கனவு மெய்ப்படும் காலம்
சென்னைப் புத்தகக் கண்காட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்று உருவாக்கிய அச்சத்தின் நிழலில் நடைபெற்றது. இந்த ஆண்டும் அது தொடருமோ என்னும் கலக்கம் டிசம்பர் மாதத்தில் எட்டிப் பார்த்தாலும் அப்படி எதுவும் நிகழாமல் இந்த ஆண்டின் புத்தகக் காட்சி நடந்து முடிந்திருக்கிறது. ஜனவரி 6முதல் 22வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 16,17,18 தேதிகளில் பன்னாட்டுப் புத்தகக் காட்சியும் சென்னையில் முதல் முறையாக நடந்தது. அது சமகாலத் தமிழர்களின் புத்தகப் பண்பாட்டின் ஆகப் பெரிய வெளிப்பாடான சென்னைப் புத்தகக் கண்காட்சியின் வரவேற்கத் தகுந்த அம்சங்களையும் போதாமைகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியைத் தமிழ்ப் புத்தகப் பண்பாட்டின் அடையாளமாகக் குறிப்பிடும்போது கண்காட்சி வளாகத்தையும் கண்காட்சிக்குள் நிகழும் சலனங்களையும் மட்டுமின்றி, இந்தக் கண்காட்சியை ஒட்டிப் பரந்துபட்ட தமிழ்ச் சூழலில் நிகழும் சலனங்களையும் சேர்த்தே கணக்கில் கொள்ள வேண்டும். எனினும், கண்காட்சிக்கு வெளியே நடப்பவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். முதல் முறை என்பதற்கான சுவடு தெரியாத அளவிற்கு இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. பன்னாட்டுப் பதிப்பாளர்கள் பலரும் வருகைபுரிவதற்கான ஏற்பாடுகளாகட்டும், அப்படி வருபவர்களுக்கு அந்தப் பயணத்தைப் பயனுள்ளதாக்குவதற்கான சந்திப்பு ஏற்பாடுகளாகட்டும், அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறின. பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் இந்தக் கண்காட்சி சர்வதேசத் தரத்தில் நடந்ததாகப் பாராட்டுகிறார்கள். கண்காட்சியில் கலந்துகொள்ள வந்த பன்னாட்டுப் பதிப்பாளர்களும் இக்கருத்தை வழிமொழிந்துள்ளார்கள். பதிப்பாளர்களுக்கிடையிலான தனிப்பட்ட சந்திப்புகள் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு நடைபெற்றாலும் பொது அரங்குகளில் நிகழ்ந்த சந்திப்புகளை ஒழுங்கு செய்வதில் சில பிசிறுகள் இருந்தன. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பலாம்.
பன்னாட்டுக் கண்காட்சிகள் குறித்த அனுபவமும் அறிதலும் கொண்ட ‘ஆழி’ செந்தில்நாதன் போன்ற பதிப்பாளர்களை ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு வேண்டிய ஆதரவை அளித்து இந்தக் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. கண்காட்சியின் ஒருங்கிணைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட இளம் பதிப்பாளர்களான முரளி கண்ணதாசன், கார்த்தி புகழேந்தி, தடாகம் அமுதரசன், நம் பதிப்பகம் இவள்பாரதி, கவிதா பதிப்பகம் கவிதா, கற்பகம் பதிப்பக ஜெயேந்திரன் ஆகியோர் கண்காட்சி பன்னாட்டுத் தரத்தில் மிளிரப் பங்களித்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் காலச்சுவடு தன் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
அரசு ஈடுபடும் பண்பாட்டுச் செயல்பாடுகள் மேம்போக்கானதாகவும் மூல நோக்கத்தை ஓரங்கட்டிவிட்டு அரசியல் கணக்குகளுக்கும் உள்ளீடற்ற பகட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அமையும் பொதுப்போக்கினின்று மாறுபட்டு அமைந்தது இந்தியப் பின்னணியில் பேராச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டுபோய் சென்னையைப் பன்னாட்டுப் புத்தகப் பண்பாட்டின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாற்றும் கனவுடன் இந்தச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகின் கவனத்தைக் கவர்வதற்கான தகுதிகள் தமிழுக்கு இருந்தாலும் தமிழை அதற்குரிய இடத்தில் நிறுத்துவதற்கான திறம் தமிழர்க்கு இல்லாத நிலை விரைவில் மாறும் என்னும் நம்பிக்கையை இந்தச் சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி அளித்திருக்கிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டிச் சில அறிவிப்புகளை வெளியிடுவதுடன் தன்னுடைய பங்களிப்பை அரசு முடித்துக்கொள்ளும் போக்கை இப்போதைய திமுக அரசு மாற்றிவருகிறது. தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழல்களுக்குக் கணிசமான பங்களித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்தல், இலக்கியத் திருவிழாக்களை நடத்துதல், புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நடத்துவதற்காக நிதியுதவி வழங்குதல் என இந்த அரசின் செயல்பாடுகள் ஆரோக்கியமான விதத்தில் விரிவடைந்துகொண்டேபோகின்றன.
