அரிய ஆவணப் பதிப்பாளர்
‘கொங்கு நாட்டில் சமணம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பினும் புலவர் என்றே அடைமொழி கொண்டிருந்தவர் செ. இராசு. கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றை வாசிப்பதில் தேர்ந்த தலைமுறையின் கடைசிச் சுடராக இருந்தார். கல்வெட்டோ தொல்லியல் சான்றுகளோ எங்கேனும் இருப்பதாகத் தகவல் தெரிந்தால் உடனே அங்கே கிளம்பிச் சென்று பார்த்துவிடும் அளவுக்கு அத்துறைகளில் பேரார்வம் கொண்டிருந்தார்.
முப்பெரும் வேந்தர் வரலாற்றுக்குள் வராத காரணத்தால் வரலாற்று நூல்களில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருந்த கொங்கு நாட்டைப் பிரதானப்படுத்தி ஏராளமான ஆவணச் சான்றுகளைத் திரட்டிக் கொடுத்தவர். ‘கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்’ என்னும் நூல் அவர் பணியின் உச்சமாகத் திகழ்வதாகும். செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றிலிருந்து எண்பது ஆவணங்களைப் படியெடுத்துப் பதிப்பித்த தொகுப்பு இந்நூல். பொதுமக்கள்சார்ந்த பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய இந்த ஆவணங்கள் மக்கள் வரலாறு எழுதுவதற்கேற்ற சான்றுகளாகும். அவ்வகையில் கே.ஏ. குணசேகரன் எழுதி நடித்துப் புகழ்பெற்ற ‘பலியாடுகள்’ என்னும் நாடகத்திற்கு மூலமான சம்பவம் இந்நூலில் உள்ள ஓர் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டதே. ‘கொடுமணல் இலக்கியங்கள்’, ‘பஞ்சக் கும்மிகள்’ ஆகியவை அவர் பதிப்பித்த முக்கியமான கொங்கு நாட்டு இலக்கியங்கள்.
கொங்கு நாடே அவரது ஆய்வுக்களம். எனினும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியதன் காரணமாகத் தஞ்சை மராட்டியர் செப்பேடுகள், கல்வெட்டுகள், சேதுபதி செப்பேடுகள், தொண்டைமான் செப்பேடுகள் ஆகியவற்றையும் பதிப்பித்தார்; அவையும் அவர் பணிகளில் குறிப்பிடத்தக்கவை. அடிப்படையில் அரிய ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பிக்கும் ஆய்வாளர் அவர் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.
இத்தகைய ஆவணத் தொகுப்புகள் தவிர அவர் எழுதிய பல நூல்கள் உள்ளன. கொங்கு வேளாளர் குலப் பிரிவுகள், குல தெய்வங்கள் தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ளார். அவையனைத்தும் ஒரே அமைப்பைக் கொண்டவை. கொங்கு நாடு எது, அதன் எல்லைகள், வரலாற்றுச் சிறப்பு, கொங்கு வேளாளர் பெருமை, குலச் சிறப்பு, குலதெய்வக் கோயில் வரலாறு என்னும் விதத்தில் அமைந்தவை. கொங்கு நாடு தொடர்பான செய்திகளைக் கொண்ட முற்பகுதி எல்லா நூல்களிலும் ஒன்றாகவே காணப்படும். குறிப்பிட்ட கோயிலுக்குக் குடமுழுக்கு நடக்கும் காலத்திலோ வேறு விழாக்களின் போதோ வெளியிடுவதற்காக அக்குலத்தவர் வேண்டுகோளுக்காக எழுதியவை இந்நூல்கள்.
ஆவணங்களைக் கண்டறிதல், வாசித்தல், படி எடுத்தல், பதிப்பித்தல் ஆகியவற்றில் அவருக்கிருந்த ஆர்வம் அளவுக்குப் பிற துறைகளில் ஈடுபட்டவர் அல்லர். குறிப்பாக அரசியல் சார்ந்த அவரது பார்வையில் தெளிவில்லை. 1980களில் பதவி வகித்த கொங்குப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரது ஆதரவோடு அவர் எழுதிய ‘செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர்.’ என்னும் நூல் அதற்கு நல்ல சான்று. “எம்.ஜி.ஆர். மலையாளி அல்லர், அவர் முன்னோர் கொங்கு நாட்டுப் பகுதியிலிருந்து கேரளத்துக்குச் சென்றவர்கள், மன்றாடியார் என்னும் கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர் அவர்” என்று நிறுவும் நோக்கில் அந்நூலை எழுதி 1985ஆம் ஆண்டு அரசு ஆதரவோடு வெளியிட்டார். அது அவரது ஆளுமையில் நேர்ந்த சறுக்கல் எனவே பலரும் மதிப்பிடுகின்றனர்.
