தமிழ்ச் சொல்லடைவு: புதிய திருப்பமும் புதிய திசையும்
திருக்குறள்
பகுப்பாய்வுக் கோவை
பழநிச்சாமி. மு
வெளியீடு:
பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகம்,
புதுதில்லி
பக், 440
ரூ. 400
செறிவும் ஆழமும் மிகுந்த கூரிய உயர்நிலை ஆய்வுகளுக்கு அகரவரிசைப் பெயர்-தலைப்பு-பக்கப் பட்டியல் (index), கலைச்சொல் விளக்கக் கோவை (glossary), சொல்லடைவு (concordance) ஆகியவை பெரிதும் கைகொடுக்கக்கூடிய ஆய்வுக் கருவிகளாகும். அகரவரிசை பெயர்-தலைப்பு-பக்கப் பட்டியல் வழக்கமாக ஒரு நூலின் பின் இணைப்பாக அமையும். ஒவ்வொரு சொல்லும்/சொற்றொடரும் அந்நூலில் எந்தெந்த இடங்களில் காணப்படுகின்றன என்று காட்ட அது பக்க எண்களைத் தரும். அவை எந்தெந்தச் சூழல்களில் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி எதுவும் பேசாது. தொடர்புடைய மூல வரிகளையோ வாக்கியங்களையோ தராது.
கலைச்சொல் விளக்கக் கோவையும் அகரவரிசையில் ஒரு நூலின் பின் இணைப்பாக வருகிறது. ஒவ்வொரு கலைச்சொல்லுக்குமான குறுகிய வரையறையை, விளக்கத்தை அது ஓரிரு எடுத்துக்காட்டுகளுடன் தருகிறது. நூலில் அவை இடம்பெறும் பக்க எண்களையோ வரிகளையோ வேறு தகவல்களையோ தராது.
ஒரு சொல்லடைவு குறிப்பிட்ட ஆசிரியர் ஒருவரின் குறிப்பிட்ட ஒரு அல்லது அனைத்து மூல நூல்களிலும் அல்லது ஒரு காலகட்டத்தின் அனைத்து மூல நூல்களிலும் உள்ள அனைத்துச் சொற்களையும்/சொற்றொடர்களையும் அகர வரிசையில் பட்டியலிடுகிறது. மேலும் ஒவ்வொரு சொல்லும்/சொற்றொடரும் எந்தெந்த மூல நூலில் எத்தனை முறைகள், எந்தெந்த இடங்களில் காணப்படுகின்றன என்பதைக் குறிப்பிட முறைகளின் மொத்த எண்ணிக்கையைத் தரக்கூடும். ஒவ்வொரு முறைக்குமான மூல நூலின் குறுகிய பெயர், மூலப் பாடலின் எண், வரியின் எண் அல்லது பக்க எண், பத்தியின் எண், வாக்கியத்தின் எண் போன்ற துல்லியமான தகவல்களையும் தரும். மிகவும் விரிவான, செறிவான, ஆழமான ஒரு சொல்லடைவு ஒவ்வொரு சொல்லின்/சொற்றொடரின், இலக்கணப் பெயரையும் கூறுகளைப் பிரித்துக் காட்டி அவை பற்றிய இலக்கணத் தகவல்களையும் சுருக்கமான பொருள்களையும் தரும். பொதுவாக ஒரு சொல்லடைவு ஒரு நூலின் பின் இணைப்பாகச் சேர்க்கப்படாமல், தனிப்பட்ட ஒரு நூலாகவே வழங்கப்படுகிறது.
G.U. போப் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை 1886ஆம் ஆண்டு வெளியிட்டார். 75 பக்கங்களில் Concor
dance and Lexicon of the Kural and Naladiyar என்ற பெயரில் சேர்க்கப்பட்ட அதனுடைய பின் இணைப்பைத் திருக்குறளின் முதல் தமிழ்ச் சொல்லடைவு என்று கருதலாம். அதைத் தொடர்ந்து வேலாயுதம் பிள்ளை. எஸ் (1954), கந்தையா பிள்ளை, என்.சி. (1961), இந்தோலஜி பிரஞ்சு மையம் (1967), செல்லமுத்து, கே.சி. & பாஸ்கரன். எஸ் (1986), பாண்டியராஜா. பி (2014), தமிழ் இணையக் கல்விக் கழகம் எனப் பல பெயர்களில் திருக்குறள் சொல்லடைவுகள் வெளிவந்துள்ளன.
