அனைவரதும் கூட்டாண்மைகளை உள்ளிணைக்கும் இலங்கையைக் கட்டியமைத்தல்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரந்து வாழுகின்ற இலங்கைச் சமூகத்தின் அங்கமாகவும் பங்காளராகவும் திகழ்கின்ற நாம் - பொது விழுமியங்கள் பொதுக் குறிக்கோள்கள் ஆகியவற்றின் அடிப்படையிலே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அறகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் அங்கமாகவும் பங்காளராகவும் இருந்துகொண்டு - இந்நாட்டின் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் முதல் கட்டத்தின் வெற்றியை உ றுதிப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
இலங்கை நாடு இதுவரை கண்டிராத மிக மோசமான எதேச்சதிகாரத் தன்மைக்கும் ஊழலாட்சிக்கும் அடையாளச் சின்னமாகிப் போன கோத்தபயவையும் அவரது சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்பும் முதன்மையான இலக்கை அடைவதற்காக - அதிகாரப்பலம் பறிக்கப்பட்ட, குரல்கொடுக்க இயலாதிருந்த மக்கள் பிரிவினர் தமது அதிகாரப்பலத்தை உணரச்செய்வதில் - சளைக்காமல் பாடுபட்ட ‘கோத்தாவே வீட்டுக்குப் போ’ போராட்ட இயக்கத்தின் கதாநாயகர்களுக்குத் தலைவணங்குகிறோம்.
உளுத்துப்போய்க்கொண்டிருக்கும் பெரும்பான்மை இனவாத அரசின் தலைமைப் பீடத்தில் உள்ள ஒருவரை அங்கிருந்து அகற்றிவிட்டு இன்னொருவரை உட்காரவைப்பது என்பது தோற்கடிக்கப்பட்ட சலுகைசார் முதலாளித்துவ வகுப்பு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவும் அதே அரசை இன்னொரு தனிமனிதனின் கீழ் அல்லது வேறு ஒரு அரசியல் கட்சியின் கீழ் மீண்டும் காலூன்றச் செய்வதாகவே அமையும். இதன்மூலம் மக்கள் போராட்டமானது பலவீனமடைந்து இதுவும் மற்றொரு தடவை கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட சந்தர்ப்பமாக ஆகிவிடும் என அழுத்தமாகக் கூறுகிறோம்.
மக்கள் இதுவரை பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதும் தோல்வியடைந்துள்ள இந்த அரசியல்- பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் இறுதி இலக்கை அடைவதுமே இப்போது எமக்கு முன்னுள்ள பெரும் சவாலாகும். திறமையற்ற ஊழல் மலிந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் மட்டுமீறிய அதிகாரத் துஷ்பிரயோகம், முறைகேடுகள், மோசடிகள் ஆகியவற்றால் இக்கட்டமைப்பு சிதைந்துபோயுள்ளது. இந்த நிறைவேற்று அதிகார முறைமையானது முழு அதிகாரத்தையும் ஒருவர் தனது கரங்களில் குவித்துக்கொண்டு எதேச்சாதிகாரம் செலுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் அதிகூடிய பெரும்பான்மையைத் தனக்கு வசமாக வளைத்துக்கொண்டு மக்களின் அதிகாரத்தைப் பறித்து அவர்களை அதிகாரமற்றவராக்குவதற்கும் இனவாத- பெரும்பான்மைவாதத் தேசியவாதத்தைக் கிளப்பி நாட்டின் பெருளாதாரத்தைச் சீர்குலைத்த வண்ணம் மென்மேலும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொண்டு எவ்வளவு காலத்துக்கு நீடிக்க முடியுமோ அவ்வளவு காலம் ஆட்சியில் இருப்பதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.
தோல்வியுற்ற இந்தக் கட்டமைப்பின் கீழ், நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடியில், மக்கள் சகிக்க முடியாத சுமைகளைத் தாங்கியபடி விவரிக்க முடியாத துயரத்தையும் அவலத்தையும் எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமையை மாற்றுவதற்காகத் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், மீனவர்அமைப்புகள், மாணவர்கள், பெண்கள், குடிமைச் சமூகக் குழுக்கள், தொழில்வினைஞர்கள், ஊடகத் துறையினர், கலைஞர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் என அனைவரும் ஒன்றிணைந்து நேரடி- அமைதி வழிப் போராட்டங்களை நடத்துவது எமது கடமை என்பதைக் கருத்தில் கொள்கிறோம்.
அதற்கான பணிகளாவன:
1. சீரழிந்துபோயுள்ள அரசியல் அமைப்பை மாற்றி, மக்களை மையப்படுத்திய புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, நாட்டை அனைத்து முனைகளிலும் கூட்டாக வழிநடத்தி, பிளவுபட்ட மக்களை ஒன்றிணைத்து, அனைவரதும் கூட்டாண்மைகளை உள்ளிணைக்கும் மக்கள் ஜனநாயக அரசு ஒன்றினை உருவாக்கி -சொல்லளவில் மாத்திரம் நில்லாமல் அதற்கப்பால் சென்று - அமைதியையும் நீதியையும் கொண்ட பாரபட்சமற்ற அனைவரதும் கூட்டாண்மைகளை உள்ளிணைக்கும் சமூகம் ஒன்றை நிலைநாட்டுதல்.
