சே.ப. நரசிம்மலு நாயுடு: முகவுரைகளும் சாதியை வரையறுத்து எழுதப்பட்ட கடிதங்களும்
ஆங்கிலேயர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யத் தொடங்கியதும் தமிழர்களிடம் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது. காரணம் பிராமணர் அல்லாத ஒவ்வொரு சாதியினரும் தமக்கான வரலாறு பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அதுவரை கடவுளர்களின் கதைகள் தந்த வெளிச்சத்தில் உருவானவற்றை வரலாறாக நம்பிக்கொண்டிருந்த அவர்கள், அவை தாம் வாழும் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயன்படும்படியான கச்சாப் பொருளாக இருக்காது என்று உணரத் தொடங்கியதும் அப்போதுதான். பழைய வரலாற்றைப் புதுப்பித்தும் சமகாலத் தேவையின் நியாயங்களுக்குச் சான்றாகும் விஷயங்களைச் சேர்த்தும் வரலாற்றை எழுதினார்கள்.
அப்படி சேலம் படகால நரசிம்மலு நாயுடுவால் (சே.ப.ந.) எழுதப்பட்ட நூல்தான் ‘ஸ்ரீ சந்திரவமிச சத்திரியராகும் ஆந்திரர் என்னும் கவுரவராகிய பலிஜவாரு புராணம் அல்லது நாயுடுகாரு சமஸ்தான சரித்திரம்’. 541 பக்கங்கள் கொண்டது. 1896 இல் முதல் பதிப்பும் 1905 இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு பதிப்பிற்கும் அவர் எழுதிய முகவுரைகளும், இரண்டு பதிப்புகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சே.ப.ந. எழுதிய கடிதங்களும் அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களும் பலிஜா நாயுடு சாதியினரை நால்வருணத்தில் எவ்வடுக்கில் வைப்பது என்பது பற்றிய விவாதங்களில் பங்கெடுக்க வைத்தன. இக்கடிதங்களை இரண்டாம் பதிப்பின் முகவுரையிலேயே சே.ப.ந. காட்டியிருக்கிறார். அதன்படி இருபதாம் நூற்றாண்டில் சாதி உருவாக்கத்தின் அல்லது வருண அடுக்கில் இடம் பெயர்த்தலின் வழிமுறை அரசியலைப் புரிந்துகொண்டால் அது சமகால சாதி குறித்த ஓர்மையில் தெளிவை ஏற்படுத்தலாம்.
கோயம்புத்தூரில் தான் வாழ்ந்த காலத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் சே.ப.ந. (1854 – 1922). கலாநிதி என்னும் பத்திரிகையின் ஆசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர். சேலம் மாவட்ட பூமி சாஸ்திர கிரந்தம், ஆஸ்திக மதச் சித்தாந்தம், மதவிருட்சம், காசி யாத்திரை, தருக்கச் சாஸ்திரம், சங்கீத சாஸ்திரம், பக்தி சாஸ்திரம், இந்து பைபிள் என்னும் ஆரியர் சத்தியவேதம், ஆரியர் ஆசாரம், கலியுக தருமம், வேதப் பொருள் சார சங்கிரகம், தென்னிந்தியப் பிரம்ம சமாஜத்தின் சரித்திர சார சங்கம் உள்ளிட்ட தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தத்துவம், விஞ்ஞானம், சட்டம் எனப் பல்துறைகளின் வித்தகர். இந்தியா முழுமையும் சுற்றுப் பயணம் செய்து வட இந்தியப் பயண அனுபவங்களை ‘ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்’ என்றும், தென்னிந்தியப் பயண அனுபவங்களை ‘தக்சன இந்தியா சரித்திரம்’ என்றும் எழுதியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதிப்பாசிரியராகவும் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. பிரம்மசமாஜத்தில் பற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர். கோயம்புத்தூரின் தொழில்வள நகர் கட்டமைப்பின் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார். அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். பலிஜநாயுடு சமூகத்தினரைச் சத்திரியராக்குவதற்குத் தனி ஆளாக ஏராளமான வேலைகளைச் செய்தவர்.