அவையனைத்துமே 1330 குறட்பாக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் பட்டியல்களாகும். வள்ளுவர் காலத்திய சொற்களின் இலக்கணக் கூறுகள், முன்னும் பின்னும் வரும் சொல் ஒட்டுகள் (affixes)/ஓரிரு சொற்கள், குறுகிய சொற்பொருள்கள் ஆகியவற்றை அவை மையப்படுத்துகின்றன. மேலே சொன்ன மொழிசார் துல்லியத் தகவல்களை அதிகமாகவோ குறைவாகவோ தருகின்றன. எடுத்துக்காட்டாக, வேலாயுதம் பிள்ளையின் ‘திருக்குறட் சொல்லடைவு’ அறிவு என்ற சொல்லுக்குத் தரும் பதிவு:
அறிவு [அறி1, வ்3, உ2] (தொ. ப.) == உணர்வு 61, 68, 123,140, 175, 179, 287, 331, 355, 358, 372, 373, 382, 396, 404, 421, 422, 423, 424, 425, 426, 427, 430, 441, 452, 454, 463, 507, 513, 618, 622, 682, 684, 816, 841, 842, 843, 846, 847,869, 1022, 1140, 1153; {அறிவுடைமை} == உண்மையறிவுடையனாதல் அதி 43, {புல்லறிவாண்மை} அதி. 85, {அலரறிவுறுத்தல்} அதி. 115, {குறிப்பறிவுறுத்தல்} அதி. 128.
அறிவு என்ற சொல்லடைவுத் தலைப்பதிவைத் தொடர்ந்துவரும் வேலாயுதனாரின் வைப்பு முறையை நாம் இவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்: அறி1 – எண் 1 அறி-யைப் பகுதி என்னும், உ2 - எண் 2 உ-வை விகுதி என்னும், வ்3 - எண் 3 வ்-வை இடைநிலை என்னும் பாரம்பரியத் தமிழ் இலக்கணப் பகுபத முடிபுகளைத் தருகின்றன; (தொ.ப): தொழிற்பண்புப் பெயர்; உணர்வு என்பது அறிவு என்ற தலைப் பதிவின் பொருளாகும்; 61, 68, 123,140, … 1022, 1140, 1153 என்பன குறட்பாக்களின் எண்களாகும்; {அறிவுடைமை}, {புல்லறிவாண்மை}, {குறிப்பறிவுறுத்தல்}, {அலரறிவுறுத்தல்} என்பன குறளதிகாரத் தலைப்புகளாகும்; அதி. 43, அதி. 85, அதி. 115, அதி. 128 என்பன குறளதிகார எண்களாகும். == என்னும் குறி சமனிக் குறியாகும். பின்னே உள்ள சொல் முன்னே உள்ள சொல்லின் சமனிப் பொருளாகும். இப்படிப்பட்ட 4303 பதிவுகள் இச்சொல்லடைவில் உள்ளன.
தமிழ் இணையக் கல்விக்கழகத் திருக்குறள் சொல்லடைவு எளிமையான முறையில் அறிவு என்ற பதிவுக்குக் குறளதிகார எண்களையும் குறட்பாக்களின் எண்களையும் தந்துசெல்கிறது. வேறு தகவல்கள் எதையும் தரவில்லை. பாண்டியராஜா உருவாக்கியுள்ள இன்னொரு திருக்குறள் தொடரடைவு இணைய நூல் அறிவு என்ற அதே தலைப்பதிவைத் தனியாக ஒரு வரியில் இவ்வாறு தருகிறது: அறிவு (22). அதாவது அறிவு என்ற சொல் மொத்தம் 22 முறைகள் குறட்பாக்களில் வந்துள்ளன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் தலைப்பதிவின் கீழே அதிகாரம், பாக்களுடைய எண்களோடு ஏறு வரிசையில் 22 முறைகளுக்குமான குறட்பாக்கள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. இலக்கணக் குறிப்புகள், பொருள் போன்ற வேறு தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.
இதுவரை வெளிவந்துள்ள குறள் சொல்லடைவுகள் அனைத்தும் G.U. போப் தொடங்கிவைத்த சொல்லடைவுப் பாரம்பரியத்தின் நீட்சிகளாகவே உள்ளன. வள்ளுவனார் காலத்துத் தமிழ் மொழிசார் கூறுகளையும் இலக்கணக் குறிப்புகளையும் அவை பெரிதும் முன்னிலைப்படுத்தும் ஆய்வுகளாக அமைந்துள்ளன. அத்தகைய மேல் ஆய்வுகளுக்கு அவை பெரிதும் பயன்படுகின்றன.
