மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
ஓவியம்: மு. நடேஷ்
1. மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்:
காயம்பட்ட பூனையின் துணிக்கட்டை நொடிக்கொரு தடவை அவிழ்த்திக் கட்டிவிடுவான்
உதட்டில் கரிக்கும் இரத்தத்தில் தாய்ப்பாலின் சுவையைச் சோதிப்பான்
பிரிந்து போனவளின் புகைப்படம் எடுத்து
தன்குறித்த சோகம் தென்படுகிறதாவென
தேடிச் சலிப்பான்
பூச்செடியை மிதித்ததெற்கெல்லாம் குனிந்து கும்பிடுவான் பாவி
நண்பனின் மனைவியைப் பொய்யாகவெல்லாம்
சிஸ்டர் எனச் சொல்ல மறுத்து கைகுலுக்குவான்
தற்கொலை செய்து கொள்ள உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சி
அல்லது
குமுறும் எரிமலையின் உச்சியை
கூகுள் செய்து பார்ப்பான்
கைவிளங்காத தாயின் மாதவிலக்கு நாளில் முன்நின்று சுத்தம் செய்வான்
அப்படித்தான் தெரிந்தே ஏமாந்து போவேனென உரக்கச் சிரிப்பான்
கையேந்தி யாசிக்கக் கூசி
கவிதைகளாகக் கிறுக்கச் செய்வான்
மரணத்தைப் பொறு வருகிறேனென வாசலோரம் நிறுத்திவிட்டு உள்சென்று
கையை அறுத்துத் தந்திரமாகச் சிரிப்பான்.
2.
உண்மையில் என்னை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை
பிறகு என்னை எனக்குக் கொஞ்சம் மட்டும் பிடித்திருக்கிறது
அப்புறம் ஒருநாளில் நிறையவே பிடித்துவிடுகிறது
அந்த நாளில்
என்னை நீங்கள் சந்திக்கலாம்
அன்று
நிரம்பப் பிடித்த என்னுடன்
கொஞ்சம் கூடப் பிடிக்காத நானும்
கொஞ்சம் மட்டும்
பிடித்த நானும்
உரையாடிக் கொண்டிருக்கும்
கண்கொள்ளாக் காட்சி கிடைக்கும்
அக்காட்சியில்
நாங்கள் போனால் போகிறதென
உங்களையும்
சேர்த்துக் கொள்வோம்
அதுவரை காத்திருப்பது
உங்கள் பாக்கியம்.
மின்னஞ்சல்: nsivanesan1988@gmail.com