முதல் பதிப்பின் முகவுரைக்கு சே.ப.ந. மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. அது அவரது மற்ற நூல்களின் முகவுரை போலவே இயல்பான தொனியில் அமைந்திருக்கிறது. பரத கண்டத்தில் பிரபலமான ஒவ்வொரு சாதியின் பெருமைகளும் பல புராணங்களாக எழுதப்பட்டும் அச்சிடப்பட்டும் வந்துள்ளன. பலரும் தத்தம் விருப்பப்படி ஆரிய பிராமணர்கள், விஸ்வகர்ம பிராமணர்கள், செளராஷ்டிர பிராமணர்கள், சூரிய வம்ச சத்திரியர்கள், சந்திர வம்ச சத்திரியர்கள், தேவ அங்கத்தார், சான்றோர், வைசியர், உயர்குல வேளாளர் என்று தம் குலத்தாரைப் பெருமைப்படுத்தி வரும்போது பலிஜவாரு என்னும் சத்திரியர்களுடைய சரியான சரித்திரம் அதுவரை அச்சில் இல்லை. சிலர் பலிஜவாரைச் சூத்திரர், சேவக சாதியார் என்று சொல்லி வருகிறார்கள். பெயர் தெரியாத பண்டிதர் ஒருவரால் எழுதப்பட்ட ‘கவுரி புத்திர சரித்திர’மும் சரியானதாக இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வருத்தப்பட்டுத்தான் பலிஜவாரு புராணத்தை எழுதியிருக்கிறார் சே.ப.ந.
இந்நூல், அவருக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டும் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த சாசனங்களின் செய்திகள் எழுதிய புத்தகங்களைக் கொண்டும், சரித்திர ஆதாரங்களைக் கொண்டும் தேசம் முழுக்கச் செய்த பயணத்தின்போது பெற்ற தகவல்களைக் கொண்டும் முதலில் தெலுங்கில் எழுதப்பட்டுப் பின் அவராலேயே தமிழுக்கும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. பலிஜவாரின் பூர்வீகம் ஆந்திரா எனக் கருதும் சே.ப.ந., மராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளைத் தம் தாய்மொழிபோலப் பேசி வருவதாலும், பலிஜவாரில் தமிழ்ப் பேசுவோர் அதிகம் இருப்பதாலும் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட முன்வந்ததாகத் தமது முதல் பதிப்பின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன்வழி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பதினான்கு இலட்சம் மக்கள் தொகைகொண்ட பலிஜவாரிடம் தமது சாதி குறித்த ஓர்மை பெரிய அளவில் இல்லாததை அறிந்து அவர்களின் ‘சூத்திரர்’ அடையாளத்தை மாற்றுவதுதான் 1890முதல் 1905வரை சே.ப.ந.வின் வேலைத் திட்டமாக அமைந்திருந்தது தெரியவருகிறது.
பலிஜவாரு புராணத்தின் இரண்டாம் பதிப்பின் முகவுரை புராணத்தின் மையக் கதையைக் காட்டிலும் சிறப்பானது. நேர்த்தியான, தர்க்கப்பூர்வமான தகவல்களைக் கொண்டது. முதல் பதிப்பைப் பலருக்கும் அனுப்பி அதைப் பெற்றுக்கொண்டோர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சில மாறுதல்களைச் செய்து இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. முதல் பதிப்பைப் பாராட்டி இந்து, நீலலோசனி முதலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் கல்லூரி முதன்மைத் தமிழ்ப் பண்டிதர் ஆர். சபாபதி பிள்ளை, இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான்களில் ஒருவரான சாமக்குளம் வெங்கடரமண ஐயங்கார் ஆகியோர் கடிதம் எழுதியிருக்கின்றனர். திருவில்லிப்புத்தூர் வட்டார நாயுடு சாதியினர் நூலுக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு 1901 ஆம் ஆண்டு சென்செஸ் அறிக்கையில் பலிஜவார் வகிக்கும் இடம் குறித்தும் சே.ப.ந.விடம் முறையிட்டிருக்கின்றனர்.
இந்து பத்திரிகை, பலிஜவாரு புராணம் பற்றிச் சொல்லும்போது மத்திய இந்தியாவிலும் வட இந்தியாவிலும் இருந்த பற்பல சாதிகள் முக்கியமாக விஜயநகர சமஸ்தானத்தில் இருந்த சாதிகளைப் பற்றி வினோதமான சங்கதிகளைத் திரட்டி அதைப் பதிப்பித்த விஷயத்தில் கூடுதலான காலத்தையும் சிரமத்தையும் எடுத்துக்கொண்டிருப்பது தெரியவருகிறது. உலக ஆரம்பம் முதல் சூரிய வம்சம், சந்திர வம்சம் முதலான பல சாதிகள் உற்பத்தியானதுவரை பற்பல செய்திகளை விவரித்திருக்கிறது. கிறிஸ்து பிறப்புக்கு 2803 ஆண்டுகளுக்கு முன் ‘பலிஞ்சன்’ என்னும் பெயருடைய சந்திர வம்சத்தைச் சார்ந்த ஆந்திர சத்திரியனொருவனின் வம்சாவளியினரே இன்றைய பலிஜவாரு சாதியினர் என்று நூலாசிரியர் குறித்திருக்கிறார்.
