்? எப்போது அது பெயரளவுக்கானதாகவும் சிவ வழிபாடு முதன்மையானதாகவும் மாறியது? அதற்குக் காரணம் என்ன? அது ஆய்வுக்குரியதுதானே? ஸ்மார்த்தர்கள் பற்றிக் கூடுதல் தகவல்களை ஸ்ரீனிவாஸன் வழங்கியுள்ளார். இதில் இன்னும் கூடுதல் ஆய்வு தேவை.
சவேரிநாத பிள்ளையின்மீது இரக்கத்தை உருவாக்குவதோ அவரை அவல நாயகனாகக் காட்டுவதோ என் நோக்கம் அல்ல. அந்தத் தொனி என் கட்டுரையில் எங்கும் இல்லை. சவேரிநாத பிள்ளை பிற்காலத்தில் காரைக்காலில் தமிழ்ப் பண்டிதராக விளங்கினார் என்னும் தகவலை நான் ‘கோட்டை விட்டது’ தவறுதான். என்ன செய்வது? ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும் உவேசா எழுத்துக்கள் அனைத்தையும் நினைவில் கொண்டிருக்க இயலவில்லை. இத்தகையவற்றைக் கண்டறிய வசதியாக அவரது எழுத்துக்கள் அடைவுகள், அகராதிகளோடு பதிப்பிக்கவும் பெறவில்லை. அந்தத் தகவலால் என் கட்டுரைக்குப் பங்கம் நேரவில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தம் பெயரைச் ‘சிவகுருநாதன்’ என்று அவர் தொடர்ந்து கையாளவில்லை; கிறித்தவப் பின்னணியில் வாழ வேண்டியிருந்ததால் ‘சவேரிநாத பிள்ளை’ என்றேதான் கொண்டிருந்தார் என்பதற்கு அவர் கடிதங்கள் தந்திருக்கும் சாட்சியே போதுமானது.
உ.வே. சாமிநாதையர், சவேரிநாத பிள்ளை ஆகிய இருவருமே மகாவித்து வானுக்குப் பிரியமானவர்கள். ஆனால் அவரது அன்பு யாருக்கு மிகுதி என்பதில் இருவருக்குமிடையே போட்டியும் இருந்துள்ளதை உவேசா எழுத்துக்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. தனது பெயரை மகாவித்துவான் மாற்றியதும் சவேரிநாத பிள்ளை உடனே அதைச் சாமிநாதன் என்னும் பெயரோடு ஒப்பிட்டுப் பேசுவதையும் சாமிநாதையரையும் தன்னையும் மகாவித்துவான் சமமாகக் கருதுவதாகக் கூறுவதையும் கருதிப் பார்க்க வேண்டும். மகாவித்துவானிடம் உவேசா மாணவராகச் சேரும் முன்னரே மாணவராக இருந்தவர் சவேரிநாத பிள்ளை. மகாவித்துவானின் இறப்புவரை தொடர்ந்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே. ஆகவே அவர்களிடையே ஆசிரியரின் அன்புக்குரியவர் யார் என்பதில் போட்டி நிலவியுள்ளது. அது இயல்புதான்.
தம் இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் சவேரிநாத பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கவலையோடு மகாவித்துவான் சில கனவான்களுக்குக் கடிதம் எழுதினார். அவற்றைப் ‘பரிந்துரை’ என்று நான் குறிப்பிட்டுள்ளேன். அதிலென்ன பிரச்சினை? ‘சவேரிநாத பிள்ளைக்கு விவாகம் செய்வித்து ஏதேனும் உபகாரம் செய்து சௌகரியப்படுத்தி வைக்க வேண்டுமென’ மகாவித்துவான் எண்ணினார். ‘தம் எண்ணத்தைப் புலப்படுத்திய’ கடிதங்கள் அவை. அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பித்து அவர்களின் உதவியைப் பெற்றுச் சௌக்கியமாக வாழும்படி சவேரிநாத பிள்ளையை ஆசிர்வதித்தார். உபகாரம் செய்யும்படி தம் எண்ணத்தைப் புலப்படுத்தி எழுதினால் அது பரிந்துரை ஆகாதா? ‘அடித்தார்’ என்பதை ‘மெல்லத் தட்டினார்’ என்று சொல்லும் சமூகம் அல்லவா நமது? சரி, ‘பரிந்துரை’ என்னும் ஒற்றைச் சொல்லில் நான் குறிப்பிட்டதை இப்போது ‘தம்மோடு நெருங்கியவர்களுக்குச் சவேரிநாத பிள்ளையின் எதிர்காலம் குறித்த தம் உள்ளக் கிடக்கையைக் குறிப்புணர்த்தி உணர்ச்சியோடு எழுதப்பட்ட கடிதங்கள்’ என்று வேண்டுமானால் திருத்திக் கொள்கிறேன்.