2. உளுத்துப்போன பொருளாதார அமைப்பை மாற்றி, மக்கள் மைய, சுற்றுச்சூழலுக்கு உகந்த புதியதொரு பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டுவருதல்.
3. ஒரு யதார்த்தமான- பொருத்தமான- இடைக்காலத் திட்டத்தின் மூலம் நாட்டைச் சமூக-பொருளாதார அரசியல் நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பங்கேற்கவும் பங்களிக்கவும் ஊக்குவித்து அனைவரதும் கூட்டாண்மைகளை உள்ளிணைக்கும் (inclusive) ஜனநாயக இலங்கையை உருவாக்குதல்.
4. பல்வேறுபட்ட பகுதிகள், சமூகக் குழுக்களுக்கு இடையே வளம்குன்றா வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு எனும் பொதுவான இலக்குடன், மக்களின் இறையாண்மை எனும் கோட்பாட்டைச் செயல்படுத்தி, இலங்கைத் தீவின் சகல தரப்பு மக்களும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளவும் துய்த்து அனுபவிக்கவும் செய்தல்.
அத்துடன்,
‘அறகலய’ மக்கள் போராட்ட மையத்தால் வெளியிடப்பட்ட ஆறு அம்சப் பிரகடனம் இத் திசையில் முன்வைக்கப்பட்ட சரியான திட்டவட்டமான முதலாவது நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
இதற்காக, பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட கணிசமான எண்ணிக்கையிலான கல்வியாளர்கள், புத்திஜீவிகள், சமூகச் செயற் பாட்டாளர்கள் ஆகியோருடன் விரிவாக விவாதிக்கப் பட்ட பின்வரும் முன்மொழிவுகளை நாம் - இந்நாட்டை அவலநிலையிலிருந்து மீட்டு, மக்களின் இறையாண்மையையும், மக்கள் ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் உரித்துகளையும் (Entitlements) உறுதிப்படுத்தி அனைவரதும் கூட்டாண்மைகளை உள்ளிணைக்கும் புதியதொரு பல்லினப் பண்பாட்டுச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் - பொது உரையாடலுக்காக உங்கள் முன் வைக்கின்றோம்.
அ) அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான இடைக்காலத்திட்டம்
1. அதிகார மையத்தை ஏற்படுத்துதல்
i) ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி தலா 21 பேரைக் கொண்ட மக்கள் அவையைத் தோற்றுவிக்கலாம். அயல்நாடுகளில் வாழும் இலங்கையர் இருவரும் இதில் இடம்பெற வேண்டும். இடைக்கால அரசாங்கத்தைக் கண்காணிப்பது, அறிவுறுத்துவது, வழிப்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்வது இந்த அவையின் பணி. மக்கள், போராட்டத்தின் வெற்றியைப் பயன்படுத்தி, ஊழல், மேட்டுக்குடி ஆட்சியதிகாரத்தின் மூலம் முன்னைய வழியில் வேறு ஒரு வடிவத்தில் எதேச்சாதிகாரத்தை மீளக்கொண்டுவருவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
ii) மக்கள் அவையையும் வல்லுநர்களையும் உள்ளடக்கிய செயற்குழு ஒன்றை இடைக்கால அரசாங்கம் உருவாக்க வேண்டும். இந்தச் செயற்குழுவே கொள்கை வகுக்கக்கூடியதாக இருக்கும்.
iii) இடைக்காலப் பலகட்சி அரசாங்கமானது அதிக அளவாக 20 அமைச்சர்களையும் 20 துணை அமைச்சர்களையும் கொண்டிருக்கலாம். ஆனால், இணை-இராஜாங்க அமைச்சர்களென யாரும் இருக்கக் கூடாது.
அ) அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாவலர்கள், பணியாளர்கள், வண்டிகள், பிற வசதிகள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும்.
ஆ) நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் முகமாகச் செயற்குழுவுடன் சேர்ந்து இடைக்கால அரசாங்கம் ஒரு குறுகிய காலச் செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
iv) நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனப்பாங்கும் நடத்தையும் மாற்றப்பட்டாக வேண்டும்; அவர்கள் மதிப்பிற்குரிய மக்கள் பணியாளர்களாகவும் மக்களின் நேர்மையான பிரதிநிதிகளாகவும் நடந்துகொள்ள வேண்டும். அவர்களின் செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும்.
v) அரசினது ஒரு தரப்புச் செய்வதை அறியாமல் இன்னொரு தரப்புச் செயல்படும் முறைமையை மாற்றி, இப்போதைய குழப்ப நிலைமையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தலைமைகளை உருவாக்குவது.
vi) மேல் - கீழ் எனும் அணுகுமுறையை மாற்றி, குடிமைச் சமூகத்தின் பங்கையும் அதற்கான வெளியையும் அதிகரிப்பது.
