காந்தியும் தீண்டாமையும்
காலச்சுவடு ஜனவரி-2023 இதழில் “தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்” தலைப்பில் வந்த கட்டுரை, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், காந்தியின் தீண்டாமை ஒழிப்பின் மீதும் தீண்டாதார் மீதான அவருடைய பார்வை, செயல்பாடுகளின் மீதும் வைத்த விமர்சனங்களை முன்வைக்காதது வியப்பையும் வேதனையையும் தருகிறது.
தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் பங்கு பற்றி தீண்டாமைக்கொடுமையால் இன்னல்கள் பலவற்றை அனுபவித்த அம்பேத்கர் மிகவும் ஏமாற்றமும் வேதனையும் கொண்டார். காந்தி தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே ஆலயப் பிரவேசம், பொதுக்குளத்தைப் பயன்படுத்துவது போன்ற போராட்டங்களில் தலித் மக்களைத் தாக்க வந்ததைச் சுட்டிக்காட்டி, “இதுதானா நீங்கள் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தின் வெற்றி? தீண்டாமை அனுசரிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் ஆக முடியாது என்ற ஒரு நிபந்தனையைக் கூட நீங்கள் முன்வைக்கவில்லையே” என்று காந்தியிடம் நேராகவே கேட்டார். பிறகு புனா ஒப்பந்தம் முடிந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முயற்சிகள் முடுக்கிவிடப்படும் முகமாக ‘தீண்டாமை எதிர்ப்பு கழகம்’ (Anti-Untouchability League) ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகம் பிறகு ‘ஹரிஜன சேவக் சங்கம்’ என மாற்றப்பட்டது. “தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரமும் பொதுக்கிணறுகள், தர்மசாலாக்கள், சாலைகள், பள்ளிகள், மயானங்கள், இடுகாடுகள் ஆகியவற்றை ஒடுக்கப்பட்டோர் பயன் படுத்துவது குறித்து அமைதியான முறையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது இந்தக் கழகத்தின் கோட்பாடு என முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களிலேயே தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை ஜாதி இந்துக்களின் மனமாற்றம் வரும்வரை ஒத்தி வைப்பது என்றும், தீண்டத்தகாதவர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முயற்சிகளில் முதலில் ஈடுபடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இது தீண்டாமை ஒழிப்பை காந்தி வெறும் பிரச்சாரத்திற்காக வைத்துக்கொண்டாரே தவிர தீவிர செயல் திட்டமாகக் கொண்டதில்லை என்ற அம்பேத்கரின் வாதத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இதர திட்டங்கள் அவர்களை ‘கருணையினால் கொல்லும்’ முயற்சிகள் என்றும் அம்பேத்கர் கருதினார்.
ஜாதி முறையை ஆதரித்து வந்த காந்தி பின் வர்ணாசிரம முறையைப் பாராட்டிப் பேசினார். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏனெனில் இரண்டுமே பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றார் அம்பேத்கர். இதை ஒட்டியே காந்தி தீண்டத்தகாதவர்களின் மாநாட்டின் தலைவராக பேசியதையும் அணுகவேண்டும். “இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்றால் நான் ஒரு தீண்டத்தகாதவனாக பிறக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் படும் துயரங்களிலும் இன்னல்களிலும் அவமானங்களிலும் பங்கேற்கமுடியும்.மிக துன்பமிக்க அந்த வாழ்வு நிலையிலிருந்து என்னையும் மற்றவர்களையும் விடுவிக்க முயற்சி செய்ய முடியும். இதன்பொருட்டே நான் மறுபிறவி எடுத்தால் அது பிராமணனாகவோ வைசியனாகவோ சத்திரியனாகவோ அல்லது சூத்திரனாகவோ இல்லாமல் ஆதி சூத்திரனாக இருக்கவேண்டும்”. “நான் மலம் அள்ளுவதை விரும்பிச்செய்கிறேன். என்னுடைய ஆஸ்ரமத்தில் பதினெட்டு வயது பிராமண பையன். ஆஸ்ரமத்தில் மலம் அள்ளும் வேலை செய்பவன் எப்படி சுத்தமாக அதைச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளும் அளவுக்கு மலம் அள்ளுகிறான். அவன் ஒரு சமூக சீர்திருத்தவாதி அல்ல. அவன் ஆசாரமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன். ஆஸ்ரமத்தைக் கூட்டுபவன் சரியாக வேலையைச் செய்யவேண்டுமானால் அதைத் தானே செய்து மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கிறான்.” காந்தியின் இந்த உரை அம்பேத்காரை எரிச்சலூட்டியது. “ ஒரு பிராமணன் மலம் அள்ளுவதினால் அவன் மலம் அள்ளும் தீண்டத்தகாதவர்கள் அனுபவிக்கும் சமூக அவலங்களுக்கு ஆளாகப் போவதில்லை. இந்தியாவில் மலம் அள்ளுபவன் அவனுடைய பிறப்பினால் அப்படி ஆக்கப்படுகிறானே தவிர அவன் செய்யும் தொழிலால் அல்ல. அதாவது அவன் அந்தத் தொழிலைச் செய்யவில்லை என்றாலும் அவன் தீண்டத்தகாதவன்தான். மலம் அள்ளுவது ஒரு புனிதமான செயல் என்று அதைச் செய்யமறுக்கும் மற்றவர்களுக்கு காந்தி அறிவுரையாக இதைச்
சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மலம் அள்ளுபவன் செய்வது அவனுக்கும் பெருமை என்று பாராட்டி அதையே அவன் செய்து கொண்டிருக்க வேண்டும், அதைப்பற்றி அவமானம் கொள்ளக்கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று அம்பேத்கர் காந்தியாரைச் சாடினார்.
காந்தியார் செய்த எந்த பிரச்சாரமும் சனாதனிகளை மன மாற்றம் செய்யவில்லை. அம்பேத்கர் கருத்துப்படி தீண்டாமை மத நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. மதத்தலைவர்கள் முன்னின்று, காந்தியார் சொன்னது போல் சாத்திரங்கள் ஜாதியையும் தீண்டாமையையும் அனுசரிக்கச் சொல்லவில்லை எனத் தீவிரமாக மக்களிடையே பரப்புரை செய்தால் ஒருவேளை ஏதாவது வழி பிறக்கலாம்.
(ஆதாரம்; அம்பேத்கர் பற்றிய பிரசுரங்கள், The Essential Writings of B R Ambedkar” edited by Valerian Rodrigues)
மின்னஞ்சல்: navijya48@rediffmail.com