இந்த ஆண்டின் புத்தகக் காட்சியையொட்டிச் சென்னையில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா அதற்கான முக்கியமான அடையாளமாக விளங்கியது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்த மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்துச் சர்ச்சைகளும் மாற்று யோசனைகளும் எழுந்தாலும் இந்தத் திருவிழா பெருமளவிற்குப் பாராட்டத்தக்க வகையிலேயே நடந்தது என்பதில் ஐயமில்லை. தகுதி இருந்தும் தேர்வாகாதவர்கள் என்னும் பட்டியலை எத்தகைய தேர்வின்போதும் முன்வைக்கலாம். அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அழைக்கப்படாதவர்களே அதிகமாக இருப்பார்கள் என்பது எளிமையானதோர் உண்மை. தவிர, அழைப்பு விடுக்கப்பட்டுப் பல்வேறு காரணங்களால் அதை ஏற்க முடியாதவர்கள் யாவர் என்பது தெரியாத நிலையில் கலந்துகொண்டவர்களின் பட்டியலை மட்டும் பார்த்து விமர்சிப்பது முறையல்ல. எத்தகைய செயல்பாடுகள் குறித்தும் மனக்குறைகளும் விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அந்தச் செயல்பாடுகள் தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அந்த விமர்சனங்கள் அமைய வேண்டும்.
அழைக்கப்படாதவர்கள் பட்டியலை முன்வைத்துக் குரலை எழுப்புவதற்குப் பதிலாக, அழைக்கப்பட்டவர்களின் தர நிலைகளைப் பார்ப்பதே விவேகமானதாகும். அப்படிப் பார்க்கையில் அரசு நடத்திய இந்த இலக்கியத் திருவிழாவின் தேர்வுகளில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. தமிழின் மேன்மைக்கும் பெருமைகளுக்கும் சகல விதங்களிலும் காத்திரமாகப் பங்களித்துவரும் நவீன இலக்கிய ஆளுமைகள் பலர் இந்தத் திருவிழாவில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசியல் களத்தில் இதுகாறும் நிகழ்ந்திராத அதிசயம் இது. இதை அங்கீகரித்த பிறகே விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் முன்வைக்க வேண்டும். அது மட்டுமின்றி, தனிநபர்கள் சார்ந்ததாக அல்லாமல் பொதுவான போக்குகள், அணுகுமுறைகள் குறித்த யோசனைகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இன்னாரை ஏன் அழைக்கவில்லை என்பதற்குப் பதிலாக, பெண்கள், தலித்துகள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்றவர்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதா என்னும் கேள்வியை எழுப்பலாம். இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் எனத் தெரிவதால் விடுபட்டவர்கள் குறித்த மனக்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் யோசனைகளை முன்வைப்பதே இத்தகைய செயல்பாடுகளை வலுப்படுத்த உதவும்.
