வெள்ளைச் சட்டையைத் துவைக்கும் கலை
வெள்ளைச் சட்டையைத் துவைக்கும் கலை
முதலில் வெள்ளைச் சட்டையை
‘தனியேயொரு’ பாத்திரத்தில் சுத்தமான நீரில் மூழ்கடிக்க வேண்டும்
அதற்கும்முன் அந்தப் பாத்திரத்தைச் சுத்தமாகக் கழுவியிருக்க வேண்டும்
விளம்பரங்களை நம்பாமல் நீல மஞ்சள் வெள்ளை வில்லைகளைத் தவிர்த்து
‘அசல்’ நிறத்தைக் கொடுக்கும் பழைய புதிய சலவை நுட்பங்களைத் தேடிக் கற்றுச் செயல்படுதல் இரண்டாம் கட்டம்
துல்லியமாகக் கணக்கிடப்பட்ட நேரம் ஊற வைத்தல் கட்டம் மூன்று
பிரஷ் இன்றிக் கையாலன்றித் துணியைத் துணியாலே கசக்குவது அடுத்த படலம்
சிறு பிசிறும் இல்லாத இடத்தில்
முன்கூட்டியே சோப்பிட்டுக் கழுவிய இடத்தில் அழுக்குப் போகும்வரை கும்மி
இரண்டல்லது நான்கு நீர் விட்டுக் கழுவி
மறுபடி ஒருமுறை பாத்திரத்தைக் கழுவி அதில் வைக்க வேண்டும்
எல்லாவற்றிற்கும் ஆதியில் கைகளை நான்குமுறை கழுவியதையே
இப்போது திரும்பச் செய்வது நல்லது
இனி காய வைக்கும் படிநிலை
துவைப்பதைவிடவும் கடினமான செயல்முறை
அதிகம் வெய்யிலும் நிழலும் இல்லாத இடம்
கொடியில் துரும்புகளோ பக்கத்தில் அடர்த்தியான சாயம்போகும் வாய்ப்புள்ள துணிகளோ இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு நோட்டம்...
துணியில் ஈரப்பிசுக்கிருக்கும்வரை காற்றில் தூசுகள் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதைத் தடுக்கவோர் நோட்டம்...
மீறி ஒட்டினால் அதிரடியான அதேநேரம் கீழே விழுந்துவிடாத கவனத்தோடு உதறல்
கைதவறினால் மொத்தச் செயல்முறை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென்பதால் இந்த கட்டத்தின் கூடுதல் கவனம்.
கிளிப்புகள் ஹேங்கர்கள்
பிளாஸ்டிக்கென்றால் வெய்யிலில் வெடித்துப் பொடித்துகள்களை உதிர்க்காமலும்
இரும்பென்றால் துருசானதைத் தவிர்ப்பதும் இந்தப் பருவத்தில் முக்கியம்
உலரும்வரை கூட இருந்து கவனித்துக் கொள்ளுதல் உத்தமம்
உலர்ந்ததும் மீண்டுமொருமுறை கைகழுவி வெண் சட்டையை
மிகுமிகு கவனத்தோடு எடுத்து
அடுத்தடுத்த கட்டங்களான இஸ்திரி மடித்தல் அடுக்குதல்
எல்லாம் அதே மிகுமிகு கவனங்களோடு...
தவறுதலாக இந்த மொத்தப் பொறுப்பை
அப்பா அம்மா அக்கா அண்ணன் தம்பி அல்லது மனைவி அல்லது யாரிடமும் ஒப்படைப்பது பரிந்துரைக்குரியதல்ல
கிராமப் பள்ளிக்கூட ஆசிரியர்கள்
சிறு நிலவுடைமையாளர்கள்
குறு அரசியல் பழகுநர்கள்
கொஞ்சம் கவிஞ எழுத்தாளப் பயித்தியங்கள்
வெட்டி மைனர்கள்
சமூக சேவகர்கள்
அரிதிலும் அரிதாகச் சில வழக்குரைஞர்கள்
இவர்களெல்லாம் இந்தக் கலையில்
கால அவகாசத்தில் தேறிவிடுகிறார்கள்
கருப்பாக இருப்பதற்கு ஈடுகட்டிக் கம்பீரமாகக் காட்ட வெள்ளையைத் தேர்ந்தவர்களும்
உள்ளின் அழுக்கை மூடி மறைக்கும் எத்துவாளிகளில் சிலரும
அவ்வப்போது தொழில்முறை ஆட்கள் அளவிற்கு மேம்பட்டுவிடுகிறார்கள்
ஆனாலும்
சிறுவயதில் அழுக்குச் சட்டைக்குக் கேலி பேசப்பட்டவர்கள்
அக்குளில் கிழிந்த சட்டையணிந்து வந்தததற்கு
மொத்த வகுப்புக்கும் முன் கைதூக்கி நிற்க வைக்கப்பட்டவர்கள் மட்டும்
அசல் கலைஞர்களாகிவிடுகிறார்கள்.
மின்னஞ்சல்: prismshiva@gmail.com