கை நிறைய பேரீச்சம் பழங்கள்
ஓவியங்கள்: மணிவண்ணன்
அப்போது நான் மிகவும் சிறுபிள்ளையாக இருந்தேன். எனக்கு என்ன வயது இருந்திருக்கும் என்று சரியாக நினைவில்லை; என்றாலும், தாத்தாவுடன் என்னைப் பார்ப்பவர்கள் என்னுடைய தலையில் செல்லமாகத் தட்டிக் கன்னத்தைக் கிள்ளுவது மட்டும் ஞாபகம் இருக்கிறது. தாத்தாவை யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்பாவுடன் ஒருபோதும் நான் வெளியே போனதில்லை; தாத்தா வெளியே எங்கே போனாலும் என்னையும் அழைத்துப் போவார். காலைப் பொழுதுகளில் குர்ஆன் படிப்பதற்காகப் பள்ளிவாசலுக்கு மட்டும் நான் தனியாகப் போய் வருவேன். பள்ளிவாசலும் ஆறும் பேரீச்சைத் தோப்புகளும் என்னுடைய வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருந்தன. என் வயதொத்த சிறுவர்களில் பலரும் குர்ஆன் கல்விக்காகப் பள்ளிவாசலுக்குப் போவதை வெறுத்தார்கள். ஆனால் அது என