எப்படியிருந்தாலும் சரி, இந்தக் கடிதங்கள் சவேரிநாத பிள்ளையின் எதிர்காலம் கருதி அவர் எழுதியவை. உ.வே. சாமிநாதையர் எதிர்காலத்திற்கு அத்தகைய கடிதங்கள் எழுதத் தேவையில்லை என்று மகாவித்துவான் கருதியுள்ளார். கிறித்தவராகிய சவேரிநாத பிள்ளையைத் திருவாவடுதுறை மடம் வைத்துப் போஷிக்குமா? சைவரும் பார்ப்பனருமாகிய உ.வே. சாமிநாதையரைப் போற்றி வைத்துக்கொள்ளும் அந்தத் தெளிவு மகாவித்துவானுக்கு இருந்திருக்கிறது. பரிந்துரைக் கடிதம் என்றால் ஏன் பதற வேண்டும்? உவேசாவுக்கு மகாவித்துவான் பரிந்துரைக் கடிதம் தரவில்லையே தவிர சுப்பிரமணிய தேசிகர் கொடுத்தார். கும்பகோணம் கல்லூரியில் வேலைக்குச் சேர்க்கத் தியாகராச செட்டியார் முயற்சி எடுத்தபோது சுப்பிரமணிய தேசிகரிடம் ‘இவருக்கு வேலை செய்விக்க வேண்டுமென்று கோபால ராவ் அவர்களுக்கு ஒரு கடிதமும் அவருக்கு ஒரு யோக்கியதா பத்திரமும் ஸந்நிதானத்தின் திருக்கரத்தால் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் (எ.ச.,ப.507). அப்படியே தேசிகரும் கொடுத்தார்.
‘ஒரு கடிதம்’ என்றுதான் உவேசா எழுதுகிறார். நான் ‘பரிந்துரைக் கடிதம்’ என்று சொல்கிறேன். அக்காலத்தில் சிபாரிசு, பரிந்துரை ஆகிய சொற்கள் வழக்கில் இல்லையோ? ‘யோக்கியதா பத்திரம்’ என்பதை இன்று ‘நற்சான்றிதழ்’ என்கிறோம். தம் இறப்புக்குப் பிறகு உவேசாவுக்கு மடத்தின் ஆதரவு கிடைக்கும், தியாகராச செட்டியார் போன்றவர்களின் வழிகாட்டுதலும் இருக்கும் என்பதை மகாவித்துவான் அறிந்திருக்கிறார். அவை சவேரிநாத பிள்ளைக்கு அமையாது என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
சவேரிநாத பிள்ளைமீது மகாவித்துவானுக்கு அன்பு இருந்தது; உவேசாமீது அன்பில்லை என்பது என் எண்ணமல்ல. அப்படி எங்கும் நான் சொல்லவும் இல்லை. சவேரிநாத பிள்ளைமீது அன்பு; உவேசாமீது பேரன்பு என்று சொன்னாலும் எனக்கு உடன்பாடுதான். ஆனால் இருவரது எதிர்காலம் பற்றிய சிந்தனையில் சாதியும் மதமும் கவனத்தில் இருந்திருக்கின்றன என்பதே என் பார்வை. இப்படிச் சொல்வது ‘சாதிச்சாயம் பூசுவது’ அல்ல. ஓர் ஆசிரியருக்குத் தம் மாணவர்களின் பின்னணி பற்றிய கவனமும் அக்கறையும் இருந்திருக்கின்றன என்றுதான் சொல்கிறேன். அவற்றில் சாதியும் மதமும் வராமல் எப்படி இருக்கும்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒருவர் சாதியப் படிநிலைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார் என்பது எப்படிக் களங்கம் கற்பிப்பதாகும்? அதுதானே இயல்பு? மகாவித்துவானின் அனுபவ அறிவை நான் போற்றவே செய்கிறேன்.