1995 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எனது ‘திருச்செங்கோடு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஈரோட்டில் வெளியிடப்பட்டது. அழைப்பிதழைப் பார்த்துவிட்டு அந்நிகழ்ச்சிக்கு வந்தவர் ‘திருச்செங்கோடு பற்றிய ஆய்வு நூல் என்று எதிர்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தேன். சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என்று நினைக்கவில்லை’ எனச் சொல்லி எனக்கு நேரில் அறிமுகமானார். அதிலிருந்து இருபது ஆண்டுகள் அவரைத் தொடர்ந்து சந்திக்கவும் பேசவுமாகத் தொடர்பில் இருந்தேன்.
தி.அ. முத்துசாமிக் கோனார் எழுதிய ‘கொங்கு நாடு’ என்னும் நூலை இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் நான் பதிப்பிக்கும்போது பெரிதும் உதவி செய்தார். அவர் பெயரையும் சேர்த்துப் போட விரும்புவார் என எதிர்பார்த்தேன். ‘கோனாரின் ஊர்க்காரர் நீங்கள். உங்கள் பெயரே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டார். தி.அ. முத்துசாமிக் கோனாரின் நூலில் உள்ள பல செய்திகளைப் புலவர் செ. இராசு பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் உரிய வகையில் அவரைக் கவனப்படுத்தவில்லை என்னும் ஆதங்கம் எனக்கிருந்தது. ‘கொங்கு நாடு’ நூலை வெளியிட உதவியதன் மூலம் அந்த ஆதங்கத்தைப் போக்கிவிட்டார்.
ஆய்வு தொடர்பாகத் தன்னைத் தேடி வரும் எவருக்கும் தகவல்கள் கொடுத்து உதவுவார். அவரிடம் பாரபட்சம் பார்ப்பதோ தகவல்களை மறைத்துக் கொள்வதோ இல்லை. தாம் பிறந்த சாதியாகிய கொங்கு வேளாளர் குறித்த பெருமைகளைப் பல நூல்களில் எழுதிய போதும் ‘கொங்கு வேளாளர் இப்பகுதியின் பூர்வ குடிகள் அல்லர். தொண்டை நாட்டிலிருந்து சோழ நாடு வழியாக வந்து கொங்கு நாட்டில் குடியேறியவர்கள்’ என்னும் கருத்தை உடையவர். புலவர் குழந்தை உள்ளிட்ட பலரும் ‘கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் வேளாளர்கள்’ என்னும் கருத்தை நிறுவப் பெரும்பாடு பட்டுள்ளார்கள். சாதிப் பெருமிதங்கள் ஆட்சி செலுத்தும் காலத்தில் ‘பூர்வகுடி’ என்னும் கருத்தின் தேவை பெரிது. ஆனால் தமக்குக் கிடைத்த சான்றுகள் அடிப்படையில் ‘பூர்வகுடிகள் அல்லர்’ என்றே அவர் கருதினார். அக்கருத்தை வலியுறுத்தி எழுதுவதைத் தவிர்த்தார். எனினும் ‘பூர்வகுடிகள்’ என்று எவ்விடத்திலும் எழுதியதில்லை.
2013இல் காலச்சுவடு இதழுக்காக அவரை நீண்ட நேர்காணல் செய்தேன். ஒரு நூல் ஆகுமளவு விரிவாகப் பல விஷயங்களைப் பேசியிருந்தார். பதிவிலிருந்து கேட்டு எழுதுவதற்குச் சரியான உதவி கிடைக்காமல் சிறிதுசிறிதாக எழுதிக்கொண்டிருந்தேன். அது முடிவதற்குள் 2015ஆம் ஆண்டு ‘மாதொருபாகன்’ நாவல் பிரச்சினை உருவாயிற்று. நாவலை எதிர்த்தோருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார் அவர். திருச்செங்கோட்டைச் சேர்ந்தவரும் என் ஆசிரியருமாகிய முனைவர் பொன்னுசாமியும் எனக்கு எதிரான கருத்தைக்கொண்டிருந்தார். நாவல் எதிர்ப்பாளர்கள் முன்னெடுப்பில் புலவர் இராசுவும் முனைவர் பொன்னுசாமியும் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். திருச்செங்கோட்டில் நடந்த ஒரு கூட்டத்திலும் புலவர் இராசு பங்கேற்று எனக்கு எதிராகப் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பலரது வேண்டுகோளை ஏற்று அவர் வரவில்லை. எனினும் அவரது நிலைப்பாடு எனக்குப் பெருவருத்தம் கொடுத்தது. அவர் நேர்காணலை எடுத்தெழுதவும் வெளியிடவும் எனக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது.
2016இல் மாதொருபாகன் வழக்கில் தீர்ப்பு வந்தபோது அழைத்துப் பேசினார். ‘நடந்தது போகட்டும். நேரில் வாருங்கள், பேசலாம்’ என்று அன்பொழுகச் சொன்னார். எனினும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் மீண்டும் எனக்கு வரவேயில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகியும் ஆய்வு, எழுத்து என்றே வாழ்ந்த அவரைச் சந்தித்துச் சில வார்த்தைகள் பேசியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. என் கடுஞ்சித்தத்தை எண்ணி வருந்துகிறேன்.
மின்னஞ்சல்: murugutcd@gmail.com