எழுத்து என் பொழுதுகளைப் பொருளுடையதாக மாற்றுகிறது
கன்னடப் படைப்புகளைத் தமிழிலும் தமிழ்ப் படைப்புகளைக் கன்னடத்திலும் மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கும் இடையில் உறவுப் பாலமாக விளங்குபவர் கே. நல்லதம்பி. 2022ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருதாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கன்னட எழுத்தாளர் நேமிசந்த் எழுதிய ‘யாத்வஷேம்’ நாவலின் தமிழாக்கத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர் நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்ட இந்நாவலின் மொழியாக்கம் 2020ஆம் ஆண்டில் ‘எதிர்’ வெளியீடாக வெளிவந்து வாசகக் கவனத்தைப் பெற்றது. எழுத்தாளர் லங்கேஷ் எழுதிய குறுங்கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பாக 2013இல் வெளிவந்த ‘மொட்டு விரியும் சத்தம்’ என்னும் தொகுதியே நல்லதம்பியின் முதல் முயற்சியாகும். அதைத் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளில் பதினாறு கன்னட நூல்களைத் தமிழுக்கும், பத்துத் தமிழ் நூல்களைக்