2) ஊழல்மயத்துக்கு முடிவுகட்டுவது
i) தண்டனையற்ற நிலையை நீக்குவது.
ii) நிறைவேற்று அதிகாரத்தின் முறையற்ற செல்வாக்கிற்கு அப்பாற்பட்ட சுதந்திரமான நீதிவழங்கலை உறுதிப்படுத்துவது.
iii) ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல்.
iv) பொதுசனத்தாலோ அதிகாரியாலோ கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்கக் கூடுதல் அதிகாரம் கொண்ட சுதந்திரமான நிறுவனங்களை ஏற்படுத்தல்.
* சுங்கம், காவல், நீதிவழங்கல் துறைகள்,அதிகாரிகள்,
அரசியல்வாதிகளைக் கண்காணிப்பதற்குத் தனித்த
நிறுவனங்களை உண்டாக்குதல்.
v) ஊழலுக்கான ஊக்கங்களை ஒழிப்பதற்கான கொள்கையை உருவாக்குதல்
vi) நேர்மையான அரசுப் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு விருதுகள், ஊக்கத்தொகை வழங்குதல்
vii) ராஜபக் ஷக்களின் குடும்பம், மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களின் பினாமிகள், ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவிக்காலத்தில் பத்திர ஊழலில் ஈடுபட்ட அனைவரிடமும் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்றல். அவர்கள் சமூகத்துக்கு இழைத்த தீங்குகளுக்காகச் சிறைவாசம் உட்பட்ட உரிய தண்டனைகள் வழங்குவதை உறுதிப்படுத்துவது.
viii) ‘களவுபோன சொத்துகள் மீட்பு முன்னெடுப்பு’ எனும் உலக வங்கியின் முயற்சியில் சேர்ந்துகொள்வது பற்றிப் பரிசீலிப்பது.
ix) சலுகைசார் முதலாளியக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டி, கொள்ளையடிக்கப்பட்ட அனைத்துச் சொத்துகளையும் அவற்றை அனுபவிப்போரிடமிருந்து மீட்பது, அவர்களுக்கு அந்தச் சொத்துகளின் பொருட்டு அவர்கள் பெற்ற வங்கிக்கடன்களுக்கு அனைத்துவகை வரிகளையும் விதிப்பது.
x) வர்த்தகத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டுக்குத் தடைவிதிப்பது.
xi) பொதுக்கணக்குகளை மேற்பார்வையிடுதல், தணிக்கை அமைப்புகளின் பங்கை மேலும் வலுப்படுத்துவது.
xii) வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், தகவல்பெறும் உரிமையை மேம்படுத்துவது.
3) மானியங்களை வழங்குவதற்கு நியாயமான அமைப்பைக் கொண்டுவருதல்
i) செல்வந்தர்களுக்கும் மானியம் வழங்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும்; ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்க்கு மட்டுமே அதை வழங்க வேண்டும்.
ii) மலையகத் தோட்டப் பயிர்செய்கை போன்ற பெரு வர்த்தகங்களுக்கு மானியம் வழங்கும் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்.
4) சிறந்த வரிவிதிப்பிடல் கொண்டுவருதல்
i) மறைமுக வரி முறைமையானது வறியவர்களிடமிருந்து எடுத்துச் செல்வந்தர்களிடம் கொடுப்பதாக இருப்பது மாற்றப்பட வேண்டும். இத்துடன் செல்வந்தர்க்கும் அதிகவருவாய் உள்ளவர்க்கும் சாதகங்களை வழங்குகின்ற நேரடி வரி விதிப்பிடலையும் சீரமைக்க வேண்டும்.
ii) தற்போதைய வரிவிதிப்பிடல் சீரமைக்கப்படுகையில் அதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதச் சுமையும் ஏற்படக் கூடாது; வரி ஏய்ப்போருக்கு வாய்ப்பாக எந்த ஒன்றும் அமைந்துவிடாதபடியும் அமைய வேண்டும்.
5) நிர்வாக அமைப்புகள் சீர்திருத்தம்
i) அரசின் முகமைகள், நிறுவனங்களை அரசியல் மயத்திலிருந்தும் இராணுவமயத்திலிருந்தும் விடுவிப்பது
ii) குடிமைச் சேவைகளை இராணுவமயத்தை அகற்றுவது, இராணுவச் செலவினங்களைக் குறைப்பது, ஆயுதப் படைகளைச் சீர்படுத்துவது.
iii) பணி நியமனங்கள், பணி உயர்வுகள், பணிநீட்டிப்பு ஆகியவற்றைத் தனி ஒரு சுயேச்சையான பொதுச்சேவை ஆணைக் குழுவின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
iv) பொதுச்சேவையில் அரசியல் தலையீட்டைத் தடுக்க அரசமைப்புச் சட்ட அவை அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்; அமைச்சர்களுக்கான நிரந்தரச் செயலாளர்கள், அரசத் தூதுவர்கள், மாகாண சபை ஆளுநர்கள் ஆகியோர் இந்த அரசமைப்புச் சட்ட அவையின் மூலமாகவே நியமிக்கப்பட வேண்டும்.
