என்னுள் பல பெண்கள் உயிர் வாழ்கிறார்கள்
ஓவியங்கள்: மு. நடேஷ்
என்னுள் பல பெண்கள் உயிர் வாழ்கிறார்கள்
திடீரென்று ஒரு மதியம்
புழுதி படிந்த பழைய வானொலிப் பெட்டியில்
‘வக்த் நே கியா க்யா ஹஸீன் ஸிதம்
தும் ரஹே ந தும் ஹம் ரஹே ந ஹம்’*
பாடல் கேட்கும் இச்சை எழுகிறது
அச்சமயம் அந்தப் பாடலைக் கேட்பவள் என் அம்மாவாக இருக்கிறாள்.
நடு இரவில் எழுந்து உடையை அவிழ்க்காமல்
துவலைக்குழாயின் கீழ் நின்றுகொள்கிறேன்
உடம்பைத் துடைத்துக்கொள்ளாமல் வந்து படுக்கிறேன்
அப்போது கட்டிலில் திரும்பிப் படுப்பவள் அத்தையாக இருக்கிறாள்.
பதினைந்து வருடப் பழைய சிவப்புப் புடவையைப்
பெட்டியிலிருந்து எடுத்துப் பார்க்க முற்படுகிறேன்
வாழ்க்கையைச் செய்ததுபோல் அதையும்
மடித்து அதே இடத்தில் வைக்கிறேன்
அவ்வேளை புடவையை வெறித்துப் பார்க்கும்
கருத்துப்போன சரிகைக் கண்கள் சித்தியுடையவை.
பூண்டின் பற்களை இடிக்கும்போது
கையிலிருந்து உலக்கை விழுந்துவிடுகிறது
தூரத்திலிருந்து மாமியார் உறுமலின் எதிரொலி
அந்நேரம் நடுங்கும் கைகளும் கால்களும் பாட்டியுடையவை.
இப்போது புரிகிறது
இத்தனை நாளும் வெறுமே அமைதியற்று இருக்கவில்லை நான்
ஒருத்தி மட்டும் அன்று
பல பெண்கள் வாழ்கிறார்கள் என்னுள்.
* இந்திப் பாடல்: எத்தனை இனிய வதை காலம் செய்தது
நீ நீயாக இல்லை நான் நானாக இல்லை
“கயே ஔரதூ(ன்) ஜீஅந்தியூ(ன்) ஆஹினி” சிந்திக் கவிதையின் தமிழாக்கம் விம்மி சதாரங்கானியே செய்த “கயீ(ன்) ஔரதே ஜீதி ஹை முஜ்மே” இந்தி மொழியாக்கம் வழியாக.
அங்கணத்தின் கடல்
கடல் என் வீட்டிலிருந்து வெகு தூரம் இருந்தது
வீடு சிறியதாக இருந்தபோது
அங்கணம் மிகப் பெரியதாக இருந்தது.
கயிற்றுக் கட்டிலில் படுத்தால்
வானம் முழுவதும் தெரியும்
காற்றில் தொங்கும் வானம்
நம் மேலேயே விழுந்துவிடுமோ
என்று நினைத்துப் பயப்படுவேன்.
பிறகு வீடு பெரிதாகிக்கொண்டே போனது
வானம் குறுகிக்கொண்டே வந்தது.
ஒருநாள் அங்கணம் அடுக்குமாடிக் கட்டடத்தின்
சின்ன அடுக்குமனையில் தொலைந்துபோனது.
கயிற்றுக் கட்டிலில் படுத்தபோது
முழுவதுமாகத் தெரிந்த வானம்
சமையலறை ஜன்னல் வழியே பார்த்தபோது
சாணளவுகூட இருக்கவில்லை.
ஆனாலும் அது எனக்குக் கடலாகவே இருந்தது.
ஏனென்றால் கடல் என் வீட்டிலிருந்து வெகு தூரம் இருந்தது.
பல ஆண்டுகளுக்குப்பின் தரையில் விரிந்து கிடந்த
உண்மையான கடலைப் பார்த்தேன்
அது விழுந்துவிடும் என்ற அச்சமே இல்லை.
இருந்தாலும் மனம்
கடலான வானத்தை வெகுவாகத் தேடியது.
“அங்கன் வாரோ ஸமுண்ட” சிந்திக் கவிதையின் தமிழாக்கம் விம்மி சதாரங்கானியே செய்த “ஆங்கன் வாலா ஸமுத்ர” இந்தி மொழியாக்கம் வழியாக.
