தாமரை இல்லாத தென்னகம்
தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கணிப்புகளை மெய்யாக்கிக் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பாஜகவுக்குத் தோல்வி என்பது மட்டுமின்றிப் பெரும்பான்மைக்கு மிகவும் குறைவான இடங்கள் கிடைத்திருப்பதும் ஜனநாயகத்தின் ஆதரவாளர்களை நிம்மதிக்குள்ளாக்கியிருக்கிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்குச் சற்றுக் குறைவான இடங்களை வென்றிருந்தாலும் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் என்னும் அச்சம் பரவலாக இருந்ததுதான் இதற்குக் காரணம். இத்தகைய கொல்லைப்புறப் பிரவேச அரசியலில் ஈடுபடும் முதல் கட்சி பாஜக இல்லை. ஆனால் பாஜக அளவிற்கு வேறு எந்தக் கட்சியும் இதைக் கூச்சமே இன்றி இயல்பாக்கம் செய்துவிடவில்லை. பாஜகவைக் கண்டு பிற கட்சிகள் அஞ்சுவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்று. காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்கியதன் மூலம் வாக்காளர்கள் பாஜகவின் தேர்தலுக்குப் பிந்தைய அஸ்திரத்தைப் பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டார்கள்.
பாஜக ஆட்சியை இழந்தாலும் அதன் தனிப்பட்ட ஆதரவு சேதாரமில்லாமல் இருப்பதைக் கவனிக்க வேண்டும். 2013 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 19.9 சதவீத வாக்குகளைப் பெற்ற அக்கட்சி 2018இல் 36.2 சதவீதத்தைப் பெற்றது. இந்தத் தேர்தலில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே குறைந்து 36 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்குச் சதவீதம் 36.6, 38.1, 42.9 என வளர்ந்து வந்திருக்கிறது.
பெற்ற வாக்குகளை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குப் பின்னடைவு என்று சொல்ல முடியாது; அதன் ஆதரவுத் தளம் அப்படியே இருக்கிறது. ஜனதா தளத்திற்கு ஆதரவான வாக்குகளையே காங்கிரஸ் பெற்றிருக்கிறது. அதுவே ஆட்சியைப் பிடிக்கவும் காரணமாகியிருக்கிறது. 20.2, 18.3, 13.3 என்பதாக ஜனதா தளத்தின் ஆதரவு சரிந்துவர, அதே விகிதத்தில் காங்கிரஸின் ஆதரவு வளர்ந்துவந்திருப்பதைக் காணலாம்.
வாக்குகள் விஷயத்தில் பாஜகவுக்குப் பின்னடைவு இல்லை என்பதால் பாஜக ஆட்சியை இழந்ததை வைத்து அடுத்த ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் பெரிதாக நம்பிக்கை கொள்ள இடமில்லை என்று கருத வாய்ப்புள்ளது. காங்கிரஸ் ஏற்கெனவே வலுவாக இருந்துவரும் மாநிலம் இது என்பதையும் மறந்துவிட முடியாது. எனினும் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலிலிருந்து நம்பிக்கை பெறுவதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. முதலாவதாக, ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்னும் முழக்கத்தைத் தன் குறிக்கோளாக முன்வைத்த பாஜக இன்று தென்னகத்தில் அநாதையாக நிற்கிறது. எந்த மாநிலத்திலும் ஆட்சியும் இல்லை, வலுவான கூட்டணியும் இல்லை. வட மாநிலங்களில் வெற்றிபெற்றே இந்தியாவை ஆண்டுவிட முடியும் என்ற நிலை இன்னமும் மாறவில்லையென்றாலும் வெல்ல முடியாத சக்தியாகத் தோற்றமளிக்கும் பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்பதற்கான உதாரணமாகக் கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவு அமைந்திருப்பது வடமாநிலங்களில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் தன்னம்பிக்கையைக் கூட்டக்கூடியது என்பதில் ஐயமில்லை.
