பிறந்தநாள் வருத்தம் தெரிவித்தலும் தன்னிலை விளக்கமும்
றெஜி சிறிவர்த்தன (1922-2004) தனது 82ஆவது வயதில் 2004 டிசம்பர் 15இல் மறைந்தார். டிசம்பர் 15 அவர் நினைவு நாள். அவர் தன் எண்பதாவது பிறந்தநாளுக்கு எண்பது அடிகளில் எழுதிய கவிதை ‘Birthday Apology and Apologia’ சுவாரஸ்யமானது. அதன் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. அவர் கவிதை எழுதுவதற்குப் பெரும்பாலும் பென்ராமீற்றர் (Pentameter) என்னும் ஆங்கில யாப்பு வடிவத்தையே பயன்படுத்துவார். அதை அகவல் வடிவத்தில் தரலாம் என்று நினைத்தேன். அது சாத்தியமாகவில்லை. அகவல் கலந்த எண்பது வரிகளில் அதன் பொருளை இங்கு தந்துள்ளேன்.
1
இந்தப் பூமி சூரியனை எண்பது முறை சுற்றிவரும்வரை
வாழ்வது ஒன்றும் சாதனை அல்ல.
ஆனால் ஒன்றை நான் ஒப்புதல் வேண்டும்.
இன்னும் இங்கு நான் சீவித்திருப்பது எனக்குச் சற்று ஆச்சரியம்தான்.
இளமையும் சிறப்பும் மிக்க பலர் இப்போது
புழுதியும் சாம்பலும் ஆன இப்பூமியில்
எண்பது வயதிலும் நடந்துதிரிவது பழிப்புக்குரியதே.
இன்னும் எவ்வளவோ தர இருந்தாலும்
வன்செயலால் இறந்துபோன ராஜினி, றிச்சாட், நீலனை நினைக்கையில்
உயிருடன் இருப்பது சங்கடமானதே. இருப்பினும்,
நீண்டநாள் வாழ நான் ஏங்கியதில்லை
உறுதியான என் தாய்வழி விவசாய மரபணு
என்னிலும் இருக்கலாம். எனினும் என் தகப்பனின்
நீரிழிவு முதுசம் எனக்கொரு தொல்லைதான்
ஆனால் அதுபற்றி நான் முறையிடவில்லை.
அதற்குப் பகரமாகச் சில தொற்றுகள் தாக்காது
நான் நோய்க்காப்புப் பெற்றுள்ளேன்.
ஒன்று பின்நவீனத்துவம் மற்றது புதுக்கவிதை.
மறைந்த என் சகோதரனுக்குத் தொற்றியதுபோல்
சிங்கள தேசியவாதக் காய்ச்சல் எனக்குத் தொற்றவே இல்லை
இளமையில் போட்ட மார்க்சிய ஊசி அதைத் தடுத்திருக்கலாம்.
2
நான் இளைஞனாய் இருந்தபோது எனது நண்பன் – சிறந்த மேடை அமைப்பாளன்,
படைப்பு மேதைமை மிக்க ஒரு சமையல்காரன், இலங்கைக்கே உரிய
வழக்காறுகளின் ஒரு களஞ்சியம் - ஹேபேர்ட் இடம் சொன்னேன்
“ஹேபேர்ட் நீ ஒரு துறையில் மட்டும் உறுதியாக நின்றிருந்தால்
நீ இப்போது அந்த மரத்தின் உச்சியில் இருந்திருப்பாய்.”
“ஆனால், மகனே! ஒன்றில் மட்டும் கட்டுண்டிருப்பது எவ்வளவு சலிப்பு!’
இன்று இந்த எண்பது வயதில் அவனைப்போலவே நானும்
இடத்துக்கு இடம், பூவுக்குப் பூ அலைந்து திரியும்
ஒரு வண்ணத்துப் பூச்சியாகவே இருந்திருக்கிறேன் எனத் தெரிகிறது.
என்னைப் பற்றிச் சொல்வதற்கு அவர்கள் கண்டுபிடிக்கக்கூடிய
ஒரு கனிவான வார்த்தை பன்முக ஆளுமை.
ஆனால் அது வேறுமாதிரியாக இருந்திருக்கலாம்
என்பதை உண்மையில் நான் விரும்புகிறேனா?
ஜோர்ஜ் கீற் கவிதைகளில் மெய்க் கூட்டொலிகளின் குறியியல்
என்ற ஆய்வேட்டுக்காக, ஒரு அரை ஏக்கர் புலமைத்துவத்துக்காக
முடிசூட்டப்படுவது எத்தனை சலிப்பு!
பூச்சியியல் உருவகத்தை மாற்றிச் சொல்வதானால்
நான் பழைய கதையில் வரும் வெட்டுக்கிளி.
