மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
• சாதியப் படிநிலையில் தாங்கள் மேல் தட்டில் உள்ள நிலையில் தங்களுக்கு எதிராக ஒரு தாழ்த்தப்பட்ட சாதி மாணவன், அதுவும் இதுகாறும் அடங்கிக் கிடந்த ஒருவன் தங்களுக்கு எதிராக மனு கொடுப்பதா என்ற சாதிய ஆதிக்க மனநிலையே இந்தக் கோரத் தாக்குதலின் ஆணி வேர்.
• பள்ளி மாணவர் மீதான சக மாணவர்களின் தாக்குதல் என்பது சாதி உணர்வுகள் சிறுவர்கள் மத்தியில் எவ்வளவு கூர்மை அடைந்துள்ளன என்பதை உணர்த்துகின்றது.
• இந்த வெட்டுச் சம்பவம் ஏதோ கோபத்தில் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. மிகவும் நிதானமாகத் திட்டமிடப்பட்டு, அதுவும் மூவரும் ஒவ்வொருவராக உடலின் வெவ்வேறு பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் உயிர் போகாமல், ஆனால் முற்றிலும் செயலிழந்து போக வேண்டும் என்ற நோக்கம் புரிகிறது.
• ஆதிக்கச் சாதியினரின் பண்பாட்டு ஆதிக்கம் வன்முறை தவிர்த்த ஒன்றாகவே அப்பகுதியில் வெகுகாலம் இருந்துவந்த நிலையில், தற்போது இளைய தலைமுறை ஆயுதம் கொண்டு தாக்கி அதை நிலை நிறுத்த முயல்வதின் முதற்கட்டமாக இதைப் பார்க்கின்றோம்.
• கடந்த 20 ஆண்டு காலமாகக் குறிப்பிட்ட அதீத சம்பவங்கள் எதுவும் நடந்திராத நிலையில் தற்பொழுது தலித் மாணவன் தாக்கப்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தலித் சமூக இளைஞர்கள் நகரங்களுக்குச் சென்று பணம் ஈட்டி முன்னேற்றம் காண்பதும் ஆதிக்கச்சாதியினர் இடையே ஒரு வெறுப்புணர்வை வளர்த்திருக்கிறது.
• நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் மாண்புமிகு ஜெயலலிதா அரசால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டு, தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே அந்தப் பகுதியில் நிலம் சார்ந்த உடைமைகளின் தேவை அதிகரித்து வருகின்றது. தலித் மக்களிடம் இருக்கின்ற உடைமைகளை அவர்களது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்கிற நீண்டகாலத் திட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
• மதவாதக் கட்சிகள் மக்களை மத அடிப்படையில் ஒன்று சேர்க்க வேண்டுமென்றால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாதி அமைப்புகளின் துணை கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட வேண்டியுள்ளது. அதனால் இதுவரை சற்று இறுக்கம் தளர்ந்து காணப்பட்ட சாதியப் படிநிலை உறவுகள் மீண்டும் இறுக்கமடைகின்றன. சாதி அமைப்புகள் மீண்டும் தங்களைச் சாதி அடையாளத்தில் ஒன்றிணைத்துக்கொள்வதும் அதன் வெளிப்பாடாக சாதியப் பாகுபாடுகளும் சாதிய முரண்பாடுகளும் அதிகமாக வெளிப்படுவதையும் காணமுடிகின்றது.
பரிந்துரைகள்
• இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது என்ற அணுகுமுறையை விடுத்துச் சம்பவத்திற்கு முன்னே சின்னத்துரையின் வீட்டிற்கு வெட்டிய மாணவனின் பாட்டியும் சகோதரரும் ஏன் அங்கே வந்தார்கள், இரண்டு அடி நீளமுள்ள அரிவாள் அந்த மாணவனின் கையில் எப்படிக் கிடைத்தது, மூன்று பேரும் மாறி மாறித் தாக்கும் அளவிற்கு எப்படித் திட்டமிட்டார்கள், இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் யாரெல்லாம் என்ற கோணத்தில் காவல்துறை தனது விசாரணையைத் தொடர வேண்டும்.
• பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை உடல் நலம் பெறுவதற்குச் சில காலம் ஆகக்கூடும். அப்படியே நலம் பெற்றாலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஒரு இளைஞனின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இந்த வன்முறை அழித்துவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அரசு சின்னத்துரைக்கு வரும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத எல்லாவித வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, அவனுக்கு அவன் விரும்பும் மேற்படிப்பிலும் சேருவதற்கு வகைசெய்யும் சிறப்பு ஆணை பிறப்பிக்கவேண்டும்.
• சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வியின் மேற்படிப்புக்கும் அரசு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.
• சின்னத்துரைக்கு ஈட்டுத் தொகையாக 25 இலட்சம் வழங்க வேண்டுகிறோம்.
கல்வியில் தேவை
• நல்லொழுக்க வகுப்புகளும் விளையாட்டுக்கான வகுப்புகளும் பள்ளிகளில் அரிதாகிவிட்டன. அனைத்து சமூக மாணவர்களும் இணைந்து பழகுகின்ற வகையில் விளையாட்டுத்துறை, தேசிய சேவை திட்டம், சாரணர் பயிற்சி, தேசிய மாணவர் படை, பசுமைப்படை போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்பட வேண்டும்.
• பயிற்சி பெற்ற ஆற்றுப்படுத்துநர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு நேர ஊழியர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதி பள்ளிகளுக்குத் தொடர்ந்து சென்று மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தரவேண்டும்.
• சாதிய அடையாளங்களைப் பள்ளிக்குள் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.
• பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களைப் பரிசீலிப்பதற்குத் தனிக் குழுக்கள் அமைப்பது போன்று சாதியப் பாகுபாடு வெளிப்படும் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும் ஆரம்பத்திலேயே களைவதற்கும் சிறப்பு குழுக்கள் கல்வி நிலையங்களில் அமைக்கப்படவேண்டும்.
பிற ஆலோசனைகள்
• பட்டியலின, பழங்குடி மக்களுக்கான சிறப்புத் துணைத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் மீண்டும் மத்திய அரசிற்குத் திருப்பி அனுப்பப்படுவதைக் கைவிட்டு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, கல்வி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
• பட்டியலின, பழங்குடி மக்களின் சொத்துக்கள் ஆதிக்கச் சாதியினரால் அபகரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும்.
• சமூக வலைதளங்களில் சாதியப் பெருமை பேசும் கருத்துக்களைப் பரப்புவோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதோடு தடைகளுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.
கள ஆய்வுக் குழுவினர்
பேராசிரியர் இரா. முரளி, தேசிய துணைத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், மாநில பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
எழுத்தாளர் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்,
பேராசிரியர் சாமுவேல் ஆசீர் ராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்,
திரு. ஊசிக்காட்டான், மாவட்டத் தலைவர், மத்திய மாநில எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பு, திருநெல்வேலி,
திரு. ஜெகநாதன், தலித்திய ஆய்வாளர்,
திரு. மதிகண்ணன், எழுத்தாளர்
திரு. கலீல் இரகுமான், சமூகச் செயல்பாட்டாளர், தென்காசி
PUCL அறிக்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்.