தற்போது மதிப்புரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை மேலே விவரித்த தமிழ்ச் சொல்லடைவுப் பாரம்பரியத்தின் இன்னொரு நீட்சியாக இல்லை. அக்காலத்திய ஒரு மொழி ஆவணமாகத் திருக்குறளை அது அணுகவில்லை. குறுந்தொகைக்கு உரை எழுதிய உ.வே.சா.வின் முன் சேர்க்கைகளுள் ஒன்றாகிய ‘நூலாராய்ச்சி’ என்ற பகுதியில், அவர் சங்ககால வாழ்வியல் செய்திகள் பலவற்றை (சிறு குறிப்புகளோடு) இவ்வாறு பட்டியலிடுகிறார்: ஐவகை நிலச் செய்திகள், பொழுதுகள், மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், அன்பு, அன்பு வாழ்க்கை, உபகாரிகள், இடங்கள், பண்டைக் காலத்து மக்கள் வாழ்க்கை நிலை, புலவர்கள், தெய்வப் பெயர்கள், இன்னபிற. ஆனால் எந்தெந்தக் குறுந்தொகைப் பாடல்களில் அவை இடம்பெற்றுள்ளன என்ற பதிவுகளைத் தரவில்லை.
திருக்குறள் பகுப்பாய்வுக் கோவையின் நூலாசிரியரோ வள்ளுவர் காலத்து வாழ்வியல் கூறுகள் பலவற்றை இவ்வாறு அட்டவணைப்படுத்துகிறார்: இறைவன், பேய், அவ்வுலகக் குறிப்புகள், சந்திரன் – மதி, கருவிகள், பாத்திரம், ஊர்தி, விலங்குகள், பறவைகள், பூக்கள், மரம், தாவரம், உணவுப் பண்டங்கள், அமிழ்து, நஞ்சு, கள், நீர்நிலைகள், எரி – நெருப்பு – அழல், கூடும் இடங்கள், பொழுதுபோக்கு – விளையாட்டு, கண்ணீர், அணிகலன்கள், புலவர்கள், பேதையர், உடல் உறுப்புகள், சமுதாய மாந்தர், காலப் பிரிவுகள், அளவைகள் இன்னபிற. மேலே கண்ட வகைமைகள் இடம்பெறும் குறட்பாக்களின் எண்களைத் தருவதோடு முழுப் பாக்களையும் அட்டவணைப் பெட்டியின் கீழே வரிசையாகத் தருகிறார்.
‘இங்கு என்னதான் சொல்லப்படுகிறது பார்ப்போமே’ என வாசிப்பைத் தூண்டும் விதமாக உள்ள பின்வருவன போன்ற வகைமைகளையும் சேர்த்துள்ளார்: ‘முரண்பாடா, உடன்பாடா, இரண்டுமில்லையா’, தொடர்பு காணத் தகும் குறட்பாக்கள், ஈற்றுச் சொல்லாக வருவன, ஒன்றுபட்ட ஈற்றடி பெற்றவை, அரிய சொல்லாட்சி, ஈற்றடி காட்டும் சொல்லாட்சித் திறன், சிறப்புச் செய்திகள் இன்னபிற.
நூலில் செறிவு மிகுந்த வேறொரு பகுதியையும் நாம் காணமுடிகிறது. அது ஒரு தனிப்பகுதியாகத் தரப்படவில்லை. என்றாலும் ஒரு புதிய திருப்பத்துடன், ஒரு புதிய திசையில் செல்கிறது. அதை நம்மால் உணர முடிகிறது. 1330 குறட்பாக்களிலும் வள்ளுவர் கையாண்டுள்ள, அனைத்துலகுக்கும் பொருந்தும் அறம்சார் கருப்பொருள்களையும் கருத்தாக்கங்களையும் மையப்படுத்தி அது அகழாய்வு செய்கிறது. அவற்றை வகைமைப்படுத்தி அட்டவணைப் பெட்டிக்குள் பாக்களின் எண்களோடு பட்டியலிடுகிறது. முழுப் பாக்களையும் அட்டவணைப் பெட்டியின் கீழே வரிசையாகத் தருகிறது. இப்பகுதியை இன்னொரு சொல்லடைவு எனச் சொல்லிக் கடந்துசென்றுவிட முடியாது. மாறாக, அதை ஒரு திருக்குறள் கருப்பொருள்/கருத்தாக்க அடைவு (Thematic concordance to Thirukkural) அல்லது தலைப்புசார் திருக்குறள் (Topical Thirukkural) என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
அறிவு என்ற பதிவுக்கு வேலாயுதனார், தமிழ் இணையக் கல்விக் கழகமும் பாண்டியராஜாவும் தந்துள்ள மொழிசார் சொல்லடைவுத் தகவல்களை மேலே கண்டோம். திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை அதே பதிவுக்குத் தந்துள்ள கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் தகவல்கள் இப்படியாக உள்ளன:
அறிவு வாயில்கள்
இறைமையைக் காணும் அறிவு: 357
உண்மைப் பொருள் காணும் அறிவு: 423
காக்கும் கருவியாகி நிற்கும் அறிவு: 421
ஆவது அறியும் அறிவு: 427
நன்மையின்கண் செலுத்தும் அறிவு: 422
எல்லா நன்மைகளையும் எய்த வைக்கும் அறிவு: 430
அறியத் தக்கவற்றை அறிந்து ஆளும் அறிவு: 618
என்றும் ஒரு நிலையாய் நிற்கும் அறிவு: 425
பிறவியில் அமைந்த நிலையறிவு: 373
இயற்கையறிவோடு கூடிய நூலறிவு: 636
பிறழ உணரும் அறிவு: 351
நற்பண்பு கலவாத அறிவு: 997
படியாதவனின் அறிவு: 404
வறுமைப்பட்ட ஏழையின் அறிவு: 1046
வறுமையால் வாடி மடியும் அறிவு: 532
களவோடும் பிறவோடும் பொருந்திய அறிவு: 175, 287, 846
வறுமையுள் வறுமை அறிவின்மை: 841
நூலாசிரியரின் பார்வையில் அறிவு என்ற வள்ளுவக் கருத்தாக்கம் பதினேழு-முகப் பரிமாணம் கொண்டு விரிகிறது. ஒவ்வொரு முகத்தையும் உய்த்துணரப் பதினேழு வாயில்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வேண்டியவர் வேண்டியவற்றை வேண்டியபடிப் பெற, செல்ல வேண்டிய வாயில்கள் வழியே நுழைந்து வேண்டிய இலக்குகளை அடையலாம்.