கோட்ட பலிஜவாரின் நான்கு வகுப்புகள் பற்றியும் அவற்றின் பற்பல உட்பிரிவுகள் பற்றியும் அவர்களின் வீட்டுப் பெயர்கள் (குடும்பப் பெயர்கள்) பற்றியும் குறிப்பிடும் நூல், கோட்டை என்ற சொல் விஜயநகரக் கோட்டையைக் குறிப்பதால் அது அவர்களுடைய சரியான தோற்றத்தைக் காட்டுவதாகக் கூறுகிறது. பேட்டை பலிஜவாரு பற்றியும் அவர்தம் வகுப்புகள் பற்றியும் மிகச் சுருக்கமாகச் சித்திரித்திருக்கிறது. பிறகு பலிஜவாரின் திருமண, இறப்புச் சடங்குமுறைகள் பற்றியும் இந்து சாதியின் ஆச்சாரங்கள் பிராமணங்கள் பற்றியும் சித்திரிக்கிறது. புத்தகம் முழுமையும் பார்க்கும்போது இது மிக உபயோகமான செய்திகளையும் விதிகளையும் மறைந்துபோன புராண சரித்திரத்தையும் காட்ட முதன்முதலாகத் தமிழில் எழுதப்பட்டதாகையால் இதை எழுதிய நரசிம்மலு நாயுடுவின் தேச அபிமான பிரயத்தனம் புகழ்ந்துகொண்டாடத் தக்கதாகும் என்று தனது கருத்தைச் சொல்லியிருக்கிறது.
நீலலோசனி ஆசிரியர் டி. இராஜமையங்கார், 1899 ஜூலை 4 ஆம் தேதி எழுதியிருப்பதன் கருத்து: “சே.ப.ந. அவர்கள் ‘நாயக்கர் குலத் திலகம்’ என்பதில் ஐயமில்லை. நூல் குறித்து எமக்கு மறுப்பு எதுவும் தோன்றவில்லை. நாயக்கர் வம்சத்திற்கு அழியாத கீர்த்தியை உண்டாக்கியிருக்கிறார். நீலலோசனியில் நான் எழுதிவரும் ‘தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு’ தொடரைப் படித்து வருகிறவர்கள் பலிஜவாரு புராணத்தைப் படித்தீர்களேயானால் எனது வினோத கதையின் ஆதாரமான சரித்திரம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடியும்”.
ஏற்கெனவே நாயக்க மன்னர்களின் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்த ஒருவருக்கு, அதையொட்டி வேறொரு கோணத்தில் நாயக்க சாதியினரின் வரலாற்றைப் புதியதாக எழுதியவர் (சே.ப.ந) தான் சார்ந்த நாயக்கர் குலத்திற்குத் திலகம் போன்றவராகத் தெரிந்திருக்கிறார். தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தையும் வாரிசையும் தெளிவாக உறுதி செய்யும் சான்றுகள் இல்லாத நிலையில் மன்னர்களின் வரலாற்றை எழுதிய ராஜமையங்காருக்கு, தான் அறிந்திராத புராண இதிகாசச் செய்திகளையும் நேர்ப்பேச்சுச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் நூல் எழுதியவர் குலத்திலகமாகத் தெரிவதில் வியப்பில்லைதான்.
திருவில்லிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நாயுடு சாதியினர் பலிஜவாரு புராணத்தைப் படித்த பிறகு அந்நூல் பற்றித் தம் சாதியாருடைய அந்தஸ்தையும் அருமை பெருமைகளையும் அறிந்துகொள்ள உதவியாக அமைந்தது எனக் குறிப்பிட்டுப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றித் தத்தமது குடும்ப விழாக்களில் வீட்டுப் பெரியவருக்குச் செய்யப்படும் மரியாதை போலவே சே.ப.ந.வுக்கும் அவருக்கென்று ஒரு தாம்பூலத்தைத் தனியாக எடுத்து வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள். இந்தக் கடிதமும் பலிஜவாரிடம் தம் சாதி குறித்த வரலாற்றுப் புரிதல் அவ்வளவாக இல்லாததையே காட்டுகிறது. இக்கடிதத்தோடு அவர்கள் திருவில்லிப்புத்தூர் மஞ்சப்பூத் தெரு நாட்டாண்மை சிங்கிலி நாயுடு, சிவந்தப்ப நாயுடு, மேட்டுத் தெரு அழகிரிசாமி நாயுடு, கிருஷ்ணன்கோயில் முத்துசாமி நாயுடு, பெருமாள்பட்டி சங்கப்ப நாயுடு, தம்பிநாய்க்கன் தெரு நாட்டாண்மை கிருஷ்ணசாமி நாயுடு, அய்யம்பட்டி கிராம மக்கள், அவ்வூர் நாட்டாண்மை கிருஷ்ணசாமி நாயுடு, ராமசாமி நாயுடு, சுத்திகுளம் கிராம மக்கள், மடவார் வளாகம் கோகுல பிருந்தாவனத் தெருவைச் சார்ந்த ராஜகோபால நாயுடு, அரிகோவிந்தராஜ ராவ், என்.ஈ. எத்திராஜுலு நாயுடு, சுப்பாராவ் ஆகியோர் கையெழுத்திட்ட ஒரு விண்ணப்பத்தையும் சே.ப.ந.வுக்கு அனுப்பியிருக்கின்றனர்.