இந்த ஆக்கப்பூர்வமான சலனங்கள் எவையும் பபாசி நடத்தும் சென்னைப் புத்தகக் காட்சியில் பிரதிபலிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியை 6 கோடி ரூபாய் செலவில் நடத்திய அரசு பபாசி நடத்தும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கென ஆண்டுதோறும் 75 லட்சம் மானியமாக வழங்குகிறது. உள்கட்டமைப்பையும் வாசகர்களுக்கான வசதிகளையும் மேம்படுத்துவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. கழிவறை ஏற்பாடுகள் கேவலம் என்னும் நிலையிலிருந்து சற்று முன்னேறி மோசம் என்னும் நிலையை அடைந்திருக்கிறது. கண்காட்சிக்காகவே சென்னைக்கு வந்த பெண் எழுத்தாளர் ஒருவர், கழிவறையை நினைத்தால் அச்சமாக இருப்பதால் மாலையில் மட்டுமே வர முடிவதாகக் குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் ஆகியோர் கண்காட்சியினுள் அதிகச் சிரமமின்றி வந்துசெல்வதற்கான ஏற்பாடுகள் எதையும் கண்காட்சி வளாகத்தினுள் பார்க்க முடியவில்லை. இவர்களுக்கெல்லாம் முடிந்தவரை இடையூறுகளை ஏற்படுத்தும் சூழலையே காண முடிந்தது. புத்தகங்கள், எழுத்தாளர்கள் ஆகியோரிடமிருந்து வாசகர்களின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய பொது நிகழ்வுகளுக்கும் குறைவில்லை. அரங்கங்களுக்கான எண்களை வழங்குவதிலும் அவற்றை வரிசைகளில் அமைப்பதிலும் வாசகர்களைக் குழப்பும் நடைமுறையையே பபாசி பின்பற்றுகிறது.
வழக்கமான இந்தக் குறைகளைத் தவிர, நவீன ஜனநாயக அணுகுமுறைக்கு முரணான பபாசியின் போக்குகள் இந்தக் கண்காட்சியிலும் அம்பலப்பட்டன. 2020 கண்காட்சியில் பபாசியின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போக்கைக் கண்டித்து எழுத்தாளர் அமைப்புகள் பலவும் போராட்டம் நடத்தியது நினைவிருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் நோக்குடைய நூல்களை வெளியிட்டுவரும் பதிப்பகங்கள் சிலவற்றுக்குச் சென்னைப் புத்தகக் காட்சியில் அரங்கம் ஒதுக்கும்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டது. “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உத்தரவு நகலில், அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெறுகின்ற புத்தகக் கண்காட்சிகளில் தடாகம், வாய்ஸ் ஆஃப் புத்தா ஆகிய பதிப்பகங்களுக்கும் பிற ஆதிதிராவிட, பழங்குடியின பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் விற்பனை அரங்குகள் ஒதுக்கப்படுவதை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதற்காக ஆணையம் பபாசியைக் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டது. சால்ட், அறம், உயிர் போன்ற பதிப்பகங்களுக்கு அரங்கம் ஒதுக்காததைக் கண்டிக்கும் குரல்கள் உரக்க எழுந்தன. அரங்கம் தர மறுத்ததால், சால்ட் பதிப்பகம் கண்காட்சிக்கு வெளியே நடைபாதையில் கடை போட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. வழக்கமான சாக்குப்போக்குகளைத் தாண்டி பபாசியிடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வரவில்லை.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் தங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை என்று அறம் பதிப்பகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இடம் தராதது மட்டுமின்றித் தங்களை மரியாதைக் குறைவாகவும் நடத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள். சமூக நீதி படைப்பாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு அரங்கம் ஒதுக்காததையும் உறுப்பினர்களாகச் சேர்க்காததையும் பபாசி அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்காமல் இருப்பதையும் கண்டித்துப் பாதிக்கப்பட்ட பதிப்பகங்கள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. தலித் பதிப்பகங்களுக்கு இடம் ஒதுக்குவதில் வெளிப்பட்ட ஒவ்வாமைகளையும் தேவையற்ற தாமதங்களையும் அந்தப் பதிப்பகங்கள் பதிவுசெய்திருக்கின்றன.