ஸ்ரீனிவாஸனின் எதிர்வினையில் நான் ‘கோட்டை விட்டுவிட்ட’ இன்னொரு செய்தியைக் கொடுத்திருந்தார். ‘ஆசிரியர் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்று திரும்புவேன்’ என்று உவேசா எழுதியுள்ள ஓரிடம் அவர் மகாவித்துவானைத் தீண்டியுள்ளதற்கு ஆதாரம் என்பது அது. ஆம், இந்தத் தகவலையும் நான் ‘கோட்டை விட்டது’ தவறுதான். இதுவோர் அரிய விஷயமே. எப்போதும் தீண்டாதவர் ஒருமுறை தீண்டினால் அது முக்கியம்தான். ஆனால் எனக்குள் இருக்கும் புனைவாளன் இதற்குத் தரும் விளக்கமும் உண்டு. இப்படிப்பட்ட தீண்டல் நேர்ந்தால் தம் இருப்பிடத்திற்குச் சென்றதும் தீட்டுக் கழிக்கும் சடங்கு எதையாவது அவர் செய்து கொண்டிருப்பார் என்பது என் யூகம். ‘ஆடியாடிச் செல்லும் மாட்டு வண்டியில் மகாவித்துவான் உடல் உவேசா மீது பட்டிருக்கும்’ என்பது தி.அ. ஸ்ரீவாஸனின் நல்ல கண்டுபிடிப்பு. அக்காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு எப்பேர்ப்பட்ட சான்று இது!
புனைவாளனாகிய எனக்குள் இப்படி ஒரு காட்சிப் பிம்பம் தோன்றுகிறது: மாட்டு வண்டியின் முன்பகுதியில் மகாவித்துவான் உட்கார்ந்திருக்கிறார். பின்பகுதியில் உவேசா. மேடு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்குகையில் மகாவித்துவான்மீது உவேசா சாய்கிறார்; அல்லது உவேசாமீது மகாவித்துவான் சாய்கிறார். உடனே வானில் மின்னல் தோன்றுகிறது; இடி இடிக்கிறது. புயல் காற்று வீசுகிறது. கடல் அலைகள் ஒருகணம் அதிர்ந்து ஸ்தம்பித்து நிற்கின்றன. ஆகா! தீண்டாமையின் கண்ணிகள் அறுபட்ட கணமல்லவா அது? இந்த இயற்கை மாற்றங்களைச் சரிசெய்ய உவேசா என்ன செய்திருப்பார்? தம் இடத்திற்குச் சென்றதும் குளியல், தீர்த்தம் தெளித்தல் உள்ளிட்ட ஏதேனும் சடங்கைச் செய்து இயற்கை நிகழ்வுகளைச் சமப்படுத்தியிருப்பார்.
