சரிந்த சமர்க்களம்
“அவ்வளவுதான் தோழர், ஓர் அத்தியாயம் முடிந்துவிட்டது” என்று பெருமூச்சுடன் கத்தர் மறைந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டார் நண்பர்; ஓரிரு மணித்துளி அமைதிக்குப்பின், “என்னத்த” என்று சொன்ன அங்கலாய்ப்புதான் சற்றே திடுக்கிடவைத்தது. என் நண்பர்போல பல்லாயிரம் பேருக்கு ஒரு காலத்தில் ஆதர்ஷமாக இருந்தவர் கத்தர்; அவரது பெயரே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய காலம் ஒன்று தெலுங்கு பேசும் மாநிலங்களில் இருந்தது. ஆனால் என் நண்பரைப் போன்று பலருக்கும் இன்று அந்த ஈர்ப்பு காலாவதியானதுதான் ஆச்சரியம். கத்தரின் இறப்புக்கு அனைத்துத் தரப்புகளிலிருந்தும் இரங்கல் செய்திகள் வந்து குவிந்தன. ஆளும் இந்துத்துவ அமைச்சர்களே புகழுரைகளை இறைத்தனர். வாழ்வின் பெரும் பகுதியில் கலகக் குரலுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த கத்தர் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடந்தேறியதுதான் வரலாற்றின் நகைமுரண்.
கத்தரின் வாழ்வைப் பல கோணங்களில் பார்க்க வேண்டும். இன்றைய தெலங்கானா மாநிலத்தில் மேதக் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரின் குடும்பம் அம்பேத்கரியத்தின் மீது பற்றுக்கொண்டது. மஹர் சமூகத்தைச் சேர்ந்த அவருக்குக் கல்வி கைகூடியது; பொறியியல் படிக்கச் சென்றார்; வங்கியில் வேலை கிடைத்தது. சராசரியான நடுத்தரவர்க்கத்து வாழ்க்கைக்கான அத்தனை அம்சங்களும் கிடைக்கப்பெற்றார். அவரது ஆழமான அரசியல் மனம் முதலில் தனி தெலங்கானா மாநிலப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. வெகுவிரைவிலேயே மார்க்சிய லெனினிய இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். ‘மக்கள் பண்பாட்டுக் குழு’ என்னும் கலை இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் அவர் எழுதியும் மெட்டமைத்தும் பாடிய பாடல்களும் ஐயமின்றிப் பெரும் அதிர்வுகளை உருவாக்கின. அவசரநிலைக் காலத்தில் சிறைவாசம்; நீண்ட தலைமறைவு வாழ்க்கை அவருக்கு ஏறக்குறைய ஒரு கதாநாயகனுக்கான இடத்தை அளித்தது. அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் தனித்துவமான முகமாக கத்தர் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.
என்.டி. ராமாராவின் தெலுகு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஒருங்கிணைந்த ஆந்திராவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை. அவர் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே (ஜுலை 1985) கரமசேடு என்னும் கிராமத்தில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்தனர். ஆதிக்கச் சாதியினரின் இந்தக் கொடூர வன்முறை தலித் மக்களின் நெடிய போராட்டத்தின் வேகத்தினை முடுக்கிவிட்டது. அதையொட்டி, அன்றைய நக்சல் இயக்கத்தின் முக்கிய முகமாக இருந்த கத்தர் முன்னெடுத்த பரப்புரை ஏற்படுத்திய அதிர்வுகள் அசாதாரணமானவை; மாவோயிஸ்டுகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. கத்தர் ஒரு தலைமுறையின் அரசியல் முகமானது இப்போதுதான்.