நெருப்புக்கோழிப் பெண்
கூட்டமான தெருவில் நீ எப்போதும் தலை நிமிர்ந்து நடப்பதில்லை.
ஆனால் மதியம் யாருமேயில்லா தெருவில் நடக்கும்போதும்
ஏன் உன் தலை குனிந்தே இருக்கிறது?
பார்வையில் படாத வெறிக்கும் கண்களுக்குப் பயந்து, பதைபதைத்து
இரண்டடிக்கு ஒருமுறை மேலும் குனிந்துகொண்டே போகிறாய்.
உன்னை நோக்கி வரும் புயலைப் பார்
நெருப்புக்கோழிபோல் மண்ணில் தலையைப் புதைத்துக்கொள்கிறாய்.
இதனால் புயல் அடங்கிவிடுமா என்ன?
ஒருவேளை அதன் கவனம் உன்மேல் படாமல்
உன்னைத் தாண்டி
தன் நிமிர்ந்த முலைகளை நெஞ்சுக்குள் புதைத்துக்கொள்ள முயலும்
அந்த இன்னொரு பெண்ணின் மேல் விழலாம்.
அல்லது கீழே நோக்கியபடி தரையில் எதையோ தேடும்
அந்தப் பெண்ணின் மேல் பாயலாம்.
அல்லது தன் கிழிந்த புடவை முந்தானையின் கறைகளை
மறைக்க முயலும் பெண்ணைத் துரத்தலாம்.
இப்படி நீ தலை நிமிர்த்தாமல் இருந்தால்
குருட்டுக் கண்களுள் புழுதி விழுந்து எரியும்போதுதான்
புயல் வருவதை உணர்ந்துகொள்ளும்
அந்தக் கிழவியைப் புயல் தூக்கிப் போகலாம்.
இப்போதாவது தலை நிமிர்ந்து நேர்கொண்டு பார்
புயல் உன்மேல் இடித்துக்கொண்டு தூள்தூளாகப்
போகும்படி நட.
ஒளிரும் சில கிரணங்கள் உன்னை நோக்கி வந்தால்
இன்னும் சில நெருப்புக்கோழிப் பெண்கள்
தங்கள் தலைகளை மண்ணுக்குள்ளிருந்து
வெளியே எடுப்பார்கள் தைரியமாக
சிறகடிப்பார்கள், ஓடுவார்கள், புயலுடன் மோதுவார்கள்
பின்பு தரையில் படர்ந்திருக்கும் செத்த மண்ணாக மரிக்கும் புயல்.
“ஷதுமுர்க் சோக்ரி” சிந்திக் கவிதையின் தமிழாக்கம் விம்மி சதாரங்கானியே செய்த “ஷதுமுர்க் லட்கி” இந்தி மொழியாக்கம் வழியாக.
பறவையே! பற!
பெடையே பற!
சேவலே பற!
குயிலே பற!
கிளியே பற!
மைனாவே பற!
பசுவே பற!
ஆடே பற!
பெடையே பற, சேவலே பற விளையாட்டு விளையாட
குழந்தைகள் அழைக்கிறார்கள் என்னை -
அம்மா, நீயும் எங்களுடன் விளையாடேன்!
நான் சிரிக்கிறேன் – இல்லை இல்லை! நான் குழந்தையா என்ன?
உங்கள் வயதில்தான் இதை விளையாட முடியும்.
உங்கள் வயதில்
நானும் தோழிகளுடன் மணிக்கணக்காக விளையாடுவேன்.
பெடையே பற! சேவலே பற!
குழந்தைகளிடம் என்னால் சொல்ல முடியவில்லை
அப்போது நானும் பறவையாக இருந்தேன்
பறந்துகொண்டிருந்தேன்.
பிறகு என் சிறகு நான்கு கால்களாகிவிட்டன
நான் பூமியுடன் பிணைக்கப்பட்டேன்.
என் அழகிய வண்ணங்கள் பால்மடியாகின
நான் கொட்டிலில் கட்டப்பட்டேன்.
இப்போது நான் கால்நடையாகிவிட்டேன்
ஆடு மாடுகள் பறக்குமா என்ன?
தப்பித் தவறிப் பறக்க முயன்றால்
அது ஆட்டத்தில் சேர்த்தி கிடையாது.
“ஜிர்கி! உட்!” சிந்திக் கவிதையின் தமிழாக்கம் விம்மி சதாரங்கானியே செய்த “சிடியா! உட்!” இந்தி மொழியாக்கம் வழியாக.
மின்னஞ்சல்: cslakshmi44@gmail.com