இவ்வாறு உண்ணல் – உண்ணாமை, ஆண்மை, இன்பம், உயிர்த் தியாகக் காரணங்கள், உணர்வுச் செவிக்குள் ஒலிப்பவை, ஏச்சுரை – வசை, செருக்கு, செல்வம், ஒப்புமை, மகளிர் கண்மொழி, பிறப்பு, பணிவு, பழி, ஒன்றோடு மற்றொன்றைத் தொடர்புபடுத்திக் காணல் எனப் பல கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் அடைவுகள் இந்நூலில் நீள்கின்றன. இவையனைத்தும் மொழிசார் சொல்லடைவுகளைவிட மேலதிகக் கடும் உழைப்பையும் கூரிய சிந்தனைத் திறத்தையும் ஆழமான நினைவாற்றலையும் கொண்டு விளைவிக்கப்பட்டவை.
திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை போன்ற கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் அடைவுகள் வேறு தமிழ் அல்லது ஆங்கில இலக்கியப் படைப்பாக்கங்களுள் எதற்கும் உள்ளனவா என இணையத்தில் தேடிப் பார்த்ததில் தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. உலக மகாகவி ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களுக்கு ஏராளமான மொழிசார் சொல்லடைவுகளும், வாழ்க்கை வரலாற்று, இலக்கிய, திறனாய்வுத் தகவல் கையேடுகளும் களஞ்சியங்களும் உள்ளன. ஆனால் கருப்பொருள்/கருத்தாக்க அல்லது தலைப்புசார் அடைவுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
கிறித்தவத் திருமறைக்கு 1897ஆம் ஆண்டில் இருபதாயிரம் தலைப்புகளுடனும் துணைத் தலைப்புகளுடனும் ஒரு லட்சத்துக்கும் மேலான மூல வரிகளுடனும் ‘தலைப்புசார் விவிலியம்’ என்ற நூலை ஓ.ஜே. நேவ் என்பார் வெளியிட்டார். சாமி. வேலாயுதனார் தன்னுடைய சொல்லடைவு நூலை எழுதி முடிப்பதற்குக் கடின உழைப்பு மிகுந்த பத்தாண்டுக் காலத்தை எடுத்துக்கொண்டார். தலைப்புசார் விவிலியம் நூலை எழுதி முடிக்க ஓ.ஜே. நேவ் திருமகனாருக்குப் பதினான்கு ஆண்டுக் காலம் தேவைப்பட்டது. திருக்குறள் பகுப்பாய்வுக் கோவையை எத்தனை ஆண்டுகளில் நூலாசிரியர் எழுதி நிறைவு செய்தார் என்று நமக்குத் தெரியாது.
இவ்வகையில் திருக்குறள் பகுப்பாய்வுக் கோவை ஒரு புதிய முயற்சி மட்டுமல்லாமல், ஒரு புதிய தொடக்கமுமாகும். பற்பல புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டும் இந்நூல் திருக்குறள் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இன்றியமையாத் துணைநூலாக, சிந்தனைத் தூண்டிலாகத் திகழ்ந்து வருவதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
கே. தியாகராஜன், ‘மொழிபெயர்ப்பியல்’ நூலின் ஆசிரியர்; முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர், புதுவைப் பல்கலைக்கழகம்.
மின்னஞ்சல்: raajan.kt@gmail.com