இரண்டு நூல்கள்
சோழர்கள் இன்று
(கட்டுரைகள்)
(தொ-ர்): சமஸ்
வெளியீடு:
அருஞ்சொல், தினமலர்,
சென்னை
வாட்ஸ்அப்: 75500 09565
பக். 304
ரூ. 500
இதுவரை வந்த தமிழக வரலாற்றுப் புத்தகங்களில் பெரும்பாலானவை பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்காக எழுதப்பட்டவை. எஞ்சியவற்றில் சில, தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவை. சாதாரண வாசகனுக்கு என்று எழுதப்பட்ட நூல்களில் சில எண்பதுகளுக்குப்பின் வெளிவந்தவை.
‘சோழர் இன்று’ நூல் பாமர வாசகர் படிக்கும்படி எழுதப்பட்டது. நூலின் ஆரம்பத்தில், முதல் இரண்டு இயல்களில் தமிழக வரலாறு பற்றிய பொதுவான செய்திகள் உள்ளன. தொடர்ந்து ஏழு இயல்களில் பிற்கால சோழர்களின் சுவையான பன்முகத்தன்மை விவரிக்கப்படுகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் கட்டுரைகளும் பேட்டிகளும் உள்ளன. சோழ வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், சோழர்களைக் கற்பனையாக வர்ணித்து எழுதிய நாவலாசிரியர்கள், சோழர்களின் சாதனைகள் என சில குறிப்புகளும் பின்னிணைப்பாக உள்ளன.
சோழர்களின் இருமொழிக் கொள்கை (வெ. வேதாச்சலம்), சோழநாட்டை ஒருங்கிணைத்தவர்கள் (சுப்பராயலு), பிராமணியமும் பேரரசும் (நொபோரு கராஷிமா) சமூகக் கலப்பு நடந்த காலம் (ஆ. சிவசுப்பிரமணியம்) எனச் சில ஆழமான கட்டுரைகள் உள்ளன.
சோழர்கள் என்றால் பிரம்மாண்டமான கோயில்கள், செப்புப் படிமங்கள், எப்போதும் போர், பெரிய படை என்பதெல்லாம்தான் நடுத்தர வாசகனுக்கு நினைவுக்கு வரும். சோழர்கள் நிலவருவாயைப் பெருக்க தரிசு நிலங்களை அப்படியே போடக் கூடாது என்றும் சில ஊர்களில் குளங்களை ஊர் மக்கள் தோண்ட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியது, பயிரிடாத நிலங்களைப் பயிரிடுவோருக்கு விற்றுவிட வேண்டும் என்னும் செய்திகள் பலர் அறியாதவை. நிலவரி கட்டாயமாக வசூலிக்கப்பட்டது. வரித்தொல்லை அதிகமாகவே இருந்தது. பேரளவில் கட்டுமானக் கோயில்களின் பின்னால் பெரும் சுரண்டலும் கட்டாய உழைப்பும் இருந்தன. தமிழுக்கென்று ஓர் எழுத்துமுறை உருவானது. மொழி, நில அடிப்படையில் தமிழ் மண் ஒருங்கிணைக்கப்பட்டது; இதுபோன்ற பல செய்திகளை இந்த நூல் சுவையாகச் சொல்கிறது.
இந்த நூல் சோழர்களை முழுக்கவும் தூக்கிப்பிடிக்க வில்லை; கீழே போட்டு விமர்சிக்கவுமில்லை, பலம், பலவீனம் இரண்டையும் நாசூக்காக, எளிமையாகச் சுட்டிச் செல்லுகிறது.