6) வன்முறை, போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவை அற்ற- சமாதானமான, நீதியான சமூகத்தை உருவாக்குதல்
i) மக்கள் மீதான துன்புறுத்தல்கள், சித்திரவதைகளில் அனைத்து மட்டங்களிலும் காவல்துறை, ஆயுதப்படைகளின் கொடூரத்தைத் தடுத்து நிறுத்துதல்.
ii) போதைப்பொருள் கடத்தல், நிழல் உலகக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுதல், இறக்குமதிகள், உள்ளூர்ச் சந்தைகளை ஏகபோகமாக்கும் மாஃபியா கும்பல்களை அழித்தொழிப்பது, பதுக்கல்காரர்கள், கறுப்புச் சந்தைக்காரர்கள்மீது கறாரான நடவடிக்கைகளை மேற்கொள்வது.
iii) அனைத்துவகைச் சட்டவிரோத ஆயுதங்களையும் பறிமுதல்செய்வதுடன் கடுமையான ஆயுத எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுவருதல்.
7) தெளிவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு வருதல், அரச உறவுத் துறையைச் சீரமைத்தல்
i. இலங்கையை மேம்படுத்துவதற்கு அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் அதேவேளையில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் தெளிவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுவருதல்.
• ஊழல் முறைகேடுகளற்ற முறையான அயலுறவுச் சேவையை உருவாக்குதல்
• நமது நாட்டின் புவிசார் கேந்திர முக்கியத்துவத்தால் ஈர்க்கப்படுகின்ற உலக சக்திகளின் மூலம் நாட்டை வளப்படுத்தும் வாய்ப்புகளைப் பெறுகின்றபோது அவற்றைப் பயன்படுத்துதலும் இலங்கையின் இறையாண்மையில் சமரசம் செய்யாமல் இருப்பதும்.
• அந்நிய சக்தி ஒன்றுக்கு எதிராக இன்னொரு அந்நியச் சக்தியைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்கையான தேசபக்தியைத் தூண்டுவதைத் தவிர்ப்பது.
• அயல்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, நாட்டின் வர்த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்குவது.
ii) நாட்டின் அரச உறவு சேவை, வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களை அரசியல்மயம்- இராணுவமயத்திலிருந்து அகற்றுவது, அயல்நாடுகளுக்கான தூதர்களை முற்றுமுழுதாக அவர்களின் தொழில்திறனின்படி மட்டுமே நியமித்தல்.
iii) அரச உறவு சேவைத் துறை, அயலுறவு அமைச்சகம், அயல்நாடுகளில் உள்ள தூதரகங்களைக் கண்காணிக்க ஒரு தனித்த கண்காணிப்புக் குழுவைக் கொண்டிருக்க வேண்டும்.
iv) இலங்கையின் கடற் பிராந்தியம், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவை அதிகாரபூர்வமாகப் போர் தவிர்ப்புப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். எமது பிராந்தியத்திற்குள் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் எவற்றையும் நுழையவிடக் கூடாது. அயலுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகப் பன்னாட்டு ஒத்துழைப்பின் ஊடாக இலங்கைக் கடற்பிராந்தியத்தின் சமூக - பொருளாதார ஆற்றல் உரியபடி கையாளப்பட வேண்டும்.
v) அரசியல், மூலவுத்தி விவகாரங்கள் தொடர்பான- அனைத்து, இரு தரப்பு, வட்டார ஒப்பந்தங்கள் குறிப்பாக வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டவை உள்ளடங்கலானவையும் மக்கள் அவையில் விவாதிக்கப்பட வேண்டும்.
8) பன்னாட்டு நிதி முகமைகள், அந்நிய உதவிகள், முதலீடுகள், கடன்களை ஊக்குவித்தலும் ஒழுங்குபடுத்துதலும்
i) திறம்பட்ட- ஊழலற்ற- இடையூறில்லாத ஒற்றைச் சாளரச் செயல்முறையை உருவாக்குவதன் ஊடாக முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கு இணைக்கமான சூழலை உருவாக்குதல், உரிய சட்டங்களை இயற்றுதல்.
ii) புலம்பெயர்ந்த இலங்கையர்களை முதலீடுசெய்ய ஊக்குவித்தல். அவர்கள் தங்களுக்கு விருப்பமான திட்டங்களில் முதலீடுசெய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதைப் போன்ற பொறியமைவை உருவாக்குதல். அவர்களின் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், திறன்மேம்பாட்டில் பங்களிக்கச் செய்யவும், இடைநிலை, STEM (Science, Technology, Engineering and Medicine) எனப்படும் அறிவியல், நுட்பம், பொறியியல், மருத்துவம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்த உதவவும் அயலக இலங்கையரை அழைப்பது.
iii) மூலோபாயம் வாய்ந்த சொத்துக்களை விற்காமலும் அடமானம் வைக்காமலும் பலதரப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் அந்நியக் கடனை மறுசீரமைப்புச் செய்வது.
iv) மக்களின் இறையாண்மையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காதபடி நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளுதல்.
v) நன்கொடை நாடுகள் அல்லது நிதி முகாமைகளின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்டு, இலவசக் கல்வி, இலவச மருத்துவம், விவசாயிகளுக்கான மானியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற மக்களுக்கான உரித்துகளில் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
vi) பணமோசடி, பணத்தைத் திருப்பிவிடுதல், அரச சொத்துக்களை மோசடி செய்து கிடைத்த பணத்தை மறைத்துவைத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் படியாகச் சட்டவிரோதமான பணம் வங்கிகளுக்குள்ளும் கூட்டுறவு நிதி மையங்களுக்குள்ளும் வந்துவிடாமல் தடுப்பதன் மூலம் பன்னாட்டுப் பரிவர்த்தனைகளில் காணப்படும் ஓட்டைகளை அடைக்க வேண்டும்.