அவ்விண்ணப்பம் வருமாறு:
“திருவில்லிப்புத்தூரில் இருக்கிற வடகலை, தென்கலை தலைமைப் பிராமணர்கள் நம்முடைய வருணாசிரம விவரங்களைக் குறித்து அநேக சாசனங்களையும் சரித்திரங்களையும் பார்வையிட்டு நம்முடைய சாதியாருக்குக் கடிதமொன்று அனுப்பியிருக்கிறார்கள். அதில் உள்ள செய்திக்கு மாறாகவும், தற்போதைய அரசு 1890ஆம் ஆண்டு பிரசுரித்திருக்கிற சென்செஸ் மானுவல் 31 பிரிவில் உள்ள செய்திக்கு மாறாகவும், 1900ஆம் ஆண்டினுடைய சென்செஸ் மானுவல் 36ஆவது பிரிவில் உள்ள செய்திக்கு மாறாகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருவில்லிப்புத்தூர் பகுதி சென்செஸ் அதிகாரிக்குச் சாதிகளின் பட்டியல் ஒன்றை அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பட்டியலை நாங்கள் பார்வையிட்டதில் வரிசை எண் 2இல் 9ஆவது காலத்தில் நம்முடைய சாதியாரை ‘பலிஜா ஆர் ஜென்டு’ என்றும் 3ஆவது காலத்தில் கம்மவார், காப்பு, கவரை, ரெட்டி, கம்பளத்தார், தொட்டியர், நாய்க்கர், வடுகன் என்பதாகக் காட்டியும் இவர்களும் பலிஜவார் சாதியினரே எனக் கருதி மாவட்ட ஆட்சியர் மேல் அதிகாரிகளுக்கு எழுதியிருப்பது தெரியவந்தது. எனவே பலிஜவாரைத் தொட்டியார், கம்பளத்தார் சாதியோடு சேர்த்திருப்பது எமது சாதியாருக்கு வருத்தம் தருவதாக இருப்பதால் மாவட்ட ஆட்சியருக்கு ஏழு ஊர்க்காரர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை 1901ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் அனுப்பி வைத்தோம். அதற்கு அவர் பலிஜவார், கம்மவார், கவரை, கம்பளம் முதலியவர்கள் தனித்தனிச் சாதியினராய் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆகவே தாங்கள் எழுதிய கடிதம் கவனிக்கப்படும் என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்; என்றபோதிலும் பழைய பட்டியலின் அடிப்படையிலேயே சென்செஸ் அதிகாரிகள் நம்முடைய சாதியாரை கவரை என்று எழுதிக்கொள்வதாகக் கூறுகிறார்கள். இது பலவிதமான கலக்கத்தைத் தருவதாக இருக்கிறது.
“வைகுண்டம், புளியங்குடி முதலிய ஊர்களில் அய்யவாரு முத்துசாமி நாயுடு நம் சாதி குறித்து எவ்வாறு எழுதிக்கொள்வது என்பது பற்றிக் கருத்துக் கேட்டு வந்துள்ளார். அரசு வரையறுத்துள்ள சாதிகளின் பட்டியல், நாங்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கொடுத்த முறையீட்டு விண்ணப்பம், அதனுடன் இணைத்த இணைப்புகள், மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து வந்த பதில் கடிதம், நம்முடைய சாதிக்குரிய தலைமைப் பிராமணர்கள் அனுப்பிய பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றைத் தங்கள் பார்வைக்காக அனுப்பியுள்ளோம். அவை அனைத்தையும் பார்வையிட்டு நம் சமூகத்தில் தீர்க்க ஆலோசனை செய்து அரசுக்கு மறுப்பாக என்.ஈ. எத்திராஜுலு நாயுடு சென்ற 18, 20, 22ஆம் தேதிகளில் தபால் அட்டைகளில் அரசு அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பியுள்ளவாறு நம்மை ‘சத்திரியர்’ என்று அரசு அழைக்க வேண்டும்; அல்லது நம்முடைய சாதிக்குரிய தலைமைப் பிராமணர்கள் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தில் உள்ளபடி ‘கவுரவர்’ என்று இருக்க வேண்டும் அல்லது ‘கவரபலிஜா’ அல்லது ‘ஆந்திர சத்திரியர்’ என்றாவது இருக்க வேண்டும்; அல்லது சாஸ்திரப்படி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும். அந்தப்படியாக நம் சாதிப்பெயரைச் சீர்திருத்திக் கொண்டுவரத் தாங்களால் கூடிய முயற்சியும் பிரயாசையும் எடுத்துக்கொள்ள வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.”
விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட பிராமணர்களின் பரிந்துரைக் கடிதத்தில் பழைய இதிகாசங்களையும் பலிஜவாரு புராணத்தையும் பார்த்த பிறகு பலிஜவாரு புராணத்தின் 7ஆவது பக்கத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லியிருப்பதன்படியும் 1890ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு வெளியிட்டு இருக்கின்ற சென்செஸ் மானுவல் 10ஆவது பக்கம் 31ஆவது பிரிவின் 8ஆவது வரியிலும், 11ஆவது பக்கம் 1ஆவது வரியிலும் சொல்லியிருக்கிறபடி பிராமணர்களும் பலிஜாவாரும் ‘ராவ்’ என்று சொல்லிக்கொள்ளலாம் என்று இருப்பதாலும் இப்பொழுது (1901) வெளியிட்டு இருக்கிற சென்செஸ் மானுவலில் 10, 11ஆவது பக்கங்களில் 35ஆவது பிரிவில் 2ஆவது உட்பிரிவில் பிராமணரும் பலிஜவாரும் தம்மை ‘ராயல்’ என்று சொல்லிக்கொள்ளலாம் என்று இருப்பதாலும் வேறு பல சான்றுகளாலும் இவர்கள் ‘ஆதிபூர்வ சந்திரகுல தெலுங்குச் சத்திரியர்களாகிய கவுரவ பலிஜாவார்’களென்றே தீர்மானமாக ஏற்படுகிறது.
இந்தக் கவுரவ சாதியாருக்குத் தென்னிந்தியாவில் இப்போதைய சாதிப்பெயர் ‘கவரை’ என்றும் ‘ஜென்டு’ என்றும் இருப்பது குறித்து ஆகமப் புராணங்களைப் பார்வையிட்டதில் மேற்கண்ட சாதிப்பெயர்கள் ஒற்றுமையாக இல்லை. ‘கவரை’ பட்டப்பெயராகத் தெரிகிறதே தவிர சாதிப்பெயராகத் தெரியவில்லை. வட இந்தியாவில் கவுரவ பலிஜவார்களில் அரசாங்கத் தேர்வில் 1891 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற கொடுமு செட்டி அப்பல் நரசிம்ம ராவ், 1897ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற வெங்கோப ராவ், சேஷகிரி ராவ், கொண்டல வெங்கடேசுவர ராவ் ஆகியோர் தமது பூர்வ சாதிப்பெயரை முறையாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது பலிஜவார்கள் தங்கள் சாதிப்பெயரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே சென்செஸ் பதிவு செய்ய வருகிறவர்களிடம் பழைய செஸ்செஸ் பட்டியலில் இருக்கும்படி ராவ், ராவ்நாயுடு, கவுரவர், கவுரவ பலிஜ என்று எழுதிக்கொள்ளச் சொன்னால் வருங்காலத்தில் சரியான சாதிப்பெயர் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
இதற்கு முன் உள்ள அயன் பட்டாக்களிலும் சொத்துப் பத்திரங்களிலும் இருக்கிற சாதிப்பெயர்களும் அரசுப்பணியில் இருக்கிறவர்களின் பணிப்பதிவேடுகளில் உள்ள சாதிப்பெயர்களும் அப்படியே தொடர்வதில் ஆட்சேபணை இல்லை. இனி பிறக்கப்போகும் பிள்ளைகளும் பத்திரங்களில் பெயர் இடம் பெறாத பிள்ளைகளும் வரும் காலத்தில் ராவ், ராவ்நாயுடு என்று எழுதிக்கொள்ளலாம். தென்னிந்தியாவில் உள்ள பலிஜவார்களிடம் குடும்பப் பெயர்கள் பயன்பாட்டில் இல்லாமல் போயிருப்பதாகத் தெரிகிறது. அது தெரிந்தவர்கள் எழுதி வைத்துக்கொள்ளலாம். குடும்பப் பெயர் தெரியாதவர்கள் யாரேனும் கேட்டால் ‘கவுரவர்’ என்றே சாதிப்பெயரைச் சொல்லி எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். குடும்பப் பெயர்களைக் கல்யாணப் பத்திரிகைகளில் பயன்பாட்டுக்குக்கொண்டுவந்தால் அவரது கோத்திரம், குலம் ஆகியன தெளிவாகத் தெரியும். வருங்காலத்தில் வழிமுறைப்படித் தவறின்றிச் சரியான பயன்பாட்டுக்குக் கொண்டுவருவீர்கள் என்று நம்புகிறோம் என எழுதி வடபத்திரசாயி தாத்தாசாரியார், கந்தாடை வி.ஸ்ரீ. அழகராசாரியார், சின்னகோபால தாத்தாசாரியார், ஸ்ரீ நிவாச தாத்தாசாரியார் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். இதன்வழி சென்செஸின்போது வருண அடுக்கில் தமது சாதியின் இருப்பு, இடமாற்றம் குறித்து அரசுக்குக் கோரிக்கை அனுப்புகிறவர்கள் தம் விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ள வருணத்தை, சாதியை உறுதிசெய்வதற்கு அவ்வூர் பிராமணர்களிடம் சான்று பெற வேண்டிய வழக்கம் இருந்திருப்பது தெரிய வருகிறது. மக்களிடம் சாதி பற்றிய கருத்துகளைக் கோரியிருந்தாலும் பெரும்பாலும் பிராமணர்கள் தரும் சான்றிதழின்படிதான் நால்வருணத்தில் சாதியின் ஏற்ற இறக்கங்களை அரசு செய்திருக்கிறது.
