ஜூன் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      அபிஷேகங்களும் அபத்தங்களும்
      மூடி மறைக்கும் கலை
      பாரதியும் சகஜானந்தரும்
      கவிமணி கவிதைகளின் பதிப்பும் மு. அருணாசலனாரின் பங்களிப்பும்
      வீடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத நட்புகள்
      பாரதி ஞானத் தேடல்
      வானத்து அமரன்
      தொலைந்துபோனவையா கண்டெடுக்கப்பட்டவையா?
      சே.ப. நரசிம்மலு நாயுடு: முகவுரைகளும் சாதியை வரையறுத்து எழுதப்பட்ட கடிதங்களும்
    • கதை
      யாவர்க்குமாம்
      கை நிறைய பேரீச்சம் பழங்கள்
    • சிறப்புப் பகுதி
      தீயில் விழுந்த சிறகுகள்
    • கண்ணோட்டம்
      தடை கோருதல் என்னும் நோய்க்கூறு
    • மதிப்புரை
      மனசாட்சியை உலுக்கும் குரல்
    • கவிதைகள்
      நிலத்தில் உரமான
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      சிந்தும் விருத்தமும் கு. அழகிரிசாமி உருவாக்கிய பதிப்புகள்
    • தலையங்கம்
      தாமரை இல்லாத தென்னகம்
    • சிந்தி மொழிக் கவிதைகள்
      என்னுள் பல பெண்கள் உயிர் வாழ்கிறார்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூன் 2023 மதிப்புரை மனசாட்சியை உலுக்கும் குரல்

மனசாட்சியை உலுக்கும் குரல்

மதிப்புரை
சித்ரா பாலசுப்ரமணியன்

மாறாது என்று எதுவுமில்லை
பெஜவாடா வில்சன் நேர்காணல்
நேர்கண்டவர்: பெருமாள்முருகன்

வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை.
நாகர்கோவில்-1
பக். 128
ரூ. 160

 

எண்பதுகளின் இறுதியில் நாங்கள் கிண்டியில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்தோம். ஏறக்குறைய இருபத்தைந்து பேருக்கும் மேற்பட்டோர் வசித்த குடியிருப்பு அது. இருந்ததோ ஒற்றைக் கழிப்பறை; அதுவும் மேற்கூரை இல்லாத, கதவற்ற, தண்ணீர் வசதி இல்லாத உலர் கழிப்பறை. அதைக் கழிப்பறை என்று சொல்வது பெருங்குற்றம். உண்மையில் அது நரகம். மழைக்காலத்தில் அது மிக மோசமான நிலைக்குச் சென்று விடுவதை ஊகிக்கப் பெரிய கற்பனை தேவையில்லை. இந்தக் கழிப்பறை என் நினைவிலிருந்து நீங்கிவிடவில்லை; கூடவே இன்னொரு சித்திரமும் உண்டு. அது அந்தக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வரும் பெண்மணியைப் பற்றியது. சற்றே சிவந்த நிறமுடைய, மிதமான உயரமுடைய, சற்று ஒதுக்கினாற்போன்ற கொண்டை கட்டியிருந்த பெண். கொண்டம்மா, அவர் பெயர். அந்தப் பெயர் எப்போதாவது உச்சரிக்கப்படும். தோட்டிச்சி என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவர் பெரும்பாலும் வாரத்தில் இரண்டொரு நாட்கள் வராமலிருப்பார். செவ்வகமான நீளத் தகரப் பலகை, ஒரு துடைப்பம், ஒரு கூடை ஆகியவையே அவரது கருவிகள். ப வடிவிலான அந்தக் கழிப்பறையில் நிரம்பியிருக்கும் கழிவுகளை அந்தத் தகர முறத்தில் வாரி எடுத்து, ஒரு கூடையில் இட்டு அதைச் சுமந்து சென்று எதிரில் ரயி்ல்வே டிராக்குகளை ஒட்டியிருக்கும் குழிகளில் போட்டுவிட்டு வந்து தண்ணீர் விட்டுக் கழிப்பறையைக் கழுவிவிட்டுச் செல்வார். பாதாளச் சாக்கடை வசதியற்ற அந்த இடத்தில் கழுவிவிடப்பட்ட அசுத்தம் வெளியே பரவி ஓடினால் அதையும் மண் கொண்டு மூடிச் சுத்தம் செய்துவிட்டே செல்வார். இந்தக் காட்சிகளைப் பலமுறை பார்த்ததுண்டு. அப்போது எழுந்த ஒரே உணர்வு அருவருப்பு மட்டுமே. அதை வேறுவிதமாகப் பார்க்கும்படியான சுய அறிவு அப்போது இல்லை; அதைச் சுட்டிக்காட்டிச் சொல்லித் தரவும் யாரும் இல்லை.