vii) நன்கொடை அளிக்கும் நாடுகள், நிதிநிறுவனங்களின் வலையில் விழுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நாட்டின் நெருக்கடி நிலைமையையைப் பயன்படுத்தி, மக்களின் இறையாண்மைக்கு மேலாகத் தமது நோக்கங்களையோ கட்டுப்பாடுகளையோ விதிக்க அவை முற்படும். கொடையாளர் உறவுகளில் உள்ளூர் உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும்.
viii) கடன் பெறுவதற்கான மாற்று வழிகளை அதிகரிக்கச்செய்வதும் உள்நாட்டு வருவாயிலிருந்து அந்நியக் கடனை அடைப்பதற்கேற்ற நீடித்த வளர்ச்சித் திட்டத்தை உருவாக்குவதும் வேண்டும்.
ix) மீன்பிடித்துறையை மட்டுப்படுத்தாமல் இலங்கைக் கடல் வளங்களில் முதலீட்டை ஊக்குவித்தல்.
9) நீடித்த பொருளாதார மேம்பாடு
i) கல்வியறிவு பெற்ற எமது மனிதவளத் திறனைப் பயன்படுத்திச் சேவைத் துறையை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டும்.
ii) மசாலா பொருட்களின் ஏற்றுமதியை மதிப்புக்கூட்டல் போன்றவற்றுடன் ஒழுங்குபடுத்தி ஊக்குவித்தல்.
iii) அந்நியச் செலாவணியை நாட்டிற்கு அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல். தாய்மார்கள் இல்லாததால் ஏற்படும் பெரும் பாதிப்பை நிவர்த்திசெய்கையில், குறிப்பாகக் குழந்தைகள் வளரும் கட்டத்தில் உள்ள குடும்பங்களில் உள்ள- அந்நிய செலாவணியை நாட்டிற்கு அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல்.
iv) தேயிலை உற்பத்தி, தரத்தைப் பெருக்குவதற்குத் தோட்டத் தொழிலை மறுசீரமைப்புச் செய்தல்.
• தோட்டத்தொழில் மறுசீரமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தோட்டத் தொழிலாளர்களின் வருமானம், அவர்களின் நலன், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதே ஆகும். குடியிருப்புப் பகுதிகளைக் கிராமங்களாக, தொழில் துறையின் நிர்வாகப் பங்காளிகளாக மாற்ற வேண்டும்.
• தோட்டத் தொழிலாளர்களுக்கென நிலம் எதுவுமற்ற பிரச்சினையை சமூகநீதியின் ஒரு அங்கமாகக் கருதி தீர்வுகாணல்.
v) இதே முறையில் நாட்டின் ஏனைய பெருந்தோட்டத் தொழில்களையும் மறுசீரமைத்து, தூக்கிநிறுத்துதல் வேண்டும்.
vi) மீன்பிடித் தொழிலை மேம்படுத்தி, நவீனப்படுத்துவதன் ஊடாக மீனவர்களுக்கும் நாட்டுக்கும் பயன்பெறச் செய்தல். மீன்பிடியில் ஆதிக்கம் செலுத்தும் மாஃபியாக்களின் பிடியிலிருந்து மீனவர்களை விடுவித்தல்.
vii) அரிசிச் சந்தையில் மாஃபியா ஏகபோகத்திலிருந்து விவசாயிகள், சிறு விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு உறுதுணை அளிப்பது, அத்தியாவசியமான அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் நல்லபடியான விலையை உறுதிப்படுத்தல், குறிப்பிட்ட பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லாதபோது அவற்றின் இறக்குமதியைத் தடைசெய்வது, உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள், நவீன தொழில்நுட்பங்களை வழங்குவது, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை அறியத்தருவது, வருவாய், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அதன் மூலம் நாடும் பயனுறச்செய்வது.
viii) சதோச (SATHOSA), கூட்டுறவு அமைப்புகள் மூலமாகத் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், குடிசைத் தொழில் புரிவோருக்குக் கடன் வழங்கி அவர்களுக்கு உறுதுணை செய்வது.
ix) வெற்றுப் பெருமிதத் திட்டங்களை நிறுத்திவிட்டு, தேசிய அளவிலும் பிராந்திய மட்டத்திலும் வெளிப்படையான முறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தல்.
x) தேசிய, பிராந்திய, நகர்ப்புற, ஊரக மேம்பாட்டுக்கான முழுமையான சமூக-பொருளாதார மூலவுத்தியான திட்டம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு வளர்ச்சித் திட்டமும் அதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
xi) எமது நாட்டுக்கான குறிப்பான கால்நடை வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டுவருதலும் இலகுக் கடன்கள், மானியங்களை வழங்கிக் குறிப்பாகப் பால் உற்பத்தி அதிகரிப்பை ஊக்குவித்தலும் வேண்டும்.