‘ஜன நாட்டிய மண்டலி’ என்னும் அமைப்பின் மூலம் கத்தரின் பாடல்கள் ஒலி நாடாக்களாக தெலுங்கு மாநிலங்கள் முழுவதும் பிரபலமாயின. ஒடிஷா, சத்தீஸ்கர், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் என மாவோயிஸ்ட்களின் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளை அவரே முன்னின்று நடத்தினார். காவல்துறையினரின் கடும் அடக்குமுறைகளையும் மீறி அன்று அவர் மேற்கொண்ட பரப்புரை பெரும் திரளான படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்து இளைஞர்களை அவர்பால் ஈர்த்து மாவோயிஸ்ட் இயக்கத்தினர்மீது சற்றே கரிசனப் பார்வையை ஏற்படுத்தியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லாடல் தலித், பழங்குடி மக்களின் உண்மையான அதிகாரப்படுத்துதலில்தான் இருக்கிறது என்ற புதுப்பொருளைப் பெற்றதில் கத்தரின் பரப்புரைக்கு முக்கிய இடமுண்டு. மாவோயிஸ்ட்களின் எதிர்த்தாக்குதல் தீவிரமாகும் போது, ஆளும் நிலவுடைமைக் கும்பலின் கொடூரங்களும் உக்கிரமடைந்தன. ஆகஸ்ட் 1991இல் குண்டூர் மாவட்டத்தின் சுண்டூரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் வன்முறை வெறியாட்டத்தில் பல தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. கத்தர் தேடப்படும் நபரானார். அடக்குமுறைக்கும் அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தை நாட்டில் கூர்மைப்படுத்துவதற்குக் கிராமப்புறங்களில் அவர் பாடல்கள் அளவுக்குப் பங்களிப்பு செய்த வேறொன்றைச் சுட்டுவது கடினம்.
கத்தரின் நெடிய தலைமறைவு வாழ்க்கையில், 1990களின் தொடக்கத்தில் மாநில அரசு அறிவித்த பொது மன்னிப்பினை அடுத்து, முதல்முறையாக ஐதராபாத் நிஜாம் மைதானத்தில் அவர் நடத்திய கலை நிகழ்ச்சிதான் இன்றளவும் பெருமதிப்போடு பலராலும் நினைவு கூரப்படுகிறது. அது வரலாறு காணாத மக்கள் வெள்ளம்; கத்தரின் ஒவ்வொரு புரட்சிகரப் பாடலுக்கும் மக்களின் கரகோஷம் விண்ணதிர்ந்தது. ஒரு புதிய தொடக்கம் சாத்தியமே என்று அன்றைய இளம் தலைமுறையினரிடம் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. அதுதான் சுதந்திர இந்தியாவின் முக்கியமான காலகட்டமும் கூட; மண்டல் கமிஷன் பரிந்துரைகள் புதிய அரசியல் பரிமாணத்தை முன்மொழிய, இந்துத்துவா சக்திகளின் உருமாற்றம் ரதயாத்திரை வழியாக பாபர் மசூதி இடிப்புவரை பெரும் மதவாதத்தைத் தேசியமாக மாற்ற முயல, தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையால் புதிய இந்தியா தோன்றிடும் என்று அறிஞர் பெருமக்கள் ஆரூடம் சொல்லிட – இப்படியாக அசாதாரணமான சூழல் சட்டென்று உதித்தது.
இதன் விளைவுகளை இன்றுவரை சமூக அறிவியலின் பல்துறை அறிஞர்களும் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். சுருக்கமாக இப்படி பொருள் கொள்ளலாம். என்னதான் குறைகள் இருந்தாலும், நேருவின் சோசலிசக் கொள்கைகள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையினைத் தோற்றுவித்தன. செலிக் ஹாரிசன் (Selig Harrison) போன்ற மேலை நாட்டு அரசியல் அறிஞர்கள் இந்தியாவின் ‘மிக ஆபத்தான பத்தாண்டுகள்’ என்று 1950முதல் 1960 வரையிலான காலத்தைச் சுட்டிக்காட்டும் அளவுக்குத் தான் நிலைமை இருந்தது. அத்தனை அரசியல் களேபரங்களையும் மீறி இந்தியா முன்னகர்ந்தது குறிப்பிடத்தக்கதுதான். 1990களில் சோவியத் யூனியனின் உடைவு சர்வதேச அரசியலில் உருவாக்கிய வெற்றிடமும் இந்தியாவில் இடதுசாரிகளிடம் உருவாக்கிய சோர்வும் அவர்களைச் சட்டென்று அடையாள அரசியல் நோக்கித்தள்ளியதும் யாரும் எதிர்பாராதது. இந்துத்துவா அரசியல் புது வேகம் பெறும் நேரத்தில், அதை எதிர்கொள்ள சாதிரீதியாக அணி திரளும் பல விளிம்பு நிலைச் சமூகங்களின் அரசியலை ‘முற்போக்கானது’ என்று ஏதோ ஒருவகையில் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டதுபோலவே தெரிந்தது.