(அல்லது ஜேம்ஸ் ஜொய்ஸின் Gracehopper). எறும்பு அல்ல
எழுதுவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். குளிர்காலத்தைத் தாக்குப்பிடிக்க நான்
பெரும் படைப்புகளைச் சேமிக்கவில்லை. ஆனால் இன்றும் அன்றும் ஒரு கவிதை
அல்லது ஒரு நாடகத்தால் யாரோ ஒருவரை
மகிழ்ச்சிப்படுத்தினேன் என நம்புகிறேன்.
என் கல்லறை வாசகம் இலக்கிய வரலாற்றில் சின்ன எழுத்தில்
அடிக்குறிப்பாக இருந்தால் அது போதும்.
3
கால ஓட்டத்தில் எனக்குப் பொருத்தமில்லாத ஆண்தலைமைப் பாத்திரத்தை
ஏற்குமாறு எனக்கு அழைப்புவந்தது. ஆனால் அது தொடரவில்லை.
என் நேரம் வரும்போது, இரங்கல் உரை இளவரசன் அஜித் என்னைப் பற்றி எழுதுவார்,
அது எனக்குத் தெரியும், வழக்கம்போல் ஒரு அருமையான,
சரியாக அளந்த, முகஸ்துதி அல்லது வெற்றுப் பாராட்டுகள் அற்ற எழுத்து.
(இருப்பினும், அநியாயம், அதை வாசிக்க நான் இருக்கமாட்டேன்.)
மரணத்தின்பின் தீர்ப்புநாள் அல்லது யமனின் நீதிமன்றம்
இருப்பதாக நான் நம்பவில்லை. அப்படி இருந்தால்,
நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், தட்டுத்தடுமாறிக்
கொன்னிக் கொன்னி நான் சொல்லக்கூடியது இதுதான்:
“த தயவுசெய்து ஐயா, பெ பெருமைக்காரனாக, பா பாசாங்குக்காரனாக,
ஐயா, புரிந்துகொள்ள முடியாதவனாக அல்லது ச சலிப்பூட்டுபவனாக
நான் ஒருபோதும் இருக்க முயலவில்லை,”
நீதிபதி பாரதூரமாக எனக்கு இப்படி தீர்ப்பு வழங்கலாம்:
“ஒரு முட்டாள்தனமான கோமாளி, கருணைகாட்டத் தகுதியற்றவன்
ஐம்பது ஆண்டுகள் சித்திரவதைத் தண்டனை விதிக்கிறேன்.
காயத்திரி ஸ்விபக், ஹோமிபாபாவின் பிரதிகளை
சேபோ-குறோசியனில் நீ மொழிபெயர்க்க வேண்டும்.”
4
உனக்கு வயதாகும்போது நீ சாதாரணமாக நினைத்ததெல்லாம் சாதாரணம்
அல்ல என்று தெரியும். உன் அலுவலகத்துக்கு மூன்று படிகள் ஏறுவது
இப்போது எவறஸ்ற் சிகரத்தில் ஏறுவதுபோல் இருக்கும்.
வீதியைக் கடப்பது ஒரு ஆபத்தான நெடும்பயணம்.
இருப்பினும் முதுமைக்கு அதற்குரிய இழப்பீடுகளும் உண்டு. நீ வளர்ந்துவிட்டாய்.
சிலவேளை ஞானம் இல்லாதிருக்கலாம், ஆனால், குறைந்தபட்சம் அதிக விவேகம்
இருக்கும். ஆட்கொள்ளும் பிசாசுகளின் தொந்தரவு இன்றி
ஒரு பெண்ணின் கவர்ச்சியை, அழகை உன்னால் பாராட்ட முடியும்.
நீ மிகவும் விரும்பிப் பேணிய புத்தகங்களும் இறுவட்டுகளும் இப்போது உனக்குச்
சுமையாக இருக்கும், இப்போது அவற்றைக் கொடுத்துவிடுவது உனக்கு
மகிழ்ச்சியாக இருக்கும்*. அரைவாசி வெறுமையாக இருக்கும் புத்தக
அலுமாரிகளைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும்.
நான் ஒருபோதும் விரும்பாத ஒரு கவிஞனை இங்கு மேற்கோள்காட்டலாம்:
“புயலுக்குப் பின்னைய துறைமுகம்” கடந்த காலத்தில் எனக்கு உதவிய நண்பர்கள்
- பெயர் சுட்டமுடியாப் பெருந்தொகையினர் - அனைவருக்கும்
பெருஞ் சுழல்களுக்கும் பாறைகளுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
இது எண்பது அடிகளால் ஆனது. முற்றிற்று.
* 1990இல் றெஜி எனக்கும் 3 புத்தகங்கள் அன்பளிப்புச்செய்தார். Sematics Vol. I & ii, by Jhon Lyons, Linguistics and the Novel by Roger Fowler.
தமிழில்: எம்.ஏ. நுஃமான்
மின்னஞ்சல்: manuhman@gmail.com