காலை - அறிமுகம்
ஓவியம்: மு. நடேஷ்
காலை - அறிமுகம்
முன்னறியாத ஊர்.
அந்நியத் தெருவின் அதிகாலை
புத்தம் புதிதாய் இருக்கிறது.
எதிர்வீட்டு வேலியில் பூத்த
பூசணிப் பூவின் இதழ்களில்
என் பதின்பருவ நாளொன்று
மீண்டும் மலர்வதைப் பார்த்தேன்.
அவ்வளவுதான்.தெரியாத ஊர்
தெரிந்ததானது. அந்நியத் தெரு
என்னுடையதானது.
வேளையும் வெளிச்சமும்கூட
நலமா என்றன.
கழற்றிய சட்டை மாதிரி
முதுமையைப் புரட்டிப் போட்ட
பூசணிப்பூவுக்கு நன்றிசொல்ல முனைந்தேன்.
மிகச் சரியாய் அந்நேரம்
எச்சில் இலையில்
தேங்கிய மழைநீர் சமுத்திரமாய்த்
துளும்பியது. வால் மட்டும் அசைத்து
நீந்திய திமிங்கிலம் என்னை நோக்கிக்
கண்ணடித்தது. உதட்டைக் குவித்துச் சீட்டியடித்தபடி
மேகங்களை ஒட்டடைக் குச்சியால் அகற்றி
ஆகாயத்தைத் துடைப்பவன்
புன்னகைத்துப் போனான்.
அந்தக் கணத்தில்தான்
தெரிந்தவை அனைத்தும் தெரியாததாகி,
என்னுடைய நாள் எனதின்றிப் புரண்டு,
நான்கூட நானின்றி
ஆகியிருக்க வேண்டும்...
காலை - போதலும் வருதலும்
நியமம் தவறாது சடங்குகளை ஈடேற்றும்
ஆத்திகனின் சிரத்தையுடன்
தலைவிதியை நொந்தபடி நாளைக் கழிக்கும்
வாழ்க்கைத்துணையின் சிந்தையுடன்
எங்கோ உயரத்தில் நூல் முனையில் ஒட்டிய
பட்டத்தை ஆனந்திக்கும் சிறுவனின் குதூகலத்துடன்
விலையுயர்ந்த ஜாடியைக் கைதவறி உடைத்த
பணிப்பெண்ணின் பதற்றத்துடன்
தலைப்பிரசவம் நடத்திமுடித்த
பெண்மருத்துவரின் நிறைவுடன்
தீராத தாய்ப்பாலை முழுக்கத் தீர்க்காத
சிசுவின் ஏக்கத்துடன்
வாரிவாரி வழங்கியும் புண்ணியம் பற்றி
விசனமுறும் தனவந்தனின் ஆற்றாமையுடன்
மதிலுக்கு மறுபுறம் குதித்துவிட்ட
ஆயுள்கைதியின் பரபரப்புடன்
தெருத்தெருவாய் அலைந்தும்
திருவோடு நிறையாத யாசகனாய்
பேழைக்குள் நீட்டி நிமிர்ந்த
சடலமெனப் பற்றற்று
அன்றாடம் காலைநடை போகிறேன்
வியர்த்து விறுவிறுத்துத் திரும்புகிறேன்
வாய்ப்பு கிடைக்குமானால்
பூமியின் விளிம்புக்கு அப்பாலும்
ஒரு கிலோமீட்டர் போகத்தான் ஆசை. ஆனால்,
ஒவ்வொரு முறை போகும்போதும்
வீடு திரும்பும்போதும்
குழம்பத்தான் செய்கிறேன்
இன்றினுள் நுழைந்து நடந்தேனா,
இன்றிலிருந்து விலகி நகர்ந்தேனா?
காலை - போட்டியாளர்கள்
பயிற்சியில் ஈடுபடும்தடகளவீரன்
தனியாய்த்தான் ஓடுகிறான் - ஆனாலும்
தனியே இருப்பதில்லை. செவிக்குக்
கேட்காத விநாடிமுள்ளின் ஓசையும்
கண்ணுக்குத்தெரியாத இலக்கின் காட்சியும்
அல்லும் பகலும் துரத்தும் கனவின் அரற்றலும்
உடன் ஓடுகின்றன.
வரிசை கட்டிய போட்டியாளர்கள் மத்தியில்
தனியாய் இருக்கிறான் - மிகத் தனியாய்.
சமிக்ஞையொலி தனக்கு மட்டுமே கேட்கக்
காத்திருக்கிறான். தன்னுடன் மட்டும்
போட்டியிட்டு ஓடுகிறான். அளந்து நிர்ணயித்த
எல்லைக்கோடு அளக்க முடியாத் தொலைவில்.
கோட்டை நெருங்க நெருங்க
தன்னைவிட்டு விலகுகிறான். வெற்றிக் களிப்பை
ஆரவாரிக்கும் கூட்டத்தை
ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கும் பயிற்சியாளனை
பதக்கத்தை ஏந்தக் கழுத்தை நீட்டும் தன் உருவத்தை
நீங்கி வெகு தொலைவு சென்று
திரும்பிப் பார்க்கிறான்.
சோகையான முன்மதியப் பொழுது
தானும் திரும்பிப் பார்க்கிறது. பதார்த்தம் வெந்தபின்
வெளியேறும் ஆவிபோலப்
புகைவடிவம் கொள்ளும் ஒரு நாளில்
இன்னமும் ஓடிக்கொண்
டிருக்கிறான் அவன். நிற்காத ஓட்டம்.
சென்ற நாளையும் இந்த நாளையும்
ஒரே சமயத்தில் காலிசெய்ய
அவனுடன் போட்டியிட்டு
தன்னந்தனியே
எதிர்ப்புறம் சுழல்கிறது பூமி.
மின்னஞ்சல்: writeryuvan@gmail.com