அனார் கவிதைகள்
ஓவியம்: மு. நடேஷ்
பதம்
தன்னிச்சையாக உறைந்த
பனிச் சிற்பங்களின் உட்குரல் வடிவங்களுக்குச்
சாயமிடுகிறாய்
ஏந்துகின்ற மெய்வடிவங்களின்
உள்ளேயும் வெளியேயும் பொறிகள்
நிறத்தின் ஏழு பாலைகள் நீ
இப்போது ஏழு நிறம் சூழ்ந்த
உடல் நான்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
ஏழு நரம்புகள் கொண்ட
செங்கோட்டு யாழ்
நாதங்களுக்குள்
நழுவிச் செல்லும் குரல்
யாரும் ஊகிக்க முடியாத அருள்
பிடிவாதம் கனிந்து
பலிக்கின்ற தருணங்களில் பொலிந்திடும் பொலிவு
முன்னிரவு ஏக்கத்தின் கொடை
மங்கலான நான்கு திசைகளிலும்
துயரின் தூய மென்னலைகள்
மறைவின் மீளாப் புனலாகினேன்
தடயங்கள் உதிர
நீங்காமல் சுழலும் பித்தக் கசப்பாவேன்
பெருங்கொள்ளை
சூரியன் தீண்டிய செம்மலைகளின்
படிவங்கள் சிவக்கின்றன
கணத்தின் ஒவ்வொரு துடிப்பாலும்
மேகங்கள் தோற்றம் மாறுகின்றபடி
மிளிரச்செய்யும் தீக்கோழி உள்ளே குதிக்கிறது
முகம் தடவி நகரும் குளிர்ந்த விரல்களால்
நீ மந்திரித்த முத்தம்
மின்னலென விழுந்து
பன்னிரண்டு நீரூற்றுக்களாகக் கிளை பிரிந்தோடினேன்
மாயத்தில் பறக்கிறது பைத்தியக் குளவி
தொட்டால் மறைந்துவிடும்
என் ஒற்றை மெழுகுக் கொம்பன் யானையின் முன்
கட்டுண்டு மன்றாடி.... நின்றவாறு
கணத்தினுள்ளே இரண்டாகினேன்
மஞ்சள் சங்குக்குள் வளரும் கண்ணாடிக் காளான்
கண்களில் கிறங்கித் தாவிய சூரியனைப் பிடித்து விழுங்கியது
சாயும் புல்லின் தாள்களில் ஊர்ந்தபடி
உள்க்கூடுகளை நகர்த்தும் பச்சைப்புழு
குட்டி வெண் புத்தரின் நாசிக்கு வரும்
வாசனையைத் திருடினேன்
பொன்மஞ்சள் குன்றின்மீது
சமைந்திருக்கிறது பேரமைதி
நிறைந்தும் வெற்றிடமாகியும்
அலையும் காற்றில் முதிர்ந்து
ஊதா நிறமாகியிருந்தேன்
மின்னஞ்சல்: anar.srilanka@gmail.com