அது ஒரு வேலை; அதுவும் அவர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை; அதை அவர்கள் செய்கிறார்கள். அதில் என்ன தவறு என்ற எண்ணம்தான் பொதுப்புத்தியில் உறைந்துபோயிருந்தது. இயல்பாக நடப்பவையெல்லாம் ‘இயல்பானவை’ அல்ல எனப் புரிந்துகொள்வதற்கு அரசியல் புரிதலும் சமூகப் புரிதலும் வேண்டும். அதைத்தான் தெளிவாகப் பேசுகிறது ‘மாறாது என்று எதுவுமில்லை’ என்ற புத்தகம். தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் சஃபாயி கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் செயல்பாட்டாளரான பெஜவாடா வில்சனுடன் எழுத்தாளர் பெருமாள்முருகன் நடத்திய நேர்காணல் இந்தத் தலைப்பில் புத்தக வடிவம் பெற்றுள்ளது.

முப்பத்தைந்து வருட காலக் கள அனுபவம் வில்சனின் வார்த்தை ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது.

பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்பவர் இறந்தால் அந்த மரணத்திற்கு எவரும் பொறுப்பில்லை என்ற வகையில் நமது சமூக அமைப்பில் இருக்கும் நிதரிசனம் முகத்தில் அறைகிறது. இத்தகைய அவலம் குறித்தும் இன்னும் இத்தூய்மைப் பணியாளர்களின் வாழ்நிலை குறித்தும் இச்சமூகம் கொண்டிருக்கும் பாராமுகத்தைப் பற்றிய வில்சனின் கேள்விகள் மனச்சாட்சியை உலுக்குபவை. சட்டம் கொண்டுவரப் போராட்டம், அந்தச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுவதற்காக  ஒரு போராட்டம் எனச் சுற்றிச் சுழன்று செக்குமாடுபோல ஓரிடத்தை விட்டு அடுத்த கட்டம் செல்லவே எவ்வளவு பாடு என்பதை வாசிக்க நேர்கையில் ஆயாசம் எழாமல் இல்லை. ஆனால் வில்சன் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார், “சஃபாயி அந்தோலன் இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து ஒரு புரிதலுக்கு வந்திருக்கிறது. நாம் செல்ல வேண்டிய இடம் வேறு,   போக வேண்டிய தூரம் நிறையவே இருப்பதையும் உணர்ந்து ஓர் இலக்கை நிர்ணயித்துவிட்டோம். நீங்கள் உங்கள் அடிப்படை வசதிகளுக்காகப் போராடுங்கள். ஆனால் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் வேறாக இருக்க வேண்டும்” என்கிறார் வில்சன்.

போராட்டக் களம் தெளிவாக முன்னால் உள்ளது. வழிமுறைகள் முக்கியம். “முதலில் இதெல்லாம் இருக்கக் கூடாது என்ற எண்ணமே இங்கு இல்லை. இந்த வேலையே இருக்கக் கூடாது என்பதல்ல. கொஞ்சம் சுதாரித்துப் பாதுகாப்புடன் எப்படி இந்த வேலையைச் செய்வது என்று பார்க்க வேண்டும். கொஞ்சம் நிறைவான சம்பளம் கொடுத்தால் நல்லது. இதுபோன்ற வேலையைச் செய்ய யாராவது முன்வந்துதானே ஆக வேண்டும்” எனக் கூறும் வில்சன், ஏன் இது இவ்வளவு சிக்கலானது எனவும் தெளிவாக எடுத்துரைக்கிறார். “உதாரணமாக, கையால் மலம் அள்ளுவதை ஒழிப்பதற்கு 1993ஆம் ஆண்டின் சட்டம் இருக்கிறது. அப்படி யாரேனும் இருந்தால் அவரைக் கண்டுபிடிப்பதும் அவருக்கான மறுவாழ்வு சார்ந்த உத்தரவாதத்தை அளிப்பதும் மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு என இந்தச் சட்டம் சொல்கிறது. அந்தப் பணியை ஒழுங்காகச் செய்யவில்லையெனில் யாரேனும் ஒருவர் அவரைத் தண்டிக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு தண்டனை கொடுக்கும் அதிகாரமும் மாவட்ட ஆட்சியருக்குத்தான் உண்டு; எனில் வேலை எவ்வாறு நடக்கும்?” இது வெறும் கண்துடைப்புக்கான சட்டம்; அவர்களை அடிப்படை உரிமைகள்கூட இல்லாத குடிமக்களாய் அரசும் நடத்துவதை இச்சட்டச் சிக்கல் உணர்த்துகிறது.

