மறக்க முடியுமா?
2022 டிசம்பர், காலச்சுவடு இதழில் ‘வரவேற்கத்தக்க விதிவிலக்கு’ என்ற தலையங்கம் இடம்பெற்றிருந்தது. மே, 2021இல் அதிகாரத்துக்கு வந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஒன்றை ஆமோதித்து எழுதப்பட்ட தலையங்கம் அது.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நூறு நாட்களுக்கும் மேல் நடைபெற்றுவந்த தொடர் போராட்டத்தின் உச்சக்கட்டமாகவே மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிடவிருப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தனர். ஊர்வலத்துக்குக் காவல் துறையினரின் அனுமதியையும் கோரியிருந்தனர். மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதன்மூலம் போராட்டத்தைத் தடுத்திருக்க இயலும். ஆனால் காவல் துறையின் அலட்சியம், மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை காரணமாகப் போராட்டம் பாதுகாப்பான முறையில் அணுகப்படவில்லை. மாறாக மே மாதம் 21 அன்று நடந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் காவல் துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழப்புகளுக்கும் பொருள் நாசத்துக்கும் காரணமான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அறிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தது. நான்கு ஆண்டுகள் விசாரணையை நடத்திய ஆணையம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது விசாரணை அறிக்கையைத் தமிழக அரசுக்குச் சமர்ப்பித்தது. தொடர்ந்து அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கலும் செய்யப்பட்டது. இதையொட்டி எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட தலையங்கத்தின் சில பகுதிகளை இங்கே நினைவு கூர்வது பொருத்தமானது.
மக்கள் போராட்டங்களின்மீது அரசு அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவுவது புதிதல்ல. நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து நிகழ்த்தும் வன்முறையைப் பற்றிப் பொதுவெளியில் எழும் காரமான விமர்சனங்களும் நீதிமன்ற வழக்குகளும் அந்த வன்முறை குறித்த விசாரணையை மேற்கொள்வதற்கான நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்துவதும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுவதும் புதிதல்ல. அரசு வன்முறை தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நிவாரணம் வழங்கவும் பரிந்துரைப்பது ஒப்பீட்டளவில் புதிது. மக்களின் கோபத்தை மட்டுப்படுத்தப் பயன்படும் ஆணையங்கள் கால தாமதத்தினாலும் அரசின் மீதான செல்லமான அணுகுமுறையினாலும் விசாரணையின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இந்தப் பின்னணியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கத்தக்க விதிவிலக்கு என்று சொல்ல வேண்டும்.
இந்த விசாரணையில் இரண்டு முக்கியமான அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவை. ஒன்று ஒப்பீட்டளவில் விரைவில் விசாரணையை நடத்தி முடித்தது.இரண்டாவது, அரசு நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மீது நேரிடையான திட்டவட்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருப்பது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை காவல்துறை தன்னுடைய அடிப்படையான கடமைகளை மீறியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
சம்பவ நாளன்று போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்டக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததை ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே கைது செய்திருந்தால் போராட்டம் கலவரமாக மாறியதைத் தடுத்திருக்க முடியும்.
ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடாகவும் அலட்சியமாகவும் இருந்தன. மாவட்ட ஆட்சியர் தனது கடமையிலிருந்து தவறி அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார்”என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லையென்றும் அறிக்கை கூறுகிறது. டிஐஜியும் உதவி எஸ்பியும் உத்தரவிட்ட துப்பாக்கிச் சூடுபற்றி ஐஜிக்குக்கூடத் தெரியவில்லை எனவும் டிஐஜி தானாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் எனவும் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல் துறையினர் வரம்புமீறியும் அத்துமீறியும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கை மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் பதினேழு பேர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்மீதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூவர்மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணத் தொகைக்கான பரிந்துரைகளை ஆணையம் முன்வைத்துள்ளது.
