தடை கோருதல் என்னும் நோய்க்கூறு
Knowlaw.in
அண்மையில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்தது. வானம் கலை விழாவின் ‘வேர்ச்சொல்’ நிகழ்வில் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான விடுதலை சிவப்பி எழுதிய கவிதைக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதிசுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’ எனும் திரைப்படத்திற்குத் தடை கோரியும் தணிக்கைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் சில புலம்பெயர் குழுக்கள் தலையெடுத்திருக்கின்றன.
மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசின் கொள்கைகளும் அதன் தொடர் நடவடிக்கைகளும் இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் பண்பைக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான அரசியல் நகர்வுகளில் பாஜகவினரின் கருத்தியல், சக மனிதர்கள் மேலான வெறுப்பைத் திட்டமிட்டுக் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் காலத்தில் திரைப்படத் துறை மூலமும் அவர்கள் வெறுப்பின் கருத்தியல் சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் இந்த முறை கேரளா ஸ்டோரீஸ் திரைப்படமும் இந்தப் பரப்புரையைச் செவ்வனே செய்திருக்கின்றன. கேரளா ஸ்டோரி அகில இந்திய அளவில் பேசுபொருளாவதற்குப் பிரதமர் மோடியின் கர்நாடகத் தேர்தல் பரப்புரையும் ஒரு காரணம். பிரதமர் அந்தத் திரைப்படத்தைக் குறிப்பிட்டு இஸ்லாமிய வெறுப்பைக் கூர்மைப்படுத்தி அந்த வெறுப்பை ஓட்டுகளாக மாற்ற முயற்சிசெய்தார். தேர்தல் களத்தில் இந்த முயற்சி தோல்வியைத் தழுவியது என்றாலும் திரைப்படத்திற்கு அவருடைய பேச்சு பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. கேரளா ஸ்டோரி முறையான தகவல்களின் அடிப்படையின்றித் தான்தோன்றித்தனமான வகையிலான பரப்புரையாகவே வெளிப்பட்டிருக்கிறது.
இவ்விரு படங்களின் தலைப்புகளும் ஒரேவிதமான ஆவணத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான திரைப்படங்களுக்கு உண்மைத் தன்மையை அளிப்பதற்காகவே இத்தகைய கதையாடல்களும் இத்தகைய தலைப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் படங்களின் கருத்தியலையும் அதன் விஷமமான பரப்புரையையும் கண்டிக்க வேண்டும். அதே வேளையில் இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்களையும் கண்டிக்க வேண்டும். ஒரு படைப்பில் வெளிப்படும் கருத்தைக் கருத்துரீதியாகவோ மாற்றுப் படைப்பின் வாயிலாகவோதான் எதிர்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு எதிராக இருந்தால் மட்டுமே சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி கோரலாம். மற்றபடி தடை கோரி எதிர்க் கருத்துக்களை முடக்க நினைப்பது ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரானது.
சமூகம் பல்வேறு தரப்புகளைக் கொண்டு எதிரும் புதிருமாகவும் குறுக்கும் நெடுக்குமாகவும் இயங்கிவருவது. சாதி, மதங்கள், மொழி, பாலினங்கள், வர்க்க வேறுபாடுகள் என அவற்றின் பிளவுகள் பாரதூரமானவை. ஒவ்வொரு தரப்புக்கும் தனித்தனிப் பண்பாடுகள், சடங்குகள், வாழ்வுமுறைகள் இருக்கின்றன. சமூகம் எப்போதும் கூட்டாகவும் இயங்க முடியாது; எப்போதும் பிரிந்தும் இயங்க முடியாது. இடம், காலம், பிரச்சினைகள் ஆகியவற்றைப் பொறுத்து அதன் கூட்டுச் சிந்தனையும் தனித்துவமானச் சிந்தனைகளும் வெளிப்படவே செய்யும். அவற்றைத் தடை செய்ய முயல்வது அடிப்படை உரிமைகளைப் பறிக்க நினைக்கும் பழைமைவாதத்திற்குத் திரும்புவதாகவே மாறும்.