திருவில்லிப்புத்தூர் பலிஜவார்களின் விண்ணப்பமும் பிராமணர்களின் பரிந்துரைக் கடிதமும் சே.ப.ந. கைக்குக் கிடைத்தபோது சென்னை மாகாண அரசு அப்போதைய சென்செஸுக்காக மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர், தொழிலதிபர்கள், கல்விமான்களைக் கொண்டு குழு அமைத்துச் சரியான சாதிப்பட்டியலைத் தயாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமைக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டக் குழுவில் சே.ப.ந.வும் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். ஆட்சியர் தலைமையில் 1901ஆம் ஆண்டு ஜூலை 10, 13ஆம் தேதிகளில் கூடிய இரண்டு கூட்டத்திலும் சே.ப.ந. கலந்துகொண்டார். நீண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு அரசு ஏற்கெனவே அனுப்பியிருந்த சாதிப்பட்டியலில் இருந்த சில சாதிப்பெயர்களைக் குழு தம் விருப்பப்படி இடம் மாற்றியது. அரசு கொடுத்திருந்த பட்டியலில் பலிஜவாரு சாதியினர் ‘சூத்திரர்’ என்று இருந்தபோதும் அந்தச் சாதியினரைத் தக்க சான்றுகள் இருப்பதாகக் கருதிச் சத்திரிய வகுப்பில் சேர்த்தார்கள், திருத்தப்பட்ட பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கும்போது பலிஜவார் பற்றிய திருத்தத்திற்கு நியாயம் சேர்க்கும் ஆவணங்களை சே.ப.ந. மிகத் தெளிவாகத் தயாரித்திருந்தார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் அவர் 01.06.1901 ஆம் தேதியிட்ட 206 ஆம் எண் கொண்ட கடிதத்தையும் 25.05.1901 ஆம் தேதியிட்ட 1018 ஆம் எண் கொண்ட கடிதத்தையும் சாதி வருணத்தை மையப்படுத்தியிருந்த கடிதத்தையும் பார்த்தேன். அதில் இருந்த சாதிப் பட்டியலில் பலிஜவாரைச் சத்திரியர் வகுப்பில் சேர்க்காமல் சூத்திரர் வகுப்பில் சேர்த்தது சரியல்ல என்று தோன்றுகிறது. பல புராணங்களிலும் பல மாவட்ட மானுவல்களாலும் கர்னல் மெக்கன்சி, டெயிலர், இராபர்ட்ஸ்வெல் முதலானவர்களுடைய எழுத்துகளாலும் பலிஜவாரு சாதியினர் ‘சத்திரியர்’ என்று தெரிய வருவதாக எழுதிய சே.ப.ந., நாயக்க மன்னர்களின் வரலாற்றை விரிவாகச் சொல்லிய பின், இத்தகைய சாசனங்களைப் பார்வையிட்டுப் பலிஜவாரைக் கோமுட்டிச் சாதிகளுக்குக் கீழாகப் பதிப்பித்து அச்சாதியாரை அவமானப்படும்படி செய்யாமல் வருண பட்டியலில் இரண்டாமிடமாகிய சத்திரியர்களாகச் சேர்ப்பதுதான் சரியான இடமும் நியாயமுமாகும் என எழுதியிருந்தார்.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் “பலிஜவார் சரித்திரம் பற்றி நீங்கள் எழுதி அனுப்பியவற்றுக்காக நன்றி. நீங்கள் ஏற்கெனவே சென்னை சென்செஸ் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தின் செய்திகளோடு, இன்னபிற வரலாற்று நூல்களில் இருந்தும் சான்று காட்டிப் பலிஜவாரைப் பற்றி எழுதியிருந்தீர்கள். பலிஜவார், வணிகம் செய்யும் தெலுங்கு சாதியினர். இவர்களில் தேச பலிஜவார், பேட்டை பலிஜவார் என இரண்டு பிரிவுகள் உண்டு. தேச பலிஜவார் மதுரை, தஞ்சை, விஜயநகர சமஸ்தானங்களை ஆண்டவர்களின் வாரிசுகள். பேட்டை