- அ.கா. பெருமாள்
ஒரு பள்ளி வாழ்க்கை
வெளியீடு:
குளோபலியன் ட்ரஸ்ட்
4 இரண்டாம் தெரு,
முதல் குறுக்குத் தெரு, அருள்முருகன்
ராமமூர்த்தி நகர், செந்தில்நகர் விரிவாக்கம்,
குரோம்பேட்டை, சென்னை - 44
பக். 270
ரூ. 500
சில மாதங்களுக்கு முன் சமஸைச் சந்தித்தபோது, தன் ஊரான மன்னார்குடி பற்றிப் பேசினார். பாளையங்கோட்டையை விடவும் மன்னார்குடியே கல்வியில் சிறந்த ஊர் என்கிற தகவலைச் சொன்னார். தன் ஊரை மிகைபடப் பேசுவது அனைவருக்குமுள்ள இயல்பு; அவ்வாறுதான் அவரும் பேசுவதாக உணர்ந்தேன். பேச்சின் தொடர்ச்சியாக ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்ட, ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலையும் தந்தார்.
அந்நூல் அவருடைய வார்த்தைகளை மெய்ப்பிக்கு மளவில் தோரணையாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வூரின் பழம்பெருமைமிக்க தேசிய மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகச் செயல்பட்ட வி. ஸ்ரீநிவாசனின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் மன்னார்குடியின் வரலாறும் மாண்புகளும் விரிந்து வருவது வியப்பைத் தருகின்றது. மகாத்மா காந்தியைச் சிறப்பிக்கும் அளவில் மன்னார்குடி அந்நாளிலேயே கல்வியிலும் தேசிய உணர்விலும் முன்னின்றது. மன்னார்குடியின் தேசிய மேல்நிலைப் பள்ளியும் அவ்வூரில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட பின்லே பள்ளியும் அவ்வட்டாரத்தின் முகத்தையே மாற்றின. இரு
பள்ளிகளும் வேறுபட்ட மாணவர் சமூகங்களுடன் இயங்கினாலும் இசைவான நிலையில் செயல்பட்டிருப்பதும் நெகிழ்வை ஊட்டுகின்றது.
இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களால் கல்விமுறை தேசியமயமாக்கப்பட்டுவரும் சூழலில், கல்வி உள்ளூர் மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இந்நூல் முழங்குகிறது. இதன்வழியாகக் கூட்டாட்சி தொடங்குமிடமும் பள்ளிக்கூடமாகத்தான் இருக்குமென ஆணித்தரமாகக் கூறுகிறது. தேசியக் கல்வியைத் துடைத்துவிட்டால் அங்கு உண்மையான சுயராஜ்ஜியம் உருவாவதாகக் கூறுகிறார் சமஸ்.
சிலபகுதிகளை வாசிக்கும்போது நல்ல சிறுகதை, நாவல்களுக்கான கரு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆசிரியர் ச. கௌதமனின் பேட்டியைப் படிக்கும்போது அது தெரியவருகிறது. சமூகம், கல்வியைத் தலைகீழாகப் புரிந்துகொண்டிருப்பதையும், தான் 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவனாய் இருந்ததையும் ‘ஆசை’ சொல்லும்போதும் கதைக்குரிய கரு கிடைக்கிறது. பழக்கப்பட்ட வாழ்க்கைமுறைகளிலிருந்து தடம்மாறிப் புதிய வழிகளைச் சமைக்கும்போதுதான் வாழ்வின் அர்த்தங் களை, நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம்.
இந்நூலின் தன்மையாக நாம் உணரப்போவது இந்த உண்மையைத்தான். படிக்கின்ற ஒவ்வொரு வருக்கும் கல்வியைப் பற்றிய பார்வையை மட்டு மல்லாது, ஒரே நாடு என்கிற தன்மையை நோக்கி அரசு எடுத்துவைக்கும் செயல்பாடுகள் எவ்விதம் நம் வாழ்வைக் குறுகலாகக் கொண்டுபோகப் போகின்றன என்ற பார்வையையும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ வெளிப்படுத்துகிறது. இந்தக் காலத்தில் இந்தச் செய்தி வெளியானது நம் அதிர்ஷ்டம்.
- களந்தை பீர்முகம்மது