ஸ்ரீநேசன் கவிதைகள் மொழியமைதியைக் கலைத்த கவிஞன்
தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதியவர்களுள் ஸ்ரீநேசன் குறிப்பிடத்தக்கவர். 1997இல் ‘சிக்கல்’ என்ற இவரது முதல் கவிதை கனவு இதழில் பிரசுரமாகியிருக்கிறது. அதனையே தொடக்கமாகக் கருதினால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை எழுதி வருகிறார். ‘காலத்தின் முன் ஒரு செடி’ (2002), ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ (2010) ‘மூன்று பாட்டிகள்’ (2021) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது எழுத்து முழுக்க முழுக்கக் கவிதை சார்ந்ததே. ‘கவிஞயம்’ என்ற கவிதைகள் குறித்த கட்டுரை நூலொன்றும் வெளிவந்துள்ளது. இவரது வெளியீடுகளை வைத்துப் பார்க்கும்போது மிக மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். மாதத்திற்கு ஒரு கவிதை எழுதினாலே போதும் என்ற மனநிலை உடையவர் ஸ்ரீநேசன். ‘பொன்புனை பகழி செப்பங் கொண்மார் / உகிர்நுதி புரட்டு மோசை போல’ (பாடல் 16) என்ற வரிகள் குறுந்தொகையில் வருகின்றன. ஆறலைக் கள்வர்கள் பாலைநிலத்தின் வழியாகக் கடந்து செல்பவர்களின் பொருட்களைக் கொள்ளையடிக்க எப்போதும் தம் அம்புகளின் நுனியை நகத்தைக்கொண்டு பரிசோதித்துக்கொண