•இத்திட்டத்தின் ஒரு அங்கமாக, குறிப்பாக மலைத்தோட்டப் பகுதிகளில் அரசினது செலவில் கால்நடைகளுக்கான சமூக மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல் வேண்டும்.
xii) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறு விவசாயிகள், குறைந்த வருவாய்ப் பிரிவினர் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டும்.
10) ஆற்றல் பாதுகாப்பு
i) மாஃபியா ஏகபோகத்திலிருந்து எரிசக்தித் துறையை விடுவித்தல். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை ஊக்குவிப்பது, நீர் மின்சக்தி, சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி, உயரலை மின்சக்தி உற்பத்தியைச் செயற்படுத்துவதன் ஊடாக ஆற்றல் பாதுகாப்பை நோக்கி முன்னேறுவது. நாட்டிற்கான நீடிக்கக்கூடிய கலவையான எரிசக்தியை உருவாக்குதல்.
ii) இந்தத் துறையில் வல்லரசுகள் அல்லது பிராந்திய வல்லரசுகளின் கட்டுப்பாட்டை அனுமதிக்கக் கூடாது.
iii) புதுமையான முனைப்புகளுக்குத் துணைசெய்வது, திறம்பட்ட எரிசக்தி வழக்கம், எரிசக்தி சேமிப்பு முறைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது.
11) உணவுப் பாதுகாப்பு, பாதிக்கப்படக்கூடியோரின் பாதுகாப்பு
i) உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதும் அரசினது முதன்மையான கடமை.
ii) வீட்டுத் தோட்டங்கள், உள்ளூர் உணவு உற்பத்தி, உள்ளூர்மட்டத் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது.
iii) பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த நீர்ப்பாசன அமைப்புகள் மூலம், கைவிடப்பட்ட பழைய குளங்களைச் சீரமைத்தல்.
iv) உணவு வழங்கல் கண்ணியை வலுப்படுத்துவதற்குத் தனியார் கூட்டுடன் நலிவடைந்துள்ள கூட்டுறவு அங்காடிகளைப் புதுப்பித்தல்.
v) எரிபொருள், எரிவாயு, உரம், பால்மா ஆகியவற்றைத் தடங்கலின்றித் தொடர்ச்சியாக வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இதிலும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஏகபோகத்தையும் மாஃபியாவையும் ஒழித்தாக வேண்டும்.
vi) நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை, ஏழைகளுக்கும் எளிதில் பாதிக்கப்படுவோருக்கும் உணவு வில்லைகள், உணவுப் பொருட்கள், பிற அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை இலவசமாகவோ குறைந்த விலையிலோ வழங்குவது போன்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தல். இதற்குத் தன்னார்வ நிறுவனங்கள், அயலக உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
12) சுற்றுச்சூழல் பாதுகாப்பு
i) உரிய அதிகாரங்கள், செயல்பாடுகளைக் கொண்ட சுதந்திரமான தேசியச் சுற்றுச்சூழல் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.
ii) முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களோ வேறு எந்தத் திட்டமுமோ சூழல் பாதிப்பை உண்டாக்கும்படியாக மேற்கொள்ளப்படக் கூடாது.
iii) பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாடு படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
iv) மணல், அணிகலன் மதிப்புக் கல் போன்ற இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதும் அதற்கான ஆய்வும் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
v) காடுகளை அழிப்பது நிறுத்தப்பட்டு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், குறிப்பாக வற்றாத ஆறுகள் உருவாகக்கூடிய மலைப்பகுதிகளில் மறுகாடு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் அரசினால் மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
13) நம்பிக்கையை வளர்த்தெடுத்தல், சமூக நீதி நடவடிக்கைகள்
i) அறகலய- மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
ii) தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் உள்பட அனைத்து வகையான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
iii) இரஞ்சன் இராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும்.
iv) குருத்தோலை ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
v) இராஜபக் ஷ ஆட்சியின்போது இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, கொலைகள் பற்றி விசாரணை மேற்கொள்ளுதல்.
vi) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும். அச்சட்டத்தின்படி யாரையும் கைதுசெய்யவும் தடுப்பில் வைக்கவும் விசாரிக்கவும் ‘வாக்குமூலம்’ பெறவும் காவல்துறைக்குத் தரப்பட்டுள்ள மட்டுமீறிய அதிகாரங்களை எந்தப் புதிய சட்டத்திலும் இடம்பெறச் செய்யக் கூடாது.
vii) பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, துஷ்பிரயோகத்தைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
viii) வெறுப்பூட்டல் பேச்சுகளைத் தடைசெய்ய வேண்டும்.
ix) தமிழ் பேசும் மக்களின் பகுதிகளில் புதிய மதச்சின்னங்களை நிறுவுவதன் ஊடாகவும் தொன்மையான இடங்களின் பெயர்களை மாற்றுவதன் ஊடாகவும் வரலாற்றை ஒற்றைமயம் ஆக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்.
x) உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, வலிந்த குடியேற்றங்கள் உட்பட்ட அனைத்துவகைத் திட்டங்களையும் நிறுத்த வேண்டும்.
xi) இரு தரப்பினரதுமான போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையைத் தொடங்குவதுடன் நிலைமாறுகால நீதியை உறுதிசெய்யவும் வேண்டும்.
xii) கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு விரோதமான அனைத்து வன்முறைகளையும் விசாரித்து, அதில் ஈடுபட்ட, பங்காற்றிய அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
xiii) 1975ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட அனைத்துத் தமிழர் விரோத வன்முறைகளையும் விசாரித்து, ஈடுபட்டவர்கள், பின்னிருந்து பங்காற்றியவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும்.