இந்தப் போராட்டம் மேன்மேலும் சிக்கலாக இருப்பதற்கு இச்சமூக அமைப்பின் சாதியப் படிநிலை முக்கியக் காரணம். அதுதான் எந்த எல்லைவரை போராடலாம் என்று தீர்மானிக்கிறது. வில்சன் அதைத் தீர்க்கமாக விவரிக்கிறார். “தீண்டத்தகாதவனாக ஒடுக்கப்பட்டவனாக உன்னுடைய போராட்டங்கள் இது வரையிலும்தான் இருக்க வேண்டும் என்று கண்ணுக்குத் தெரியாத ஓர் எல்லையை நிர்ணயித்துவிடுகிறார்கள். சாதிய நோக்கிலும் கட்டுப்படுத்துகிறார்கள். ஓர் இந்தியராக நாம் சமத்துவம் வேண்டிக் குரல் எழுப்ப முடியாது; நீதிக்காகவும் போராட முடியாது. நீதியும் சமத்துவமும் கிடைக்கும் பட்சத்தில் ஒரு புதுச் சமுதாயத்தை உருவாக்கிவிடலாம். ஆனால் தேய்ந்துபோன ஒரு துடைப்பத்திற்குப் பதில் புதுத் துடைப்பம் கிடைக்கப் பெறுவதையே நீதி கிடைத்த உணர்வை அளிக்குமாறு செய்துவிட்டோம். சாதிய அடுக்கின் படிநிலைதான் இவையெல்லாம் என நிர்ணயித்துவிட்டோம். இவ்வாறு விளிம்புநிலை மனிதர்களைக் கையாளுதலைச் சாதிய மனோபாவம் நியாயப்படுத்திவிடுகிறது. அது சரியானதல்ல என்று தெரிந்தாலும் நாம் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கிறோம். சாதி இவ்வாறான கையாளுதலை நியாயப்படுத்தி, மாற்றத்திற்கான பாதையையும் கேடயம்போலத் தடுத்துவிடுகிறது. இந்தச் சாதிய அணுகுமுறைதான் இந்தியச் சூழலின்

மாற்றத்திற்கான சவாலாகவும் இருக்கிறது” என வில்சன் எடுத்துரைக்கிறார்.

போராட்டம் நடத்துகிறீர்கள் சரி, அதற்கான தீர்வுகளையும் நீங்களே கூறுங்கள் என்று எங்களிடம் கேட்பதுதான் இன்னும் வேடிக்கை என்கிறார் வில்சன். அப்பாவித்தனம்போலத் தோன்றும் இந்தப் பதிலுக்குப் பின்னாலும் ஒளிந்திருப்பது சாதிதான். “சாதிய மனோபாவத்திலிருந்துதான் அவர்களுக்கு இந்தக் கேள்வி எழுகிறது. சாதிதானே இப்படி எல்லைகளை வகுத்து இவரிவருக்கு இந்திந்த வேலைகளை நிர்ணயிக்கிறது. அதிலிருந்து தப்புவதற்குப் பார்க்கிறார்கள். மெத்தப் படித்தவர்களே இவ்வாறான கேள்விகளை எழுப்புகிறார்கள்” என்று கூறும் வில்சன், இதற்கெல்லாம் முதற்படியாக நாம் மூடி மூடி மறைக்காமல் சாதிகளையும் சாதியரீதியிலான தீண்டாமையையும் உடைத்துப் பேசுவதோடு தொடர்ந்த ஓர் உரையாடலையும் நிகழ்த்த வேண்டும் என்கிறார்.