கடந்த முறை வாங்கிய அதே வாக்குகளை வாங்கியும் பாஜகவால் இந்தமுறை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பிற கட்சிகளை வளைத்துக் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு அதற்கு இடங்களும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், களத்தில் இருந்த பிற கட்சிகளில் மக்கள் காங்கிரசின்மீதே அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான வாக்குகளில் கணிசமான பகுதி சென்ற முறை ஜனதா தளத்திற்குச் சென்றிருந்தது; இந்த முறை அது காங்கிரசுக்குச் சென்றிருக்கிறது. இந்திய வாக்காளர்கள் யார் வெல்ல வேண்டும் என்பதைப் போலவே யார் தோற்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருப்பார்கள். கர்நாடக வாக்காளர்கள் பாஜகவிற்குத் தேவையான கூடுதல் வாக்குகள் கிடைக்காமலும் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமலும் பார்த்துக்கொண்டார்கள். பாஜகவுக்கு எதிராக வலுவானதொரு கட்சியோ கூட்டணியோ இருந்தால் பாஜகவை வெல்லலாம் என்று மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் காட்டிவிட்டன; அந்த வரிசையில் கர்நாடகமும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியும் தேர்தல் வியூகமும் அமைத்தால் பாஜகவை வெல்ல முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய முன்னுதாரணமாகக் கர்நாடகத் தேர்தலைச் சொல்லலாம்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் எதிரிகளைப் பல விதங்களிலும் அச்சுறுத்தும் அபாயகரமான கூட்டாளிகள். மோடி-ஷாவின் தலைமையில் இயங்கும் பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் முறையில் புதிய வரலாறு படைத்துவருகிறது. ஒருபக்கம் பண பலம், அதிகார பலம், பிரச்சார பலம் ஆகியவற்றை வைத்து மிரட்டும் இந்தக் கூட்டணி, களத்தில் அடிமட்டம்வரையிலும் ஊடுருவும் பிரச்சார வியூகத்தைக் கைக்கொள்கிறது. ஒவ்வொரு 100 வாக்காளர்களையும் தொடர்புகொள்ள ஒரு தேர்தல் பணியாளர் என்ற அளவில் அது நுண்தளத்தில் வேலை செய்கிறது. அந்தந்த ஊரில் நிலவும் சாதி, மதச் சமன்பாடுகள் குறித்த துல்லியமான தகவல்களைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப வியூகம் வகுத்துச் செயல்படுகிறது. தலை வணங்கு என்று சொன்னால் மண்டியிட்டுச் சேவகம் புரியத் தயாராக இருக்கும் ஊடகங்களின் ஆதரவும் சமூக ஊடகப் பரப்புரையும் இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் திறன்மிகு வலைப்பின்னலும் கொண்டது மோடி-ஷாவின் பாஜக. 2014இல் அமேதியில் ராகுல் காந்தியிடம் தோற்ற ஸ்மிருதி இரானியிடம், அடுத்த தேர்தலில் ராகுலைத் தோற்கடிக்கும் வேலையை உடனடியாகத் தொடங்குமாறு ஷா அறிவுறுத்தியதாகச் சில ஊடகங்களில் செய்தி வந்தது. தேர்தல் விஷயத்தில் அந்த அளவுக்குத் தொலைநோக்கோடு சிந்திக்கும் கட்சி மோடி-ஷாவின் பாஜக.