14) மனித உரிமைகள் பாதுகாப்பு
i) மனித உரிமை அமைப்புகளை வலுப்படுத்துவதும் அனைத்து வகையான மனிதவுரிமைகளையும் பாது காப்பதும் மேம்படுத்துவதும். அரசினது கொள்கை இலக்குகள், பொருண்மை என எங்கெல்லாம் முன்வைக்கப்படுகிறதோ அந்த இடங்களில் ‘முன்னேற்றத்தை உணர்வது’ என்பதன் அளவீட்டை வரையறுக்க வேண்டும்.
ii) அரசாங்கத்தை அல்லது நாடாளுமன்றத் தகவலைப் பெறுவதில் ஏற்படும் பிணக்கில், குடிமக்களின் மனித உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகளின்போது, அவர்கள் தங்களுக்கான சட்ட அல்லது நீதிப்படியான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தல்.
iii) தனி நபரினது, ஒரு கூட்டினது, குழுவினது உரிமைகளை அரசமைப்பின் உட்கூறு ஒன்று உறுதிசெய்ய வேண்டும்.
iv) சரியான சமயத்தில் நீதி கிடைக்காமல் போவதும் மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டும்.
15) அரசினது கொள்கை விடயங்கள்
1) அரசின் தன்மை
இலங்கை நாடு மதச்சார்பற்ற, பல தேசிய இன- பல பண்பாட்டு - பன்னடுக்கு நிர்வாக முறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
• மேலும், இது, பல மத, பல தேசிய இன, பன்மைத்துவச் சமூகத்தை உள்ளடக்கியதான- சுதந்திரமான, இறையாண்மையுடைய, சுயேச்சையான, மதச்சார்பற்ற ஒரு ஜனநாயக நாடு என அங்கீகரிக்கப்பட வேண்டும். சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் (இச்சொல் அரசியலமைப்புச் சீர்திருத்தம் -2016 தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ அறிக்கையில் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது), வேடர்கள், பர்கர்கள், பிற சமூகங்கள் ஆகிய இந்நாட்டின் மக்கள் இந்த அரசின் மீது கூட்டுரிமை கொண்டிருக்கின்றனர்.
2) பெயர், கொடி, தேசிய கீதம்
அரசினது மதச்சார்பற்ற, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, மக்களை மையமாகக் கொண்ட தன்மை - நாட்டின் பெயர், தேசியக் கொடி, தேசிய கீதத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
3) மொழி
நாட்டின், நிர்வாக, நீதிவழங்கல் மொழிகளாகச் சிங்களமும் தமிழும் இருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மொழிக் கொள்கையைச் செயற்படுத்தல் உறுதிசெய்யப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் நிர்வாக மொழி தமிழாக இருக்க வேண்டும். அதேவேளை, இந்தப் பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியிலும் வாழும் சிறுபான்மையினர், சிங்களவர் அல்லது தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும். பல்லின மக்கள் வாழும் பகுதிகளில் இயன்றவரையில் உள்ளூர் நிர்வாகம், பிரதேச செயலகங்களில் இரட்டை மொழிப் பயன்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) மதம்: சிந்தனைச் சுதந்திரம், கூட்டு மனசாட்சி, குறிப்பிட்ட மதத்தில் நம்பிக்கை
இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கும். மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம். அரசினது பக்கமிருந்து அது பிரிக்கப்பட்டுத் தனியாக வைக்கப்பட வேண்டும்.
ஆ. எதிர்காலத்தைத் திட்டமிடல் : நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குடன் புதிய இலங்கையை உருவாக்குதல்
1) பொருளாதார மறுசீரமைப்பு
i) நாட்டை மேம்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள், துறைசார் வல்லுநர்கள், குடிமைச் சமூகத்தினர் ஆகியோரைக் கலந்தாலோசித்து, ஒரு தேசியத் திட்டத்தை உருவாக்குதல்.
ii) பொருளாதாரப் புவியியலை மறுவடிவமைப்புச் செய்தல்.
உலக வங்கியின் 2010 அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தபடி, பொருளாதாரப் புவியியலை மறுவடிவமைப்புச் செய்வது அடிப்படையான சீர்திருத்தங்களில் ஒன்று.
• பொருளாதார முன்னேற்றமானது, பொருளாதார நிலப்பரப்புகள் சீரில்லாமல் பெருகிய வகையில் ஒரு அடிப்படையான இடநிலை மாற்றத்துடன் சேர்ந்தது ஆகும்.