விடுதலைச் சிவப்பியின் ‘மலக்குழி மரணம்’ கவிதை சக மனிதர்களை மலக்குழியில் இறக்கி அவர்களின் மரணத்தைக்கூடக் கண்டும் காணாமல் விடுவது, வர்ணாசிரமக் கட்டமைப்பில் தலித்துகளைக் கீழ்நிலையில் வைத்துக் கண்ணியமற்ற முறையிலும் நடத்துவது ஆகியவை குறித்த கரிசனையிலிருந்து எழுதப்பட்டது. காலங்காலமாக அருந்ததியர்களின் தொழிலாகத் திணிக்கப்பட்ட மலம் அள்ளுதல் எனும் இழிநிலையை அக்கவிதை எதிர்நிலைக்குத் தள்ளி விசாரணை செய்கிறது. பிராமணரை மலம் அள்ளத் தேடும் தன்னிலை அவர் கிடைக்காதபோதில் கடவுளாக நம்பப்படும் சத்திரியரான ராமனைத் தேடிக் கண்டடைகிறது.
இந்தக் கவிதை வாசிப்பு ஓர் உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்டது. அதன் காணொலிப் பதிவைப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் ஆதரவுடனும் எதிர்ப்புடனும் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ்க் கலை, இலக்கியச் சூழலில் கருத்துரிமை, படைப்புச் சுதந்திரம் குறித்த உரையாடல்கள் பல்வேறு தளங்களில் இதற்கு முன்னமும் நிகழ்ந்திருக்கின்றன. சுகுமாரனின் ‘கபாலீஸ்வரம்’ கவிதையின் உள்ளடக்கத்துக்காக இந்துத்துவ அமைப்பொன்று அச்சுறுத்தல் விடுத்தது. விக்கிரமாதித்தனுக்கும் ஷங்கரராமசுப்பிரமணியனுக்கும் அவர்கள் கவிதைகளுக்காக மகஇகவினர் மிரட்டல் விட்டதையும் அலுவலக விசாரணைக்கு அழைத்ததையும் லீனா மணிமேகலையின் கவிதையொன்றிற்காக அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தியதையும் இலக்கிய உலகம் கண்டிருக்கிறது. புலியூர் முருகேசனின் பிரதிகளுக்காகச் சாதிய அமைப்பொன்று தாக்கியது. ஹெச்.ஜி. ரசூல் தன் கவிதைக்காக ஊர்விலக்கம் செய்யப்பட்டார். துரை குணா ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நூலுக்காகத் தாக்கப்பட்டார்; ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டார். சுந்தர ராமசாமி ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதைக்காகக் கடும் வன்மத்தை எதிர்கொண்டார்; தலித் பாத்திரமே இல்லாத அந்தக் கதையைத் தலித் விரோதக் கதை என்று சொல்லி, சு.ரா.வை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றும் குரல் எழுந்தது. கி. ராஜநாராயணன் தன் பேட்டி ஒன்றில் தலித்துகளை இழிவுபடுத்தினார் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி அச்சுறுத்தப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது. இவற்றின் உச்சமாக நிகழ்ந்ததுதான் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கான எதிர்ப்பு. இவையெல்லாமே கருத்து, படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரான சிறு, குறுங்குழுக்களின் போக்குகளையே காட்டுகின்றன.
இலங்கை யுத்தத்திற்குள் சிக்கிக்கொண்ட தாய் ஒருத்தியினதும் அவரின் குடும்பத்தினதும் வாழ்வைச் சித்திரிக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு.’ படத்தின் இயக்குநர் மதிசுதா கடந்த பல வருடங்களாகக் குறும்படங்கள், ஈழ சினிமா எனும் கனவுடன் செயல்பட்டுவருபவர். இந்தத் திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்காகவும் வசனங்களுக்காகவும் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் புலம்பெயர் சூழலுக்காக ஒரு தணிக்கைக் குழு தேவை என்றும் ஒரு சில குழுவினர் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் குழுவின் தற்குறித்தனம் கடுமையான கண்டனத்துக்கு உரியது. தாம் நம்பும் அரசியலுக்கு எதிரான எவையும் இருக்கக் கூடாது என நினைப்பது புலிகள் இலங்கை அரசின் பாசிச அரசியலையே நினைவுபடுத்துகிறது. புலம்பெயர் நாடுகளில் முற்றிய ஜனநாயக அமைப்புகள் சூழ்ந்திருக்கும் இடச் சூழலில் வாழ்கிறவர்கள் குறுகலான சிந்தனைகளுடன் வெளிப்படுவது மிக அபத்தமானது. அவர்கள் ஜனநாயகத்துக்குப் பழக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அண்மையில் வெளியான ‘பர்ஹானா’ திரைப்படத்துக்குச் சில இஸ்லாமிய அமைப்பினரிடமிருந்து எதிர்ப்பு வலுத்தபோது வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவினர் அந்தத் திரைப்படத்தைச் சம்பந்தப்பட்ட அமைப்பினருக்குத் திரையிட்டுக் காட்டிய அபத்தமும் நிகழ்ந்தது. இவ்வாறு ஒவ்வோர் அமைப்புக்கும் திரையிட்டுக் காட்டி அனுமதி பெற்ற பிறகுதான் வெளியிட வேண்டுமெனில் இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ஒன்று எதற்காக இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிற கேள்வியே எழுகிறது. தணிக்கைக் குழுவில் பல தரப்புகளின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்களது பங்களிப்பே போதுமானது. தணிக்கைத் துறை என்பதே படைப்புரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என்ற பார்வையும் உள்ளது. கருத்துரிமைக்கு எதிரான காலனிய காலக் குழுவினராகத் தணிக்கைக் குழு இயங்கும் நிலையில் இன்னொரு தண்டல்காரனை எப்படி அனுமதிப்பது?
