அபிஷேகங்களும் அபத்தங்களும்
இது மன்னர்களின் காலம். ஒரு பக்கம் தென் இந்தியச் சோழர்கள்; மறு பக்கத்தில் ஆங்கில வின்சர் ஆட்சியாளர்கள். இன்றைய ஜனநாயக நாட்களிலும் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவர் கையிலும் வாள்கள். ஆதித்த கரிகாலனின் வீர வாளுக்கு முன்னால் மூன்றாம் சார்ல்ஸ் வைத்திருந்த ஒல்லிப் பிச்சான் வாள் ஏதோ அடுப்படியில் புடலங்காய் வெட்டும் குசினிக் கத்திபோல் தோன்றுகிறது. இருவருமே தேசியவாதத்திற்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள். ஒருவர் தமிழுக்கு, மற்றவர் ஆங்கிலேயத்திற்கு. இக்கட்டுரை சோழர்கள் பற்றியது அல்ல; ஆனால் சோழர்கள் இடையிடையே வருவார்கள்.
நான் இங்கே எழுதப்போவது மே மாதம் முதலாம் சனிக்கிழமையில் நடந்த ஆங்கில முடிசூட்டு விழாவைப் பற்றியது. பட்டாபிஷேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஒரே ஐரோப்பிய முடியாட்சி இங்கிலாந்து மட்டுமே. முடிசூட்டல்கள் டென்மார்க்கில் 1849இலும், ஸ்வீடனில் 1873 இல