மக்களை இவ்வாறான அரசியல் புரிதலுக்குள் கொண்டு வருவதே சஃபாயி அந்தோலன் அமைப்பின் முக்கிய முன்னகர்வு என்றும் குறிப்பிடுகிறார். அதனால்தான் இவ்வமைப்பு இம்மக்களின் தனிப்பட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு உதவுவதற்கு முன்னுரிமை தருவதில்லை. தம் நிலை என்ன என்ற அரசியல் புரிதலை ஏற்படுத்துதலே இன்றியமையாத பணி என்று கருதுகிறது. “சாதியத்தின் பெரிய பலவீனமே உரையாடல் இல்லாமல் இருப்பதுதான். அதை நாம் தொடங்கிவிட்டோம்” என்று கூறும் வில்சன் முழுமையான அரசியல் பிரக்ஞைதான் சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் வழிவகை செய்யும் என்கிறார். நமது ஒட்டுமொத்த நோக்கமானது சமூக மாற்றமாகத்தான் இருக்க வேண்டும். சமூக மாற்றம் ஏற்படாமல் எந்தப் பயனும் இல்லை என்றும் தெளிவாகவே விளக்குகிறார்.

காஷ்மீர் முதல் குமரிவரை ஒடுக்கப்பட்ட சாதியினரே தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவதைக் காண முடிகிறது. காஷ்மீரின் வாத்தல், ஆந்திராவின் அருந்ததியர், வட மாநிலத்தின் வால்மீகி, டோம், மகாராஷ்டிரத்தின் மாங்கு, மாத்தே, குஜராத்தில் சுக்கி ருக்கி, லால் பேக், தானுக், அஸ்ஸாமில் பாஸ்போர் எனப் பிரதேசத்துக்குப் பிரதேசம் சாதிகள் பல காலம்காலமாகத் தூய்மைப் பணிகளில் மட்டுமே உழல்கின்றன. இவர்களில் கல்வி கற்றவர்கள், அக்கல்வியின் காரணமாகப் பிற பணிகளுக்குச் சென்றவர்கள், சஃபாயி அந்தோலனில் எத்தகைய பங்கு செலுத்துகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. அதை பெருமாள்முருகனும் வினவியிருக்கிறார். வில்சனின் பதில் முகத்தில் அறைவது: “இந்தச் சமூகத்தின் அருகில் வரக்கூடப் பயப்படுகிறார்கள். அப்படிப் படித்தவர்கள் முன்வந்திருந்தால் இந்த மக்களுக்கு இருக்கும் சமூக இடைவெளியைக் கல்வியால் இட்டு நிரப்பியிருக்கலாம். நாளுக்கு நாள் அந்த இடைவெளி அதிகமாகிக்கொண்டுதான் செல்கிறது. பொதுமக்களிடமிருந்து மட்டும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டவர்களாக இருப்பதில்லை. அதே சமூகத்திலிருந்து படித்து முன்னேறிய மக்களாலும் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்; இதுதான் உண்மை. மேலே சென்றவர்கள் கீழே இறங்கி வரத் தயாராயில்லை. அதுவும் பெரிய பிரச்சினைதான்” என்கிறார் வில்சன்.

அரசாங்கத்தின் பாராமுகம் மிகப் பெரிய தடையே என்று கூறும் வில்சன், உணவு உற்பத்தித் துறையில் செலுத்தப்படும் கவனத்தில் ஒரு சதவீதம் அளவுக்குக்கூடக் கழிவகற்றும் பணிக்குச் செலுத்தப்படுவதில்லை என்ற நிலையைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். இதுவும் மனிதர்கள் சார்ந்த, சமூக முன்னேற்றம் சார்ந்த துறைதான். ஆனால் இது குறித்துச் சட்டம் இயற்றும் மன்றங்களும் மக்கள் பிரதிநிதிகளும் பொதுச் சமூகமும் பேச மறப்பதும் இதை ஒரு பொருட்டாகக்கூட கருதாமல் இருப்பதும் மிகுந்த வலியைத் தருவன, போராட்டத்தின் பாதையை நீளச் செய்வன எனும் போது சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருக்கிறது.

ஆனால் வில்சன் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்: ‘மாறாதது என்று எதுவுமில்லை’.

          மின்னஞ்சல்: chithra.ananya@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.