ஒரு படைப்பை மதிப்பிடுவதற்குத் தோதான இடம் அரசோ நீதிமன்றமோ அல்ல. படைப்பை எதிர்ப்பதற்கான சிறந்த வழி, வழக்கோ கைதோ அல்ல. அதற்கான இடமும் வாய்ப்பும் இலக்கியத் தளத்திலேயே இருக்கின்றன. விடுதலைச் சிவப்பி விவகாரத்தில் கைது செய்யக் கோரியது ஓர் இந்துத்துவ அமைப்பு. கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்குத் தடை கோருபவை இஸ்லாமிய அமைப்புகள். இரு தரப்பின் கருத்தியல் கூறுகளும் வேறுவேறானவை. ஆனால் படைப்புகளையும் படைப்பாளர்களையும் அச்சுறுத்துவதிலும் தடைசெய்யக் கோருவதிலும் இரு தரப்பினருமே ஒரு புள்ளியில் இணைகிறார்கள். தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை வன்முறை, அச்சுறுத்தல், தடை ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்வது ஜனநாயகத்தின்மீதும் அடிப்படை உரிமைகளின் மீதும் கிஞ்சித்தும் அக்கறையோ புரிதலோ இல்லாத நிலையையே காட்டுகிறது. ஜனநாயகப்படுத்தப்பட்ட அமைப்புமுறையை வலுவாக்குவதன் மூலமே இத்தகைய நிலையைக் கடந்து செல்ல முடியும்.
தமக்குத் தோதான கருத்துக்களைக் கொண்டாடுவது, எதிரான கருத்துக்களுக்குத் தடை கோருவது எனும் போக்குகள் அடிப்படையிலேயே கோளாறானவை. ஒருவர் தன் சிந்தனையை எந்தத் தளத்திலும் சொல்வதற்கான உரிமையைக் கருத்துரிமை வழங்குகிறது. அந்தக் கருத்தை அதே தளத்தில் கருத்தால் எதிர்கொள்கிற உரிமையையும் எதிர்க் கருத்தாளருக்கு அது வழங்குகிறது. தனக்கு உவப்பில்லாத கருத்தைப் பிறிதொருவர் சொல்வதற்கான உரிமையை முழுமையாக ஏற்று அங்கீகரிப்பதுதான் உண்மையான கருத்துச் சுதந்திர நிலைப்பாடு என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒத்த கருத்துக்களுக்கு வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒத்துவராத கருத்துக்களுக்குத் தடை என்னும் அணுகுமுறையை யார் கொண்டிருந்தாலும் தவறுதான். கருத்துரிமைக்கு முற்போக்கு, பிற்போக்கு வேற்றுமை எதுவும் கிடையாது.
கருத்துரிமை தொடர்பான நடைமுறைக் கற்றல் முறைகளைப் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாக்கும் பொறுப்பு அரசுக்கும், அதைக் கொண்டுசெல்லும் கடமை உண்மையான முற்போக்கு நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு. காவல் நிலையம், பள்ளி போன்ற பொதுப் பங்களிப்பு இடங்களில் வெளிப்பாட்டு உரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பயிற்றுவிக்கவும் நடைமுறைப்படுத்தவுமான அமைப்புகளையும் உருவாக்குவது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். காவல் துறையும் அரசும் கருத்துரிமை விவகாரங்களைக் கையாள்வதற்கான உரிய செயல்முறையை உருவாக்க வேண்டும். படைப்புரிமை, கருத்துரிமை குறித்த புரிதல்களுடன் காவல் துறையும் அரசும் இதுபோன்ற வழக்குகளை அணுக வேண்டும். அடிப்படை உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. அடிப்படைகளைத் தகர்ப்பதை அனுமதிக்க முடியாது.
மின்னஞ்சல்: chenthuxe@gmail.com