தாராளப் பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுவரும் மாற்றம், சாதிய அடையாள அரசியல் பெற்றுவிட்ட முற்போக்கு முலாம், மதவாத இந்துத்துவா அரசியலின் பாசிச முகம் – இவை எல்லாமுமாகச் சேர்ந்து அடித்த பேரலையில் வரலாறுகாணாத வீழ்ச்சியை இடதுசாரிகள் சந்திக்க வேண்டிய சூழலில், மாவோயிஸ்ட்கள் மட்டும் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் வழியே ஒரு பொன்னுலகம் சாத்தியம் என்று மீள மீளச் சொல்லிவருகின்றனர். அந்த நம்பிக்கையின் முகமாக கத்தர் இருந்தார். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அவரிடமும் நம்பிக்கையின்மை துளிர்விடத் தொடங்கியது என்றே தெரிகிறது.
1997இல் சாதாரண உடையில் வந்த சில காவல்துறையினர் நடத்திய கொலை முயற்சியில் நல்வாய்ப்பாக கத்தர் உயிர் தப்பினார்; கடைசிவரை ஒரு தோட்டா அவரது உடம்பில் இருந்தது. உயிருக்குப் பயந்து தன் கொள்கை நீர்த்துப்போக அவர் அனுமதிக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். பல தருணங்களில் சமரசப் பேச்சுக்களின்போது, மாவோயிஸ்ட்களின் தூதுவராக இருந்தவர். தேவையற்ற மிகை உணர்ச்சியைத் தூண்டிவிட்டு மக்களிடம் அங்கீகாரம் பெறத்துடித்த நடிகரும் அல்ல. லட்சியவாதத்தைச் சட்டென்று கைவிடக்கூடிய சராசரி அரசியல்வாதியும் அல்ல. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை இழந்திட பல காரணங்கள் ஒருவருக்கு இருக்கலாம். ஆயுதப் போராட்டத்தின் வழியாக விடுதலை அடைய முனைந்த தேசிய இனங்களின் பட்டியலை எடுத்துப்பாருங்கள்; குருதி தோய்ந்த நெடிய வரலாறாக அவை நம் முன் நிற்கின்றன. நக்சல்பாரி இயக்கத்தின் முக்கிய முகமாக இருந்த பல தோழர்கள் ஜனநாயகப் பாதை தவிர்க்க முடியாதது என்று தலைமறைவு வாழ்க்கையிலிருந்து மீண்டு மைய நீரோட்ட அரசியலுக்கு வந்தனர். தோழர்கள் வினோத் மிஷ்ரா தொடங்கி நாகபூஷன் பட்நாயக் வரை பலரையும் சுட்ட முடியும். யோசித்துப்பார்க்கும்போது, மாவோயிஸ்ட்களின் ஆயுதப் போராட்டம் என்னதான் நியாயங்களைக் கொண்டிருந்தாலும், இந்தியா போன்ற உறுதியான மையப்படுத்தப்பட்ட அரசினையும் வலுவான ராணுவ/துணை ராணுவப் படையினையும் கொண்ட அமைப்போடு மோதினால், பெரும் இழப்பு மாவோயிஸ்ட் தொண்டர்களுக்குத்தான்; அதிலிருக்கும் தோழர்களின் பின்புலத்தைப் பார்த்தால் விளைவுகளின் கொடூரம் சட்டென்று புலப்படும். மிக வறிய நிலையில் இருக்கும் தலித் மக்களும் பழங்குடி மக்களும் நிறைந்ததாக இன்று மாவோயிஸ்ட் அமைப்பு இருக்கிறது. அவர்களுக்கான வாழ்வுரிமை சமரசத்திற்கப்பாற்பட்டது. ஆனால் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் பல துணை ராணுவப்படையினரை கொல்வது சோசலிசப் புரட்சிக்கு முதல் படி என்று முழக்கமிடுவது வெறும் சாகசக் கதைபோல் முடிந்துவிடும் ஆபத்து இருக்கிறது. ஆக, கத்தர் வன்முறைமீது நம்பிக்கை இழப்பது பெரும் குற்றமல்ல.
