காற்றை எதிர்த்து
பெண்களின் உருவத்தைச் சிலையாகவோ ஓவியமாகவோ வரைந்து பொதுவெளியில் வைக்கும்போது படைப்புகளின் உடை, நகை, உருவத் தோற்றத்தில் பிடிபட்டிருக்கும் இயக்கத்தின் அந்தக் கணம் (கோவிலுக்குப் போதல், கூடை முடைதல், சமைத்தல், பாசி மணி கோத்தல், புத்தகம் படித்தல், பேனா - காகிதம் அல்லது கணினியுடன் இருத்தல் போன்ற இயக்கங்கள்) இவைகொண்டு அந்தப் பெண்களை அடையாளப்படுத்திவிட முடியும். ரோஹிணி மணி நிறுவியிருக்கும் இந்தச் சிலை எல்லாவித அடையாளப்படுத்துதலையும் மீறுகிறது; தகர்க்கிறது.
உடையற்ற இந்த உருவம் காகிதக் கூழில் செய்யப்பட்டிருப்பதால் எளிதில் முறியக்கூடியவற்றின் உருவகமாய் ஒருவகையில் தெரிந்தாலும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கும் விதமும் பலத்த காற்றில் பறக்கும் அவள் குட்டையான முடியும் அவள் எளிதில் எதையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதைச் சொல்கிறது! அவள் தனியொருத்தி இல்லை. நாம் எல்லோருமாகச் சேர்ந்து அவளாகிறோம்!