இத்தகைய பிரச்சார பலத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்பதைக் கர்நாடகக் காங்கிரஸ் காட்டியிருக்கிறது. மோடி-ஷாவின் சூறாவளிப் பிரச்சாரத்தை மிகத் திறமையாக எதிர்கொண்டு வென்றிருக்கிறது. பேச்சு, வியூகம், உழைப்பு என எல்லா விதங்களிலும் அது பாஜகவின் தலைவர்களுக்குச் சரிக்குச் சரியாகக் களத்தில் நின்றிருக்கிறது. மோடியும் ஷாவும் கர்நாடகத் தேர்தல் களத்தில் செலவழித்த நாட்களையும் மேற்கொண்ட பிரச்சார உத்திகளையும் பார்க்கும்போது நடக்கவிருப்பதை உணர்ந்துகொண்ட பதற்றத்தை அறிய முடிந்தது. பாஜக தன்னுடைய உயர்மட்டத் தலைவர்களையே அதிகம் நம்பியிருந்த நிலையில் காங்கிரஸ் உள்ளூர்த் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வியூகம் வகுத்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தாலும் கர்நாடக மண்ணின் மைந்தராகவே பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றார். சித்தராமய்யாவும் டி.கே. சிவகுமாரும் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்தார்கள். சாதிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை இணைத்துக்கொண்டு காங்கிரஸ் பாஜகவுக்கு வலுவான சவாலை முன்வைத்தது. மோடியும் ஷாவும் தெருத்தெருவாக நடந்தும் ஒரு சதவீத வாக்குகளைக்கூட அவர்களால் கூட்ட முடியவில்லை. பாஜகவின் வியூகம் எவ்வளவுதான் மிரட்டும் வகையில் இருந்தாலும் அது வெல்ல முடியாததல்ல என்பதை மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி நிரூபித்தார்; கர்நாடகத்தில் கார்கேயும் அவர் அணியினரும் நிரூபித்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் வரவிருக்கும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியைத் தழுவும் என்று மமதா சொல்லியிருப்பது எதிர்க்கட்சிகளின் புதிய நம்பிக்கைக்கான அடையாளம். இந்த இரு மாநிலங்களிலும் பாஜக தோற்றால் அதன் பலன் காங்கிரசுக்குத்தான் போய்ச் சேரும். காங்கிரசுடனான தன்னுடைய ஒவ்வாமையைப் புறந்தள்ளிவிட்டு மமதா அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் எதிர்கால வெற்றிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்தி்ருப்பது எதிர்க்கட்சிகளின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. வங்கத்தில் தன்னை எதிர்ப்பதைக் காங்கிரஸ் நிறுத்திக்கொண்டால் பிற மாநிலங்களில் அதை ஆதரிக்கத் தயார் என்று மமதா கூறியிருப்பது தேசிய அளவில் காங்கிரஸின் தலைமையை ஏற்கத் தயாரான மனநிலையையே காட்டுகிறது. பாஜகவை வீழ்த்துவதே ஒரே குறிக்கோள் என்று பிகாரின் தேஜஸ்வி யாதவ் கூறியிருப்பதும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை உணர்த்தும் அறிகுறி. வெற்றிகரமான பாத யாத்திரையாலும் கர்நாடகத் தேர்தல் வெற்றியாலும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக எழுச்சி பெறுமளவுக்கு ராகுல் காந்தியின் படிமம் உயர்ந்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அடிபட்ட புலியின் நிலையில் இருக்கும் பாஜக சுதாரித்துக்கொண்டு முன்னைக் காட்டிலும் வேகமாகச் செயல்படும். அதன் பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க புல்வாமா, கால்வான் போன்ற காட்சிகளும் அரங்கேறலாம். எனினும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான ஆகப்பெரிய கட்சியின் தலைமையில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைத்தால் எத்தகைய அலையையும் எதிர்த்து நிற்க முடியும் என்பது இந்தியத் தேர்தல் களம் சொல்லும் பாடம். தோற்க வேண்டியது யார் என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால் மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்னும் செய்தியை எதிர்க்கட்சிகள் கர்நாடகத் தேர்தல் களத்திலிருந்து பெறலாம். கர்நாடகத் தேர்தலுக்கு முன்பே ராகுலின் பாத யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பையும் நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பும் கூர்மையான கேள்விகளையும் கண்ட பாஜக அவர் தேர்தலிலேயே நிற்கவிடாத அளவுக்குத் தாக்குதலைத் தொடுத்துள்ளதும் அதன் பதற்றத்தின் அடையாளம் என்றே கொள்ள வேண்டும்.
ஆன்மிகம், கலை எனப் பல அம்சங்களில் தென்னகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறது. பொருளாதாரம், மத நல்லிணக்கம் ஆகியவற்றில் இந்தியாவில் தென்னகம் இன்று முன்னணியில் இருக்கிறது. அரசியல் களத்திலும் மாற்றத்திற்கான திசைவழியைத் தெற்கு காட்டுவதாகக் கர்நாடகத் தேர்தல் முடிவைக் கருதலாம்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்னும் முழக்கத்திற்கு எதிராகத் தாமரை இல்லாத தென்னகம் என்னும் யதார்த்தம் முகிழ்த்திருக்கிறது. நீதித்துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்தி ஒற்றைக் கட்சி அரசியலை நோக்கி நாட்டை அழைத்துக்கொண்டு போக விரும்பும் சர்வாதிகாரப் போக்கை எதிர்கொள்ள இதைப் பயன்படுத்திக்கொள்ளும் பொறுப்பு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது.