ஆணையங்களின் விசாரணை அறிக்கைகள் கண்துடைப்பாகவும் அரசு அத்துமீறலைப் பூசிமெழுகும் சுண்ணாம்பாகவும் இருந்துவருவதே வாடிக்கையாக இருக்கும் சூழ்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பல விதங்களிலும் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. ஆணையம் பல்வேறு அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள்மீது நேரடியாகக் குற்றம் சுமத்தியிருக்கிறது. நடந்தது காவல் துறையின் தவிர்க்க முடியாத நடவடிக்கையின் பின்விளைவோ சாதாரண அத்துமீறலோ அல்ல என்றும் பொதுமக்களில் பலர் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இனி வரும் காலங்களில் போராட்டத்தைக் கையாள்வது குறித்த எச்சரிக்கையைக் காவல் துறைக்கும் நிர்வாகத் தரப்பினருக்கும் அறிக்கை விடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
கண்துடைப்பு அறிக்கைகள் தரும் பாதுகாப்பு இனிக் கிடைக்காமல் போகலாம். இது அதிகாரத்தில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அங்குசமாக அமையக்கூடும். அதிமுக அரசு அமைத்த இந்த ஆணையத்தின் முடிவுகள் அந்த அரசின் தவறுகளையும் தோல்விகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அதிமுக அரசு தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்குமா என்பதே ஐயம்தான் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இவை 2022 டிசம்பர் இதழில் வெளியான தலையங்கத்தின் குறிப்பிடத்தகுந்த பகுதிகள். அவற்றை இங்கே நினைவூட்டக் காரணம், உண்மையைப் பகிரங்கமாக்கிய விசாரணை ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்பட்டும் காலச்சுவடு தலையங்கம் எழுதப்பட்டும் காலம் கடந்திருக்கின்றது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் தொடரவில்லை.
அரசியல் தந்திரோபாயம் என்று பார்த்தால் திமுகவுக்கு எதிரியான அதிமுகவை வீழ்த்த உதவும் வலுவான தரப்பாக விசாரணை அறிக்கையை ஒட்டிய நடவடிக்கைகள் அமைந்திருக்கலாம். உண்மையில் இந்த நிகழ்வைப் பொருத்தமட்டில் அப்படிச் செய்வது அரசியல் பழிவாங்கலாக அல்லாமல் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதாகவே அமையும். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி ஊடகத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று அலட்சியமாகச் சொல்லாமலிருக்க எச்சரிக்கையாகவும் அமையும். காவல் துறை மீதும் நிர்வாகத் துறை மீதும் அறிக்கை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதிகாரத்தைக் கையாளும் நிலையில் இருப்பவர்களின் பெயர்களை எடுத்துச் சொல்கிறது. அவர்கள்மீது என்ன வகையான துறை சார்ந்த நடவடிக்கைகளையும் சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனால் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையைச் சட்டப் பேரவையில் சமர்ப்பிக்க முனைப்புக் காட்டிய அரசு அதில் பரிந்துரைத்தவற்றைச் செயல்படுத்துவதற்குச் சுணக்கம் காட்டுகிறது. இதன் பின்னால் இருக்கும் அரசியலும் அதிகார வட்டத்தினர் மீதான அச்சம் கலந்த இணக்கமும் ஜனநாயகத்துக்குப் பொருத்தமானவை அல்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் சட்டங்களை இயற்றுகிறார்கள். அவற்றை நடைமுறைப்படுத்தும் பணியையே நிர்வாகம், காவல், நீதித்துறைகள் செய்கின்றன. இந்தத் துறைகளைத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பது மக்களுக்கு இன்னலையே ஏற்படுத்தும். அதன் உதாரணமே தூத்துக்குடிச் சம்பவம். அருணா ஜெகதீசன் அறிக்கையில் அறிவுறுத்தியிருக்கும் நடைமுறைகள் மக்கள்மீது அக்கறை கொண்ட ஓர் அரசு எளிதில் செய்யக்கூடியவையே. அவ்வாறு செய்யத் தவறுவது அரசின் கட்டுப்பாட்டில் துறைகள் இல்லை, மாறாக துறைகளின் அதிகாரத்தில் அரசு கட்டுண்டு கிடப்பதாகக் காட்டும். தூத்துக்குடி பிரச்சினையைப் பொருத்தவரை திமுக அரசு அந்த நிலையில்தான் அகப்பட்டிருக்கிறது. அது மாறுவது மக்கள் நம்பிக்கையைப் பெற உதவும்.