பலிஜவார் வளையல், உப்பு விற்போராவர். தமிழகத்தில் பலிஜவாரை வடுகர், கவரை என்றும் சொல்கிறார்கள். மதுரை, தஞ்சையை ஆண்ட நாயக்கர் சந்ததிகள் சத்திரிய சாதிகளைச் சார்ந்த கஷியப கோத்திரர்கள் என்றும் விஜயநகர சமஸ்தான ராயலுகாருகள் பரத்துவாச முனிவரின் நேரடியான வாரிசுகள் என்றும் சொல்கிறார்கள். மற்ற பலிஜவாருகள் மகாபாரதத்தில் வரும் கவுரவர்களின் சந்ததி என்று சொல்கிறார்கள். என்றாலும் மற்ற சாதியார் இவர்களைச் சத்திரியராக ஒத்துக்கொள்ளாமல் கலப்புச் சாதி என்றே சொல்கிறார்கள்; இந்தச் சாதியைச் சார்ந்தவர்கள் யாரும் இப்போது பூணூல் அணிவதில்லை; வேத காரியங்களையும் செய்வதில்லை. இந்த விண்ணப்பத்தின் வாயிலாகத்தான் அறிந்துகொண்டேன்” என அக்கடிதத்தில் எழுதியிருந்தார். இந்த மாதிரியான பதிலை சே.ப.ந. எதிர்பார்க்கவில்லை.
இதற்கிடையே சென்னை மாகாண சென்செஸ் அதிகாரியின் 1901 ஆம் ஆண்டிற்குரிய புதிய சென்செஸ் அறிக்கை வெளிவந்தது. அதில் “தொகுதி 15 இல், 130ஆவது பக்கத்தில் 22ஆம் பத்தியின் கடைசி வரியில் பலிஜவார் பற்றிக் குறிப்பிடும் செய்தியில் பலருக்கு அதிருப்தி இருக்கலாம். மாவட்டந்தோறும் குழு அமைத்தும் அவர்களுக்குச் சாதிகளின் பட்டியலை அனுப்பி அவர்தம் கருத்துக்களைக் கேட்டும்தான் இந்தப் புதிய அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறதே தவிர கெட்ட எண்ணத்தோடு ஒரு சாதியாருக்குள்ள அந்தஸ்தைக் குறைத்தும் இல்லாததைச் சேர்த்தும் தயார் செய்தது அல்ல; என்றாலும் இந்த வேலை அதிக நுட்பமும் தர்மசங்கடமான வேலையாக இருப்பதும் தெரிந்த விஷயமாகும் என்று இடம்பெற்றிருந்த செய்தியும் சே.ந.ப.வுக்குத் திருப்தியைத் தரவில்லை. திருச்சூர் பலிஜவார் நிலையை விட தமிழக பலிஜவார் நிலை பரவாயில்லை என்று தனக்கு்த் தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதை இரண்டாம் பதிப்பின் முகவுரையில் காண முடிகிறது.
“ஆட்சியர் எழுதிய கடிதத்தினாலும் எமது கடிதத்தினாலும் பலிஜவாருடைய விவரங்களை நன்கு அறிந்த பிராமணர்களின் பரிந்துரைக் கடிதத்தாலும் பலிஜவாரைச் சத்திரியர் என்று நிரூபித்திருந்தும் சென்னை மாகாண சென்செஸ் அதிகாரி நமக்கு எழுதி இருப்பது அதிருப்தியாக இருந்தாலும், அவருக்கும் அவரை இந்த வேலைக்கு நியமித்திருக்கிற அரசுக்கும் நாம் நன்றி கொண்டவர்களாக இருக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்” என எழுதும் சே.ப.ந., “ஆங்கில அரசு சாதி சமய ஆசாரங்களில் நமக்கு வேறுபட்டவர்களாக இருந்தும் நமது சாதி அந்தஸ்து பற்றித் தக்கபடி விசாரித்தும் அவரவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்தும் சுதந்திரமாகவும் சுகமாகவும் பாடுபட்டு வரும்போது நம் நாட்டினருக்கு இவ்விதமான சாதி அபிமானம் இன்மையால் நம் மக்கள் ஏராளமான கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்” என்று திருச்சூரிலிருந்து 14.01.1903 என்னும் தேதியிட்டு வந்த கடிதச் செய்தியைச் சுட்டிக் காட்டுகிறார்.