ஸ்மார்த்த பிராமணர்களிடம் தீட்டுக் கழிக்கும் சடங்குகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றி உவேசா எங்கும் எழுதவில்லை. ஆனால் கட்டாயம் இருந்திருக்கும். அவற்றைப் பற்றிய தகவல்களை ஸ்ரீனிவாஸன் போன்றவர்கள்தான் தர வேண்டும். பிறசாதியாரிடமும் தீட்டுக் கழிக்கும் சடங்குகள் இருந்தன என்பதில் ஐயமில்லை. சூத்திர சாதியைச் சேர்ந்த என் பாட்டி வாரச் சந்தைக்குப் போய்வருவார். திரும்பி வந்ததும் மாட்டுச் சாணத்தைக் கரைத்துச் சந்தைச் செலவுகள் வாங்கிவந்த கூடையைச் சுற்றிலும் தெளிப்பார். தன் தலைமீதும் கொஞ்சம் தெளித்துக் கொள்வார். அதன் பிறகே கூடை வீட்டுக்குள் போகும்; பாட்டியும் நுழைவார்.
மகாவித்துவானின் உடலை மார்பில் தாங்கும் ‘பாக்கியம் பெற்றிருந்த’ சவேரிநாத பிள்ளை என்று உவேசா எழுதும்போது தனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லையே என்னும் அவரது ஏக்கத்தைப் பெரிதும் உணர்கிறேன். எப்படி அது இல்லாமல் போகும்? சாதியச் சமூகத்தில் ‘வெறுமனே ஒரு நடவடிக்கை’ என்று ஏதுமில்லை. எந்த நடவடிக்கையிலும் உள்ளார்ந்து பார்த்தால் சாதிய நிழல் படிந்துதான் இருக்கும். உவேசா தம் தாய்தந்தைக்கு மேலாக வைத்துப் போற்றிய ஆசான் மகாவித்துவான். ‘தன் குழந்தை வயிறு வாடப் பாராத தாயின் அன்புக்கும் என் ஆசிரியர் காட்டிய அன்புக்கும் வேற்றுமையே இல்லை’ (எ.ச., ப.287) என்று உவேசா எழுதுகிறார். தன் தாயிடமே ‘பெற்ற தாயைவிட அன்பாக நடத்துகிறார்’ என்று ஒருமுறை உவேசா சொல்லிவிட்டார். அதைக் கேட்டு அவர் தாய் வருத்தப்பட்டார். அந்தளவு இருவரும் பேரன்பு கொண்டவர்கள். ஒருவர் மீது ஒருவர் காட்டிய அக்கறையும் சாதாரணமானதல்ல. ஒருமுறை நான்கு நாட்கள் தாயைப் பிரிந்து வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார் உவேசா. அப்போது அவர் தாய் ‘தழுவிக் கொண்டு புலம்பிய’ காட்சியை (எ.ச., ப.189) அவரால் மறக்க இயலவில்லை. தாயினும் மேலானவர் என்றபோதும் உவேசாவை மகாவித்துவான் தழுவிக்கொள்ள முடியுமா?
இருவருக்கும் இடையிலான பேரன்பில் எப்போதும் துருத்திக்கொண்டே நின்றது சாதி. ஆசிரியர் வைத்த பெயரையே வாழ்நாள் முழுதும் கொள்ளும் பாக்கியம் கிடைத்த உவேசா இழந்த பாக்கியங்கள் பல. தம் ஆசிரியர் வீட்டில் ஒருவேளைகூட உண்ணும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கவில்லை. செல்லும் இடங்களிலும் தனிப்பந்தி தான். உடனிருந்து உண்ணும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆசிரியருக்குத் தாமாக வேலைகள் செய்தால்தான் உண்டு. ஆசிரியரின் ஏவலை மேற்கொள்ளும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதுபோலத்தான் அவர் நல்லுடலை மார்பில் சார்த்திக் கொள்ளும் பாக்கியமும் கிடைக்கவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? உண்டு. சாதி என்னும் அடைக்கும் தாழ்.
பயன்பட்ட நூல்கள்
உ.வே.சாமிநாதையர், ‘என் சரித்திரம்’, 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பதினொன்றாம் பதிப்பு.
உ.வே.சாமிநாதையர், ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ (இருபாகங்கள்), 1986, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு.
ப. சரவணன் (ப.ஆ.), ‘நிலவில் மலர்ந்த முல்லை’ (உ.வே.சாமிநாதையர் தன் வரலாற்றுக் கட்டுரைகள்), 2016, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.