டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
பாலக்காடு என்ற ஊர்ப் பெயரைப் பலமுறை கேட்டிருந்தாலும், அவ்வூரைப் பலமுறை கடந்திருந்தாலும் அன்றுதான் (2017 செப்டம்பர் 9) ஊருக்குள் முதன்முதலாகக் காலெடுத்து வைத்தேன். ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த வைக்கம் சத்தியாகிரகியைத் தேடிய பயணம் அது. சென்னைவாசியான எனக்கு ஆட்டோவில் போக அச்சம். ஊர் சுற்றிப் பார்ப்பது அப்போது எனக்கு நோக்கமில்லை; நேரமும் இல்லை. பேருந்து நிலையத்தில் இறங்கியதும் பக்கத்தில் ஒரு பழைய உணவகத்தைத் தேடிப் பிடித்தேன். மதியம் மூன்றரை மணி. காபி கேட்டேன்; குடித்துக் கொண்டே யாரிடம் கேட்கலாம் என நோட்டம் விட்டேன். ‘கல்லா’ அருகே அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஒரு பெருசிடம் (வயது 65 இருக்கலாம்), “டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயரின் சபரி ஆசிரமம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது” என்று கேட்டேன். அதிர்ஷ்டம். அடித்த முதல் கல்லிலேயே பழம் விழுந்துவிட்டது. இரண்டு பெயர்களும் அவருக்குப் பரிச்சயமானதாக இருந்தன. ஆனால் குறிப்பாக மட்டும் தெரியவில்லை. அவர் இன்னும் இரண்டு வயசாளிகளைக் கூப்பிட்டு விசாரித்தார். இதற்கிடையில் தன் கையிலிருந்த ஆண்ட்ராய்டையும் நோண்டினார