கல்விக் குழுவில் ஜனநாயகத் தன்மை
தமிழ்நாடு அரசின் ‘மாநிலக் கல்விக் கொள்கை’யை உருவாக்கும் குழுவிலிருந்து கல்வியாளர் ஜவஹர் நேசன் விலகியுள்ளார். அவர் அளித்த அறிக்கை, நேர்காணல் ஆகியவை ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின; அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் பிற உறுப்பினர்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கைகளைப் பார்க்கும்போது குழுவுக்குள் இருப்பது கல்வியாளர்களுக்கும் இதர துறை வல்லுநர்களுக்கும் இடையேயான சிக்கல் என்பதாகத் தெரிகிறது.
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் கல்வியாளர்கள் மட்டும் இடம்பெறவில்லை. எழுத்து, இசை, விளையாட்டு உள்ளிட்ட வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் உள்ளனர். இக்குழு அமைக்கப்பட்டபோதே பொருத்தமானவர்களைக் கொண்ட சிறந்த குழு எனப் பாராட்டப்பட்டது. இன்றைய தமிழ்நாடு அரசு அமைக்கும் குழுக்களில் இத்தகைய ஜனநாயகப் பார்வை இலங்குவதைப் பொதுவாகவே காண முடிகிறது. 2023 ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை அதிகாரிகள் மட்டும் பொறுப்பேற்று நடத்தவில்லை; பதிப்பக ஆளுமைகள் பலரும் அதில் பொறுப்பு வகித்தனர்; முன்னின்று செயல்படுத்தினர். அக்கண்காட்சி வெற்றிகரமாக நடந்ததற்கு இந்த ஜனநாயகத் தன்மையும் ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ செயல்பாட்டாளர்களைத் தேர்வு செய்ததும் காரணம் என்று சொல்லலாம்.
அதேபோலத்தான் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவும் அமைந்திருக்கிறது. இதுநாள்வரை கல்வியாளர்கள் மட்டும் அங்கம் வகித்துவந்த இத்தகையை குழுக்களில் இப்போது பிற துறை சார்ந்த வல்லுநர்களும் இணைந்துள்ளனர். பல்கலைக்கழகங்களில் இருக்கும் பல்வேறு பாடத்திட்டக் குழுக்களில் சமூகச் செயல்பாட்டாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பிறதுறை சார்ந்தோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. அதற்காகப் பிற துறை வல்லுநர்களைப் பெயரளவுக்கு வைத்துக்கொண்டு பெரும்பாலும் முடிவுகளைப் பாடத்திட்டக் குழுவில் உள்ள பேராசிரியர்களே எடுத்துவிடுவார்கள். இறுதியில் கையொப்பம் வாங்கிக்கொள்ள மட்டுமே வல்லுநர்களை நாடுவார்கள். கல்வித் துறைக்குப் பிற துறை வல்லுநர்கள் பங்களிக்க முடியும்; பங்களிக்க வேண்டும் என்னும் பார்வை கல்வியாளர்களிடம் இல்லை. பலதுறை அளாவியது கல்வி. அதைப் பற்றிய வெவ்வேறு பார்வைகளும் கோணங்களும் இருக்கின்றன. அவற்றைக் கல்விக்குள் கொண்டுவரப் பிற துறை வல்லுநர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்ய முடியும்.
