சூழ்நிலைகளின் சித்திரிப்பு
இருசி
(சிறுகதைகள்)
ஸர்மிளா ஸெய்யித்
வெளியீடு:
கருப்புப் பிரதிகள்
293, அகமது வணிக வளாகம்,
2ஆம் தளம், ராயப்பேட்டை,
சென்னை - 600 014
பக். 176
ரூ. 175
ஸர்மிளா ஸெய்யித் தன் படைப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கின்ற களங்களும் பாத்திரங்களும் ஆசுவாசத்தைத் தர மறுப்பவை. அவர் கோபக்காரர். அவரைத் தேடிவந்து கருக்களும் கற்பனைகளும் வந்துவிழுகின்றன; எனவே பதற்றமான மனநிலையோடுதான் நாம் அவரின் படைப்புகளை நெருங்குகிறோம். ஏற்கெனவே அவருடைய படைப்புகள் போன பாதையில்தான் ‘இருசி’ சிறுகதைத் தொகுப்பும் போகிறது.
இளம்பருவத்தில் தானடைந்த அனுபவங்களை இத்தொகுப்பின் பல கதைகளில் பேசுகிறார். மதம் தன் சமூகத்தை இறுக்கிப் பிடிக்கிறது; அதைத் தழுவிச் செல்லுவோருக்குள்ள பதற்றம் அல்லது ஆணவம் அல்லது அதிகாரம் இவைதாம் சமூகத்தில் பின்னடைவைக் கொண்டு செலுத்துகின்றன. மதத்தின் பேரால் ஒருவர் சொல்லும் கருத்து ஓர் ஆணையாக மாறுவது மனித குலத்தின் பெரும் துயரம்; அது மத இயல்பில் அப்படியாக இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் தடைகள் இறுக்கமாய் விழுந்துவிடுகின்றன. ஸர்மிளா இத்தகைய சூழ்நிலைகளின் சித்திரிப்பாளர்.
இக்கதைகளில் நசுக்கப்பட்டுள்ள பெண்களின் அவலக் குரல் கேட்கின்றது; அதுவும் ஸர்மிளா போன்ற பெண்களுக்குத்தான் கேட்கின்றது. இக்கதைகளின் மைய இழையாக இந்த ஒன்றே தென்படுகிறது. அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதியாக அவர் தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டுள்ளார். மைய நிலையிலிருந்து வாசிக்கின்ற ஓர் ஆணுக்கு இதில் முரண்பட பேரளவில் ஏதுமில்லையென்றே சொல்லலாம்; இருந்தாலும் மேலே சொல்லியிருக்கிற காரணங்களுக்கு அப்பாலும் நாம் வியக்கக் கூடிய கதைகள் உள்ளன.
யதார்த்தமான கதைகளுக்கு மத்தியில் ‘முதுசம்’ மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது. நாயகி அலேஷா திருமணமாகிவிட்ட சூழலிலும் தன் வயதுக்கு மீறிய ஒருவரை விரும்புகிறாள். வயதான பெரியவரும் அலேஷாவைச் சேர்ந்தடைய நாட்டம் கொள்கிறார். அலேஷாவின் விருப்பம் சரிதானா என்ற கேள்வி எழாமலில்லை. அவளின் மனப்போக்கிற்குக் காரணமும் இல்லாமலில்லை. காதலின் தெய்வீக உணர்ச்சிக்குள் அலேஷாவும் பெரியவரும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். தன் வாழ்க்கைக் கடன்களைத் தன் வாரிசுகளுக்கு முழுவதுமாக அர்ப்பணித்தபின் பெரியவரின் விருப்பத்திற்கும் தடைசொல்ல முடியவில்லை. அவர்கள் இணைவது எப்படியென்கிற சூட்சுமத்தை அழகாக விவரிக்கிறார் ஸர்மிளா.
’அக்னிக்குஞ்சு’ கதையை ஒரு புரட்சிக்காரியான ஸர்மிளாவிடம் நாம் எதிர்பார்த்திருக்கமாட்டோம். அகவைமுதிர்ந்த பெண் கருவுறுவதும் அவருடைய மக்கள் மட்டுமல்லாமல் சமூகமே அதை முகச்சுழிப்போடு பார்ப்பதும் கதையின் ஒரு போக்கு; மறுபோக்கில் குழந்தை பெறுவதிலுள்ள இயல்பான சிக்கல்கள்; இரண்டு உயிர்களில் யாராவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்; மருத்துவர்களே கைவிட்ட நிலையில் அதிசயமாகத் தாயும் சேயும் உயிர்பிழைக்கிறார்கள். இந்த இடத்தில் கதாசிரியர் வர்ணிக்கும்முறை அவருடைய பங்காளிகளையும் மூச்சுமுட்டச் செய்யும்.
தன்னுடைய படைப்புவெளியில் ஸர்மிளா சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார். சமூகம், தான் வாழக்கூடிய விதம் சரிதானா என்று பரிசோதிப்பதற்குப் பெண்களை மட்டுமே கருவிகளாகக்கொண்டு அளவீடு செய்கிறது; இவற்றிலிருந்து ஆண் இனம் ஏன் விலக்கிவைக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு இன்னும் விடைகாணப் படவில்லை. பின்நவீன யுகத்தில் பெண்கள் இதன் காரணமாகவே தமக்கான படைப்புவெளியையும் படைப்பு முறையையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் ஸர்மிளா ஸெய்யித்தின் வினா. அதற்கான போராட்ட முறையாகத் தன் எழுத்துலகை அவர் கையாள்கிறார்.
ஆனாலும் தன் கருத்துகளுக்கேற்ப கதைகளை எழுத யத்தனிக்கும்போது சிறகுகளின் வலிமை குன்றிவிடுகிறது. வேற்றுக்கிரக வாசிகள், இருசி, பெய்யெனப் பெய்யும் மழை, பத்ரகாளி அருட்காப்பு போன்றவை அத்தகையவை. சில கதைகளின் மையம் ஒன்றாகவும் நகர்வு வேறொன்றாகவும் அமைந்துள்ளன.வரும்காலங்களில் இதுபோன்ற கதைகளின் அழகியல் உணர்வையும் கவனத்தில்கொள்வது நல்லது.
மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com