நம்பிக்கையின்மை துளிர்விடத் தொடங்கிய சில நாட்களிலேயே, கத்தர் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் வழிபாடு செய்தார் என்ற செய்தி வெளியானது. அவரது தந்தை அம்பேத்கரியவாதியாக இருந்தபோதும், சிவ பக்தராக இருந்தார் என்று பல இடங்களில் கத்தரே பதிவுசெய்திருக்கிறார். அவரது ஆன்மீகம் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. போராளியாக வாழ்ந்த வாழ்க்கை சட்டென்று வெற்றிடத்தை அடையும்போது, இயல்பாகவே ஆன்மீகத்தின் மீது மனம் தாவிச்செல்வது தவிர்க்க இயலாத ஒன்றுதான்; சுய பச்சாதாபத்திலிருந்தும் மொண்ணைத்தனமான இருத்தலியல்வாதத்திலிருந்தும் நம்மை மீட்டுக்கொள்ள அது உதவலாம். ஆனால், அப்போதே அவரது ஆதரவாளர்கள் பலரும் முகம் சுளித்ததை அறிவேன். அதை மாபெரும் சித்தாந்த வீழ்ச்சியாகப் பலரும் பார்த்தனர். மதச்சார்பின்மையை வறட்டுத்தனமான நாத்திகமாக நாம் உருவகித்திருப்பதால் பலருக்கும் கத்தரின் ஆன்மீகம் அதிர்ச்சியாக இருந்ததில் வியப்பில்லை. சமீபத்திய தேர்தலில் வாழ்வில் முதல்முறையாக வாக்கு செலுத்தினார். தனது அரசியல் கடப்பாட்டில் இருந்து கத்தர் வழுவினார் என்று பலரும் சொல்லக்கூடும். அவர் போலி அல்ல; உண்மையில் அடித்தட்டு மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்காக அவர் உள்ளத் தூய்மையோடுதான் செயலாற்றினார். ஆனால் கடைசிக் காலங்களில் அவர் செய்த சில செயல்கள் பலரையும் திடுக்கிடவைத்தன. இன்று அவருக்காக, அஞ்சலிக் கட்டுரைகள் வந்தவண்ணம் உள்ளன. அவரை வழிகாட்டியாக, அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு உண்மையிலேயே களமாடிய சமரசமற்ற போராளி என்று சொல்லும் பலரும் தவறவிடும் பகுதி அவரது அந்திமக் காலத்தில் அவர் செய்த அரசியல் பிழைகளே.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தம் மீதிருக்கும் வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் மன்றாடினார். இதுதான் உண்மையான வீழ்ச்சி; பெரும் போராளியாக இருந்த ஒரு மனிதர் தன் சுய நலனிற்காக இந்துத்துவத்தின் கோரமுகமாக இருக்கும் அமித் ஷாவைச் சந்தித்து விடுதலைக்காகப் பணிவதெல்லாம் கற்பனை செய்ய முடியாத செயல். அவரது குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் அதிகமாகி வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இன்று வரும் புகழஞ்சலிகளில் அநேகமாகப் பலரும் வேண்டுமென்றே சொல்லத் தவிர்க்கும் செய்தியும் இதுவே. ஆனால் இதையும் நியாயப்படுத்துவதற்குச் சிலர் முனைவதையும் பார்க்க முடிகிறது.
இதுதான், இன்றைய முதலாளித்துவம், அதிலும் இந்தியாவில் காலூன்றிவரும் குரோனி முதலாளித்துவம் விரும்பும் சமூக-கலாச்சார அமைப்பு. சாதி மறுப்பு/சாதி எதிர்ப்புப் போராளிகள் பலரும் பின்னாளில் சமூக நீதிக் காவலர்களாக உருமாறியதன் பின்புலத்திலும் நிற்கும் முதலாளித்துவத்தின் வேட்கையும் இதுவே. ஆனால் இதற்கு கத்தர் போன்ற போராளி பணிவது, ஒரு பெரும் சரிவின் தொடக்கம்.
கம்பளி போர்த்தியபடி, காலில் சலங்கையொலிக்க, விண்ணதிரப் பாடிய பல பாடல்களைக் கேட்கும்போது உருவான நம்பிக்கை, அவரின் அரசியல் பிழைகளால் சிதைந்து போகும் என்ற எளிய உண்மையைக்கூட உள்வாங்காமல் மறைந்துவிட்டார்.
மின்னஞ்சல்: rthirujnu@gmail.com