அந்தக் கடிதத்தில், “நூறு வருடங்களுக்கும் முன்னால் தஞ்சாவூர் பகுதியில் இருந்து எங்கள் முன்னோர்கள் இங்கு வந்து குடிபுகுந்தார்கள். அப்போது அவர்களுக்குக் கோயிலில் நுழையும் உரிமை இருந்தது. பின்னாளில் நம்முடைய சாதியாரின் பெருமையை அறியாத நாயர்களின் தூண்டுதலால் நம்மைச் சூத்திரர் அல்ல என்றும் நல்ல சாதியார் அல்ல என்றும் கோயிலுக்குள் நுழையக் கூடாதென்றும் குளங்களில் குளிக்கக்கூடாதென்றும் தடுத்துவிட்டார்கள். அப்படிச் செய்தது முதல் நம்முடைய சாதிக்கான நியாயங்களோடு எடுத்துக்காட்டினோம். அப்போது அரசாங்கப் பணிகளில் இருந்த நாயர்கள் நம் சாதியின் பெருமையை அறியாதவர்களாக இருந்த காரணத்தால் பயன் ஒன்றுமில்லை. இப்படிப் பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு குளத்தில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் ‘சூத்திரர்’ என்று நம்பூதிரி வைதீகப் பிராமணர்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொடுத்தும் பயனில்லை. கடைசியாக திருச்சூர் சமஸ்தானத்திற்கு வெளியில் இருக்கும் வேறு பிராமணர்களால் நாங்கள் சூத்திரர் என்று பரிந்துரைக் கடிதம் வாங்கி வந்து காட்டுவதற்கான அனுமதியை வேண்டிப் பெற்றோம்.
“அந்த அனுமதியைப் பெற்ற பின் மலையாளத்தாரே உயர்ந்த சாதியார் என்றும் ஏனையோர் கேவலர் என்று கருத்தும் இந்த மண்ணில் நம்முடைய சாதியின் பெருமையைப் பிரபலப்படுத்த எந்தப் புண்ணியவான் வருவான் என எண்ணிக்கொண்டு இருந்தபோது ஒரு அன்பரால் உங்களை அறிந்தோம். ஆகையால் தாங்கள் தயவுசெய்து நமது சாதியின் அந்தஸ்து விவரங்களை அந்தப் பிராந்தியங்களில் இருக்கும் வைதீகப் பிராமணர்களின் பரிந்துரைக் கடிதத்துடன் அவற்றிற்கான கூடுதல் ஆவணங்களையும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு விண்ணப்பக் கடிதத்தைக் கொச்சி ராஜாவுக்கு அனுப்பும் படியும் அவைகளால் நமது சாதிக்குரிய சுதந்திரங்களை அனுபவிக்கும்படியும் செய்துதர வேண்டுகின்றோம்” என்பதாக எழுதப்பட்டு நாயுடு சாதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
திருச்சூரில் பலிஜவாருக்குக் கோயில் நுழைவு உரிமை, பொதுக் குளம் பயன்பாட்டு உரிமை ஆகியன மறுக்கப்பட்டமைக்கு அவர்கள் சூத்திரரோ நல்ல சாதியாரோ இல்லை என்கிற வரையறையே காரணமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் திருச்சூர் பலிஜவார் தம்மைச் சூத்திரராகவாவது அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தபோது சே.ப.ந.வின் தொழிற்பாடு ‘சத்திரியர்’ எனும் நோக்கில் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கூடுதலான சான்றுகளுடன் விரிவாக, டாக்டர் கஸ்தவ் சாலமன் ஓபேர்ட் (Dr.Gustav Solomon Oppert) பதிப்பித்த நூலை அடிப்படையாக வைத்துப் பலிஜவாரு புராணத்தை எழுதியிருக்கிறார். இந்தியச் சாதிகள் பற்றி ஆராய்ந்தவரும் சமஸ்கிருத அறிஞரும் சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியரும் அரசின் தெலுங்கு மொழிபெயர்ப்பாளருமான ஓபேர்ட், அன்றைய சென்னை மாகாண ஆட்சிப் பரப்பில் முக்கியமான ஆளுமையாக அரசால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரின் நூல்களை அடிப்படையாக வைத்து நால்வருண அடுக்கில் பலிஜவாரின் சாதி இருப்பை மாற்றியமைப்பதற்கான வேலையைச் செய்திருந்தபோதும் வலுவான பொருளாதாரப் பின்புலமும் அரசியல் பின்புலமும் ஒருங்கே கொண்டிருந்த சே.ப.ந.வால் நினைத்த மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. அதற்குத் தமது இடத்தைப் பலிஜவாருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாத வருணத்தாரின் மறைமுகமான தலையீடு காரணமாக இருந்திருக்கலாம். ஆக, சாதியின் இடமும் இருப்பும் வரலாற்றின் துணைகொண்ட பழைமையானது அல்ல; துணைகொண்ட தொழிற்பாட்டின் சமீபத்தியதும்கூட.
மின்னஞ்சல்: jeyaseelanphd@yahoo.in