பெண்ணிய நோக்கிலான நூல்களை வெளியிடும் ஹர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தாரும் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. பதிப்பகத்தின் தோழிகள் அரங்கின் முன் நின்று உரக்கச் சிரிப்பதற்கு பபாசி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ‘பொம்பள சிரிச்சா போச்சு’ என்னும் தமிழ்ப் பண்பாட்டுப் பார்வையிலிருந்து விலகி 100 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி வெளிப்படுத்திய புதுமைப்பெண்ணுக்கான வரையறைகளை பபாசி கைக்கொள்ள வேண்டுமென்பது நமது எதிர்பார்ப்பு.
அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறைக்குப் பதிலாகச் சிலரை விலக்கும் போக்கிற்கான புதிய எடுத்துக்காட்டாகப் பால் புதுமையினருக்கான நூல்களை விற்பனை செய்யும் குயர் பப்ளிகேஷன்ஸ் அரங்கம் தொடர்பான அணுகுமுறையைச் சுட்டலாம். இந்தப் பதிப்பகம் கண்காட்சியினுள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த அரங்கின் அருகில் இருந்த நேஷனல் பப்ளிகேஷன்ஸ் என்னும் அரங்கத்தினர் மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பான நூல்களைத் தங்கள் அரங்கிற்கு அருகில் வைத்து விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஜனநாயகச் சூழலில் சட்டம் அனுமதிக்கும் எந்த நூலையும் விற்கும் உரிமை உங்களைப் போலவே அவர்களுக்கும் உள்ளது என்று அவர்களிடம் பதில் சொல்லியிருக்க வேண்டிய பபாசி அமைப்பு குயர் பப்ளிகேஷன்ஸைக் கண்டித்ததுடன் அவர்களுடைய அரங்கை வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியிலும் இறங்கியதாகத் தெரிகிறது. ஒவ்வாமையும் தீண்டாமையும் கைகோக்கும் இந்த முயற்சி பலிக்கவில்லை என்றாலும் இந்தச் செயல்பாடு ‘விலக்கும்’ மனப்பான்மையை அம்பலப்படுதுகிறது. குயர் பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த மாற்றுப் பாலினத்தவர்களைச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சேலை கட்டிவருமாறு கண்காட்சியின் பங்கேற்பாளர்கள் சிலரே கூறியது பதிப்பாளர்களிடையே நிலவும் பிற்போக்கு மனநிலையைப் பிரதிபலித்தது.
இலக்கியம் சார்ந்தும் புத்தகப் பண்பாடு சார்ந்தும் அரசு ஆரோக்கியமான பல செயல்பாடுகளை மேற்கொண்டுவருகையில் பபாசி காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு அணுகுமுறையுடனும் ஜனநாயக விரோதத் தன்மையுடனும் விளிம்பு நிலையில் உள்ள பிரிவினர் குறித்த ஒவ்வாமையுடனும் நடந்துகொள்வதைக் கைவிட வேண்டும். பலவிதமான கெடுபிடிகளும் வாசகர்களின் நடமாட்டத்தை முடக்கும் வகையிலான கட்டுப்பாடுகளும் இன்னமும் தொடர்வது வருத்தத்திற்குரியது.
புத்தகப் பண்பாட்டை அதன் பன்முகத்தன்மையுடன் மதித்து வலுப்படுத்துவதற்கான பார்வையையும் அணுகுமுறையையும் பபாசி கைக்கொண்டால் சென்னைப் புத்தகக் காட்சி முழுவதையும் சர்வதேசத் தரத்தில் நடத்தி, சர்வதேசப் புத்தகப் பண்பாட்டின் வரைபடத்தில் சென்னை முக்கியமான இடத்தைப் பெறச்செய்யலாம். பபாசி போன்றதொரு அமைப்பின் அடிப்படை நோக்கமாகவும் இலக்காகவும் இருக்க வேண்டிய கனவு இது. இந்தக் கனவு நனவாவதற்கான சூழல் கனிந்துவரும் நேரத்தில் பபாசி அதற்கு நேரெதிர்த் திசையில் பயணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.