• கொழும்புவை மையமாகக்கொண்ட மேல் மாகாணப் பொருளாதார அடர்த்தி, பாதிக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. சந்தைச் சக்திகள் இந்தச் செறிவுக்குத் துணையாக இருக்கும் அதேவேளையில், வாழ்க்கைத் தரத்தைப் பேணவும் வளர்ச்சியைக் கொண்டதாகவும் அரசினது கொள்கைகள் இருக்க உதவவில்லை.
• இந்தச் சமமற்ற இடவாரியான ஏற்றத்தாழ்வு, கல்வி, மருத்துவ சேவைகளைப் பெறுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
iii) எனவே, குறித்த பகுதிசார்ந்த சவால்களை எதிர்கொள்ளும்படி கொள்கைகளை உண்டாக்குவது அவசரத் தேவை ஆகும். இந்த நோக்கிலேயே, அறிவியல் முறைப்படி மாகாண, மாவட்ட எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என நாம் அரசைக் கோருகிறோம். நடப்பு எல்லைகள் காலனியக் காலத்தில் வரையறுக்கப்பட்டவை. அதை மாற்றி, எமது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த, புவியியல், பண்பாட்டு, மக்கள்பரம்பல், மொழிரீதியான குறிப்பான தன்மை, இயற்கைவளங்கள் உள்ள பகுதிகள் என்பனவற்றைக் கணக்கில் எடுத்து, குறித்த பகுதிகளை மேம்படுத்த அதிகாரம் வழங்க வேண்டும்.
iv) எல்லை மறுவரையறைச் செயல்முறையானது, இனவாதப் பெரும்பான்மைத் தேசியவாத மேலாதிக்க உள்நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
2) நிர்வாக எந்திரத்தைச் சீர்திருத்துதல்
i) அரசியல் கட்சிகள், துறைசார் வல்லுநர்கள், குடிமைச் சமூகத்துடன் கலந்துபேசி, புதிய கொள்கை, நடத்தை விதிகள் வரைவை உருவாக்க வேண்டும்.
ii) அரச நிர்வாக அமைப்புச் சீர்திருத்தமானது புதிய எல்லை மறுவரையறைச் செயல்முறைக்கு இணையாக இருக்க வேண்டும்.
3) அரசியல் அமைப்பைச் சீர்திருத்துதல்
i) அரசியல் கட்சிகள், துறைசார் வல்லுநர்கள், குடிமைச் சமூகத்தினருடன் கலந்துபேசி, மக்கள் மையப் புதிய அரசமைப்பை உருவாக்குதல்.
ii) தேவைப்படும் வேளையில் எமது விரிவான திட்டக் கருத்துருக்களை முன்வைப்போம்.
iii) புதிய அமைப்பானது, மையத்தில் அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதை அனுமதிக்கக் கூடாது.
iv) அதிகாரங்கள், மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேசம், கிராம மட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனூடாக ஒவ்வொரு மட்டத்திலும் சரி தவறுகளைச் சரிபார்க்கும் இயங்குமுறையை உருவாக்க முடியும்.
v) அதிகாரப் பகிர்வு என்பது ஒரு குடிமகர் மற்றொருவரைவிட அனுகூலம் பெறுவதாக இருக்கக் கூடாது. மாறாக, அடித்தட்டு மக்களிடம் அதிகாரத்தைக் கொண்டுசேர்க்கும் செயல்முறையாக இருக்க வேண்டும்.
4) தேர்தல் முறைச் சீர்திருத்தம்
i) அரசியல் கட்சிகள், துறைசார் வல்லுநர்கள், குடிமைச் சமூகத்தினருடன் ஆலோசித்துப் புதிய தேர்தல் முறைமையை உருவாக்குதல்.
ii) அதிகாரத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும்படியாகவும் சிறுபான்மையாக உள்ள தேசிய இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப் படுத்தும்படியாகவும் தற்போதைய தேர்தல் வட்டார எல்லைகள் ஒற்றைத் தரப்புக்கான சாதகமின்றி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
iii) புதிய தேர்தல் முறையானது அனைத்துத் தேசிய இனத்தவர்கள், இளைஞர்கள், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதாக இருக்க வேண்டும்.
இந்த ஆவணம், இலங்கையில் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் அமைப்புகள், செயற்பாட்டாளர்களுடனான அரசியல் உரையாடலுக்கு தொகுக்கப்பட்ட ஆவணம் என்பதுடன், இலங்கையின் சமூக அரசியல் விடயங்களில் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட அனைத்துத் தரப்புகளுடனும் உரையாடுவதற்கான முன் ஆவணமாகும். இவை தொடர்பான உரையாடலின் பின், விரிவான ஒரு தொகுப்பு ஆவணத்தினைக் கூட்டுப்பங்களிப்புகளுடன் தொகுத்து முன்வைப்பதே எமது அடுத்த இலக்காகும். உங்கள் அனைவரினதும் கருத்துக்களை எழுத்து மூலம் எதிர்பார்க்கிறோம்.
17.07.2022
எம். பௌசர்: ஒருங்கிணைப்பாளர், இனவாதத்திற்கு எதிரானதும், ஜனநாயகத்திற்குமான மக்கள் இயக்கம், ஐக்கிய ராச்சியம்.
தமிழில்: இர.இரா. தமிழ்க்கனல்
மின்னஞ்சல்: pmardeurope@gmail.com