பிற துறை வல்லுநர்கள் தம் துறை சார்ந்த அறிவை உடையவர்கள். தம் துறை சார்ந்து கல்வி எப்படி இருக்க வேண்டும், அதற்கு எத்தகைய இடம் தேவை என்பவற்றைத் தெளிவாக அவர்களால் முன்வைக்க இயலும். சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தக் குழுவில் உள்ளார். விளையாட்டுக்குக் கல்வியில் எத்தகைய முக்கியத்துவம் வழங்க வேண்டும், எப்படியெல்லாம் அதை நடைமுறைப்படுத்தலாம் என்பதைக் குறித்த அவர் கருத்து முக்கியத்துவம் உடையது. அதே சமயம் அவருக்கென்று கல்வி பற்றித் தனித்த பார்வை கட்டாயம் இருக்கும்; அதுவும் முக்கியம். குழுவில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஆளுமை கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. அவர் தம் பார்வைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். கல்வி பற்றித் தனித்த பார்வை கொண்டவர். இசை தொடர்பாக மட்டுமல்லாமல், பொதுக்கல்வி பற்றிய பார்வைகளை உருவாக்குவதிலும் அவரால் சிறப்பாகப் பங்களிக்க முடியும். இவ்வாறு குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வல்லுநரைப் பற்றியும் தனித்துச் சொல்லலாம்.
கல்வியாளர்கள்போல அவர்கள் நிறுவனமயப்பட்ட ஒழுங்குக்கு உட்பட்டுப் பழகியவர்கள் அல்ல. அவர்களைக் கையாள்வதிலும் கருத்துக்களைப் பெறுவதிலும் கல்வியாளர்கள் நிதானம்காட்ட வேண்டியிருக்கும். வழக்கமாக இத்தகைய குழுக்களில் இடம்பெறும் வல்லுநர்களைப் போலல்லாமல் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் இருக்கும் வல்லுநர்கள் தம் பங்கை ஆற்ற விழைந்துள்ளனர். அதைத் ‘தம் எல்லைக்குள் அனுமதியின்றிப் பிரவேசிப்ப’தாகக் கல்வியாளர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடே இன்றைய சிக்கல் எனத் தோன்றுகிறது.
அரசு தம் நடவடிக்கைகளில் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் நோக்கி நகரும்போது அதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். தமக்கிடையேயான முரண்களைக் களைவதில் இணக்கம், கலந்துரையாடல், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், பிறர் ஒத்துழைப்புடன் முடிவெடுத்தல் உள்ளிட்டவற்றைக் கைக்கொண்டால் ஒரு குழு ஜனநாயகமாகச் செயல்பட முடியும். அவை இல்லாதபோது இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுவெளியில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தும் வகையில் குழுவின் செயல்பாடுகள் அமைந்தமை வருத்தத்திற்குரியது.
தேசியக் கல்விக் கொள்கையில் ஏற்க வேண்டியனவும் உள்ளன; எதிர்க்க வேண்டியனவும் உள்ளன. தமிழ்நாட்டுக்கு உவப்பில்லை என்றாலும் நடைமுறை கருதிச் சிலவற்றை ஏற்றுத்தானாக வேண்டும். ஆகவே கல்விக் குழுவின் பணி கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளிக் கொள்கை வகுக்க வேண்டியதாகும். நாடு முழுக்க இளநிலைப் பட்டக் கல்வியை நான்காண்டுகள் என்று ஒன்றிய அரசு அறிவிக்கும்போது அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம், எங்கள் மாநிலத்தில் மூன்றாண்டுதான் என்று தமிழ்நாடு ஒதுங்கி நிற்க இயலாது. அப்படி ஒதுங்கி நின்றால் நம் மாணவர்கள் தமிழ்நாட்டைக் கடந்து உயர்கல்வி கற்கச் செல்ல இயலாது. இப்படிச் சில சான்றுகளைக் காட்ட முடியும். கல்விக் குழு எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.
குழுவின் செயல்பாடுகளில் அதிகார வர்க்கத்தின் தலையீடு இருந்தது என்று ஒருவரும் அப்படியேதும் இல்லை எனப் பிறரும் கூறுகின்றனர். எல்லையைக் கடந்து தலையீடு நிகழ்ந்திருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியதே. குழுவில் ஒருவர் மட்டும் தனியாகவும் பிற உறுப்பினர்கள் அணியாகவும் இருப்பதைக் காண முடிகிறது. மாநிலத்தின் எதிர்காலம் கருதி இக்குழு தம் முரண்களைக் களைந்து ஜனநாயகத் தன்மையுடன் பணியாற்ற வேண்டியது அவசியம். எக்காலத்தும் இல்லாத வகையில் அரசு ஜனநாயகமாக இயங்க முன்வரும்போது அறிவாளிகள் அப்பண்பைக் குலைக்கக் கூடாது.